Monday, July 9, 2012

பிரார்த்தனை

வேதனை, தேவை மிகைக்கின் இறையை
........வேண்டுதல் மனிதனின் குணமே
சாதனை செய்யத் துணிந்திடும் பொழுதில்
.........சார்ந்திட நினைத்தால் இறையின்
காதலில் விழுந்து கைகளை ஏந்திக்
........கதறியே அழுதலும் தகுமே
சாதலின் நேரம்  இறைவனை வேண்டிச்
........சார்ந்திருப் பதுமுள உணர்வே


உதடுகள் கூறும் பிரார்த்தனை உன்னில்
.......உருகிடும் உணர்வுகள் ஓசைக்
கதவுகள் திறக்கும் திறவுகோல் அவனின்
.......கருணையால் பிறந்திடும் வார்த்தைப்
பதவுரை என்னும் பொழுதினில் உனக்கே
......படைத்தவன் வேண்டுதல் தேவை
நிதமுமுன் தேடல் தேவையைக் கேட்க
.....நிலைத்தவன் அவனென உணர்வாய்.

வனங்களும் கடலின் அலைகளும் பறவை
.......வகைகளும்  இசைத்திடும்  ஓசை
மனங்களில் மனிதன் அழுதிடும் வேண்டல்
......... மண்ணகம் வருதலின் முன்னம்
தனதருள் கொண்டு  படைத்தவன் ஏற்கத்
.......தனிமையில் வேண்டியே கதறும்
உனதரும் வேண்டல் தேவையை அற்ற
     உன்னிறை விரும்பும்  உணர்வே!


--
அபுல்கலாம் பின் ஷைக் அப்துல்காதிர்

“கவியன்பன்” கலாம், அதிராம்பட்டினம்
அலை பேசி: 00917200332169
வலைப்பூந் தோட்டம்: http://www.kalaamkathir.blogspot.com/ (கவிதைச்சோலை)
மின்னஞ்சல்: kalaamkathir7@gmail.com

No comments:

Post a Comment