Friday, November 30, 2012

தியாகம்








தீயகம் களைவதே
தூயநல் தியாகமாம்
ஐயமில் விருப்பமும்
ஆங்குதான் உதயமாம்

சோம்பலின் எதிரியாம்
சொர்க்கத்தைத் தருவதாம்
காண்பதில் அரியதாம்
கர்ப்பத்தில் உரியதாம்

தூய்மையின் பிறப்பிடம்
தியாகத்தின் உறைவிடம்
தாய்மையின் சிறப்புதான்
தரணிக்கே முதலிடம்

விழுப்புண் போலவே
வியர்வை விழவே
உழைக்கும் தந்தையும்
உயர்வின் தியாகி

தோணியாய்க் கரைசேர்க்கத்
தோழமையின் உணர்வுடன்
ஏணியாய் இருந்தார்கள்
ஏற்றிவிட்ட  தியாகிகள்

வானத்தின் தியாகமதை
வடித்துவைக்கும் மேகமழை
தானத்தின் செடிகளெலாம்
தியாகவிதை   வீசியதே

பசித்தவரின் துயரத்தைப்
பசித்திருக்கும் பயிற்சியினால்
ருசித்துணரும் தியாகத்தை
ருசித்தவர்தான் உணர்ந்திடுவர்

இறையின் கட்டளை
இறுதிக் கடமையை
முறையாய்ச் செய்வதும்
முழுமைத் தியாகமே

அபுல்கலாம் பின் ஷைக் அப்துல் காதிர்
"கவியன்பன்" கலாம், அதிராம்பட்டினம்( பாடசாலை), அபுதபி (தொழிற்சாலை)
அலை பேசி: 00971-50-8351499 / 056 7822844
வலைப்பூந் தோட்டம்: http://www.kalaamkathir.blogspot.com/ (கவிதைச்சோலை)
மின்னஞ்சல்: kalaamkathir7@gmail.com

நேர்முகத் தேர்வு- ஓர் அலசல்


நேர்முகத் தேர்வில் கேட்கப்படும் கேள்விகள் –ஓர் அலசல்
 
 
 
 
வேலைப் பெறுவதற்காக ஏதாவது நேர்முகத் தேர்வுக்குப் போகும் பொழுது, வழக்கமாக நாம் Resume கொண்டு போவோம். அதை மட்டும் பார்த்து விட்டு நமக்கு யாரும் வேலைத் தர மாட்டார்கள். அதையும் தாண்டிப் பல கேள்விகள் நம்மிடம் கேட்பார்கள். அதற்கு நாம எப்படிப் பதில் சொல்கின்றோம் என்பதைப் பொறுத்து, நம்முடைய திறமை, மனஉறுதி என்று பல விடயங்களத் தீர்மானிப்பார்கள். ”வழவழ“ என்று பதில் சொல்லாமல், சுருக்கமாவும் தீர்க்கமாவும் நம்முடைய பதில் இருக்க வேண்டும் என்று அவர்கள் எதிர்பார்ப்பார்கள்.
அப்படி நேர்முகத் தேர்விற்குப் போகும்போது என்ன மாதிரியான கேள்விகள் பொதுவாகக் கேட்கப்படும் என்று ஓர் அலசல்:
 
1. உங்களைப் பற்றிய விபரம் கூறுங்கள்:
 
இந்தக் கேள்வி, உங்களைப் பற்றிய சுய விபரம் சம்பந்தப்பட்டதா இருக்கும். அஃதாவது உங்களோட பெயர், இடம், கல்வித் தகுதி, தொழில்நுட்பத் தகுதி பற்றி நீங்களே தொகுத்துச் சொல்ல வேண்டும்(அதுக்காக உங்க வரலாறு முழுக்கச் சொல்லி” போர் ”அடிச்சிடாதீங்க..)
 
 
2. உங்களைப் பற்றிச் சிறு விளக்கம் கூறுங்கள்?
 
இதுவும் முதல் கேள்வியும் ஒரே மாதிரியாகத் தோன்றலாம். ஆனால் இஃது உங்கள் சுய விபரம் பற்றி அல்ல, உங்கள் குணநலன் பற்றியது. அதாவது, நீங்கள் எப்படிப்பட்டவர் என்று சுருக்கமாகச் சொல்ல வேண்டும். (எதுக்கும், போறதுக்கு முன்னாடி உங்க நண்பர்களிடம்  கேட்டுத் தெரிஞ்சு வச்சுக்கங்க..)
 
3. இதற்கு முன் பணிபுரிந்த அனுபவம் பற்றிக் கூறுங்கள்?
 
 
அனுபவம் என்பது பெரும்பாலான நிறுவனங்கள்ல அவசியமானதாக மாறி விட்டது. இதைப் பொறுத்து வேலை வாய்ப்புகள் அமையும் சூழலும் உருவாகி விட்டன. (இஷ்டத்துக்கு அள்ளி விடக்கூடாது.. அதுக்கான சான்றிதழும் இருக்கணும்..)
 
4. பொழுதுபோக்கு அம்சங்கள் என்ன?
 
”தூங்குவேன், டிவி பாப்பேன்“ என்றெல்லாம் பதில் சொல்லாமல், அவங்களைக் கவர்ந்திழுக்கும் வண்ணம்  பொழுதுபோக்கு அம்சங்களைப் பற்றிச் சொல்ல வேண்டும். அதற்காக  நமக்குத் தெரியாத விடயங்களைப் பற்றிச்  சொல்லிட்டு முழிக்க்க்கூடாது. ஏனென்றால் கேள்விகள் அதைப்பற்றியும் வரக்கூடும்.
 
 
5. ஏற்கனவே பணி செய்த நிறுவனத்திலிருந்து விலகக் காரணம்?
 
“அதிகமா லீவு போட்டேன், அதுனால அவங்களே தொரத்திட்டாங்க” என்று ரொம்ம்ம்ம்ப நேர்மையாகப் பதில் சொல்லக் கூடாது. உங்கள ரொம்ம்ம்ப நல்ல்ல்ல்லவர்னு நினைக்கின்ற மாதிரியான காரணத்தைச் சொல்லணும்.
 
6. இந்த நிறுவனத்தில் உங்களது பங்களிப்பு என்னவாக இருக்கும்?
 
இஃது  உழைப்பு பற்றிய கேள்வி. நீங்க இதற்குக் கொடுக்கும் பதில் அவர்கட்கு உங்களின் மீது  நல்ல அபிப்ராயத்தை ஏற்படுத்த வேண்டும். (அதுக்காக ஓவர் ஆக்டிங் குடுக்கக்கூடாது.. அடக்கிவாசிங்க..)
 
7. என்ன சம்பளம் எதிர்பார்க்குறீர்கள்?
 
இது மிகவும் முக்கியமான கேள்வி. கூடுமானவரை நாம் வாயைத் திறக்காமல் இருப்பதே நல்லது. ஏனென்றால் நாம் குறிப்பிடும் தொகை, ஒருவேளை அவங்க நிர்ணயித்து வைத்திருப்பதை விடக்  குறைவானதா இருக்கலாம். (பெர்ஃபார்மன்ஸப் பொறுத்துச் சம்பளம் குடுங்க“னுச் சொல்லிட்டுப் பம்மிடலாம்..)
 
 
8. உங்கள் பலம், பலவீனமாக எதனைக் கருதுகிறீர்கள்?
 
இஃது உங்களை நீங்கள் எந்த அளவுக்குப் புரிந்து வைத்திருக்கின்றீர்கள் என்பதைக் காட்ட உதவும். அதுமட்டுமில்லாம, உங்களோட நடத்தையை எடைபோட உதவும்.
 
9. இந்த நிறுவனம் பற்றி உங்களுக்குத் தெரிந்தத் தகவல்கள் என்ன?
 
இது மிகவும் முக்கியமான கேள்வி. குறிப்பிட்ட வேலைக்கு விண்ணப்பிக்கும்போது, அந்த நிறுவனம் பத்தியும், அந்த வேலை பற்றித் தெளிவாகத் தெரிஞ்சு வைத்துக் கொள்வது அவசியமானது. (ஜஸ்ட்.. விளம்பரம் பாத்தேன், அப்ளைப் பண்ணேன், தட்ஸ் ஆல்“னுத் தெனாவெட்டாப் பதில் சொல்லி ஆப்பு வாங்காதீங்க..)
 
10. பணிநிமித்தம் பயணம் செய்யச் சம்மதிப்பீர்களா?
 
 
வேலை நிமித்தமாகச் சில நாள் வெளியூர்ச்செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்படலாம். அதற்கு நீங்கள் தயாராக இருக்கின்றீர்களா என்று முன்னர்த் தீர்மானித்துக் கொள்வது அவசியம். (கூட வேலைபாக்குறப் பொண்ணைத் துணைக்கு அனுப்புவீங்களானு கேட்றாதீங்க...)
 
11. முந்தைய நிறுவனத்தில் ஏதேனும் இக்கட்டான சூழ்நலையைக் கையாண்ட அனுபவம் உண்டா?
வேறு நிறுவனத்தில் வேலை பார்த்த அனுபவம் இருந்தது என்றால், இந்தக் கேள்விக்கான பதில், நம் திறமையை யூகிக்கச் செய்யும். (ஆபீசுக்கு லீவு போட்டுட்டு, பாட்டி செத்துப் போய்ட்டாங்கனுச் சமாளிச்ச, அனுபவத்தச் சொல்லி வச்சுடாதீங்க..)
 
12. தனித்துச் செயல்பட விருப்பமா? அல்லது குழுவாகச் செயல்பட விருப்பமா?
 
இஃது அவரவர் தன்மேல வைத்திருக்கின்ற நம்பிக்கையப் பொறுத்துப் பதிலளிக்க வேண்டும். (நா தனியா தான் வருவேன்.. ஆனா தனியாள் இல்லேனு பன்ச் அடிச்சுடாதீங்க..)
 
13. இங்கு வேலைக் கிடைக்காத பட்சத்தில் உங்களுடைய பிரதிபலிப்பு என்னவாக இருக்கும்?
 
மனத்தினில் ”கெட்ட வார்த்தையில் திட்டுவேன்“ என்று சொல்லத் தோன்றும். ஆனால் சொல்லி விடாதீர்கள் இஃது உங்களின் விடா முயற்சி, நம்பிக்கைப் பற்றிய  கேள்வியாக இருக்கும். இந்தப் பதிலை வைத்துக் கூட வேலைக் கிடைக்கலாம்.
 
14. எவ்வளவு காலம் இங்குப் பணி செய்யத் தயாராக இருக்கிறீர்கள்?
(“ஃப்ரெண்ட் கம்பெனில அப்ளைப் பண்ணிருக்கேன். கிடைச்சதும் ஓடிடுவேன்“னு அதிமேதாவித்தனமாகப் பதில் சொல்லக் கூடாது.) இதற்குக் குறிப்பிட்டக் காலவரையறை எதுவும் சொல்லாமல், கடைசி வரைக்கும் இருப்பேன் என்று சொல்ல வேண்டும். தொடர்ந்து வேலை செய்ய முன்வரும் பொழுது வாய்ப்புகள் தரப்படலாம்.
 
15. உங்களுக்கு, எங்களிடத்தில் கேட்க வேண்டிய கேள்விகள் ஏதாவது இருக்கின்றனவா?
 
நிறுவனம் அல்லது பணி பற்றி, நமக்கு ஏதாவது ஐயங்கள் உளவா என்னும் நோக்கத்தில் கேட்கப்படும் கேள்வியாகும். திறம்படக் கேட்டுத் தெளிவுபடுத்திக் கொள்ளலாம். இந்தக் கேள்வியில இருந்தும் நம்மளோட, தெரிந்துகொள்ளும் ஆர்வம் ஆராயப்படும். (இங்க எத்தனப் பொண்ணுங்க வேலை பாக்குறாங்க“ன்னுக் கேட்டுறாதீங்க...)
 
 
 
**********************************************
 
 
நிறுவனங்களப் பொறுத்து, இன்னும் பல கேள்விகள் கேட்கப்படலாம். கேள்விகள் எதுவாகயிருந்தாலும் துணிவாகத் தடுமாற்றம் இல்லாமல் நாம் கூறும் பதில்கள் மிகவும் அவசியம் என்பதில் எண்ணத்தில் நிறுத்திக் கொள்க. நம்மிடமிருந்து வெளிப்படும் பதில்கள், சம்பந்தப்பட்டவர்க்குத் திருப்தியளிக்கும் பொழுது, அதற்கான பலன் உறுதியாக வெற்றிக் கனியாக அமையும்!
 
-**********************************************- 
அபுல்கலாம் பின் ஷைக் அப்துல்காதிர்
 
“கவியன்பன்” கலாம், அதிராம்பட்டினம்( பாடசாலை), அபுதபி (தொழிற்சாலை)
அலை பேசி: 00971-50-8351499 / 056 7822844
வலைப்பூந் தோட்டம்: http://www.kalaamkathir.blogspot.com/ (கவிதைச்சோலை)
மின்னஞ்சல்:  kalaamkathir7@gmail.com

Tuesday, November 27, 2012

பி.எஸ்.அப்துர் ரகுமான் பல்கலைக்கழகமும், ஆப்பிள் மொபைல் போன் தொழில்நுட்ப நிறுவனமும்

சென்னை வண்டலூர் பி.எஸ்.அப்துர் ரகுமான் பல்கலைக்கழகமும், ஆப்பிள் மொபைல் போன் தொழில்நுட்ப நிறுவனமும் இணைந்து ரூ.40 லட்சம் செலவில் மொபைல் போன் தொழில்நுட்ப ஆய்வு மையம் அமைத்துள்ளன.
இந்த மையத்தை, பல்கலைக்கழகத் தலைவர் அப்துர் காதர் ஏ.ரகுமான் புகாரி புதன்கிழமை துவக்கி வைத்து பேசியதாவது:
தொலைபேசிக்குப் பதிலாக தொலைதொடர்புப் பணிக்கு பயன்படுத்தப்பட்ட மொபைல் போன் தொழில்நுட்பம், தற்போது கற்பனைக்கெட்டாத வகையில் இமைக்கும் நொடிக்குள் பல்வேறு சேவைகளை செய்துவரும் சாதனமாக மாறிவிட்டது.
பன்முகத் தொழில்நுட்பத் தேவைகளைப் பூர்த்தி செய்துவரும் மொபைல்போன் தொழில்நுட்பத்தை, மாணவர்களும் மேம்படுத்திக் கொள்ள முடியும்., ஆப்பிள் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டு அமைக்கப்பட்டுள்ள ஆய்வு மையத்தை அனைவரும் பயன்படுத்த முன்வரவேண்டும் என்றார் அவர்.
அப்துர் ரகுமான் பல்கலைக்கழக துணைவேந்தர் வி.சங்கரநாராயணன், பதிவாளர் வி.எம்.பெரியசாமி, கல்லூரி டீன் கே.எம்.மேத்தா, இயக்குநர் வி.என்.ஏ. ஜலால் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
THANKS TO

Saturday, November 24, 2012

இனியென்ன செய்ய வேண்டும்?






இந்தச் சுட்டியில் (யூ ட்யூப்)

 
கீழ்க்காணும் என் பாடல் ஒலிக்கும், இலண்டன் தமிழ் வானொலியியின் அறிவிப்பாளர் திருமதி ஷைபா மாலிக் அவர்களின் குரலில்...



உருவத்தில் நிறத்தில்நீ வேறு பட்டும்
.. ..உள்ளத்தில் உணர்வுகளில் மனித நேயம்
கருத்தில்நீ  கொள்வதனால் புனிதம் காண்பாய்
.. ..கண்முன்னே பல்லுயிர்கள்  பசியால் வாட
வருத்தத்தில் பங்கின்றித் திரிவர் தீயர்;
....வறியநிலை மண்டையிலே கொண்டோர்  இங்கே!
 விருத்தத்தில் நானிங்குப் பாடி வைக்க
.....விரும்பியவர் படித்துணர்ந்தால் என்றும் நன்றே!



எல்லார்க்கும் எல்லாமும் வேண்டும் என்னும்
.. ...எண்ணமிலார்த் தான்மட்டும் போதும் என்பார்
இல்லார்க்கு ஈந்துவக்கும்  எண்ண மின்றிச்
..... சீரழிப்பார் ஊரழிப்பார் சாகும் மட்டும்
நல்லோர்கள் வல்லவராய் மாற வேண்டும்
.. ...நலிந்தவரின் துயர்நீக்க உதவ வேண்டும்
புல்லான செடிகளும்தான் புண்ணை ஆற்றப்
.. ...பொதுநலத்தை ஏன்மனிதன் பொசுக்கு  கின்றான்?  


வல்லோராய்ச் சேர்த்துவைத்த வசதி யாவும்
.... வாழ்நாளின் இறுதிவரை உறுதி யாமோ?
பொல்லாதார் சமத்துவத்தைப் போற்ற மாட்டார்
.... போங்காலம் நெருங்கியதும் சேர்த்து வைத்த
எல்லாமே இவர்கூட வாரா தென்று
.... எண்ணத்தில் உதிக்காமல் போன தேனோ?
நல்லோராய் வாழ்ந்தவரின் வரலா  றெல்லாம்
.... ஞாலமுள்ள நாள்வரைக்கும் புகழாய் வாழும்!

உள்ளத்தை மறைத்துரையில் பரிவைக் காட்டல்
.. ..ஊர்கெடுப்போர் ஏமாற்று வித்தை என்றே
பள்ளத்தில் இருப்பவர்கள் உணர்ந்து மீளப்
.... பலநாட்கள் ஆகுமென்று அறிந்தே செய்யும்
கள்ளத்தை வளர்ப்பவர்கள் தொடரும் தீது
.. ..கருணையாளன் தருகின்ற தீர்ப்பால் வீழும்
பள்ளத்தை நோக்கித்தான் நீரும் பாயும்;
.... பாவிகளி வர்களைத்தான் பாவம் சேரும்!

Tuesday, November 20, 2012

பாலஸ்தீனப் பாலகர்களின் அழுகை !!!!!





பற்றி எரிகிறது 
...பாலஸ்தீன் காசாவில்
வெற்றிக் கிடைத்திடவே
...வேண்டும்தீன் நேசர்காள்!

காலமும் காணாக்
...காட்சித்தான் பின்ன
 பாலகர் செய்த
... பாவம்தான் என்ன?

கொடுமையிலும் கொடுமை
...கொலைசெயுமிவ் வன்மை
கடுமையுடன் தடுத்தால்
...களைந்துவிடும் தீமை

இறைவனின் கோபம்
....இஸ்ரவேலர் அடைவர்
விரைவுடன் தீர்ப்பு
...வந்திடவும்; மடிவர்

இறுதிநாள் வருகைக்கு
....இக்கொடுமை ஒருசான்றா?
உறுதியாய்க் கொடுமைக்கு
...உள்ளமெலாம் உருகாதா?

கொத்துக் கொலைகண்டு
...குழந்தைகள் நிலைகண்டு
கத்தும் கடல்கூட
...கதறுமே பழிதீர்க்க

தீர்ப்புநாள் வராதென்று
....தீதைச் செய்தாயோ?
யார்க்குமே அடங்காத
...யூத ஷைத்தானே!

அர்ஷில் எட்டும்
....அலறல் சத்தம்
குர்ஸி தட்டும்
...குழந்தை ரத்தம்

பாதிக்கப் பட்ட
...பாலஸ்தீன் மக்கள்
நீதிக்கு முன்பு
...நிற்கின்ற வேளை

கூட்டுச் சதியால்
..கூடிக் குலாவி
வேட்டு வெடித்தல்
..வேடிக் கையே!

பொய்நாக் கூட்டம்
...புரிய வில்லையா?
ஐநா சபையோர்
...அறிய வில்லையா?

--
அபுல்கலாம் பின் ஷைக் அப்துல்காதிர்

“கவியன்பன்” கலாம், அதிராம்பட்டினம்( பாடசாலை), அபுதபி (தொழிற்சாலை)
அலை பேசி: 00971-50-8351499 / 056 7822844
வலைப்பூந் தோட்டம்: http://www.kalaamkathir.blogspot.com/(கவிதைச்சோலை)
மின்னஞ்சல்: kalaamkathir7@gmail.com
Tags: 

என் கேள்விக்கென்ன பதில்?




சுதந்திரம் அடையத் தந்தது
.... சுரண்டல் பெருக்கித் தின்னவா?
இதந்தரும் நலத்தை மக்களும்
.... இனிதே விரும்பி மின்னவா ?

உரிமைகள் ஒருசிலர் மட்டும்
....உரிமையாய்ப்  பெற்றுச் சூழவா?
விரிவுடன் அனைவரும் பெற்று
....விரும்பிய வண்ணம் வாழவா?

கடமைகள் எல்லாம் வெற்றுக்
.. கண்துடைப் பென்பதே எல்லையா?
உடைமைகள் காத்து நாட்டின்
.. உன்னதம் போற்றுவோர் இல்லையா?

செல்வம் என்பதே அரசியலார்ச்
....சொத்துச் சேர்த்திட  மட்டுமா?
கல்வி கற்றவர் உழைப்பினாலே
....காசு சேர்த்திடக் கிட்டுமா?

தாயகம் இனியும் சாதிகளின்
....தனித்தனித் தீவு நாடா?
தூயநல் மனித நேயமதைத்
....துளிர்விடும் அன்புக் காடா?

ஒருமைப் பாடு வெற்று
....உளறலில் வெளிவரும் கேலியா?
அருமை நாடு பெற்ற
....அடிப்படை உரிமையும் போலியா?

பாரதத் தேசமும் ஊழலால்
....பேர்கெடப் போகவும் வேண்டுமா?
யாரதன் காரணம் தாமதம்
...இன்றியே காணவும் தூண்டுமா?

மனிதர்நாம் என்பதை நாளும்
......மறந்துப் போவதும் ஆகுமா?
இனிதாய்நம் அன்பினைக் காட்டி
.....இகத்தில் வாழ்தலும் வேண்டாமா?

வினாக்களை யானும் ஈண்டு
....விடுத்தனன் உங்களை நோக்கி
கனாக்களில் வாழும் சூழல்
...களைந்திட ஆவலும் தேக்கி

அபுல்கலாம் பின் ஷைக் அப்துல்காதிர்

“கவியன்பன்” கலாம், அதிராம்பட்டினம்( பாடசாலை), அபுதபி (தொழிற்சாலை)
அலை பேசி: 00971-50-8351499 / 056 7822844
வலைப்பூந் தோட்டம்: http://www.kalaamkathir.blogspot.com/ (கவிதைச்சோலை)
மின்னஞ்சல்: kalaamkathir7@gmail.com


Saturday, November 17, 2012

தியாகம்


தியாகம்





தீயகம் களைவதே
....தூயநல் தியாகமாம்
ஐயமில் விருப்பமும்
....ஆங்குதான் உதயமாம்



சோம்பலின் எதிரியாம்
....சொர்க்கத்தைத் தருவதாம்
காண்பதில் அரியதாம்
....கர்ப்பத்தில் உரியதாம்



தூய்மையின் பிறப்பிடம்
....தியாகத்தின் உறைவிடம்
தாய்மையின் சிறப்புதான்
....தரணிக்கே முதலிடம்



விழுப்புண் போலவே
...வியர்வை விழவே
உழைக்கும் தந்தையும்
....உயர்வின் தியாகி


தோணியாய்க் கரைசேர்க்கத்
...தோழமையின் உணர்வுடன்
ஏணியாய் இருந்தார்கள்
....ஏற்றிவிட்ட  தியாகிகள்



வானத்தின் தியாகமதை
....வடித்துவைக்கும் மேகமழை
தானத்தின் செடிகளெலாம்
....தியாகவிதை   வீசியதே


பசித்தவரின் துயரத்தைப்
....பசித்திருக்கும் பயிற்சியினால்
ருசித்துணரும் தியாகத்தை
.....ருசித்தவர்தான் உணர்ந்திடுவர்



இறையின் கட்டளை
....இறுதிக் கடமையை
முறையாய்ச் செய்வதும்
....முழுமைத் தியாகமே




-- அபுல்கலாம் பின் ஷைக் அப்துல்காதிர் “கவியன்பன்” கலாம், அதிராம்பட்டினம்( பாடசாலை), அபுதபி (தொழிற்சாலை)அலை பேசி: 00971-50-8351499 / 056 7822844வலைப்பூந் தோட்டம்: http://www.kalaamkathir.blogspot.com/ (கவிதைச்சோலை)மின்னஞ்சல்: kalaamkathir7@gmail.com