Tuesday, September 23, 2014

இப்ராஹீமும், இஸ்மாயீலும்...

[2:127]  இப்ராஹீமும், இஸ்மாயீலும் அவ்வீட்டின் அஸ்திவாரத்தை உயர்த்தியபொழுது "எங்களுடைய இறைவனே! (உனக்காக நாங்கள் செய்த இப்பணியை) எங்களிடமிருந்து ஏற்றுக்கொள்வாயாக! நிச்சயமாக நீதான் (எங்களுடைய இந்த பிரார்த்தனையைச்) செவியுறுபவனாகவும் அறிந்தவனாகவும் இருக்கின்றாய்.
[2:128]    எங்கள் இறைவனே! எங்களிருவரையும் உனக்கு (முற்றிலும்) வழிப்படும் முஸ்லிம்களாகவும், எங்களுடைய சந்ததியிலிருந்தும் ஒரு கூட்டத்தினரை உனக்கு (முற்றிலும்) வழிப்படும் முஸ்லிம்களாகவும் ஆக்கிவைப்பாயாக! ("ஹஜ்ஜு" காலத்தில்) நாங்கள் புரிய வேண்டிய வணக்கங்களையும் அறிவிப்பாயாக! (நாங்கள் தவறிழைத்து விட்டாலும்) எங்களை நீ மன்னிப்பாயாக! நிச்சயமாக நீதான் மிக மன்னிப்பவனும், நிகரற்ற அன்புடையவனுமாக இருக்கின்றாய்.

Sunday, May 11, 2014

முற்றாய் அறிந்தவன், நுண்ணறிவாளன்

(ஒரு நாள்) அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் (மக்களிடம்) "என்னிடம் (விளக்கம்) கேளுங்கள்" என்று கூறினார்கள். மக்கள் அவர்களிடம் கேட்கத் தயங்கினர். அப்போது (எங்கிருந்தோ) ஒருவர் வந்து நபி(ஸல்) அவர்களின் முழங்காலுடன் ஒட்டி அமர்ந்து, "அல்லாஹ்வின் தூதரே! இஸ்லாம்(கட்டுப் படுதல்) என்றால் என்ன?" என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள், "அல்லாஹ்வுக்கு நீங்கள் எதையும் இணை வைக்காமலிருப்பதும் தொழுகையைக் கடைப்பிடிப்பதும் ஜகாத்தைச் செலுத்தி விடுவதும் ரமளான்  மாதத்தில் நோன்பு நோற்பதும் ஆகும்" என்று கூறினார்கள். (இதைக் கேட்ட) அவர் "உண்மை உரைத்தீர்கள்" என்று கூறினார்.

"அல்லாஹ்வின் தூதரே! ஈமான்(இறை நம்பிக்கை) என்றால் என்ன?" என்று அவர் கேட்டார். அதற்கு நபி(ஸல்) அவர்கள், "அல்லாஹ்வையும் அவனுடைய வானவர்களையும் அவனது வேதத்தையும் அவனது சந்திப்பையும் அவனுடைய தூதர்களையும் நீங்கள் நம்புவதும் மறுமையில் மீளெழுப்பப் படுவதை நீங்கள் நம்புவதும் விதியை முழுமையாக நம்புவதும் ஆகும்" என்று கூறினார்கள். அதற்கும் அவர் "உண்மை உரைத்தீர்கள்" என்றார்.

"அல்லாஹ்வின் தூதரே! இஹ்ஸான்(அழகிய அணுகுமுறை) என்றால் என்ன?" என்று அவர் கேட்டார். நபி(ஸல்)அவர்கள், "அல்லாஹ்வை நீங்கள் பார்ப்பதைப் போன்ற உணர்வுடன் அவனை நீங்கள் அஞ்சுவதாகும். ஏனெனில் நீங்கள் அவனைப் பார்க்கா விட்டாலும் அவன் உங்களைப் பார்த்துக் கொண்டிருக்கின்றான்" என்று கூறினார்கள். அதற்கும் அவர் "உண்மை உரைத்தீர்கள்" என்று கூறினார். "அல்லாஹ்வின் தூதரே! மறுமை எப்போது வரும்?" என்று அவர் கேட்க, நபி(ஸல்) அவர்கள், "வினவுபவரைவிட வினவப் படுபவர் அதிகம் அறிந்தவர் அல்லர். ஆயினும் நான் உங்களுக்கு மறுமை நாளின் அடையாளங்களில் சிலவற்றை அறிவிப்பேன்: 

"ஒரு பெண் தன் எஜமானைப் பெற்றெடுப்பதை நீங்கள் கண்டால் அது மறுமை நாளின் அடையாளங்களில் ஒன்றாகும். காலில் செருப்பு அணிந்திராத, அரைகுறை ஆடை அணிந்திருந்த (அறிவுச்) செவிடர்களாக, (அகக்கண்) குருடர்களாக வாழ்ந்தவர்களை பூமியின் அரசர்களாய் நீங்கள் காண நேர்ந்தால் அதுவும் மறுமை நாளின் அடையாளங்களில் ஒன்றாகும். மேலும், ஆடு மேய்த்தவர்கள் போட்டி போட்டுக்கொண்டு வானுயர்ந்த கட்டடங்களைக் கட்டுவதை நீங்கள் கண்டால் அதுவும் மறுமையின் அடையாளங்களில் அடங்கும்" என்று கூறிவிட்டு, "நிச்சயமாக மறுமை பற்றிய முற்றான அறிவு அல்லாஹ்விடமே இருக்கிறது. அவன்தான் (சூல்கொண்ட மேகத்திலிருந்து) மழையைப் பொழிவிப்பவன். மேலும் கருவறையில் உள்ளவற்றை அறிபவனும் அவனே. நாளைக்குச் சம்பாதிக்கப் போவது என்ன? என்பது எவருக்கும் தெரியாது. மரணிக்கப் போவது எந்த மண்ணில் என்பதையும் எவரும் அறியார். திண்ணமாக, அல்லாஹ் (அவற்றை) முற்றாய் அறிந்தவன்; நுண்ணறிவாளன்." எனும் (31.34ஆவது) இறைவசனத்தை ஓதிக் காட்டினார்கள்.

பிறகு (கேள்வி கேட்க வந்த) அவர் எழுந்து (சென்று) விட்டார். அப்போது அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் "அந்த மனிதரை என்னிடம் அழைத்து வாருங்கள்" என்று கூறினார்கள். உடனே அவர் தேடப்பட்டார். ஆனால், மக்களால் அவரைக் காண இயலவில்லை. அப்போது அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள், "அவர் (வானவர்) ஜிப்ரீல்(அலை) ஆவார். நீங்கள் என்னிடம் கேட்காத(விளக்கத்)தை (தம் வாயிலாக) நீங்கள் கற்றுக் கொள்ள வேண்டும் என அவர் விரும்பி(இங்கு வந்து போ)னார். என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி).

Tuesday, March 11, 2014

வேண்டாம் கஞ்சத்தனம்

அல்லாஹ் தமக்கு வழங்கிய அருளில் கஞ்சத்தனம் செய்வோர், "அது தங்களுக்கு நல்லது' என்று எண்ண வேண்டாம். மாறாக அது அவர்களுக்குத் தீயது. அவர்கள் எதில் கஞ்சத்தனம் செய்தார்களோ அதன் மூலம் கியாமத் நாளில் கழுத்து நெரிக்கப்படுவார்கள். வானங்கள் மற்றும் பூமியின் உரிமை அல்லாஹ்வுக்குரியது. நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் நன்கறிந்தவன்.

THE QURAN