நபி(ஸல்) அவர்களைப் பின்பற்றுமாறு ஏவப்பட்ட முஸ்லிம்கள் மாற்று மதத்தவர்களைப் பார்த்து, அவர்கள் செய்வது போன்று செய்கின்றனர். அவர்களைக் கண்மூடிப் பின்பற்றுகின்றனர். இதுவும் பித்அத் தோன்றவும், வளரவும் காரணமாக அமைகின்றது.
கிறிஸ்தவச் சகோதரர்கள் இயேசு பிறந்த தினத்தைக் “கிறிஸ்மஸ்” என்ற பெயரில் கொண்டாடுகின்றனர். இதைப் பார்த்த முஸ்லிம்கள் கிறிஸ்தவர்கள் ஈஸா நபியின் பிறந்த தினத்தைக் கொண்டாடும் போது, நாம் முஹம்மத்(ஸல்) அவர்களது பிறந்த தினத்தைக் கொண்டாடாது இருக்கலாமா? எனச் சிந்தித்து “மீலாது-மவ்லித் விழாக்களைக் கொண்டாடி வருகின்றனர்.
இலங்கை முஸ்லிம்களின் மார்க்க நடைமுறைகளில் தென்னிந்திய முஸ்லிம்களின் தாக்கம் அதிகமாகும். தென்னிந்திய முஸ்லிம்கள் இந்து சமூகத்தின் மார்க்க நடைமுறைகளை அவதானித்தனர். பொழுது போக்கிற்காகவும், கலை ஆர்வத்திலும் அவர்கள் செய்த அனைத்தும் இவர்களும் சில அறபுப் பெயர்களைச் சூட்டிச் சின்ன சின்ன மாற்றங்களுடன் செய்தனர். அவற்றுக்கு இஸ்லாமிய சாயமும் பூசினர். முஸ்லிம்கள் கோயில்களுக்கும், இந்து மத வழிபாடு நடக்கும் இடங்களுக்குச் சென்று விடாமலிருப்பதற்காக இவற்றை உருவாக்கியதாகக் காரணமும் கூறிக் கொண்டனர்.ஆனால், இன்று இஸ்லாத்திற்கு முரணான இந்து சமயத் தாக்கத்தின் காரணத்தால் தோற்றுவிக்கப்பட்ட சடங்கு-சம்பிரதாயங்களை அகற்றுவதே பெரும் சிரமமாக மாறியுள்ளது.
ஒரு கவிஞன் கூறும் போது;
“சடங்கு-சம்பிரதாயங்கள் சட்டைகளாகவே சமூகத்தில் அணியப் பட்டன! காலப்போக்கில் அவை அட்டைகளாக மாறி, இரத்தம் குடிக்கக் கற்றுக் கொண்டன!” என்று கூறிய கூற்று சமூகத்தின் நிதர்சன நிலையாகி விட்டது.
அந்நியர்களைப் பின்பற்றுவது எமது சிந்தனையிலும், நடத்தையிலும் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தக் கூடியதாகும். எனவே, இது குறித்து நாம் விழிப்பாக இருக்கக் கடமைப்பட்டுள்ளோம்.அபூவாகித் அல்லைத்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்; “நாம் இஸ்லாத்தை ஏற்ற புதிதில் நபி(ஸல்) அவர்களுடன் ஹுனைன் போருக்காகப் போய்க்கொண்டிருந்தோம். (இவர்கள் மக்கா வெற்றியின் போது இஸ்லாத்தில் இணைந்தவர்கள்.)
நாம் ஒரு மரத்தைக் கடந்து சென்றோம். காஃபிர்கள் ஒரு இலந்தை மரத்தைப் புனிதமாகக் கருதி வந்தனர். அதற்குத் “தாது அன்வாத்” என்பது பெயராகும்.
இந்த மரத்திற்குக் கீழே இஃதிகாஃப் இருந்தனர். போருக்குப் போகும் போது இந்த மரத்தில் வாலைக் கொழுகி வைத்து விட்டு எடுத்துச் செல்வர். (அப்படிச் செய்தால் போரில் வெற்றி பெறலாமென்பது அவர்களது நம்பிக்கையாகும்.)
எனவே நாம் நபி(ஸல்) அவர்களிடம், “அவர்களுக்கு “தாது அன்வாத்” என்ற மரம் இருப்பது போல், எமக்கும் ஒரு “தாது அன்வாத்” என்ற மரத்தை ஏற்படுத்துங்கள்!” என நபி(ஸல்) அவர்களிடம் நாம் கேட்டோம்.
இது கேட்ட நபி(ஸல்) அவர்கள், “அல்லாஹு அக்பர்! (அல்லாஹ்வே மிகப் பெரியவன்!) எனக் கூறிப் பின்னர், “பனூ இஸ்ராயீலர்கள் மூஸா நபியிடம் கேட்டது போல் நீங்களும் என்னிடம் கேட்டுள்ளீர்கள். (நாம் கேட்டது பெரிய தவறு என உணர்த்தினார்கள்.)
அப்போது தமது சிலைகளுக்கு வழிபாடு செய்துகொண்டிருக்கும் ஒரு கூட்டத்தாரிடம் அவர்கள் வந்தனர். (அவ்வேளை), அவர்கள், “மூஸாவே! அவர்களுக்குப் பல கடவுள்கள் இருப்பது போல் எமக்கும் ஒரு கடவுளை ஏற்படுத்துவீராக!” என்று கேட்டனர் (7:138) என்ற குர்ஆன் வசனத்தை ஓதிக் காட்டிய பின்னர் உங்களுக்கு முன்பிருந்தவர்களது வழிமுறைகளை நீங்கள் பின்பற்றுவீர்கள்!” என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (திர்மிதி 2180)மேற்படி வசனமும், ஹதீஸும் அந்நியர்களைப் பின்பற்ற முற்படுவது மார்க்கத்திலில்லாத பல வழிபாடுகள் உருவாவதற்கும், சமூகங்களின் அழிவுக்கும் காரணமாக அமையுமென்பதைத் தெளிவுபடுத்துகின்றது.
பனூ இஸ்ராயீலர்கள் காஃபிர்களைப் பார்த்து விட்டு, அவர்களுக்குப் பல சிலைகளிருப்பது போல் கண்ணால் பார்த்து வணங்கப்படுவதற்கு எமக்கும் ஒரு சிலையிருந்தால் நல்லது! என எண்ணியுள்ளனர்.இவ்வாறே, புதிதாக இஸ்லாத்தையேற்ற சில நபித் தோழர்கள் காஃபிர்களுக்கு இருப்பது போல் எமக்கும் பறக்கத் பெற ஒரு மரமிருந்தால் நல்லது! என எண்ணியுள்ளனர்.
அவர்களது இந்தத் தவறான கேள்விக்குக் காஃபிர்கள் போன்று எம்மிடமும் ஏதாவது இருக்க வேண்டுமென்ற எண்ணம் தான் காரணமாக இருந்தது.இதே எண்ணம்தான் மீலாது-மவ்லீது, கத்தம்-கந்தூரி போன்ற விழாக்களையும், கப்று வழிபாடு, உருவ வழிபாடு, கொடி வழிபாடு போன்ற ஷிர்க்குகளையும் இந்தச் சமூகத்தில் தோற்றுவித்துள்ளது.
மற்றுமொரு அறிவிப்பில் அபூஸைதுல் குத்ரீ(ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்;
“உங்களுக்கு முன்பிருந்தவர்களைச் சாணுக்குச் சாண், முழத்துக்கு முழம் நீங்கள் பின்பற்றுவீர்கள்! அவர்கள் ஒரு உடும்பு பொந்தில் நுழைந்தாலும், (அதிலும்) நீங்கள் அவர்களைப் பின்பற்றுவீர்கள்!” என நபி(ரலி) அவர்கள் கூறினார்கள். அப்போது (எமக்கு முன்பிருந்தவர்கள் என்றால்) “யூதர்களையும், நஸாராக் களையுமா குறிப்பிடுகின்றீர்கள்?” என நாம் கேட்ட போது, “(அவர்களல்லாமல்) வேறு யாரை?” என நபி(ரலி) அவர்கள் கேட்டார்கள். (புகாரி 7320, முஸ்லிம் 2669)
இந்த ஹதீஸ் தவறு செய்வதிலும், ஆதாரத்திற்கு முரணாக நடப்பதிலும் முஸ்லிம்கள் எவ்வளவு தீவிரமாக வழிகெட்ட யஹூதி-நஸ்றானிகளின் வழிமுறைகளைப் பின்பற்றுவார்கள் என்பது தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.எனவே, யூத-கிறிஸ்தவ வழிமுறைகளை இஸ்லாமிய ரூபத்தில் முஸ்லிம் சமூகத்தில் நுழைப்பவர்கள் குறித்து நாம் விழிப்பாக இருக்க வேண்டும். ஸுன்னாவை ஆதாரத்தின் அடிப்படையில் பின்பற்றுவதில்தான் உறுதியாக இருக்க வேண்டும்.இதில் நாம் சற்றுக் கவனயீனமாக இருந்தாலும், ஷைத்தான் எம்மை வழிகேட்டில் தள்ளி விடுவான் என்பது குறித்துக் கவனமாக இருக்க வேண்டும்.
எனவே, குஃப்ஃபார்களின் வழிமுறைப் பின்பற்றுவதை நாம் தவிர்க்க வேண்டும். நாம் அவர்களுக்கொப்பாக நடப்பதற்கும் முற்படக் கூடாது.
“யார் எக்கூட்டத்திற்கு ஒப்பாகின்றாரோ, அவர் அக்கூட்டத்தைச் சேர்ந்தவரே!” ..........(அஹ்மத்) என்ற ஹதீஸைக் கவனத்திற்கொண்டு செயற்படுவோமாக!
அல்லாஹ்வின் சாந்தியும், சமாதானமும் நம் மீதும் நம் குடும்பத்தார்கள் மீதும் உண்டாவதாக... உங்களுக்கும் எங்களுக்கும் அல்லாஹ் நேர்வழியை என்றென்றும் காட்டி அதில் நாம் நிலைத்திருக்க அவனிடத்தில் மட் டுமே துஆ செய்து கொள்வோம்.
No comments:
Post a Comment