Sunday, September 18, 2011

கலவர வழக்கை சீர்குலைக்க எனது வக்கீல்களுக்கு லஞ்சம் கொடுத்தார் மோடி- மல்லிகா சாராபாய்

 2002ம் ஆண்டு நடந்த கோத்ரா சம்பவத்திற்குப் பின்னர் நடந்த பெரும் கலவரம் தொடர்பாக நான் உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த பொது நலன் வழக்கை சீர்குலைக்க, எனது வக்கீல்களுக்கு லஞ்சம் கொடுத்தார் முதல்வர் நரேந்திர மோடி என்று பிரபல நடனக் கலைஞர் மல்லிகா சாராபாய் பரபரப்புக் குற்றம் சாட்டியுள்ளார்.

குஜராத்தில் 2002ம் ஆண்டு நடந்த பெரும் கலவரத்திற்குப் பின்னர் அந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் உச்சநீதிமன்றத்தில் ஒரு பொது நலன் மனுவைத் தாக்கல் செய்தார் சாராபாய். அதில் குஜராத் கலவரத்தைத் தடுக்க மாநில அரசும், முதல்வர் நரேந்திர மோடியும் ஆக்கப்பூர்வமாக, தீவிரமாக செயல்படவில்லை என்று குற்றம் சாட்டியிருந்தார். இந்த நிலையில் இந்த வழக்கை சீர்குலைப்பதற்காக மக்கள் பணத்தை எடுத்து எனது வக்கீல்களுக்கு லஞ்சமாக கொடுத்தார் மோடி என்று இன்று குற்றம் சாட்டியுள்ளார் சாராபாய்.

இதுகுறித்து அவர் கூறுகையில், அப்போது மாநில உளவுத்துறை தலைவராக இருந்த ஆர்.பி.ஸ்ரீகுமார் மற்றும் ஐபிஎஸ் அதிகாரி சஞ்சீவ் பட் ஆகியோரை அழைத்து, எனது வக்கீல்களுக்கு வழக்கை சீர்குலைப்பதற்காக ரூ. 10 லட்சம் பணம் தரும்படி உத்தரவிட்டார் மோடி.

இதுதொடர்பாக ஸ்ரீகுமார் சமீபத்தில் நானாவதி மற்றும் அக்ஷய் மேத்தா கமிஷன் முன்பு நேரில் ஆஜராகி இதுதொடர்பாக வாக்குமூலம் அளித்துள்ளார்.

மேலும் கடந்த மே மாதம் நானாவதி கமிஷன் முன்பு ஆஜரான சஞ்சீவ் பட்டும், வக்கீல்களுக்கு லஞ்சம் கொடுக்க உளவுத்துறைக்கு ஒதுக்கப்படும் நிதியை பயன்படுத்துமாறு தனக்கு மோடி உத்தரவிட்டதாக கூறியுள்ளார் என்றார் சாராபாய்.

No comments:

Post a Comment