Monday, December 31, 2012

பர்தா போடுதல் சரிதான்!



வைரமதைப் பெட்டகத்தில் பாது காத்து
..வைக்கவேண்டும் என்றுணர்ந்து கொண்ட நீதான்
வைரமணிப் பெண்மணிகள் ஊரைச் சுற்ற
...வைப்பதிலும் கவனமாக இருக்க வேண்டும் 
மெய்ரணமா கும்வரைக்கும் காமு கர்கள்
...மேய்ந்திட்ட மேனிமீதுக் காமப் பார்வைப்
பெய்தவிடம் தாக்காமல் பாது காக்கப்
...பெருங்கேட யம்போலாம் பர்தாப் போர்வை!


கண்ணியத்தைப் போற்றுகின்ற பெண்கள் கற்பைக்
...காத்துநிற்கும் பர்தாவை வேணடாம் என்றால்
பெண்ணியத்தைப் பேசுகின்ற பெண்கள் நீங்கள்
...பெண்ணுக்கு ஏதேனும் பாது காப்பை
மண்ணுலகில் தந்துவிட்டுப் பேச வேண்டும்
....மலிந்துவரும் இக்கொடுமை நீங்க வேண்டி
கண்ணிமைபோல் பெண்களையும் காத்து நிற்கும்
....காலத்தின் கட்டளையாம் பர்தா என்பேன்

ஆதிவாசி அன்றிருந்தாள் அறியா வேளை
...ஆடைகளை உடுத்தவுமே தெரியா மூளை
ஓதியோசித் துணரத்தான் தந்தான் திட்டம்
...ஓரிறையின் மறைதனிலே ஆடைச் சட்டம்
ஆதிவாசிப் போலிருந்தால் கூழாங் கல்லு
...ஆறறிவு பெற்றவளா நீயும் சொல்லு
பாதிபாதி உடையணிந்தால் உன்றன் மேனி
...பார்ப்பவர்கள் கண்கட்குத் தானே தீனி!




அபுல்கலாம் பின் ஷைக் அப்துல்காதிர்

“கவியன்பன்” கலாம், அதிராம்பட்டினம்( பாடசாலை), அபுதபி (தொழிற்சாலை)
அலை பேசி: 00971-50-8351499 / 056 7822844
வலைப்பூந் தோட்டம்: http://www.kalaamkathir.blogspot.com/ (கவிதைச்சோலை)
மின்னஞ்சல்: kalaamkathir7@gmail.com


Monday, December 24, 2012

கவிதைச் சமையற்குறிப்பு:









கவிதைச் சமையற்குறிப்பு:

சாடல் நெருப்பைச்
சட்டென மூட்டி
பாடல் பதியும்
பாத்திரம் வைப்பாய்

அறிவால் அறிந்த
அனைத்துப் பொருட்களும்
நிறைவாய்ப் பகிர்ந்து
நிறைநெய்த் தமிழிடு

கருவிளம் என்னும்
கறிவேப்பிலையும்
தரு(ம்)மணம் என்றும்
தனியாய்ச் சுவைக்கும்


சீரசை  பிரித்தல்
சீரகம் தரும்குணம்
நேரசை புரிதல்
நேசமாய் நறுமணம்

சாம்பலைப் பிரித்தல்
சோம்பலைத் துறத்தல்
சோம்புடன் மிளகும்
சேர்த்திடச் சுவைக்கும்



எதுகை மோனை
ஏலம் கிராம்புமாய்
விதிகள் பாவில்
வீசும் நறுமணம்

கருவாய் அமையும்
கருத்தை அழகாய்த்
தருவாய்ச் சமையல்
தகிக்கும் தருவாய்

புளிமா கொஞ்சம்
பதமுடன் கலந்தால்
புளிபோல் மிஞ்சும்
புதுசுவை உணர்வாய்

தேமாங்காய் போன்ற
தேங்காய்ப் பாலுடன்
மாமாங்காய்க் கீற்றும்
மாற்றும் பாவினம்

“அசலாய்” சேர்த்த
அறிவுப் பெட்டக
”மசலா” கொஞ்சம்
மணக்கச் சேர்த்திடு

சுண்டி இழுக்கும்
சுவைமிகு உவமை
கிண்டிக் கிளறும்
”கரண்டியின்” பெருமை

ஒற்றுப் பிழைபோல்
உப்பின் குறைதான்
கற்றுத் தருவர்
கல்வி நிறைந்தோர்

ஆவி அடங்க
ஆறப் போட்டிடு
கூவி அழைத்து
கூடிச் சாப்பிடு


மாசிலா வாழ்வை
மணத்துடன் வாழ
மாசிபோல் தூய
மரபினைப் போடு



பாலும் பருப்பும் பசுநெய்யும் சேர்ந்தது
போலுன்றன் பாடலைப் போடு

(இக்குறட்பா போலிருக்கும் அப்”பா”யாசம்)



அபுல்கலாம் பின் ஷைக் அப்துல்காதிர்

“கவியன்பன்” கலாம், அதிராம்பட்டினம்( பாடசாலை), அபுதபி (தொழிற்சாலை)
அலை பேசி: 00971-50-8351499 / 056 7822844
வலைப்பூந் தோட்டம்: http://www.kalaamkathir.blogspot.com/ (கவிதைச்சோலை)
மின்னஞ்சல்: kalaamkathir7@gmail.com

Friday, December 21, 2012

மாயன் ஏமாந்தான்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!




காயம் படாமல்
கழிந்தது இன்று
மாயன் ஏமாந்தான்
மனிதர்களை மூடர்களாக்கி

உடைந்தது மூடநம்பிக்கை
உலகம் அழிவென்பது
படைத்தவன் கைவசம்
பாருணர்ந்துப் பார்க்குமா?

குர்-ஆன் ஹதீஸ் வாக்குறுதி
குறைவிலாச் செயலுறுதி
ஒருநாளும் பொய்க்காது
ஒப்புக்கொள் மானிடனே!
இரவல் கொடுத்தவன்
இறைவன் ஒருவன்
இரவும் பகலும்
இயக்கும் அருளவன்!

அழிந்து விட்டதாய்
அங்கலாய்த்த மாயானர்
கழிந்தக் குற்றத்தை
கணமேனும் அறிவாரோ?



















அபுல்கலாம் பின் ஷைக் அப்துல்காதிர்

“கவியன்பன்” கலாம், அதிராம்பட்டினம்( பாடசாலை), அபுதபி (தொழிற்சாலை)
அலை பேசி: 00971-50-8351499 / 056 7822844
வலைப்பூந் தோட்டம்: http://www.kalaamkathir.blogspot.com/ (கவிதைச்சோலை)
மின்னஞ்சல்: kalaamkathir7@gmail.com

Wednesday, December 12, 2012

அருள்மறையாம் அல்-குர்-ஆன் அகிலத்தின் பொதுமறை.










ஒப்பில்லா உயர்மறையாய் விளங்கும்அல் குர்ஆன்
.. உலகத்து மாந்தரினம் உய்க்கவேவந் தவேதம்
செப்பிவைத்தான் திருமறையில் சிறப்பாக அல்லாஹ்
.. செழுமைபெறும் நல்வழியாயல் சிறக்கவொரு  வேதம்
இப்புவிக்குப் போதுமென ஏற்றவர்கள் உரைப்பார்
.. இம்மகிழ்ச்சி உலகத்தில் வேறெங்கு முண்டோ?
அப்பழுக்கே இலாவாழ்க்கை அமைந்திடவே அறங்கள்
.. அளிக்கின்ற திருமறையும் உலகமாந்தர்ச்  சொத்து!

அறமுரைக்கும் திருமறையை அறபுமொழி  யிலிருந்(து)
.. அகிலமொழி யனைத்திலுமே மொழிபெயர்ப்புச் செய்து
சிறப்புறவே அதிலுள்ள கருத்துரைகள் உணர்ந்து
.. செய்கின்ற நம்வாழ்க்கை முறையொழுக்க நெறியாம்
திறன்வியந்து போற்றுகிறார் உலகப்பேர் அறிஞர்
.. திக்கெல்லாம் இறைபெருமை திகழவைக்கும் குர்ஆன்
மறந்துவிடா வண்ணம்சொல் லடுக்குகளாய்க் கோக்கும்
.. மனனத்தில் ஏற்றிவைக்கும் ஓசைநயம் ஈர்க்கும்

ஒன்றுபட்டச்  சமுதாயம் உருவாக வேண்டி
.. ஓரிறையை வழிபடவே ஓர்மறையைத் தந்தான்
நன்றுபலக் காட்டுகளாய் வரலாறும் பேசும்
.. நாமின்று  காணுகின்ற அறிவியலும் வீசும்
குன்றுகளை மேகத்தை ஒட்டகத்தைப் பார்த்துக்
.. கூரறிவுச் சீராக்கச் சொல்லுமிந்த வேதம்
இன்றுவரை இவ்வேதம்  அழியாமல் காக்கும்
.. இறைவனவன் வாக்குறுதி மெய்யாகக் காணீர்!

அபுல்கலாம் பின் ஷைக் அப்துல்காதிர்

“கவியன்பன்” கலாம், அதிராம்பட்டினம்( பாடசாலை), அபுதபி (தொழிற்சாலை)
அலை பேசி: 00971-50-8351499 / 056 7822844
வலைப்பூந் தோட்டம்: http://www.kalaamkathir.blogspot.com/ (கவிதைச்சோலை)
மின்னஞ்சல்: kalaamkathir7@gmail.com

Saturday, December 8, 2012

மனிதனுக்கு நீதி வாழட்டும்!( நூல் வெளியீட்டு விழாவுக்கு என் வாழ்த்துப்பா


அன்புள்ள டாக்டர் இப்றாஹிம் அன்சாரி காக்கா அவர்கட்கு,
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹமத்துல்லாஹி வபரக்காத்தஹு

தங்களின் நூல் வெளியீட்டு விழாவில் அடியேன் கலந்து கொள்ளாவிட்டாலும், என் கவிதையை என் சார்பாக மூத்த தமிழறிஞர் என் ஆசான் அதிரை அஹ்மத் காக்கா அவர்கள் வாசித்து அவ்விழாவில் என் பங்களிப்பை நிறைவு செய்ய வேண்டுகிறேன்.


தலைப்பு: மனிதனுக்கு நீதி வாழட்டும்!


வெடிக்கின்ற வென்னீரின் ஊற்று வெள்ளம்;
.....விரிந்துமணம் வீசுகின்ற மலரின் உள்ளம்;
துடிக்கின்ற தீக்கனலின் வெம்மை வீச்சு;
.....சொடுக்கிவிட்ட சிந்தனையின் சீறும் மூச்சு;
நடிக்கின்ற வொருசாரார்ச் செய்யும் கேட்டை
.....நயபுடைக்கு(ம்) இந்நூலில் சுழற்றும் சாட்டை
வடிக்கின்ற மறுசாரார்க் கண்ணீர் போக்க
......மறுபடியும் எழுதிடுவாய் நூலும் நீரே!



(வேறு)



புதிய உலகமே செய்வோம் - இந்தப்
பூமியின் வளமெலாம் பொதுவாம்
எதிரிகள் எவருமில் லாமை - என்னும்
இனிய திசையில் செல்வோம்
சாதியினைச் சொல்லியே ஏய்ப்பார் - ஏதோ
சாதியுர்வு என்றுதான்  மாய்ப்போர்
சதியினால் எளியரைத் தூற்றுவோர் - இங்கே
சகலமும் தமக்கெனச் சாற்றுவோர்

சிந்திக்க வைத்தத் தொடர் - மக்கள்
சேவைக்கு ஏற்றுஞ் சுடர்
நிந்திக்கா(த) வண்ண நூலாம் - அறிவுக்கு
ஞாயிற்றின் கீற்றைப்  போலாம்

அறிவியல் சிந்தனை தழைக்கும் - கல்வி
அளித்தநற் புத்தியும் செழிக்கும்
நெறிமுறை தந்திடும் புத்தகம் -  வாழ்வின்
நெடுகிலும் காட்டிடும் தத்துவம்
பேச்சிலும் மூச்சிலும் நாடு - மேன்மை
பெற்றிட என்றுமே நாடு
தீச்சுடர் போலவே கேடு - அழித்திட
திறமையாய்ச் சாற்றிடும் ஏடு



--
அபுல்கலாம் பின் ஷைக் அப்துல்காதிர்

“கவியன்பன்” கலாம், அதிராம்பட்டினம்( பாடசாலை), அபுதபி (தொழிற்சாலை)
அலை பேசி: 00971-50-8351499 / 056 7822844
வலைப்பூந் தோட்டம்: http://www.kalaamkathir.blogspot.com/ (கவிதைச்சோலை)
மின்னஞ்சல்: kalaamkathir7@gmail.com

Sunday, December 2, 2012

ஐக்கிய அரபு அமீரகத்தின் தேசிய தினம்


அமீரகம்..
அன்பின் அகம்
பண்பின் சுகம்
நட்பிகளில் பேரிடம்
நானிலத்தின் ஓரிடம்
 
எண்ணெய்ச் சுரங்கம்
என்னை வார்தெடுத்த
எழில்மிகு அரங்கம்
 
அதிரைப்பட்டினம்
அடியேனின் பாடசாலை
அபுதபிப் பட்டணம்
அடியேனின் தொழிறசாலை
 
பாலைவனத்தையும்
பசுஞ்சோலையாக்கிய
வேலையாட்களை
வேகமாய் உயர்த்திய
வேகம் குறையாததால்
மோகம் கொண்டு
மொய்க்கின்றோம்!
 
“யாதும் ஊரே
யாவரும் கேளிர்”
அன்று படித்தோம்
அதிரைப் பள்ளியில்
இன்று உணர்ந்தோம்
இத்தேசப் புள்ளியில்
 
ஒன்றே இனம்
என்றே மனம்
பாசக் கயிற்றால்
நேசம் கொண்டு
அரவணைக்கும்
அரபி அனைவர்க்கும்
உடன்பிறப்பாய்க்
கடன்பட்டுக் கிடப்பர்!
 
”உண்ட வீட்டுக்கு
ரெண்டகம் செய்வோரும்”
உண்டிங்கே என்பதுதான்
மண்டைக்குள் வேதனை!
 
மொழி,மதம் வேறுபாடின்றி
வழிபாட்டுத் தலங்களைக்
கட்டிக்கொள்ள வைத்தவர்களைக்
கட்டிக்கொள்வோம் தேசிய தின
வாழ்த்துரைத்து...

--அபுல்கலாம் பின் ஷைக் அப்துல்காதிர்
 
“கவியன்பன்” கலாம், அதிராம்பட்டினம்( பாடசாலை), அபுதபி (தொழிற்சாலை)
அலை பேசி: 00971-50-8351499 / 056 7822844
வலைப்பூந் தோட்டம்: http://www.kalaamkathir.blogspot.com/ (கவிதைச்சோலை)
மின்னஞ்சல்: kalaamkathir7@gmail.com

Friday, November 30, 2012

தியாகம்








தீயகம் களைவதே
தூயநல் தியாகமாம்
ஐயமில் விருப்பமும்
ஆங்குதான் உதயமாம்

சோம்பலின் எதிரியாம்
சொர்க்கத்தைத் தருவதாம்
காண்பதில் அரியதாம்
கர்ப்பத்தில் உரியதாம்

தூய்மையின் பிறப்பிடம்
தியாகத்தின் உறைவிடம்
தாய்மையின் சிறப்புதான்
தரணிக்கே முதலிடம்

விழுப்புண் போலவே
வியர்வை விழவே
உழைக்கும் தந்தையும்
உயர்வின் தியாகி

தோணியாய்க் கரைசேர்க்கத்
தோழமையின் உணர்வுடன்
ஏணியாய் இருந்தார்கள்
ஏற்றிவிட்ட  தியாகிகள்

வானத்தின் தியாகமதை
வடித்துவைக்கும் மேகமழை
தானத்தின் செடிகளெலாம்
தியாகவிதை   வீசியதே

பசித்தவரின் துயரத்தைப்
பசித்திருக்கும் பயிற்சியினால்
ருசித்துணரும் தியாகத்தை
ருசித்தவர்தான் உணர்ந்திடுவர்

இறையின் கட்டளை
இறுதிக் கடமையை
முறையாய்ச் செய்வதும்
முழுமைத் தியாகமே

அபுல்கலாம் பின் ஷைக் அப்துல் காதிர்
"கவியன்பன்" கலாம், அதிராம்பட்டினம்( பாடசாலை), அபுதபி (தொழிற்சாலை)
அலை பேசி: 00971-50-8351499 / 056 7822844
வலைப்பூந் தோட்டம்: http://www.kalaamkathir.blogspot.com/ (கவிதைச்சோலை)
மின்னஞ்சல்: kalaamkathir7@gmail.com

நேர்முகத் தேர்வு- ஓர் அலசல்


நேர்முகத் தேர்வில் கேட்கப்படும் கேள்விகள் –ஓர் அலசல்
 
 
 
 
வேலைப் பெறுவதற்காக ஏதாவது நேர்முகத் தேர்வுக்குப் போகும் பொழுது, வழக்கமாக நாம் Resume கொண்டு போவோம். அதை மட்டும் பார்த்து விட்டு நமக்கு யாரும் வேலைத் தர மாட்டார்கள். அதையும் தாண்டிப் பல கேள்விகள் நம்மிடம் கேட்பார்கள். அதற்கு நாம எப்படிப் பதில் சொல்கின்றோம் என்பதைப் பொறுத்து, நம்முடைய திறமை, மனஉறுதி என்று பல விடயங்களத் தீர்மானிப்பார்கள். ”வழவழ“ என்று பதில் சொல்லாமல், சுருக்கமாவும் தீர்க்கமாவும் நம்முடைய பதில் இருக்க வேண்டும் என்று அவர்கள் எதிர்பார்ப்பார்கள்.
அப்படி நேர்முகத் தேர்விற்குப் போகும்போது என்ன மாதிரியான கேள்விகள் பொதுவாகக் கேட்கப்படும் என்று ஓர் அலசல்:
 
1. உங்களைப் பற்றிய விபரம் கூறுங்கள்:
 
இந்தக் கேள்வி, உங்களைப் பற்றிய சுய விபரம் சம்பந்தப்பட்டதா இருக்கும். அஃதாவது உங்களோட பெயர், இடம், கல்வித் தகுதி, தொழில்நுட்பத் தகுதி பற்றி நீங்களே தொகுத்துச் சொல்ல வேண்டும்(அதுக்காக உங்க வரலாறு முழுக்கச் சொல்லி” போர் ”அடிச்சிடாதீங்க..)
 
 
2. உங்களைப் பற்றிச் சிறு விளக்கம் கூறுங்கள்?
 
இதுவும் முதல் கேள்வியும் ஒரே மாதிரியாகத் தோன்றலாம். ஆனால் இஃது உங்கள் சுய விபரம் பற்றி அல்ல, உங்கள் குணநலன் பற்றியது. அதாவது, நீங்கள் எப்படிப்பட்டவர் என்று சுருக்கமாகச் சொல்ல வேண்டும். (எதுக்கும், போறதுக்கு முன்னாடி உங்க நண்பர்களிடம்  கேட்டுத் தெரிஞ்சு வச்சுக்கங்க..)
 
3. இதற்கு முன் பணிபுரிந்த அனுபவம் பற்றிக் கூறுங்கள்?
 
 
அனுபவம் என்பது பெரும்பாலான நிறுவனங்கள்ல அவசியமானதாக மாறி விட்டது. இதைப் பொறுத்து வேலை வாய்ப்புகள் அமையும் சூழலும் உருவாகி விட்டன. (இஷ்டத்துக்கு அள்ளி விடக்கூடாது.. அதுக்கான சான்றிதழும் இருக்கணும்..)
 
4. பொழுதுபோக்கு அம்சங்கள் என்ன?
 
”தூங்குவேன், டிவி பாப்பேன்“ என்றெல்லாம் பதில் சொல்லாமல், அவங்களைக் கவர்ந்திழுக்கும் வண்ணம்  பொழுதுபோக்கு அம்சங்களைப் பற்றிச் சொல்ல வேண்டும். அதற்காக  நமக்குத் தெரியாத விடயங்களைப் பற்றிச்  சொல்லிட்டு முழிக்க்க்கூடாது. ஏனென்றால் கேள்விகள் அதைப்பற்றியும் வரக்கூடும்.
 
 
5. ஏற்கனவே பணி செய்த நிறுவனத்திலிருந்து விலகக் காரணம்?
 
“அதிகமா லீவு போட்டேன், அதுனால அவங்களே தொரத்திட்டாங்க” என்று ரொம்ம்ம்ம்ப நேர்மையாகப் பதில் சொல்லக் கூடாது. உங்கள ரொம்ம்ம்ப நல்ல்ல்ல்லவர்னு நினைக்கின்ற மாதிரியான காரணத்தைச் சொல்லணும்.
 
6. இந்த நிறுவனத்தில் உங்களது பங்களிப்பு என்னவாக இருக்கும்?
 
இஃது  உழைப்பு பற்றிய கேள்வி. நீங்க இதற்குக் கொடுக்கும் பதில் அவர்கட்கு உங்களின் மீது  நல்ல அபிப்ராயத்தை ஏற்படுத்த வேண்டும். (அதுக்காக ஓவர் ஆக்டிங் குடுக்கக்கூடாது.. அடக்கிவாசிங்க..)
 
7. என்ன சம்பளம் எதிர்பார்க்குறீர்கள்?
 
இது மிகவும் முக்கியமான கேள்வி. கூடுமானவரை நாம் வாயைத் திறக்காமல் இருப்பதே நல்லது. ஏனென்றால் நாம் குறிப்பிடும் தொகை, ஒருவேளை அவங்க நிர்ணயித்து வைத்திருப்பதை விடக்  குறைவானதா இருக்கலாம். (பெர்ஃபார்மன்ஸப் பொறுத்துச் சம்பளம் குடுங்க“னுச் சொல்லிட்டுப் பம்மிடலாம்..)
 
 
8. உங்கள் பலம், பலவீனமாக எதனைக் கருதுகிறீர்கள்?
 
இஃது உங்களை நீங்கள் எந்த அளவுக்குப் புரிந்து வைத்திருக்கின்றீர்கள் என்பதைக் காட்ட உதவும். அதுமட்டுமில்லாம, உங்களோட நடத்தையை எடைபோட உதவும்.
 
9. இந்த நிறுவனம் பற்றி உங்களுக்குத் தெரிந்தத் தகவல்கள் என்ன?
 
இது மிகவும் முக்கியமான கேள்வி. குறிப்பிட்ட வேலைக்கு விண்ணப்பிக்கும்போது, அந்த நிறுவனம் பத்தியும், அந்த வேலை பற்றித் தெளிவாகத் தெரிஞ்சு வைத்துக் கொள்வது அவசியமானது. (ஜஸ்ட்.. விளம்பரம் பாத்தேன், அப்ளைப் பண்ணேன், தட்ஸ் ஆல்“னுத் தெனாவெட்டாப் பதில் சொல்லி ஆப்பு வாங்காதீங்க..)
 
10. பணிநிமித்தம் பயணம் செய்யச் சம்மதிப்பீர்களா?
 
 
வேலை நிமித்தமாகச் சில நாள் வெளியூர்ச்செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்படலாம். அதற்கு நீங்கள் தயாராக இருக்கின்றீர்களா என்று முன்னர்த் தீர்மானித்துக் கொள்வது அவசியம். (கூட வேலைபாக்குறப் பொண்ணைத் துணைக்கு அனுப்புவீங்களானு கேட்றாதீங்க...)
 
11. முந்தைய நிறுவனத்தில் ஏதேனும் இக்கட்டான சூழ்நலையைக் கையாண்ட அனுபவம் உண்டா?
வேறு நிறுவனத்தில் வேலை பார்த்த அனுபவம் இருந்தது என்றால், இந்தக் கேள்விக்கான பதில், நம் திறமையை யூகிக்கச் செய்யும். (ஆபீசுக்கு லீவு போட்டுட்டு, பாட்டி செத்துப் போய்ட்டாங்கனுச் சமாளிச்ச, அனுபவத்தச் சொல்லி வச்சுடாதீங்க..)
 
12. தனித்துச் செயல்பட விருப்பமா? அல்லது குழுவாகச் செயல்பட விருப்பமா?
 
இஃது அவரவர் தன்மேல வைத்திருக்கின்ற நம்பிக்கையப் பொறுத்துப் பதிலளிக்க வேண்டும். (நா தனியா தான் வருவேன்.. ஆனா தனியாள் இல்லேனு பன்ச் அடிச்சுடாதீங்க..)
 
13. இங்கு வேலைக் கிடைக்காத பட்சத்தில் உங்களுடைய பிரதிபலிப்பு என்னவாக இருக்கும்?
 
மனத்தினில் ”கெட்ட வார்த்தையில் திட்டுவேன்“ என்று சொல்லத் தோன்றும். ஆனால் சொல்லி விடாதீர்கள் இஃது உங்களின் விடா முயற்சி, நம்பிக்கைப் பற்றிய  கேள்வியாக இருக்கும். இந்தப் பதிலை வைத்துக் கூட வேலைக் கிடைக்கலாம்.
 
14. எவ்வளவு காலம் இங்குப் பணி செய்யத் தயாராக இருக்கிறீர்கள்?
(“ஃப்ரெண்ட் கம்பெனில அப்ளைப் பண்ணிருக்கேன். கிடைச்சதும் ஓடிடுவேன்“னு அதிமேதாவித்தனமாகப் பதில் சொல்லக் கூடாது.) இதற்குக் குறிப்பிட்டக் காலவரையறை எதுவும் சொல்லாமல், கடைசி வரைக்கும் இருப்பேன் என்று சொல்ல வேண்டும். தொடர்ந்து வேலை செய்ய முன்வரும் பொழுது வாய்ப்புகள் தரப்படலாம்.
 
15. உங்களுக்கு, எங்களிடத்தில் கேட்க வேண்டிய கேள்விகள் ஏதாவது இருக்கின்றனவா?
 
நிறுவனம் அல்லது பணி பற்றி, நமக்கு ஏதாவது ஐயங்கள் உளவா என்னும் நோக்கத்தில் கேட்கப்படும் கேள்வியாகும். திறம்படக் கேட்டுத் தெளிவுபடுத்திக் கொள்ளலாம். இந்தக் கேள்வியில இருந்தும் நம்மளோட, தெரிந்துகொள்ளும் ஆர்வம் ஆராயப்படும். (இங்க எத்தனப் பொண்ணுங்க வேலை பாக்குறாங்க“ன்னுக் கேட்டுறாதீங்க...)
 
 
 
**********************************************
 
 
நிறுவனங்களப் பொறுத்து, இன்னும் பல கேள்விகள் கேட்கப்படலாம். கேள்விகள் எதுவாகயிருந்தாலும் துணிவாகத் தடுமாற்றம் இல்லாமல் நாம் கூறும் பதில்கள் மிகவும் அவசியம் என்பதில் எண்ணத்தில் நிறுத்திக் கொள்க. நம்மிடமிருந்து வெளிப்படும் பதில்கள், சம்பந்தப்பட்டவர்க்குத் திருப்தியளிக்கும் பொழுது, அதற்கான பலன் உறுதியாக வெற்றிக் கனியாக அமையும்!
 
-**********************************************- 
அபுல்கலாம் பின் ஷைக் அப்துல்காதிர்
 
“கவியன்பன்” கலாம், அதிராம்பட்டினம்( பாடசாலை), அபுதபி (தொழிற்சாலை)
அலை பேசி: 00971-50-8351499 / 056 7822844
வலைப்பூந் தோட்டம்: http://www.kalaamkathir.blogspot.com/ (கவிதைச்சோலை)
மின்னஞ்சல்:  kalaamkathir7@gmail.com