ஒப்பில்லா உயர்மறையாய் விளங்கும்அல் குர்ஆன்
.. உலகத்து மாந்தரினம் உய்க்கவேவந் தவேதம்
செப்பிவைத்தான் திருமறையில் சிறப்பாக அல்லாஹ்
.. செழுமைபெறும் நல்வழியாயல் சிறக்கவொரு வேதம்
இப்புவிக்குப் போதுமென ஏற்றவர்கள் உரைப்பார்
.. இம்மகிழ்ச்சி உலகத்தில் வேறெங்கு முண்டோ?
அப்பழுக்கே இலாவாழ்க்கை அமைந்திடவே அறங்கள்
.. அளிக்கின்ற திருமறையும் உலகமாந்தர்ச் சொத்து!
அறமுரைக்கும் திருமறையை அறபுமொழி யிலிருந்(து)
.. அகிலமொழி யனைத்திலுமே மொழிபெயர்ப்புச் செய்து
சிறப்புறவே அதிலுள்ள கருத்துரைகள் உணர்ந்து
.. செய்கின்ற நம்வாழ்க்கை முறையொழுக்க நெறியாம்
திறன்வியந்து போற்றுகிறார் உலகப்பேர் அறிஞர்
.. திக்கெல்லாம் இறைபெருமை திகழவைக்கும் குர்ஆன்
மறந்துவிடா வண்ணம்சொல் லடுக்குகளாய்க் கோக்கும்
.. மனனத்தில் ஏற்றிவைக்கும் ஓசைநயம் ஈர்க்கும்
ஒன்றுபட்டச் சமுதாயம் உருவாக வேண்டி
.. ஓரிறையை வழிபடவே ஓர்மறையைத் தந்தான்
நன்றுபலக் காட்டுகளாய் வரலாறும் பேசும்
.. நாமின்று காணுகின்ற அறிவியலும் வீசும்
குன்றுகளை மேகத்தை ஒட்டகத்தைப் பார்த்துக்
.. கூரறிவுச் சீராக்கச் சொல்லுமிந்த வேதம்
இன்றுவரை இவ்வேதம் அழியாமல் காக்கும்
.. இறைவனவன் வாக்குறுதி மெய்யாகக் காணீர்!
அபுல்கலாம் பின் ஷைக் அப்துல்காதிர்
“கவியன்பன்” கலாம், அதிராம்பட்டினம்( பாடசாலை), அபுதபி (தொழிற்சாலை)
அலை பேசி: 00971-50-8351499 / 056 7822844
வலைப்பூந் தோட்டம்: http://www.kalaamkathir.blogspot.com/ (கவிதைச்சோலை)
மின்னஞ்சல்: kalaamkathir7@gmail.com
உண்மைக் கண்ணீரின் கதை
ReplyDelete