Saturday, August 27, 2011

காஷ்மீரில் மறைக்கப்படும் உண்மைகள்...


ஜூலை 26 ஸ்ரீ நகரின் காலை பொழுது தொழுகையோடு விடிந்தது. பக்கத்தில் அழகான ஒரு பள்ளிவாசலும் இருந்தது.
 
நாங்கள் ஸ்ரீ நகருக்கு ஒரு சுற்றுலா பயணிகளை போல தான் வந்தோம். காரணம் இங்கு மனித உரிமை அமைப்புகள் என்று சொல்லிக்கொண்டோ, பத்திரிகையாளர்கள் என்று அறிமுகப்படுத்திக்கொண்டோ வருவது மிக பெரிய ஆபத்து.
 
அரசும், உளவுத்துறையும், அரசு படைகளும் ஒரு காலத்திலும் காஷ்மீரிகளின் துயரங்களை வெளி உலகுக்கு காட்டி விட கூடாது என்பதில் மிகுந்த அக்கறை காட்டுகின்றனர்.
 
நாங்கள் போன சமயம் சீக்கியர்களின் புகழ்பெற்ற தலைவரும், முன்னாள் நடாளுமன்ற வாதியுமான சிம்ரன்ஜித் சின் மான் காஷ்மீர் மக்களை சந்திக்க வந்தார். ஜூலை 22 அன்று மான் அவர்கள் ஜிலானியை சந்தித்து விட்டு தொடர்ந்து பல்வேறு தரப்பினரையும் சந்திக்க விருந்தார். ஆனால் நாங்கள் போன அன்று அவரை காஷ்மீரிலிருந்து வெளியேற்றி ஸ்ரீ நகர் விமான நிலையத்திலிருந்து அவரை மாநில அரசு திருப்பி அனுப்பி வைத்தது.
 
 
இது காஷ்மீர் டைம்ஸ்,  கிரேட்டர் காஷ்மீர் உள்ளிட்ட ஆங்கில பத்திர்க்கைகளில் முக்கிய செய்தியாக வெளியிடப்படிருந்ததை படித்தோம். மேலும் தெற்கு காஷ்மீரில் குல்காம் என்ற பகுதியில் ருக்கையா பானு என்ற காஷ்மீர் பெண்ணை இந்திய ராணுவத்தினர் கற்பழித்ததால் ஆங்காங்கே போராட்டங்களும், கல்வீச்சுகளும் நடைபெற்று கொண்டு இருந்தன.
 
காஷ்மீரின் முக்கிய தலைவர்களான செய்யது அலிஷா ஜிலானி, சபீர் உள்ளிட்டோர் வீட்டு காவலில் முடக்கப்பட்டார்கள் என்பதையும் அறிந்தோம்.
நாங்கள் வந்திருந்த சூழல், மிகவும் பதற்றமாக இருந்ததை உணர்ந்து கொண்டோம்.
 
அதே நேரம் காஷ்மீர்களிடம் நெருங்கி பழகி அவற்றை பேட்டிகளாக எடுத்து மக்கள் உரிமையில் வெளியிட வேண்டும் என்ற எங்கள் முடிவில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. இறைவன் இருக்கிறான் என்ற அசைக்கமுடியாத நம்பிக்கையோடு ஸ்ரீநகரில் வலம் வர புறப்பட்டோம்.
 
எமது சந்திப்புகளையும், உரையாடல்களையும் கவனமாக கையாண்டு அவற்றை பேட்டிகளாக பதிவு செய்ய வேண்டுமென்று எங்களுக்குள் முடிவுஎடுத்து கொண்டோம். ஒரு உண்மை அறியும் குழுப்போலவே எங்களது அணுகுமுறைகள் இருந்தது.
 
நாங்கள் சந்தித்த ஸ்ரீநகர் மக்கள் எங்களுக்கு வித்தியாசமாக இருந்தார்கள். அவர்களது தோற்றம், ஆடைகள் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆட்களைப்போலவே இருக்கிறார்கள் என வழக்கறிஞர் வாசுதேவன் கூறினார். அது தான் உண்மை. இனம் என்று பார்த்தால் காஷ்மீர் பள்ளத்தாக்கில் வாழ்பவர்கள் பிராமணர்களாக இருந்து இஸ்லாத்தை தழுவியவர்கள் என்பது அறிவியல் மற்றும் வரலாற்று உண்மையாகும்.
 
நாங்கள் முதலில் சந்தித்த காஷ்மீரியரின் பெயர் ஆபித் அலி. இவர் ஒரு வணிகர்.
 
காஷ்மீர் பிரச்கனை குறித்து அவரோடு பேசினோம். சட்டென்று பொறுமை இழந்தவராய் பேசத் தொடங்கினார்.
 
1931& லிருந்து இப்பிரச்னை தொடங்கியது. 1948 &ல் பாகிஸ்தான் ஆதரவு பட்டாண்கள் காஷ்மீருக்குள் நுழைந்த போதுதான், மன்னர் கரண்சிங் இந்தியாவின் உதவியை நாடினார்.
 
காஷ்மீரை காப்பாற்றுகிறோம் என்று வந்த இந்திய ராணுவம் அப்படியே தங்கிவிட்டது. அது முதல் இந்தியாவின் ஆக்கிரமிப்பு தொடர்கிறது என்றவர் 1989 லிருந்துதான் ஆயுதம் தாங்கிய முஜாஹிதீன் (போராட்டக்காரர்கள்) குழுக்கள் உருவாகின.
 
அதுமுதல் 22  ஆண்டுகளாய் நாங்கள் சந்தித்துவரும் இன்னல்கள் கொஞ்சநஞ்சமல்ல. இங்கு ராணுவத்தின் ஆட்சிதான் நடக்கிறது எனலாம்.
 
1989லிருந்து இதுவரை 75 ஆயிரம் காஷ்மீரிகளை இந்தியா கொன்றுள்ளது. ஆனால் உண்மையில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 லட்சம் என நாங்கள் கருதுகிறோம்.
 
இதனால் விதவைகளின் எண்ணிக்கையே 50 ஆயிரத்தை தாண்டியுள்ளது. அவர்களின் வாழ்க்கை மிகவும் பரிதாபமாக உள்ளது. பெற்றோரை இழந்த பிள்ளைகளின் எண்ணிக்கை 20 ஆயிரத்தை தொடுகிறது. விசாரணை என்ற பெயரில் அரசுப் படைகள் பலரை இழுத்துச் சென்றிருக்கிறது. அவர்களில் பெரும்பாலோர் பல ஆண்டுகளாக என்ன ஆனார்கள் என்றே தெரியவில்லை. இப்படி காணாமல் போனவர்களின் எண்ணிக்கை மட்டுமே 10 ஆயிரத்தை தாண்டுகிறது.
 
எத்தனையோ மனைவிகள் தங்கள் கணவர் வருவார் என்ற நம்பிக்கையாலும், பல தாய்மார்கள் தங்களை காப்பாற்ற தங்கள் பிள்ளைகள் வருவார்கள் என்ற நம்பிக்கையிலும், எத்தனையோ பிள்ளைகள் தங்கள் தந்தையை ஒருநாள் காண்போம் என்ற நம்பிக்கையிலும், பல சகோதரிகள் தங்கள் சகோதரர்கள் ஒருநாள் வருவார்கள் என்ற நம்பிக்கையிலும் வாழ்ந்துக் கொண்டிருக்கிறார்கள்.
 
ஆபித் அலியின் வாக்குமூலம் எங்கள் அனைவரையும் உலுக்கியது.
 காஷ்மீரில் பிராமண பண்டிட்களும் கொல்லப் பட்டிருக்கிறார்களே என்ற அடுத்த கேள்வியை முன் வைத்தோம்.
 
அதிகபட்சமாக 500 பேர் கொல்லப்பட்டிருக்கக் கூடும். அவர்கள் எங்கள் சகோதரர்கள். அவர்கள் கொல்லப்பட்டிருக்கக் கூடாது. அதற்காக நாங்கள் வருந்துகிறோம்.
500 பண்டிட்டுகளின் மரணங்களை பெரிதுபடுத்தும் இந்திய ஊடகங்கள், 3 லட்சம் காஷ்மீரிகள் சொல்லப்பட்டதை ஏன் பேசுவதில்லை. அது எங்களை மிகவும் வேதனைப்படுத்துகிறது என்றவர், அகதிகளாக வெளியேறிய பண்டிட்டுகள் எப்போது வந்தாலும் நாங்கள் ஏற்றுக் கொள்வோம் என்றார்.
எங்களுடைய முதல் நேர்காணல் மிகவும் வேதனையுடன் தொடர்ந்தது.
 
ஆபித் அலியை தொடர்ந்து, பிர்தௌஸ் என்பவரை சந்தித்தோம்.
இவர் மளிகை உள்ளிட்ட பல்வேறு வணிகங்களில் ஈடுபட்டு வருகிறார். எடுத்ததுமே வேகமாக பேசினார்.
 
எங்களின் இதயங்களை தொடக்கூடிய எந்த வேலைகளையும் இந்திய அரசு செய்வதில்லை. மாறாக எங்களை அதிகம் காயப்படுத்துகிறது என்றவர், காஷ்மீருக்கு கூடுதலாக வரிகளை விதித்து மக்களை வதைப்பது என்ன நியாயம்? என்றவர் இங்கு பெட்ரோல் 1 லிட்டர் 80 ரூபாய்க்கு விற்பது உங்களுக்கு தெரியுமா? என்றார்.
 
1989  முதல் 99 வரை இருபது வருடங்களில் 1850 நாட்கள் கடை அடைப்பிலும், வேலை நிறுத்தத்திலும் கழிந்து விட்டது. இப்படி இருந்தால் வியாபாரிகள் என்ன செய்ய முடியும்? என்றவர் எங்களை அழைத்து சென்று தனது கடையின் பின் பகுதியை காட்டினார்.
 
அதில் ஓட்டைகள் இருந்தன. இது என்ன தெரியுமா? என்றவர். ராணுவத்தினர் மொத்தமாக வருவார்கள். எங்கள் கடையில் சாமான்களை வாங்குவார்கள். பணம் கேட்டால் துப்பாக்கியால் சுடுவார்கள். அப்படி சுட்டதுதான் இந்த ஓட்டைகள் என்று விளக்கமளித்தார்.
 
எங்களால் ஒன்றும் சொல்ல முடியவில்லை.  பிறகு நாங்கள் காரில் ஏறி புகழ்பெற்ற ஸ்ரீநகரின் ஜாமியா மஸ்ஜிதுக்கு புறப்பட்டோம்.
 
எம். தமிமுன் அன்சாரி

No comments:

Post a Comment