தமிழகக் கல்வியாளர்களின் நாற்பது ஆண்டுக் கனவு, நிறைவேறி இருக்கிறது. தடை பல கடந்து வெற்றிக்கொடியை நாட்டி இருக் கிறது, சமச்சீர்க் கல்வித் திட்டம்!
பலரும் இதற்காக முயன்று இருந்தாலும், 'இவர் கள் இல்லாமல் இது சாத்தியம் இல்லை’ என்று சொல்லும் அளவுக்கு சில அமைப்புகள்தான் இதற்கு முக்கியக் காரணம்! இதில், பிரின்ஸ் கஜேந்திரபாபு என்ற தனி மனிதரின் போராட்டம் முக்கியமானது. 'பொதுப் பள்ளிக்கான மாநில மேடை’ எனும் அமைப்பின் மூலம், சமச்சீர்க் கல்விக்காகப் போராடி வருகிறார் இவர்.
தொலைபேசியிலும் நேரிலும் பலரின் பாராட்டு களில் நனைந்துகொண்டு இருந்த அவரை நாம் சந்தித்தபோது, ''மத்தியில் பி.ஜே.பி. ஆட்சியில் பாடத் திட்டங்களில் மதவாதக் கருத்துகளைச் சேர்த்து, பிரச்னை உண்டானது. அடுத்து வந்த காங்கிரஸ் கூட்டணி அரசின் மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் அர்ஜுன்சிங், அனைத்து மாநிலங்களின் பாடத் திட்டங்களையும் திருத்தியமைக்க உத்தரவிட்டார். 2005-ல் உருவாக்கப்பட்ட 'தேசிய பாடத் திட்டக் கொள்கை’யின்படி, புதிய பாடத்திட்டம் இருக்கவேண்டும் என அறிவிக்கப்பட்டது. இந்தப் பணிக்காக, ஒவ்வொரு மாநிலத்துக்கும் தலா 10 லட்சத்தை தேசிய கல்வி ஆராய்ச்சி, பயிற்சி நிறுவனம் (என்.சி.இ.ஆர்.டி) வழங்கியது. தமிழகத்திலும் 2006-ல் தொடங்கிய இந்தப் பணி முடிய மூன்று ஆண்டுகள் ஆனது.2009 அக்டோபரில் 'வரைவு பொதுப் பாடத்திட்டம்’ என இணையதளத்தில் இது வெளியிடப்பட்டது. இறுதியாக, என்.சி.இ.ஆர்.டி-யின் பாடத்திட்டக் குழுவும் இதை ஆராய்ந்து, 'இது சரியாகத் தயாரிக்கப்பட்டுள்ளது’ என்று 2009 நவம்பர் 25-ல் அறிவித்தது. அடுத்த இரண்டாவது நாளில்,சமச்சீர்க் கல்விக்கான அவசரச் சட்டத்தை தி.மு.க. அரசு கொண்டுவந்தது. இதனால்தான் சமச்சீர்க் கல்வி தமிழகத்துக்கு வந்தது. கருணாநிதி கொண்டுவந்தார் என்பதற்காக எதிர்ப்பவர்கள் இதை முதலில் புரிந்துகொள்ள வேண்டும்.
2006-ல் இருந்து கல்வியாளர்களும் மாணவர் அமைப்பினரும் சமச்சீர்க் கல்விக்காகப் போராடினர்.2006 செப்டம்பரில் முத்துக்குமரன் குழு அமைக்கப்பட்டு, 2007 ஜூலையில் அறிக்கை தந்தது. அதை ஆராய விஜயகுமார் என்ற ஐ.ஏ.எஸ். அதிகாரியைக் கொண்டு குழு அமைக்கப்பட்டு... அதுவும் அறிக்கை தந்தது. ஆனால், தி.மு.க. அரசு சமச்சீர்க் கல்வி பற்றி வாய் திறக்கவே இல்லை. தமிழகக் கல்விக் குழு தயாரித்த 'பொதுப் பாடத் திட்ட’த்தை என்.சி.இ.ஆர்.டி. அங்கீகரித்தபின்பு, அதை தி.மு.க. அரசும் அங்கீகரிக்கவேண்டிய கட்டம் வந்தபோது, திடீரென சமச்சீர்க் கல்விக்கான அவசர சட்டத்தைக் கொண்டுவந்தார்கள்
நவம்பர் 30-ம் தேதி கெசட்டில் வெளியிட்டு, 2010 பிப்ரவரியில்தான் சட்டப் பேரவை மூலம் இந்த சட்டம் நிறைவேறியது. இதன்படி புத்தகத்தை அச்சடிக்க உத்தரவு பிறப்பித்த பிறகு, தனியார் பள்ளிகள் தரப்பில் சமச்சீர் பாடத் திட்டத்தை எதிர்த்து, நீதிமன்றம் சென்றனர்.
விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் பிரபாஸ்ரீதேவன் மற்றும் ஜனார்த்தன்ராஜா பெஞ்ச், 'சமச்சீர் பாடத் திட்டம் செல்லும். ஆனால், அந்தப் பாடத் திட்டத்தின்படி தனியார் பள்ளிகள் புத்தகங்களைத் தீர்மானித்துக் கொள்ளலாம்’ என்று தீர்ப்பளித்தது. அதே ஆண்டு செப்டம்பரில் உச்ச நீதிமன்றமும் இதை உறுதிசெய்தது. ஆனால், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு மாறாக, ஒரு சட்டம் கொண்டுவந்து... அதனால் இரண்டு மாதம் குழந்தைகள் மனச் சித்ரவதைக்கு உள்ளாகி, ஒரு வழியாக அதே நீதிமன்றத்தால், பொதுப் பாடத்திட்ட உரிமை மீண்டும் நிலைநாட்டப்பட்டு உள்ளது!''என்று முடித்தார் பிரின்ஸ்.
மார்க்சிஸ்ட் கட்சியின் இந்திய மாணவர் சங்கத்தினரும் (எஸ்.எஃப்.ஐ.) அடுத்தடுத்து நடத்திய ஆர்ப்பாட்டங்கள் முக்கியமானவை. 2009 ஜூலை 14-ம் தேதி, தலைமைச் செயலகம் முன்பு முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட இவர்கள் மீது போலீஸ் கடுமையான தாக்குதல் நடத்தியது. இதில் 30 பேர் படுகாயம் அடைந்தனர்.
''இந்தத் தாக்குதலில், ஹனீஃபா என்ற மாண வருக்கு தலையில் படுகாயம்.மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டு, உயிருக்கே ஆபத்து! மூன்று மாத சிகிச்சைக்குப் பிறகே உயிர்பிழைத்தார். சமச்சீர்க் கல்வியைக் கொண்டுவந்ததாக இப்போது தம்பட்டம் அடித்துக்கொள்ளும் தி.மு.க. ஆட்சியில், அதற்காகப் போராடிய மாணவனுக்குக் கிடைத்த பரிசு அப்படி!'' என்றார்,எஸ்.எஃப்.ஐ. மாநிலச் செயலாளர் ராஜ்மோகன்.
மனித உரிமைப் பாதுகாப்பு மையம் மற்றும் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி (ஆர்.எஸ்.ஒய்.எஃப்) ஆகிய அமைப்புகள் செய்த போராட்டங்கள் ரொம்பவும் அதிரடி!
''எல்லோருக்கும் பொதுவான பாடத்திட்டம் கூடாது என்பது சமூக அநீதி. உலகமயமாக்கலுக்கு ஏற்ப பொதுப் பாடத்திட்டம் இல்லை என்கிறது அ.தி.மு.க. அரசு. எனவே, 'மீண்டும் குலக் கல்வியைக் கொண்டுவரும் ஜெ. அரசின் முயற்சியை முறியடிப்போம்’ என்றுதான் களத்தில் இறங்கினோம். சென்னையில் 600 பேர் மறியல் செய்து, 63 பேர் சிறையில் அடைபட்டோம். கடலூர், திருச்சி,மதுரை என பல ஊர்களிலும் போராடியவர்களுக்கு ஒரு வாரத்துக்கும் மேல் சிறை. கடலூரில் 15வயது மாணவர் ஒருவரை 21 நாள் சிறார் சிறையில் அடைத்தது இந்த அரசு!'' என்றார், இந்த அமைப்பின் மாநில அமைப்பாளர் கணேசன்.
தி.மு.க., அ.தி.மு.க. கட்சிகளின் அரசியல் லாபநட்டக் கணக்குகளுக்கு அப்பால், தமிழ்ச் சமூகத்தின் சமநீதிக்கான ஒரு படிக்கல்லைத் தொட்டிருக்கும் இந்தத் தருணம், விடாப்பிடி போராட்டங்களுக்குக் கிடைத்த அர்த்தமுள்ள ஒரு பரிசுதான்! நன்றி - ஜூனியர் விகடன்
No comments:
Post a Comment