Saturday, August 13, 2011

அல் குர்ஆனிய சமூகத்தை நோக்கி..!


அவர்கள் இக்குர்ஆனைச் சிந்திக்க வேண்டாமா? அல்லது அவர்களின் உள்ளங்கள் மீது அதற்கான பூட்டுக்கள் உள்ளனவா? (அல்குர்ஆன் 47:24)
15 நூற்றாண்டுகளுக்கு முன்னர் இப்பிரபஞ்சத்தில் தான்றோன்றித் தனமாகவும், நரக விளிம்பிலும் வாழ்ந்து கொண்டிருந்த ஜாஹிலிய சமூகத்தில்தான் புனித வேதமாகிய அல்குர்ஆனோடு முஹம்மது நபி எனும் இறைத் தூதர் அனுப்பப்படுகின்றார்கள். அச்சமூகம் இலக்கிய நயத்திலும், அறிவியலிலும் துறை போனவர்களாக இருந்தும் கூட அவர்களை அல்குர்ஆன் (ஜாஹிலிய) ‘அறிவிலி சமூகம்’ என வர்ணிக்கின்றது.


இதற்கு பிரதான காரணம், அவர்களிடத்தில் அறிவு இருந்தும் அதனை எவ்வாறு செயற்படுத்த வேண்டுமென்ற அறிவார்ந்த நுட்பம் இருக்கவில்லை. அத்தோடு பெண்களை சந்தைகளில் விலை பேசப்படுகின்ற போதைப் பொருள்களாகவும், பஞ்சமா பாதகங்களை தங்களது இயல்பியற் குணங்களாகவும் கொண்டிருந்தனர். மொத்தத்தில் மனிதத்துவத்திற்கு அப்பாற்பட்ட ஒரு நிலையில் வாழ்ந்து வந்தனர் என்று சொன்னாலும் அதனை மறுப்பதற்கு யாருமில்லை எனலாம்.
இத்தகைய ஒரு சமூகத்தில்தான் முஸ்லிம்களின் சட்ட யாப்பாகிய அல்குர்ஆன் இறக்கியருளப்படுகின்றது. இலக்கிய நயத்தில் விற்பன்னர்களாக திகழ்ந்த பெரும் இலக்கிய வாதிகளையெல்லாம் பிரமிக்க வைக்குமளவுக்கு அல்குர்ஆனின் இலக்கிய நடை அமைந்திருக்கின்றது. அது மாத்திரமல்லாமல் தார்மீகம், நாகரிகமென்றால் என்னவென்று தெரியாத அச்சமூகத்தில் அல்குர்ஆன் அதிசயிக்கத்தக்க விளைவுகளையும், வரலாறு காணாத சாதனைகளையும் உண்டு பண்ணியது.


பண்பாடற்ற ஒருசமூகத்தை பண்பட்ட ஒரு சமூகமாகவும், ஒழுக்கயீனமற்ற ஒரு சமூகத்தை ஒழுக்க சீலமுள்ள ஒரு சமூகமாகவும், அநீதி, அநியாயத்திற்கு கொடி தூக்கிய சமூகத்தை நீதி, நியாயத்திற்கு கொடி தூக்கும் சமூகமாகவும் மாற்றியமைத்ததுடன் மிருக வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்த சமூகத்தை மனித நேயமிக்க ஒரு சமூகமாக, வரட்டு கௌரவங்கள் ஆட்கொண்டிருந்ந ஒரு சமூகத்தை தன்மானமுள்ள ஒரு சமூகமாகவும் மாற்றியமைத்தது இந்த அல்குர்ஆன்.
பண்பாட்டு விழுமியங்கள் வீழ்ச்சியுற்றிருந்த இத்தகைய சமூகத்திலிருந்துதான் மனிதப்புனிதர்களான அபூபக்கர், உமர், உஸ்மான் போன்ற நேர்வழியின் ஒளி விளக்குகளை பிரகாசிக்கச் செய்த அதே அல்குர்ஆன்தான் இன்றுவரை எம்முடன் இருக்கின்றது. எனினும், அன்று அல்குர்ஆன் உருவாக்கிய அபூபக்கர்களையும், உமர்களையும் இன்றைய நமது சமூகம் ஏன் காணத்தவறியிருக்கின்றது?


அன்றைக்கு ஒரு வேதம், இன்றைக்கு ஒரு வேதமா? அல்லது அன்றைய மனிதர்கள் இன்றைக்கு காணாமல் போயுள்ளார்களா? இவற்றில் நாம் தேடும் வினாவுக்கு இரண்டாவது வினாவே தீர்வாக அமையும். அன்றைய ஸஹாபிய சமூகம் அல்குர்ஆனை தங்களது வாழ்க்கை நெறியாகவும், மறுமையில் சுவனத்தை அடை வதற்கான கருவியாகவும் அமைத்துக்கொண்டனர்.


ஆனால், இன்றைய முஸ்லிம்கள் திருமறைக் குர்ஆனை வெறும் சடங்காகவும், எவராவது மரணித்துவிட்டால் ஓதப்படுகின்ற சம்பிரதாயப் பொருளாகவும் பயன்படுத்துகின்றனர். அதேபோல், பரக்கத்திற்காக ‘மணக்குச்சி’ கொழுத்தப்படுகின்ற பொருளாகவும், அற்ப சொற்பங்களுக்காக விலை பேசப்படுகின்ற ஒரு புத்தகமாகவும் நோக்குகின்றனர். இந்த அல்குர்ஆன் பாமர மக்களுக்கு விளங்காது, அதனை விளங்க பதினாறு கலைகள் படித்திருக்க வேண்டும்.
அல்குர்ஆனைப் படிப்பதால் சிலவேளை வழிதவறவும் செய்யலாம் என்பன போன்ற தவறான நம்பிக்கைகள் எம் மத்தியில் மலிந்து கிடப்பதை பார்க்கின்றோம். இத்தகைய சிந்தனைகளை விதைப்பது ஏழெட்டு வருடங்கள் ஓதிப்படித்த மார்க்க அறிஞர்கள்(?)  என்பதுதான் மனதிற்கு வேதனை தரும் விடயமாகும்.


நபிமார்களின் வாரிசுகள் என தங்களைத் தாங்களே மார்தட்டிக்கொள்ளும் இவர்கள் இத்தகைய கீழ்த்தரமான சிந்தனைகளுக்குச் சொந்தக்காரர்கள் என்பதை நினைத்து வெட்கப்படுகின்றோம். மேற்கிலே வாழும் மாற்று சமூகம் கூட குர்ஆனை வாசித்து இஸ்லாத்தை நோக்கி சாரை சாரையாக அணிதிரண்டு கொண்டிருக்கும் இந்த நவீன யுகத்தில் வாழையடி வாழையாக இஸ்லாத்தை ஏற்றிருக்கும் நாம் ஏன் குர்ஆனை விளங்க முடியாது என்பதை சிந்திக்கத் தவறிவிட்டோம்.
குர்ஆனிய வசனங்களை ஆய்வு செய்து அந்நிய மதத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் நாளுக்கு நாள் புதிய புதிய கண்டு பிடிப்புக்களை கண்டுபிடிக்கின்றனர். ஆனால் அதே அல்குர்ஆனிய வசனங்களை ஓதித்தான் நமது சமுதாயத்து மார்க்க மேதைகள் வயிற்றுப்பிழைப்பு நடாத்துகின்றனர்.


இதனால்தான் மாற்றுமத அறிஞரொருவர் ‘அல்குர்ஆனை எப்போது முஸ்லிம்கள் எடுத்து நடைமுறைப் படுத்துகின்றார்களோ அப்போதுதான் அந்த சமூகம் இழந்து போயிருக்கும் தங்களது சுய கௌரவத்தை மீளவும் பெற்றுக்கொள்ளும்’ எனக் கூறுகின்றார். இன்று உலகில் இரண்டாம் பெரும்பான்மையாக வாழும் முஸ்லிம் சமூகம் ஐந்தாம் தரப்பாக வாழுகின்ற யூத சமூகத்தால் அடக்கியொடுக்கப்படுவதற்கு பிரதான காரணம் நமது சமூகம் அல்குர்ஆனை புறக்கனிக்கின்றமையே ஆகும். இதனை பின்வரும் அல்குர்ஆன் வசனம் தெளிவுபடுத்துகின்றது.


“எனது போதனையைப் புறக்கணிப்பவனுக்கு நெருக்கடியான வாழ்க்கை உண்டு. அவனை கியாமத் நாளில் குருடனாக எழுப்புவோம்” (அல்குர்ஆன் 20:124).


திருமறைக் குர்ஆனை புறக்கணித்துவிட்டு சினிமாக்களிலும், சீரியல் நாடகங்களிலும், மேற்கத்தேய கலாச்சாரங்களிலும் மோகம் கொண்டிருக்கும் நாம் புதியதொரு இஸ்லாமிய மறுமலர்ச்சியையும், சமூக ஒற்றுமையையும், இஸ்லாமிய கிலாபத்தையும் எதிர்பார்ப்பது கற்பனை உலகில் சஞ்சரிப்பதற்கு ஒத்ததல்லவா?






எனவேதான், நாம் வெறுமனே பெயர்தாங்கி அப்துல்லாக்களாகவும்,  பாத்திமாக்களாகவும் வாழாமல் பெயருக்கு ஏற்றவாறு உயிரோட்டமுள்ளவர்களாக வாழ வேண்டுமா? அத்தகைய உயிரோட்டமுள்ள சமூகத்தைத்தான் அல்குர்ஆனும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றது.


இதனை பின்வரும் வசனங்கள் தெளிவுபடுத்துகின்றன. ‘”வர்கள் இக் குர்ஆனைச் சிந்திக்க வேண்டாமா? அல்லது அவர்களின் உள்ளங்களின் மீது அதற்கான பூட்டுகள் உள்ளனவா?” (அல்குர்ஆன் 47:24). மற்றுமொரு வசனத்தில் “இக்குர்ஆனை விளங்குவதற்கு எளிதாக்கியுள்ளோம். படிப்பினை பெறுவோர் உண்டா?” (அல்குர்ஆன் 54:17)
-தகவல் : மஸுதா ஆலிமா.

No comments:

Post a Comment