தென் ஆப்ரிக்காவில் 19 வது உலககோப்பை கால்பந்து தொடர் நடக்கிறது. லீக் சுற்றில் இன்று நடக்கும் முக்கிய போட்டியில், குரூப் "பி' பிரிவில் இடம் பெற்றுள்ள அர்ஜென்டினா, நைஜீரியா அணிகள் மோதுகின்றன.
மாரடோனா "வியூகம்':
முன்னாள் வீரர் மாரடோனா தலைமையில், அதிக எதிர்பார்ப்புகளுடன் களமிறங்குகிறது அர்ஜென்டினா அணி. தகுதிச் சுற்றுப் போட்டிகளில், தட்டுத் தடுமாறி வெற்றி பெற்று, உலககோப்பை வாய்ப்பை எட்டியுள்ள அர்ஜென்டினா அணிக்கு, மாரடோனாவின் வியூகங்கள் கைகொடுக்குமா என்பது சந்தேகம் தான். இருப்பினும் நைஜீரியா சற்று பலம் குன்றிய அணி என்பதால், இன்றைய போட்டியில் எளிதில் அர்ஜென்டினா வெற்றி பெற வாய்ப்பு உள்ளது.
மெஸ்சி மந்திரம்:
அர்ஜென்டினா அணியின் நட்சத்திர வீரர் மெஸ்சி, முதல் போட்டியிலேயே முத்திரை பதிப்பார் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். பார்சிலோன கிளப் அணி சார்பில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் இவர், தாய்நாட்டுக்காக பெரிய அளவில் இதுவரை சாதித்து இல்லை. இந்த குறையை நிவர்த்தி செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளார் மெஸ்சி. இவர் தவிர, கேப்டன் ஜேவியர் மஸ்காரனோ, முன்கள வீரர் கார்லஸ் டெவேஸ், மத்திய கள வீரர் டி மரியா, வேரான் ஆகியோர் அர்ஜென்டினாவின் வெற்றிக்கு கைகொடுக்கலாம்.
நைஜீரியா நம்பிக்கை:
இந்த முறை உலககோப்பை தொடரில் கட்டாயம் சாதிப்போம் என்ற நம்பிக்கையுடன் களமிறங்கியுள்ளது நைஜீரியா அணி. அணியின் பயிற்சியாளரான லார்ஸ் லேஜர்பேக், துடிப்புடன் செயல்பட்டு வருவது நைஜீரியாவின் நம்பிக்கையை மேலும் அதிகரித்துள்ளது. கேப்டன் வான்கோ கானு, நைஜீரியாவின் முன்னணி வீரராக அசத்த உள்ளார். இரண்டு முறை ஆப்ரிக்காவின் சிறந்த கால்பந்து வீரருக்கான விருதை வென்ற இவர், முனகளத்தில் கோல் மழை பொழிவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இவருக்கு ஓபாபேமி மார்டின்ஸ், சானிகைட்டு, ஜான் உடேக் ஆகியோர் ஒத்துழைப்பு அளிக்க உள்ளனர். தடுப்பாட்டத்தில் திறமை மிக்க நைஜீரியா அணிக்கு கோல் கீப்பர் வின்சென்ட் என்யேமா கைகொடுப்பது உறுதி.
யாருக்கு வாய்ப்பு?:
ஆப்ரிக்காவின் சிறந்த அணியாக நைஜீரியா இருந்தாலும், இரண்டு முறை (1978, 1986) உலக சாம்பியன் பட்டம் வென்ற அர்ஜென்டினாவின் முன் தாக்குப்பிடிப்பது கடினம் தான். உலககோப்பைக்கு முன்னதாக நட்பு போட்டிகளில், கோஸ்டா ரிகா, ஜமைக்கா, ஜெர்மனி, ஹைதி, கனடா என அனைத்து அணிகளையும் வீழ்த்தி "சூப்பர் பார்மில்' உள்ளது அர்ஜென்டினா. நைஜீரியாவோ பயிற்சி போட்டிகளில் பெருமளவில் "டிரா' மட்டுமே செய்துள்ளது. கடைசியாக வடகொரியாவுக்கு எதிரான ஒரு போட்டியில் வெற்றி பெற்ற உற்சாத்தில் உள்ளது. இதற்கு முன் அர்ஜென்டினா- நைஜீரியா அணிகள் 3 சர்வேதேச போட்டிகளில் மோதியுள்ளன. இதில் அர்ஜென்டினா 2 வெற்றிகளை பெற்றுள்ளது. ஒரு போட்டி "டிராவில்' முடிந்துள்ளது. இதனால் இன்றைய போட்டியில் அர்ஜென்டினா வெற்றியை எட்ட அதிக வாய்ப்பு உள்ளது.
இங்கிலாந்துக்கு சாதகம்:
இன்று நடக்கும் மற்றொரு லீக் சுற்றுப் போட்டியில், குரூப் "சி' இடம் பெற்றுள்ள இங்கிலாந்து, அமெரிக்கா அணிகள் ரஸ்டர்ன்பர்கில் மோதுகின்றன. கடந்த 1966 ம் ஆண்டு உலககோப்பை வென்ற இங்கிலாந்து அதற்குப் பின் பெரிய அளவில் சாதிக்க வில்லை. இந்த முறை கோப்பை வெல்லும் முனைப்புடன் உள்ளது. காயம் காரணமாக நட்சத்திர வீரர் பெக்காம் இல்லாதது அந்த அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தலாம். இருப்பினும் வெய்ன் ரூனேவின் ஆக்ரோஷமான ஆட்டத்தை நம்பியுள்ளது இங்கிலாந்து அணி. கேப்டன் ஸ்டீவன் ஜெரார்டு, ஜான் டெர்ரி, ஹெஸ்கி ஆகியோர் இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு போராட உள்ளனர். அமெரிக்கா எதிர்பார்ப்பு:
உலககோப்பை கால்பந்து தொடரில் இதுவரை பெரிய அளவில் சாதிக்காத அமெரிக்கா, இந்த முறை எதிர்பார்ப்புடன் களமிறங்குகிறது. இங்கிலாந்துக்கு எதிரான இன்றைய முதல் போட்டியில், கிளைன்ட் டெம்ப்ஸ்கே, மைக்கேல் பிராட்லி, எட்சன் படல், பின்ட்லே ஆகியோர் கைகொடுக்கும் பட்சத்தில் அமெரிக்கா சாதிக்கலாம்.
இங்கிலாந்து, அமெரிக்கா அணிகள் இதுவரை 9 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் அதிகபட்சமாக இங்கிலாந்து 7, அமெரிக்கா 2 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளன.
தென் கொரியா-கிரீஸ் பலப்பரீட்சை
போர்ட் எலிசபெத்தில் இன்று நடக்க உள்ள மற்றொரு லீக் சுற்றுப் போட்டியில், குரூப் "பி' பிரிவில் இடம் பெற்றுள்ள தென் கொரியா, கிரீஸ் அணியை எதிர்கொள்கிறது. இப்போட்டியில் ஆசிய அணியான தென் கொரியா வெற்றி பெற அதிக வாய்ப்புகள் உள்ளன. இருப்பினும் முன்னணி வீரர்களின் காயம், அணிக்கு சறுக்கலை ஏற்படுத்தி உள்ளது. கேப்டன் பார்க் ஜி சங் இன்றைய போட்டியில் அசத்தலாம். கிரீஸ் அணி சார்பில் ஜெகாஸ் கைகொடுக்கலாம். உலககோப்பைக்கு முன்னதாக நடந்த பயிற்சி போட்டிகளில் கிரீஸ் பெரிய அளவில் சாதிக்காதது அந்த அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தலாம். தென் கொரியா, கிரீஸ் அணிகள் இதுவரை சர்வதேச போட்டிகளில் மோதியது இல்லை. "எல்லோ கார்டு' ஸ்பெஷலிஸ்ட்
இங்கிலாந்து, அமெரிக்கா அணிகள் மோதும் இன்றைய போட்டியின், "ரெப்ரியாக' பிரேசிலின் கார்லஸ் சைமன் பணியாற்ற உள்ளார். இவர் மிகவும் கண்டிப்பானவர். வீரர்களுக்கு "எல்லோ கார்டு' வழங்குவதற்கு தயங்காதவர். கடந்த 2006 ம் ஆண்டு நடந்த உலககோப்பை தொடரின் போது, 3 போட்டிகளுக்கு "ரெப்ரியாக' செயல்பட்ட இவர், 17 "எல்லோ கார்டு' மற்றும் ஒரு "ரெட் கார்டு' வழங்கி சர்ச்சை ஏற்படுத்தினார். இன்றைய போட்டியில் ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தும் இங்கிலாந்தின் வெய்ன் ரூனே போன்றவர்கள், இவரிடம் தப்புவது மிகவும் கடினம் தான். வீரர்களிடம் பணம் திருட்டு
உலககோப்பை கால்பந்து தொடரில் பங்கேற்க, தென் ஆப்ரிக்கா வந்துள்ள கிரீஸ் நாட்டு வீரர்களிடம், திருடர்கள் கைவரிசை காட்டியுள்ளனர். உம்லங்காவில் உள்ள ஒரு ஓட்டலில் கிரீஸ் அணி வீரர்கள் தங்கியுள்ளனர். கடந்த இரண்டு நாட்களுக்கு முன், வீரர்கள் வைத்திருந்த 1500 யூரோக்கள் (85 ஆயிரம்) திருடு போயுள்ளது. இத்தகவலை போலீசாரும் உறுதி செய்துள்ளனர். தென் ஆப்ரிக்காவில் கொலை, கொள்ளை உள்ளிட்ட குற்றங்கள் அதிகம் நடக்கும். இந்நிலையில் உலககோப்பையை காண பல்வேறு நாடுகளிலிருந்து சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளனர். சமூக விரோதிகளிடமிருந்து இவர்களைப் பாதுகாக்க, தென் ஆப்ரிக்கா அரசு திணறி வருகிறது.
மாத்திட்டேன் ஜெய்லானி காக்கா
ReplyDelete