முதற்பள்ளி நமக்காகி அமுதம் ஊட்டும்
....முதலிற்றாய் மடியிற்நீ பார்த்த மேனி
பதம்பெற்றுப் பக்குவமாய் உன்னைச் சீராய்ப்
... பழக்கிவிட்ட அன்பேதான் முதலாம் ஏணி
நிதம்கற்றுத் தந்துதவும் அறிவாம் தந்தை
...நீவாழத் தானுழைத்த இரண்டாம் ஏணி
விதம்சொல்லில் கல்விக்கண் திறந்து வைத்த
....வித்தைகள்தாம் குருவென்னும் மூன்றாம் ஏணி
தொழில்சீராய் வணிகம்நே ராய்நீ செய்ய
...தொடர்ந்துவரும் அனுபவமே நான்காம் ஏணி
எழில்பெற்ற இன்பமுடன் வாழ்க்கைத் தேடி
...இணையாக வருபவரே ஐந்தாம் ஏணி
வழியெல்லாம் வசந்தங்கள் பூக்கக் காண
...வளர்த்தெடுத்த நன்மக்கள் ஆறாம் ஏணி
பழியில்லா நற்புகழும் பணமும் பேறும்
...பெற்றுவாழ ஏற்றிவிடும் எட்டாம் ஏணி
கடும்முயற்சி யும்தோல்வி யடைதல் கண்டு
.. கலங்காதுப் படிக்கட்டாய்க் கருத்திற் கொண்டு
தடுப்புகளாம் சோதனைகள் தாண்டும் போழ்துத்
.. தாளாண்மை வெற்றியெனும் கனியைக் காண்பர்
படுத்துகொண்டே வெற்றிகளைப் படைப்பேன் என்னும்
.. பகற்கனவுத் தோல்வியிலே தோய்த்துக் காண்போர்
எடுத்துணர்த்து வோர்கூறும் அறிவுப் பாடம்
.. ஏற்பதுவே ஒன்பதான உச்சி ஏணி!
ஏணிகளும் ஏற்றிவிட்ட பின்னர் ஏணி
...எதுவென்றே அறியாத வேட மிட்டு
ஏனிவனும் மாறிவிட்டுப் பேசு கின்றான்?
..இறங்குவதற் கும்ஏணி வேண்டும் என்று
மானிடனும் மறப்பதனால் நன்றாய்ப் பெய்யும்
....மழைகூடப் பொய்த்துவிடும் உணர்வா யோநீ
வானிலையில் மழையின்றிக் காணு தற்போல்
....வாழ்க்கையிலும் வறட்சியைநீ காண் கின்றாய்!
”கவியன்பன்” கலாம், அதிராம்பட்டினம்(பாடசாலை)
அபுதபி(தொழிற்சாலை)
என் வலைப்பூ தோட்டம் http://www.kalaamkathir. blogspot.com (கவிதைச் சோலை)
மின்னஞ்சல் முகவரி: kalamkader2@gmail.com
அலை பேசி: 056-7822844
/
பல நல்ல கருத்துக்கள்... உற்சாகமூட்டும் வரிகள்...
ReplyDeleteநன்றி...
தன்னம்பிக்கை
ReplyDelete