Friday, October 19, 2012

ஹஜ் எனும் அரும்பேறு அல்லது அருட்பேறு !





இப்ராஹீம்(அலை) மூலம் விடுத்த அழைப்புக்கு
“லப்பைக்” திருச்சொல்லால் லட்சக் கணக்கானோர்
ஒப்பிலா னில்லத்தில் ஓதும் மறுமொழி
இப்புவி யெங்குமே ஈர்ப்பு.

சாந்தம் பொழியச் சமத்துவம் காணவே
காந்தமாய் ஈர்க்கும் கருவான பள்ளி
துருவான பாவம் துடைக்கும் பணிகள்
இரும்பு மனமே இலகு.

குழந்தையாம் இஸ்மாயில்(அலை) குத்திய பாதம்
உழன்றதால் பாலையில் உண்டான நீரை
அருந்துவோ ரெண்ணம் அடையும் பலன்கள்
மருந்தாம் பிணிக்கு மகிழ்ந்து.

மறுமையாம் தீர்ப்புநாள் மஹ்ஷரின் தோற்றம்
பொறுமையாய் நிற்கும் பொழுதில ரங்கேற்றம்
நீண்ட இறைஞ்சுதல் நெஞ்சை உருக்கிட
மீண்டு வருவோம் மிளிர்ந்து.

பிறக்கும் நிலையில் பிழைக ளறியா(து)
பிறக்கும் குழந்தைப் பிறத்தலைப் போல்
புடமிடும் தங்கமாய்ப் பூமியில் வாழ
திடமுடன் மாற்றும் திறன்,

அறுக்கத் துணிந்தார் அருமை மகனை
பொறுத்தே பணிந்தார் புதல்வர் மகிழ்வுடன்
ஐயம் களைந்த அடியாரின் அன்பினை
மெய்பிக்கச் செய்திடும் மாண்பு.

இறைச்சி இரத்த மெதுவுமே நம்மை
இறைவனும் வேண்டு மியல்பில் கிடையாது
அன்பு நிலைக்க அறமாய் வறியோர்கள்
இன்பம் பெறுவதற் கீந்து.


அபுல்கலாம் பின் ஷைக் அப்துல்காதிர்

“கவியன்பன்” கலாம், அதிராம்பட்டினம்( பாடசாலை), அபுதபி (தொழிற்சாலை)
அலை பேசி:             00971-50-8351499       / 056 7822844
வலைப்பூந் தோட்டம்: http://www.kalaamkathir.blogspot.com/ (கவிதைச்சோலை)
மின்னஞ்சல்: kalaamkathir7@gmail.com

2 comments:

  1. நல்ல வரிகள்...

    மிகவும் பிடித்தவை :

    /// பிறக்கும் நிலையில் பிழைக ளறியா(து)
    பிறக்கும் குழந்தைப் பிறத்தலைப் போல்
    புடமிடும் தங்கமாய்ப் பூமியில் வாழ
    திடமுடன் மாற்றும் திறன்... ///

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சகோதரர் திண்டுக்கல் தனபாலன். எமது இத்தளத்திற்கும் உங்களின் வருகை குறித்து மிக்க மகிழ்ச்சியடைகின்றேன்

      Delete