Sunday, May 22, 2011

சென்னை மண்ணடி நிலத்தை மீட்க நடவடிக்கை

சென்னை மண்ணடியில் உள்ள மாநகராட்சிக்குச் சொந்தமான பெண்கள் உருது நடுநிலைப் பள்ளி நிலத்தை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்தப் பகுதி மக்களிடம் இருந்து கோரிக்கை எழுந்திருக்கிறது.

வலுக்கட்டாயமாக மாநகராட்சிக்குச் சொந்தமான இந்த நிலத்தை ஆக்கிரமித்துக் கொண்டவர்கள், மாநகராட்சி நடவடிக்கை எடுக்க முற்பட்டபோது நீதிமன்றத்தை அணுகிவிட்டார்கள். இந்த ஆக்கிரமிப்பை அகற்றுவதற்கு உயர் நீதிமன்றம் 2009-ல் தடை உத்தரவு பிறப்பித்தது. ஆனால், 2 ஆண்டுகள் ஆன பின்னரும் இந்தத் தடையை விலக்கி ஆக்கிரமிக்கப்பட்ட இடத்தை மீட்க மாநகராட்சித் தரப்பில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் அவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
சென்னை மண்ணடியில் உள்ள அங்கப்ப நாயக்கன் தெருவில் சென்னை உருது பெண்கள்  நடுநிலைப் பள்ளி உள்ளது. மொத்தமே 3 கிரவுண்ட் 1091 சதுர அடியில்தான் இந்தப் பள்ளி அமைந்துள்ளது. அந்தப் பகுதியிலுள்ள ஏழை மாணவிகள்தான் இந்தப் பள்ளியில் அதிக அளவில் படிக்கின்றனர்.
இந்த நிலம் இஸ்லாமியர்களிடம் இருந்து 1913-14-ல் பெறப்பட்டது. தங்களது குழந்தைகளுக்குப் பயன்படும் என்பதால் இஸ்லாமிய சமுதாயத்தினர் இந்த இடத்தைக் குறைந்த விலைக்கு மாநகராட்சிக்கு அவர்கள் விற்றனர். தொடர்ந்து பல ஆண்டுகளாக இந்தப் பள்ளி அந்த இடத்தில் இயங்கி வந்தது. பள்ளியின் பின்புற வாசல் இப்ராஹிம் சாலையில் அமைந்திருந்தது. ஆனால், சில ஆண்டுகளுக்கு முன்பு இந்த பின்புற வாசலை அடைத்து, அதற்குப் பின்னால் குழந்தைகள் விளையாடுவதற்காக இருந்த ஏறத்தாழ 1,380 சதுர அடி நிலத்தை அந்தப் பகுதியைச் சேர்ந்த சிலர் ஆக்கிரமித்துள்ளனர். இந்த ஆக்கிரமிப்பின் காரணமாக இருவாசல்கள் இருந்த பள்ளி, இப்போது ஒரே வாசல் கொண்டதாகவும், அளவில் மிகச் சிறியதாகவும் குறுகிவிட்டது.
இந்த ஆக்கிரமிப்பை அகற்ற மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். இதுதொடர்பான வழக்கில் இந்த ஆக்கிரமிப்பை அகற்ற கீழ் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், அதேநாளில் உயர் நீதிமன்றத்தை அணுகிய ஆக்கிரமிப்பாளர்கள் தடை உத்தரவு பெற்றுவிட்டனர்.
கடந்த 2009-ல் உயர் நீதிமன்றம் பிறப்பித்த தடையை அகற்ற இதுவரை சென்னை மாநகராட்சி சார்பில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பதுதான் வேடிக்கை. அப்போதைய ஆளுங்கட்சியினர் தலையீடு இருந்ததுதான் இதற்குக் காரணம் என்று  கூறப்படுகிறது. இதற்கு அப்போதைய அரசு வழக்கறிஞர் உதவி இருக்கக்கூடும் என்றும், ஆக்கிரமிப்பாளர்கள் தடை உத்தரவு கோரும்போது அதை அவர் எதிர்க்காமல் இருந்திருக்கக்கூடும் என்றும் அந்தப் பகுதி மக்கள் கருதுகிறார்கள்.
நில ஆக்கிரமிப்பு தொடர்பாக, அந்தப் பள்ளியைச் சேர்ந்த ஆசிரியர்களிடம் பேசியபோது, இந்தப் பள்ளியில் நாங்கள் புதிதாகச் சேர்ந்துள்ளோம். இந்தப் பள்ளிக்கு இரண்டு வாசல்கள் இருந்ததாகக் கேள்விப்பட்டோம். இப்போது அங்கே குறுக்கே சுவர் எழுப்பப்பட்டுள்ளதால் ஒரு வாசலை மட்டுமே மாணவிகள் பயன்படுத்துகின்றனர் என்று தெரிவித்தனர்.
சட்டப்பேரவைத் தேர்தலில் துறைமுகம் தொகுதியில் வெற்றி பெற்ற அ.தி.மு.க. வேட்பாளர் பழ.கருப்பையாவின் கவனத்துக்கு இந்தப் பிரச்னை கொண்டு செல்லப்பட்டுள்ளது. உடனடியாகப் பள்ளியை ஆய்வு செய்த அவர் இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயனிடம் மனுவையும் கொடுத்துள்ளார்.
பள்ளி நில ஆக்கிரமிப்பை மீட்பது குறித்து பழ.கருப்பையா கூறியது: கடந்த ஆட்சியாளர்களின் ஆதரவுடன்தான் இந்த நிலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. அதனால்தான், உயர் நீதிமன்ற தடையாணையை விலக்கி பள்ளி நிலத்தை மீட்க அவர்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லை.
இப்போது அ.தி.மு.க. ஆட்சி நடைபெறுகிறது. பள்ளிகள், நடைபாதைகள் போன்ற பொதுஇடங்கள் ஆக்கிரமிக்கப்படுவதை முதல்வர் ஜெயலலிதா ஒருபோதும் அனுமதிக்கமாட்டார்.
எனவே, இந்த ஆக்கிரமிப்பை அகற்றி உருது பள்ளிக்கான இடத்தை அதிமுக ஆட்சி மீட்டுக் கொடுக்கும். அதற்கு முதல்வர் நிச்சயம் நடவடிக்கை எடுப்பார் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
இந்த நில ஆக்கிரமிப்பு தொடர்பாக இப்போதுதான் புகார் அளிக்கப்பட்டுள்ளது. விசாரித்து வருகிறோம். விசாரணைக்குப் பிறகு நடவடிக்கை எடுப்போம் என்றார் சென்னை மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன். உருது பள்ளி நில ஆக்கிரமிப்பு விவகாரம் துறைமுகம் பகுதி முஸ்லிம் சமுதாயத்தினர் மத்தியில் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.



dinamani

No comments:

Post a Comment