Monday, May 9, 2011

மணிவிளக்கு


தமிழ்நாட்டு மக்களின் மொத்த ஜனத்தொகை 5 கோடி ஆகும்.
தொடக்க நிலை, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை 1 கோடியே 9 இலட்சத்து 25 ஆயிரம். அகில இந்திய அடிப்படையில் பார்க்கும்போது, தமிழகம் பள்ளிக்கல்வியில் முன் வரிசையில் இருக்கிறது எனச் சொல்லமுடியும்.
தமிழகத்தில் உள்ள தொடக்க நிலைப் பள்ளிகள் 29118-ல் 50 இலட்சத்து 43 ஆயிரம் மாணவர்கள் கல்வி கற்கின்றனர்.
உயர்நிலை-மேல்நிலைப் பள்ளிகள் 4123 -இல் ஒரு இலட்சத்து நாலாயிரம் மாணவர்கள் கற்று வருகின்றனர்.
இந்தப் புள்ளி விவரங்களில் முஸ்லிம்கள் நிலை என்ன?

தமிழ்நாட்டில் வாழும் 5 கோடி மக்களில் 50 இலட்சம் பேர் முஸ்லிம்கள். அதாவது 10 சதவிகிதத்தினர்.
ஆனால், அரசு தரும் கணக்கில் 6.6 சதவிகிதத்தினர்தான் முஸ்லிம்கள் எனக் குறிப்பிடுகிறார்கள். அதை மறுத்து நம்முடைய உண்மைக் கணக்கை நிலைநாட்டப் போதுமான ஆதாரங்கள் நம்மிடம் இல்லை.
எனவே, அரசு தரும் எண்ணிக்கை அடிப்படையில் பார்க்கும் போது கூட இந்தக் கல்வி நலனில் நமது பங்கு 6 சதவிகிதமாவது-குறைந்தது-இருந்தாக வேண்டும்.
அப்படியானால் பள்ளிகளுக்குச் சென்று வரும் சுமார் 1 கோடி மாணவர்களில், 6 லட்சம் முஸ்லிம் மாணவர்கள் இருக்க வேண்டும். ஆனால் இரண்டு லட்சம் மாணவர்கள்கூட பள்ளிகளில் பயின்று வரவில்லை என்பதைச் சமுதாயம் எண்ணிப் பார்க்க வேண்டும்.
தமிழகத்தில் மொத்தம் உள்ள 28,932 பள்ளிகளில் சுமார் 2,500 பள்ளிக்கூடங்களாவது முஸ்லிம்களின் நிர்வாகத்தில் நடத்தப்பட வேண்டும்.
ஆனால் எல்லா நிலை பள்ளிகளிலுமாகச் சேர்த்து சுமார் 300 பள்ளிகள் கூட நம்முடைய நிர்வாகத்தில் இல்லை.
ஏறத்தாழ நம்மையொத்த எண்ணிக்கையுடைய கிறிஸ்தவ சமுதாயத்தினர், நம்மைவிட 10 மடங்கு அதிகமாக பள்ளிக்கூடங்களை நடத்தி வருகிறார்கள்.
கல்லூரிக் கல்வியைப் பொறுத்தவரை மொத்தம் உள்ள 187 கல்லூரிகளில் அரசினர் நிர்வாகத்தில் 54 கல்லூரிகளும், தனியார் நிர்வாகத்தில் 133 கல்லூரிகளும் செயல்படுகின்றன. இவற்றில் 13 கல்லூரிகள் முஸ்லிம்களுடைய நிர்வாகத்தில் இயங்கிவருகின்றன.
அண்மைக் காலத்தில் இரு பொறியியல் கல்லூரிகளை நம் சமுதாயத்தினர் தொடங்கி இருக்கிறார்கள் என்பது மகிழ்ச்சிக்கு உரிய செய்தியாகும்.
கடந்த தலைமுறையில் சுமார் 30 ஆண்டு காலம் கல்லூரிக் கல்வியின் இன்றியமையாமை ஆழமாக வலியுறுத்தப்பட்டு அதற்கான சூழ்நிலைகளும் உருவாக்கப்பட்டதன் காரணமாகச் சமுதாயத்தில் ஒரு விழிப்புணர்ச்சி ஏற்பட்டது.
ஆண்டு ஒன்றுக்கு ஏறத்தாழ 1,000 முஸ்லிம் மாணவர்கள் பல்கலைக்கழகங்களில் தேறிப் பட்டதாரிகளாக வெளிவரும் காட்சியை சமுதாயம் கண்டு மகிழ்ந்தது.
ஆனால், ஆண்டுக்கு ஆண்டு வளர்ந்து வரவேண்டிய இந்த எண்ணிக்கை குறைந்து வருகிறது என்ற புள்ளி விவரம் நமக்குப் பெருத்த வேதனையைத் தருகிறது.
என்ன இருப்பினும் கலைக்கல்லூரிகளில் சேர இடமில்லாத காரணத்தால் ஒரு முஸ்லிம் மாணவன் தன் மேற்கல்வியைத் தொடர முடியவில்லை என்ற சரித்திரத்தைச் சமுதாயம் மாற்றி அமைத்துவிட்டது. இன்னும் சொல்வதாயின் சமுதாய நிர்வாகத்தில் நடைபெறும் கல்லூரிகளில் சகோதர சமுதாயத்தைச் சேர்ந்த மாணவர்களே 50 விழுக்காட்டிற்கு அதிகமாகப் பயின்று வருகிறார்கள் என்பதும் உண்மையாகும். இந்த வகையில் நாட்டின் உயர்கல்வி வளர்ச்சிக்கு நம்மால் இயன்ற பங்கினை அளித்து வருகிறோம் என்ற மனநிறைவும் நமக்கு உண்டு.
எல்லாவற்றையும்விட நமக்கு வேதனை தரும் செய்தி, ஆரம்ப-நடுநிலை-உயர்நிலைப் பள்ளிகளில் நம் மாணவர் எண்ணிக்கை மிகக் குறைவான அளவில் இருப்பது ஆகும்.
சமுதாயத்தில் பட்டதாரிகள் எண்ணிக்கை அதிகரிப்பது ஒரு விதத்தில் பெருமை அளிக்கக்கூடியது என்றாலும், தொடக்கப் பள்ளிகளில் நம் மாணவர் எண்ணிக்கை குறைகிறது என்பது அபாய அறிவிப்பாகும்.
ஏனெனில், வாழ்க்கையில் எந்தத் துறையில் படித்து முன்னேற வேண்டுமாயினும், ஆரம்ப – அடிப்படைக் கல்வி அவசியமாகும்.
தமிழகத்தில் 1 முதல் 8-ஆம் வகுப்பு முடிய உள்ள ஆரம்ப-நடுநிலைப் பள்ளிகளில் சுமார் 80 லட்சம் மாணவர்கள் பயின்று வருகின்றனர். அப்படியானால் இந்தப் பள்ளிகளில் 4,80,000 முஸ்லிம் மாணவர்களாவது பயின்று வர வேண்டும். அப்போதுதான் நாட்டின் கல்வி வளர்ச்சியோடு நம் சமுதாயமும் சேர்ந்து நடைபோடுகிறது என்று சொல்ல முடியும்.
இந்த குறைபாடுகளை எல்லாம் இப்போதே நாம் களையாவிட்டால், ஏற்கனவே கல்வித்துறையில் பின்னடைந்த சமூகம் என்ற முத்திரையை முகத்திலேயே குத்தி வைத்திருக்கும் நாம் மிகவும் பின்னடைந்த சமூகத்தில் சேர்க்கப்பட வேண்டியவர்களாவோம்.
குறிப்பாக ஆரம்பக் கல்வி நிலையங்களை முஸ்லிம்கள் வாழும் இடங்களில் எல்லாம் தோற்றுவிக்கும் முயற்சியைப் போர்க்கால நடவடிக்கையைப் போல், அவசியமாகவும், அவசரமாகவும் மேற்கொள்ள வேண்டும்.
ஒவ்வொரு மாவட்ட, வட்ட, ஒன்றியங்கள் அளவிலும், முஸ்லிம் கல்வி மாநாடுகளைக் கூட்டி, இவற்றைக் களைய மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகளை அறியாத கிராம மக்களுக்கும் மற்றவர்களுக்கும் சொல்லிக் காட்ட வேண்டும்.
“கற்றவர்களாக இருங்கள். கற்றுக் கொடுப்பவர்களாக இருங்கள். கற்பவர்களுக்கும், கற்றுக் கொடுப்பவர்களுக்கும் உதவி செய்பவர்களாக இருங்கள்” என காருண்ய நபி (ஸல்) அவர்கள் நமக்கு உபதேசித்திருக்கிறார்கள்.
அதிலும், கற்பதை, ஆணுக்கும், பெண்ணுக்கும் கடமையாக்கியுள்ள நெறி இஸ்லாமியத் திருநெறியாகும்.
அறிவு ஞானத்தைத் தேடுவதற்காக வீட்டை விட்டு வெளியேறுபவர்கள், அதைப் பெற்று திரும்பும் வரை இறைவனுடைய பாதுகாப்பில் அரவணைக்கப்பட்டவர்களாக இருக்கிறார்கள் என்ற பொருள்பட பெருமானார் (ஸல்) அவர்கள் பேசியிருக்கிறார்கள்.
எல்லாவற்றையும்விட “கல்விக்காக உயிர் நீப்பவர், ஒரு போதும் மரணமடைவது இல்லை” என்றும் அந்த மாநபி அவர்கள் மனித குலத்திற்கு உணர்த்தியிருக்கிறார்கள்.
எனவே கல்வி நலனைப் பேணுவதிலும், அதற்காக உதவுவதிலும் நம் சமுதாயம் ஒருபோதும் மெத்தனமாக இருக்கமுடியாது. இருக்கவும்கூடாது.
தலைதெறிக்கும் வேகத்தில் மற்ற சமுதாயங்கள் எல்லாம் கல்வித் துறையிலும், பிற துறைகளிலும் முன்னேறிக் கொண்டிருக்கும்போது, மந்தமாக இஸ்லாமிய சமுதாயம் மட்டும் பின்னோக்கிச் செல்கிறது என்பது மிகவும் பயங்கரமான உண்மையாகும்.
ஆரம்ப அடிப்படைக் கல்வியில் நம் எண்ணிக்கைக்கேற்ப பிரதிநிதித்துவம் பெற வேண்டுமானால் ஒரு ஐந்தாண்டுத் திட்டத்தை வகுத்துக் கொண்டு நாம் செயல்பட்டாக வேண்டும்.
தமிழ்நாட்டில் சுமார் 7,000 மஸ்ஜிதுகள் இருக்கின்றன. இவற்றில் சுமார் 5,000 மஸ்ஜிதுகளிலாவது முறையான ஜமாஅத் நடந்து வருகிறது. அப்படிப்பட்ட இடங்களில் எல்லாம் மஸ்ஜிதை ஒட்டி, திருக்குர்ஆனை ஓதித் தரும் ‘மக்தப்’களும், மார்க்க நடைமுறைகளைக் கற்றுக் கொடுக்கும் ‘மத்ரஸா’க்களும் இருந்து வருகின்றன.
இவற்றில் முஸ்லிம்கள் வாழும் பகுதிகளுக்கு அருகில் பள்ளிக்கூடங்கள் இல்லாத எல்லா மஸ்ஜிதுகளிலும் உள்ள மத்ரஸாக்களை ஆரம்பப் பள்ளிக்கூடங்களாக மாற்றும் முயற்சியில் ஆங்காங்கு பொறுப்பில் உள்ள ஜமாஅத்துகள் ஈடுபட வேண்டும்.
ஆரம்பப் பள்ளிகளைத் தொடங்கப் பெரிய நிதி தேவையில்லை. அரசு அனுமதியை முன்னதாகப் பெறாமலே பள்ளிகளைத் தொடங்கிக் கொள்ள சிறுபான்மை சமுதாயத்தவர் என்ற முறையில் நமக்கு அரசியல் சட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது.
ஆரம்பமாக, ஓராசிரியர் பள்ளியாகவேகூட இதைத் தொடங்கலாம். பிறகு முறையாக அதிகாரிகளை அணுகி அனுமதி பெற்றால், ஆசிரியருக்கான ஊதியம் மற்றும் செலவுகளை அரசு வழங்க முற்படும்.
ஒரு ஆரம்பப் பள்ளியில் குறைந்தது முப்பது மாணவர்களைச் சேர்த்து, அப்படி சேர்க்கப்பட்ட மாணவர்கள் வறுமை காரணமாகவோ, பெற்றோர்களின் மெத்தனத்தினாலோ, இடையில் படிப்பதை நிறுத்திவிடாமல் கண்காணித்து அவர்கள் படிப்பைத் தொடர வழிவகை செய்வோமானால், சமுதாயம் செழிப்புறும்.
ஒவ்வோர் ஆண்டும் ஒவ்வொரு வகுப்பாக அதிகரிப்பது என்றாலும், ஐந்தாண்டுகளில் அது சுமார் 150 மாணவர்களைக் கொண்ட முழு நிறை ஆரம்பப் பள்ளியாகத் திகழும்.
இவ்வாறு குறைந்தது ஆயிரம் மஸ்ஜிதுகளில் அதன் தாழ்வாரங்களிலோ அல்லது முற்ற வெளிகளிலோ அல்லது அடுத்துள்ள வெற்றிடங்களில் அமைக்கப்படும் கொட்டகைகளிலோ வகுப்புகளைத் தொடங்கி நடத்தினால் ஐந்து ஆண்டு காலத்தில் சுமார் ஒன்றரை லட்சம் முஸ்லிம் மாணவர்கள் நம் நிர்வாகத்திலுள்ள பள்ளிகளிலேயே கல்வி நலன் பெறும் வாய்ப்பு சிரமமின்றி ஏற்படும்.
காலப்போக்கில் தேவையைக் கருதி நடுநிலை-மேல்நிலை-உயர்நிலைப் பள்ளிகளைத் தோற்றுவிக்கக்கூடிய உற்சாகமும் சமுதாயத்திற்கு ஏற்படும்.
மத்ரஸா – மக்தப் – சேவைகளில் எந்தவிதக் குறைபாடும் ஏற்படாத வகையில் இந்த சேவையை மேற்கொள்வது அவசியமாகும்.
பிஞ்சு நெஞ்சங்கொண்ட சின்னஞ்சிறு குழந்தைகள் தங்கள் ஆரம்ப அடிப்படைக் கல்வியை மஸ்ஜிதின் நிழலில் அதன் கலாச்சார, மதச்சார சூழலில் பெற்றுக் கொள்வார்களானால், அவர்கள் வளர்ந்து வாலிபமாகிவிட்ட பிறகு எந்த தீய சூழலுக்கும் ஆளாகாமல் காப்பாற்றப்படும் சூழலும் இதனால் உண்டாகும் என்பதைச் சமுதாயப் பெரியவர்கள் எண்ணிப் பார்க்க வேண்டும்.
எக்காரணம் பற்றியேனும், ஆங்காங்குள்ள ஜமாஅத்கள் இந்தப் பொறுப்பை மேற்கொள்ள இயலவில்லை என்றால், சமுதாய நலச்சங்கங்கள், மன்றங்கள் இந்தப் பணியை முன்னின்று செய்தாக வேண்டும்.
இதற்காகப் பெரும்தொகை ஆரம்பத்தில் தேவைப்படாது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
ஏழை மாணவர்களுக்கு என அரசு செய்து வரும் உதவிகள், தந்து வரும் சலுகைகள், நம்மில் நலிந்த சமுதாய வாழ்வில் மிகவும் மெலிந்தவர்களாக உள்ள மக்களுக்குக் கிடைக்க ஆவண செய்வது நம் கடமையாகும்.
தமிழகத்தில் 38,399 சத்துணவு மையங்கள் மூலமாக ஏறத்தாழ 64 லட்சம் மாணவர்களுக்குச் சத்துணவு வழங்கப்படுகிறது.
சுமார் 60 லட்சம் மாணவர்களுக்கு ஆண்டு ஒன்றுக்கு இரு சீருடைகளும் இலவசமாக வழங்கப்படுகின்றன.
அத்துடன் பாடப்புத்தகங்கள் அனைத்தும் இலவசமாகவே வழங்கப்படுகின்றன.
இந்த நன்மைகளையெல்லாம், நாமே நடத்தும் பள்ளிகளில் ஏழை மாணவர்களுக்கும் நாம் முறையாக முயன்றால், பெற்றுத் தர முடியும்.
சமுதாயம் இந்தத் துறையில் சிந்தித்துச் செயல்படுவது காலத்தின் கட்டாயமாகும்.
- “மணிவிளக்கு” ஜூன் 1986
சிராஜூல் மில்லத் சிந்தனைகள் நூலிலிருந்து.

-- 

No comments:

Post a Comment