Tuesday, October 23, 2012

ஏணிப்படிகளை மனிதா ஏனிப்படிநீ மறந்தாய்?








முதற்பள்ளி நமக்காகி அமுதம் ஊட்டும்
....முதலிற்றாய் மடியிற்நீ பார்த்த மேனி
பதம்பெற்றுப் பக்குவமாய் உன்னைச் சீராய்ப்
... பழக்கிவிட்ட அன்பேதான் முதலாம் ஏணி
நிதம்கற்றுத் தந்துதவும் அறிவாம் தந்தை
...நீவாழத் தானுழைத்த இரண்டாம் ஏணி
விதம்சொல்லில் கல்விக்கண் திறந்து வைத்த
....வித்தைகள்தாம் குருவென்னும் மூன்றாம் ஏணி


தொழில்சீராய் வணிகம்நே ராய்நீ செய்ய
...தொடர்ந்துவரும் அனுபவமே நான்காம் ஏணி
எழில்பெற்ற இன்பமுடன் வாழ்க்கைத் தேடி
...இணையாக வருபவரே ஐந்தாம் ஏணி
வழியெல்லாம் வசந்தங்கள் பூக்கக் காண
...வளர்த்தெடுத்த நன்மக்கள் ஆறாம் ஏணி
பழியில்லா நற்புகழும் பணமும் பேறும்
...பெற்றுவாழ ஏற்றிவிடும் எட்டாம் ஏணி

கடும்முயற்சி யும்தோல்வி யடைதல் கண்டு
.. கலங்காதுப் படிக்கட்டாய்க் கருத்திற் கொண்டு
தடுப்புகளாம் சோதனைகள் தாண்டும் போழ்துத்
.. தாளாண்மை வெற்றியெனும் கனியைக் காண்பர்
படுத்துகொண்டே வெற்றிகளைப் படைப்பேன் என்னும்
.. பகற்கனவுத் தோல்வியிலே தோய்த்துக் காண்போர்
எடுத்துணர்த்து வோர்கூறும் அறிவுப் பாடம்
.. ஏற்பதுவே ஒன்பதான உச்சி ஏணி!


ஏணிகளும் ஏற்றிவிட்ட பின்னர் ஏணி
...எதுவென்றே அறியாத வேட மிட்டு
ஏனிவனும் மாறிவிட்டுப் பேசு கின்றான்?
..இறங்குவதற் கும்ஏணி வேண்டும் என்று
மானிடனும் மறப்பதனால் நன்றாய்ப் பெய்யும்
....மழைகூடப் பொய்த்துவிடும் உணர்வா யோநீ
வானிலையில் மழையின்றிக் காணு தற்போல்
....வாழ்க்கையிலும் வறட்சியைநீ காண் கின்றாய்!

 

-- 
 
 
”கவியன்பன்” கலாம், அதிராம்பட்டினம்(பாடசாலை)
அபுதபி(தொழிற்சாலை)
 
என் வலைப்பூ தோட்டம் http://www.kalaamkathir.blogspot.com  (கவிதைச் சோலை)
 
மின்னஞ்சல் முகவரி: kalamkader2@gmail.com
                                       shaickkalam@yahoo.com
                                       kalaamkathir7@gmail.com
 
 
அலை பேசி:             00971-50-8351499       / 056-7822844

Friday, October 19, 2012

ஹஜ் எனும் அரும்பேறு அல்லது அருட்பேறு !





இப்ராஹீம்(அலை) மூலம் விடுத்த அழைப்புக்கு
“லப்பைக்” திருச்சொல்லால் லட்சக் கணக்கானோர்
ஒப்பிலா னில்லத்தில் ஓதும் மறுமொழி
இப்புவி யெங்குமே ஈர்ப்பு.

சாந்தம் பொழியச் சமத்துவம் காணவே
காந்தமாய் ஈர்க்கும் கருவான பள்ளி
துருவான பாவம் துடைக்கும் பணிகள்
இரும்பு மனமே இலகு.

குழந்தையாம் இஸ்மாயில்(அலை) குத்திய பாதம்
உழன்றதால் பாலையில் உண்டான நீரை
அருந்துவோ ரெண்ணம் அடையும் பலன்கள்
மருந்தாம் பிணிக்கு மகிழ்ந்து.

மறுமையாம் தீர்ப்புநாள் மஹ்ஷரின் தோற்றம்
பொறுமையாய் நிற்கும் பொழுதில ரங்கேற்றம்
நீண்ட இறைஞ்சுதல் நெஞ்சை உருக்கிட
மீண்டு வருவோம் மிளிர்ந்து.

பிறக்கும் நிலையில் பிழைக ளறியா(து)
பிறக்கும் குழந்தைப் பிறத்தலைப் போல்
புடமிடும் தங்கமாய்ப் பூமியில் வாழ
திடமுடன் மாற்றும் திறன்,

அறுக்கத் துணிந்தார் அருமை மகனை
பொறுத்தே பணிந்தார் புதல்வர் மகிழ்வுடன்
ஐயம் களைந்த அடியாரின் அன்பினை
மெய்பிக்கச் செய்திடும் மாண்பு.

இறைச்சி இரத்த மெதுவுமே நம்மை
இறைவனும் வேண்டு மியல்பில் கிடையாது
அன்பு நிலைக்க அறமாய் வறியோர்கள்
இன்பம் பெறுவதற் கீந்து.


அபுல்கலாம் பின் ஷைக் அப்துல்காதிர்

“கவியன்பன்” கலாம், அதிராம்பட்டினம்( பாடசாலை), அபுதபி (தொழிற்சாலை)
அலை பேசி:             00971-50-8351499       / 056 7822844
வலைப்பூந் தோட்டம்: http://www.kalaamkathir.blogspot.com/ (கவிதைச்சோலை)
மின்னஞ்சல்: kalaamkathir7@gmail.com

Monday, October 15, 2012

சவூதியில் நடந்த உள்ளத்தை உருக்கும் நிகழ்ச்சி





சவூதியில் நடந்த உள்ளத்தை உருக்கும்  நிகழ்ச்சியில் கடந்த  இரண்டாண்டுகளுக்கு முன் தன் ஒரே மகனைக் கொன்ற இளைஞனை எவ்வித நிபந்தனையுமின்றி, இறைப் பொருத்தம் வேண்டி மன்னிப்பதாக அன்னையொருவர் கூறியுள்ளார்.
இத்தனைக்கும், ஏழையான அந்தத் தாய்த் தன்னுடைய மன்னிப்பிற்காக வழங்கப்பட முன்வந்த பல இலட்சம் ரியால்கள் + சொத்துகளை இரத்தத் தொகையாகப் பெறுவதற்கும் மறுத்துவிட்டார். இது பற்றிக் கூறப்படுவதாவது:

மர்ஸூகா அல் பிலேவி என்பது அந்தத் தாயின் பெயர். விதவையான அவருக்கு இறந்துபட்ட மகனும், மூன்று மகள்களும் (அவர்களில் ஒருவர் முழுமையாக வாத நோயால் தாக்கப்பட்டுச் செயலற்றவர்), வாதநோயால் பாதிக்கப்பட்ட வயதானத் தந்தையும் உண்டு.  வாழ்வாதாரமாக, மறைந்த கணவர் பெயரில் மாதந்தோறும் அரசு அளிக்கும் ஓய்வூதியம் சுமார் 2000 ரியால்களும் சவூதிச் சமூகக் காப்பீட்டு நிறுவனம் மாதந்தோறும் அளிக்கும்  1000 சவூதி ரியால்களுமாக இவையே  வாழ்வை நகர்த்த உதவும் பொருளாதார ஊன்றுகோல்கள் அவருக்கு. சொந்தத்தில் வீடின்றி இளவரசர்ச் சுல்தான் ஆதரவகம் ஒன்றில் தான் தங்கியுள்ளனர்.
கடந்த இரண்டாண்டுகளுக்கு முன், ஒரு மாலை நேரத்தில், உறவினர் வீட்டுக்குச் செல்வதற்காகத் தன் மகனுக்காகக் காத்திருந்தார் மர்ஸூகா. ஆனால், மகன் வராமல், மகன் கொல்லப்பட்ட செய்தியே அவரை அடைந்தது.  ஒரே மகனை இழந்துவிட்ட இத்துயரையும் 'இறைவனின் நாட்டம்' என்று எளிதாகவே எடுத்துக்கொண்டார் அந்தத் தாய்.

அதன்பிறகு, கொலையாளிப் பிடிபட்டுவிட, தண்டனையும் உறுதிபடுத்தப்பட்ட பிறகு, கொலை செய்தவரின் குடும்பத்தினர் மர்ஸுகாவைத் தொடர்பு கொண்டு கொலையாளியை மன்னித்துவிடும்படியும், இரத்தப்பணமாக மில்லியன் கணக்கில் சொத்துகளும் பணமும் தருவதாகவும் கெஞ்சினர். கொலை செய்த இளைஞரின் தகப்பனார்ப் பன்முறை கெஞ்சிப் பார்த்தும் தன் ஒரேமகனைப் பறிகொடுத்த அன்னைக்கு மன்னிக்க மனம் வரவில்லை. சுமார் 20 இலட்சம் ரியால்கள் மற்றும் சொத்துகளும் இறந்த மகனுக்கு ஈடாகாது என்றே அவர் எண்ணினார்.

இந்நிலையில், எதிர்பாராத ஒரு நாளில் நீதிமன்றம் சென்ற மர்ஸூகா தன் மகனைக் கொன்றவனைக் காண விரும்புவதாகக் கூறினார். அங்கே, அந்த இளைஞனைக் கண்டவருக்குத் தன் மகனின் நினைவு வந்திருக்க வேண்டும், "உன் பணமோ, சொத்துகளோ வேண்டாம், அவை பெரிதில்லை, அல்லாஹ்வுக்காக உன்னை எந்த நிபந்தனையுமில்லாமல் மன்னிக்கிறேன்" என்றார் மர்ஸூகா. இதைக் கேட்ட அனைவருக்கும் ஆனந்த ஆச்சரியம்.  மர்ஸூகாவின் மன்னிப்பு உடனடியாக நீதிபதி முன்னிலையில் ஆவணப்படுத்தப்பட்டது.

நிபந்தனையற்ற மன்னிப்பைப் பெற்ற அந்த இளைஞனுக்குச் சொல்ல முடியாத பெரும் ஆச்சரியம். நன்றி சொல்லவும் நா எழவில்லை. நிபந்தனையற்றுத் தன்னை மன்னித்து இறையருளுக்குப் பாத்திரமான அந்தத் தாயைத் தானும் இப்போதுமுதல் தாயாக ஏற்பதாகவும், அவருடைய வாழ்நாள் முழுதும் அவருக்குப் பணிவிடை செய்ய விரும்புவதாகவும் இதுவே தான் செலுத்தக்கூடியப் பிரதியுபகாரமாக இருக்கும் " என்றும் அந்த இளைஞன் கூறியுள்ளார்.

சவூதியின் தபூக் மாகாணத்தில் நடந்த இந்தச் சம்பவத்தில், பணத்தைப் பெரிதாகக் கருதாத அந்த மனிதாபிமானத் தாயைச் சவூதி ஊடகங்களும், மக்களும் மிகவும் பாராட்டினர்.

நன்றி: இந்நேரம்.காம்
-- 
 
 
”கவியன்பன்” கலாம், அதிராம்பட்டினம்(பாடசாலை)
அபுதபி(தொழிற்சாலை)
 
என் வலைப்பூ தோட்டம் http://www.kalaamkathir.blogspot.com  (கவிதைச் சோலை)
 
மின்னஞ்சல் முகவரி: kalamkader2@gmail.com
                                       shaickkalam@yahoo.com
                                       kalaamkathir7@gmail.com
 

Sunday, October 14, 2012

அதிராம்பட்டினத்தில் PJ


எத்தனையோ மெயில்கள் எனக்கு வந்துள்ளன.... 'நலம்பெற துவா செய்யுங்கள்' என்று..! ஆனால், இன்று இந்த செய்தியை தாங்கி வந்த ஒரு மெயில்- இது ஏனோ, எனது குடும்பத்து உறுப்பினர் நோய்வாய்ப்பட்டது போன்ற ஒரு சோகத்தை என்னுள் ஏற்படுத்துகிறது. காரணம், நான் மட்டுமல்ல... 'குர்ஆன் ஹதீஸ் மட்டுமே தனது வாழ்வியல் மார்க்கம், என்று யாரெல்லாம் எனது தலைமுறையில் வாழ தலைப்பட்டனரோ, அவர்கள் ஒவ்வொருவரின் வாழ்வினுள்ளும்மார்க்க ரீதியில் தாக்கத்தை ஏற்படுத்தியவர் மவுலவி சகோ.பீஜே' என்று கூறினால் அது மிகை அல்லதான்..!


நான் பிறந்த இடமான, பாபநாசம்-பண்டாரவாடையில், இமாம் அபூ ஹனிபா ரஹ் அவர்களை பழிக்கும் கொடியவராக எனக்கு அறிமுகப்படுத்தப்பட்டவர் இவர். பின்னர், நான் படித்து வளர்ந்த இடமான, அதிராம்பட்டினத்தில்... இமாம் ஷாஃபி ரஹ் அவர்களை அவமானப்படுத்தும் இஸ்லாத்தின் வில்லனாக மீண்டும்  எனக்கு சொல்லப்பட்டவர் இவர். ஊருக்கு நாலு பேர், இப்படி 'நஜாத்துக்காரன்' என்று இருந்த அக்காலத்திய அவரின் ஆதராவளர்களை 'அஞ்சாம் மதஹப்'காரர்கள் என்று சொல்லி, பள்ளியின் வாசலில், 'நான்கு மதஹபுகளில் ஒருவரையாவது பின்பற்றாதவருக்கு இப்பள்ளியில் அனுமதி இல்லை' என்று பலகை மாட்டி... பள்ளியை விட்டு, தள்ளிவைத்து... இஸ்லாத்தை விட்டு வெளியேறியவர்களாக எனக்கு காட்டப்பட்ட போது... அத்தோடு 'வேண்டாம்பா இந்த விரோதிகள் சகவாசம்' என்று மெய்யாலுமே மூடத்தனமாக நான் நம்பி... என்பதுகளின் இறுதியில் இவர்களை வெறுத்து ஒதுங்கி விட்டேன்.

ஆனால்.... அதே ஆண்டுகளில்... வெறும்  2 MP மட்டுமே வைத்து இருந்த பாஜக, பாபர் மஸ்ஜிதை இடிக்கும் ஓட்டுப்பொறுக்கி அஜன்டாவை கையில் எடுத்தவுடன்... 88 MPக்களுடன் ஆளுங்கட்சி கூட்டணி என்றாகி... மீண்டும் பாபர் மஸ்ஜித் இடிப்பு ரத யாத்திரை மூலம் 120 MP க்களுடன் வலுவான எதிர்க்கட்சியாகி... 'கரசேவை' என்ற சட்டத்துக்கு எதிரான மறைமுக பயங்கரவாதம் செய்து பாபர் மஸ்ஜிதை இடித்தனர். ஆனால், இதன் பிறகு... ராமர் கோவில் கட்டும் ஆர்வத்திலிருந்து அவர்களின் ஆதரவாளர்களை ஆட்சிக்கு வந்தவுடன் அதுபற்றி பார்ப்போம்... என்று திசை திருப்பி... ஹிந்துத்துவா வெறியூட்டப்பட்ட மக்களை தக்க வைப்பதற்கு பாஜக எடுத்த... அடுத்த அரசியல் ஓட்டுப்பொறுக்கி ஆயுதம் தான் 'பொது சிவில் சட்டம்'. இது எந்த அளவு முட்டாள்த்தனமானது என்று இப்போது எல்லாருக்கும் தெரியும். அப்போது, இதுபற்றி அந்த அளவு விழிப்புணர்வு மக்களிடம் இல்லை. மிகச்சிலருக்கே இருந்தது. அதனால்தான் அவர்களுக்கு 161 அப்புறம் 182 சீட் எல்லாம் வந்தது.

இந்நிலையில் ஒருநாள் (1993 /94 என்று நியாபகம்) அதிராம்பட்டினத்தில் ஒரு சம்பவம் நடந்தது. செக்கடிப்பள்ளி எதிரே வற்றி இருந்த செக்கடி குளத்திடலில் மவுலவி பீஜே வின் பொதுக்கூட்டம். மேடை லைட் எல்லாம் முதல் நாளே போட்டு விட்டார்கள். ஊர் முழுக்க போஸ்டர். 'PJ பேசுகிறார்' என்று. 'என்ன பேசுகிறார்... எதைப்பற்றி பேசுகிறார்' என்பதெல்லாம் யாருக்கு வேணும்...? 'அதெப்படி நம்ம எதிரி நம்ம இடத்துக்கு வந்து பேசலாம்...?' அவ்ளோதான் மேட்டர். விளைவு...? எல்லா போஸ்டரும் கிழிக்கப்பட்டது. அடுத்தநாள், காலையில்... பரபரப்பான தகவல் பஸ் ஸ்டாண்டில் நியூஸ் பேப்பர் வாங்கும்போது நண்பர்களால் பரிமாறப்பட்டது. அதாவது... PJ மீட்டிங்கிற்காக போடப்பட்டு இருந்த மேடை உடைக்கப்பட்டு... கீற்று பிய்த்து எறியப்பட்டு...  மைக் செட் லைட் எல்லாம் நொறுக்கப்பட்டு... சொற்பொழிவு இன்று நடத்த முடியாத அளவுக்கு ஆக்கப்பட்டு விட்டது என்ற நியூஸ்..!

'இந்த இடத்தில் இருந்து சுமார் இரண்டு கிலோ மீட்டருக்கு அப்பால் பேச்சு காதில் விழாத பாதுகாப்பான(?) தூரத்தில்தான் இருக்கேன் நான்' என்ற நிம்மதியான எண்ணத்தில் இருந்த எனக்கு... வந்தே விட்டது அவரின் உரை எனது காதுக்குள்..! இது எப்படி..? ஆமாம்.! அந்த மீட்டிங் கேன்சல் ஆக வில்லை..! இடம் தான் கேன்சல் ஆகியது. எனவே, மீட்டிங் எங்கள் வீட்டு அருகே இருந்த 'சாரா கல்யாண மண்டபத்தில்' மாற்றப்பட்டு அங்கே நடந்தது.  நான் என்னதான் காதை பொத்திக்கொண்டு இருந்தாலும்... வீதி எங்கும் கட்டப்பட்ட ஸ்பீக்கர்கள் மூலம் எனது செவிப்பறையை தட்டி எனது சிந்தைக்குள் சென்ற அவர் சொன்ன விஷயம் இதுதான்...........

"நான் என்ன, இவர்களை எதிர்த்தா பேச வந்துள்ளேன்..? நான் எதுக்கு இங்கே வந்து இருக்கேன்... எதைப்பற்றி பேச வந்து இருக்கேன்... இதுகூட தெரியாமல்... இப்படி மேடையை கலைத்து இடைஞ்சல் செய்தால் இதுக்கு என்ன அர்த்தம்..? நாளை பேப்பரில் நம்ம எதிரிகள்... என்ன எழுதுவாங்க தெரியுமா..? 'அதிராம்பட்டினத்தில் முஸ்லிம்கள் பொது சிவில் சட்டத்தை எதிர்த்து பேச வந்தவரின் மேடை உடைத்து சட்டத்துக்கு தம் ஆதரவை தெரிவித்தனர்.' இப்படி ஒரு அவப்பெயர் உங்கள் ஊருக்கு தேவையா...? நமக்குள் இருக்கும் மார்க்கம்  பற்றிய வேறுபாட்டையா காரணமாக சொல்வார்கள்..? நான் என்ன சொல்றேன்னு புரியுதா..?" என்றார்.

அதுதான்... நான் அவர் விஷயத்தில் யோசிக்க ஆரம்பித்ததன் முதல் படி. அந்த பேச்சை முழுதாக செவி தாழ்த்தி சொற்பொழிவை கேட்க ஆரம்பித்தேன். 'அடடே... நல்லாத்தானே பேசுறார். நேர்மையான கேள்விகள்தானே இவை. எவ்ளோ பெரிய விஷயம் சொல்ல வந்து இருக்கார்..! ஒருவேளை மக்கள் இவர் மேலே சொல்றது தப்பா இருக்குமோ..? என்று நினைத்துக்கொண்டு... அத்தோடு அவரை மறந்தும் விட்டேன்..! காரணம், எனக்கு கொடுக்கப்பட்டு இருந்த ஆரம்பகால இன்புட் அவரை அந்நியராக்கி வைத்திருந்தது. ஆனால், இரண்டு நாள் கழித்து... அவர் சொன்ன மாதிரித்தான் தினமலரில் பெட்டி செய்தியாக ஓர் ஓரத்தில் வந்தது. "பொது சிவில் சட்டம் : அதிரை முஸ்லிம்கள் ஆதரவு". :-)

இதேகாலகட்டத்தில்... பல வருடங்களாக மத்ஹப் சட்டங்களை படித்து (ஃபிக்ஹின் கலைக்களஞ்சியம் : ஹனபி & ஷாபி) அதில் உள்ள குளறுபடிகளை கண்டு நெருடலாக இருந்து... 'ஒரே விஷயத்தில், ஹனபி ஒன்றாக ஷாபி வேறாக இருந்த மசாயில்களில் எது மார்க்க ரீதியில் நபி ஸல் அவர்களின் சரியான செயலாக இருக்கும்' என்று குழம்பி தத்தளித்துக்கொண்டு இருந்து... 'இரண்டுமே சரிதான் தம்பி' என்ற பதிலை இருவரிடமும் பெற்று... 'அப்படின்னா... இரண்டில் எது சிறந்ததோ அதை மட்டும் நான் எடுத்து இரண்டிலிருந்தும் மிக்ஸ் பண்ணி பின்பற்றலாமா' என்றாலும் கூடாதாம்... ஏதாவது ஒன்னை மட்டுமே பின்பற்றனுமாம்... இறுதியில்... அந்த மதஹப் சட்டங்களில் இது நிச்சயம் பிழையானவையாகத்தான் இருக்கும் என்று சுயமாக சிந்தித்து ஒவ்வொன்றாய் வெறுத்து... (உதாரணம்:- திருட செல்லுவதற்கு முன்னர் திருடன் ஓதவேண்டிய துவா) அடுத்து எப்படி, எந்தப்பக்கம் செல்வது, என்ன செய்வது, என்று குர்ஆன் தர்ஜுமாவை மட்டும் படித்துக்கொண்டு இருந்தபோதுதான்... 

தூத்துக்குடியில் நான் டிவி வாங்கிய பிறகு... (அதற்கு முன்னர் எங்கள் வீட்டில் டிவி இல்லை) ஒருநாள், விஜய் டிவியில் ஒருவரின் சொற்பொழிவை எதேச்சையாக 'பார்க்கும்' வாய்ப்பு ஏற்பட்டது. 'அடடே... எல்லாம் சரியா சொல்றாரே..! மத்ஹபில் தப்பா இருக்கும் இது... உண்மையில் இப்படி இருந்தால் நல்லா இருக்குமே என்று நாம் நினைச்ச படியே நம்ம மார்க்கத்திலும் முன்னமேயே இருக்கே...' என்று வியப்போடும் மனநிறைவுடனும் நன்றியுணர்வோடும் அவரைப்பார்த்துக்கொண்டு இருந்த போதுதான்... நண்பன் அதிரை ஹாரிஸ் சொன்னான்... 'இவர்தாண்டா அவர்' என்று..!

அதற்கு முன்னர் 13 வருடங்களாக அவரை பண்டாரவாடையில் 'ஜெய்லாவுதின்' என்றும், அதிரையில் 'PJ' என்றும் அறிந்திருந்த நான் அன்றுதான்... அவரை 'மவுலவி P.ஜைனுல்ஆபிதீன் உலவி' இவர்தானா என்று பரவசத்துடன் பார்த்தேன். அவரது ஆய்வுத்திறனும் அரபிப்புலமையும் பேச்சாற்றலும் அவர்மீது எனக்கு ஒருவித மதிப்பும் மரியாதையும் ஏற்படுத்தியது.  அதேநேரம், 'இவரையா இத்தனை காலம் நாம் நம்மைவிட்டு தள்ளி வைத்து நம்மை நாமே பாழ்படுத்திக்கொண்டோம்..?' என்று உள்ளுக்குள் துணுக்குற்றேன். இஸ்லாமிய மார்க்கம் தொடர்பாக மத்ஹப் காரர்களின் பேச்சை கேட்காது இருந்து சுயமாக ஆராய வேண்டும் என்ற கொள்கையில் இருந்த நான்... 'இவரை மட்டும் சுயமாக ஆராயாமல்.. இவ்வளவு காலம் அவர்கள் பேச்சை கேட்டு எப்படி விலகி ஓடினேன்' என்று என்னை நானே அவமானத்தால் நொந்து கொண்டேன்.

சகோ.பிஜேவின் சொற்பொழிவுகள், ஆய்வுகள், கேள்வி- பதில்கள் போன்றவற்றை, 'இவர் ஒரு சிறந்த இமாம்' என்று நான் அறிந்த ஸ்பிக் நகர் பள்ளியின் சுன்னத் ஜமாஅத் மவுலவியிடம் சொல்லி விவாத்தித்த போது... 'மவுலவி பிஜே சொல்றதுதான் சரி' என்று ஏறக்குறைய எல்லா விஷயத்திலும் அவரை சப்போர்ட் பண்ணியது எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது. 

அப்படியாக, ஓரிரு வருடம் கழித்து, குடந்தை-மேலக்காவேரியில் ஒரு மேடை சொற்பொழிவில்... சகோ.மவுலவி பிஜே அவர்களை நேரில் சந்தித்து சலாம் சொல்லி அருகருகே மேலக்காவேரி பள்ளியில் இஷா தொழுத அன்று (2002) அவர் மூலமாக அல்லாஹ் தந்த உத்வேகம்தான் புஹாரி ஹதீஸ் ஏழு வால்யுமையும் ஒரே நேரத்தில் என்னை வாங்க வைத்தது. அன்று அவர் கூட்டத்தில், 'யார் யாரிடம் ஏதாவது ஒரு குர்ஆன் தர்ஜுமா உள்ளது , கைதூக்குங்கள்' என்றார். நான் உட்பட ஏராளமானோர் கை தூக்கினோம். 'மாஷாஅல்லாஹ்' என்றவர், 'வாங்காதவர்கள் யார் என்று கேட்டு இருக்கனுமோ' என்று கூறி விட்டு.. அடுத்து, 'இம்மாதம் வெளிவந்தபுகாரி ஏழாவது பாகம்  யாரிடம் உள்ளது..?' என்றார்..? எவரிடமும் இல்லை. 'சரி, மற்ற ஆறு பாகம் உள்ளவர்கள்..?' எவரிடமும் இல்லை. இப்படியே குறைத்து குறைத்து வந்து 'ஒரு பாகமாவது யாரிடம் உள்ளது..?' என கேட்க ஒரு சிலர் மட்டும் கை தூக்கினர். 

இந்த மாதிரியான மோசமான நிலையிலா நாம் இருக்கிறோம்... என்று அவருக்கு வந்த நியாமான வருத்தத்தில்... முன்வரிசையில் அமர்ந்து இருந்த நான் வெட்கி தலைகுனியும் அளவுக்கு அடுத்து அவரின் உரை என்னை மிகவும் பாதித்தது. ஆமாம்..! அவர் உரையின் படி...  நான் சினிமாவுக்கு செலவழித்துள்ளேன். காமிக்ஸ், நாவல், விகடன், குமுதம், தினதந்தி, தினமணி, தி ஹிந்து, எக்ஸ்ப்ரஸ்... என்று எதற்கெல்லாமோ... எவ்வளவோ செலவு செய்து உள்ளேனே..! அந்த பணத்தில் எழென்ன... எழுநூறு பாகம் நான் வாங்கி இருக்கலாமே..! ஏன் எனக்கு வாங்க மனம் வரவில்லை..? மறுமைக்காக வாழும் எண்ணம் எனக்கு இல்லையா..? மார்க்கத்தை அறியும் ஆவல் எனக்கு இல்லையா..? இதுபோல யாராவது வந்து எதயாவது மார்க்கம் என்று சொன்னால், 'சொல்பவர் சொல்வது சரியா' என்று எப்படி நான் உரசிப்பார்ப்பது..? 

அதே ஊட்டத்தில்... அடுத்த நாளே... குடந்தையில் அலைந்து புஹாரி கிடைக்காமல்... தஞ்சாவூர் ஹாஜியார் புக் டிப்போ சென்று ஏழு வால்யுமையும் ஒரே நேரத்தில் வாங்கி தூக்க முடியாமல் தூக்கி வந்தேன். அடுத்து, முஸ்லிம், திர்மிதி என்று என்னை சரியான பாதையில் இவரின் இந்த மனதை தொட்ட உரை மூலம் என்னை சரியான பாதையில் பயணிக்கவைத்த இறைவனுக்கே புகழனைத்தும்.
 .
மேலும்,  விஜய், விண், மூன் மீடியா சிடிக்கள், ஆன்லைன் பிஜே தளம், DAN தமிழ், இமயம் வாயிலாக... அவரால் நிறைய மார்க்க விஷயங்களில் நான் விளக்கம் பெற்றிருக்கிறேன். அதெல்லாம் நான் குழம்பி வேறு எப்பக்கம் செல்வது என்று முட்டு சந்தில் திக்கு முக்காடி திசை அறியாமல் நின்ற விஷயங்கள். அல்ஹம்துலில்லாஹ். எனக்கு பல விளக்கங்களை ஊட்டின அவரது உரைகளும் எழுத்துக்களும்.

அப்போதெல்லாம்... அவற்றில், அவர் அடிக்கடி சொல்லும் அறிவுரையில் எனக்கு மிகவும் பிடித்தது யாதெனில்... "நான் சொல்கிறேன் என்பதால்  அப்படியே நம்பி பின்பற்றாமல், நீங்களும் கற்று ஆய்வு செய்து சரிபார்த்து விட்டு விளங்கி பின்பற்றுங்கள்" என்பதே..! ஒருவர் மார்க்க விஷயத்தில் முனைந்து கஷ்டப்பட்டு பல நாட்கள் பல நூல்களை ஆய்வு செய்த பின்னரும், இப்படியும் சொல்ல ஒரு கர்வமற்ற மனப்பக்குவம் வேண்டுமே. மாஷாஅல்லாஹ்.

இப்படி, என்னைப்போல... எண்ணற்றோர் சரியான இஸ்லாமிய பாதையை தேர்ந்தெடுக்க அவர் ஒரு கருவியாக இருக்கிறார். தமிழ்கூறும் நல்லுலகிற்கு, அவர் ஓர் இஸ்லாமிய சொத்து.

கடந்த 27 வருடங்களாக அவரின் இந்த அயராத மார்க்க உழைப்புக்கு உரிய நற்கூலியை வல்ல அல்லாஹ் அவருக்கு ஈருலகிலும் வழங்கி அவரை மகிழ்விக்கவும், அவரின் அளப்பரிய தொண்டுகள் மேலும் பலருக்கு சென்றடைந்து இன்னும் எண்ணற்றோர் பயன்பெறவும், அவருக்கு ஏற்பட்டிருக்கும் இந்த நோயை அடியோடு முற்றிலுமாக நீக்கி அருளி, இன்னும் பல்லாண்டுகள் அவருக்கு நல்வாழ்வினை தந்து, மார்க்க பிரச்சார அழைப்பு பணியில் இன்னும் சிறப்பாக ஈடுபட அவருக்கு உடலளவிலும் & மன அளவிலும் பெரும் ஆரோக்கியமும் ஊக்கமும் தந்தருளவும்... அவரின் பாவங்களை மன்னிக்கவும், இருகரம் ஏந்தி வல்ல அல்லாஹ்விடம் பிரார்த்திக்கிறேன். யா அல்லாஹ், எனது துவாவை ஏற்றுக்கொள்வாயாக..! ஆமீன்.

Friday, October 12, 2012

வடிவும் வகிடும்










வானத்தில் மிதக்கும் வடிவு
....வெண்மேகம் இழைத்த வகிடு
தானத்தில் சிறந்த வடிவு
....தூயோன்சொல் விகித வகிடு

தென்னை மரத்தின் வடிவு
....தென்றல் வருடும் வகிடு
கன்னம் கொடுக்கும் வடிவு
...காந்தக் குழியின் வகிடு

கடலின் நீரில் வடிவு
.....கப்பல் கிழித்த வகிடு
உடலின் சேரும் வடிவு
....உள்ளம் விரித்த வகிடு

புன்னகைப் பூக்கும் வடிவு
....பூவிதழ் விரித்த வகிடு
எண்ணமும் காட்டும் வடிவு
...எம்முணர் வுகளின் வகிடு

வயற்கள் தோறும் வடிவு
.... வரப்புக் கட்டிய வகிடு
செயற்கள் தோறும் வடிவு
....செயலின் திட்டமே வகிடு

ஊரின் பரப்பில் வடிவு
....ஊரும் தெருவின் வகிடு
வேரின் உறுதி வடிவு
....வேறாய்ப் பரவும் வகிடு

வலிமைக் கட்டிட வடிவு
.....வரைபடம் எழுதிய வகிடு
பொழியும் சந்திரன் வடிவு
....பிறையெனப் பிளந்திடும் வகிடு

இலைகளின் ரேகை வடிவு
....இறைவன் தீட்டிய வகிடு
மலைகளின் பாக வடிவு
....மனங்கவர் நீர்வழி வகிடு

ஏறும் எறும்பின் வடிவு
....ஏற்றப் பணியின் வகிடு
ஆறு சிறக்கும் வடிவு
....ஆங்கு அணைகள் வகிடு

தேசிய கொடியின் வடிவு
......தியாக வண்ண வகிடு
தேசிய தலைமை வடிவு
.....தெளிவாய்ப் பண்ணும் வகிடு

குடும்பத்தின் உறவுகள் வடிவு
....குலையாத உறுப்பினர் வகிடு
மிடுக்கான உடையினில் வடிவு
.....மெலிதான மடிப்பினில் வகிடு

முகத்தின் தோற்ற வடிவு
....முகத்தின் மூக்கே வகிடு
முதுகின் தோற்ற வடிவு
....முதுகின் தண்டின் வகிடு

வெண்பா யாப்பின் வடிவு
.....வெண்டளைக் காய்சீர் வகிடு
பெண்பால் சீப்பின் வடிவு
.....பெண்டலை நேர்சீர் வகிடு

செல்வம் பெற்றதன் வடிவு
...செய்யும் செலவின் வகிடு
கல்வி கற்றதன் வடிவு
... கற்றல் முறையின் வகிடு


அபுல்கலாம் பின் ஷைக் அப்துல்காதிர்

“கவியன்பன்” கலாம், அதிராம்பட்டினம்( பாடசாலை), அபுதபி (தொழிற்சாலை)
அலை பேசி: 00971-50-8351499 / 056 7822844
வலைப்பூந் தோட்டம்: http://www.kalaamkathir.blogspot.com/ (கவிதைச்சோலை)
மின்னஞ்சல்: kalaamkathir7@gmail.com

Wednesday, October 3, 2012

மது : வாருங்கள் ஒழிப்போம் !!!





“ஆல்கஹால்” என்பது ஒரு போதைப் பொருளா ?
ஆம். சந்தேகமே இல்லை. ஆல்கஹால் குடித்தவுடன் விரைவிலேயே ரத்த ஓட்டத்தில் கலந்துவிடுவதால் மூளைக்கும் செல்கிறது. இதன் விளைவே போதை எனப்படும் இயல்பான நடவடிக்கைகளிலிருந்து ஏற்படும் மாற்றங்கள், ஆல்கஹால் ஊக்கமளித்துச் சோர்வை ஏற்படுத்தும் ஒரு போதை மருந்தாகும். ஒருவரால் கட்டுப்படுத்த முடியாமல் குடித்து கொண்டே இருப்பது என்பதும் ஒரு “நோயே” !

1. பொழுதுபோக்காக ( ஜாலிக்காக ) எற்படும் பழக்கத்தை இன்று வரை விட முடியவில்லையே என வருத்தப்படுவோரும்....

2. இன்று மனசு சரியில்லை ( ! ? ) எனச் சொல்லி சொல்லியே தினமும் குடிப்பவரும்...

3. விஷேசத் தினங்களில் தங்களின் “மகிழ்ச்சி”யை ( ! ? ) வெளிப்படுத்த நண்பர்களோடுச் சென்றுக் குடிப்பவரும்....

4. ஊரின் கடைக்கோடியில் மதுக்கடை இருந்தாலும் அதை வாங்குவதற்காக ஒளிந்து நெளிந்து கொண்டுச் செல்வோரும்...

5. இப்பழக்கத்தை கண்டிப்பாகக் கைவிட வேண்டும் என முயற்சி செய்து தோற்றுப் போனோரும்....

6. இன்று மட்டும்தான் குடிப்பேன் ( ! ) நாளை குடிக்கவே மாட்டேன் ( ? ) என உறுதிமொழி ( ? ) எடுப்போரும்...

7. இதைத் தவிர்க்க மற்றொன்றை பயன்படுத்தி அதையும் கூடுதலாக சேர்த்துக்கொண்டு அடிமையாகிக் கொண்டவரும்...

8. கடின வேலையை காரணம் காட்டி தங்கள் உடல் வலியை போக்குவதற்காக (?) போதையைப் பயன்படுத்துவோரும்....

9. குடித்துவிட்டு வாகனத்தை தாறுமாறாக ஓட்டிச்சென்று விபத்துகளை ஏற்படுத்துவோரும்....

10. மப்பு அதிகமாகி நடுவீதியில் படுத்துப் புரண்டு குடும்ப மானத்தையே குழிதோண்டிப் புதைப்போரும்....

11. குடிப்பதற்காக பொண்டாட்டியின் நகையைத் திருடும் “420” களும்...

12. போதை அதிகமாகி தன் நிலை மறந்து தான் பெற்ற மகளையே “.....“ 

என சமூகத்தில் இருக்கத்தான் செய்கின்றனர்.

என்னதான் பாதிப்புகள் ?
1. ஞாபக மறதி

2. உடல் உறுப்புகள் பாதிப்பு

3. பொய் சொல்வது, திருடுவது, ஏமாற்றுவது போன்ற ஒழுக்கம் தவறுதல்

4. கொலைக் குற்றங்கள் செய்யத் தூண்டுதல்

5. கை கால் நடுக்கம், வாந்தி, பசியின்மை, தூக்கமின்மை, காரணமற்ற பயம், மனப்பிரமைகள், பயங்கர கனவுகள்

6. தற்கொலை முயற்சி செய்தல்.

7. குடும்ப உறவு விரிசல் அடைதல் குறிப்பாக மனைவியின் நடத்தையில் சந்தேகித்தல்

8. குழந்தையின்மை

9. சமூகத்தில் தனிமைப் படுத்தப்பட்டு அல்லது ஒதுக்கப்பட்டு வில(க்)கி இருத்தல்.

10. இறுதியில் அகால மரணம்

“குடி” நோய் என்பது உன்னையும் உன் குடும்பத்தையும் சேர்த்து அழித்துவிடும் !!! மறந்து விடாதே !!!!

என்னதான் தீர்வு ?
1. குடும்ப உறுப்பினர்களின் அரவணைப்புகள் கண்டிப்பாக தேவை.

2. மனதிடம், விடாமுயற்சி இருக்க வேண்டும்.

3. போதை அடிமை என்பது உடல் மற்றும் மனம் சார்ந்த நோய், உடலுக்கு மருத்துவமும், மனதுக்கு தகுந்த ஆலோசனைகளும் கண்டிப்பாக வழங்கப்படவேண்டும்.

4. பொது இடங்களில் விழிப்புணர்வு அறிவிப்புகளை அங்காங்கே வைக்கலாம்.

5. சமுதாயப் பொது அமைப்புகள் குடிநோய் உள்ளவர்களை இனங்கண்டு “கவுன்சிலிங்” செய்வதன் மூலம்  குடிக்கும் எண்ணத்தை அறவே மறந்துவிடக் கேட்டுக்கொள்ளலாம்.

6. சர்வதேச போதைப் பொருள் ஒழிப்பு தினமான “ஜூன் 26” அன்று சமுதாய அமைப்புகள், தொண்டு நிறுவனங்கள், வர்த்தக சங்கம், சமுக ஆர்வலர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் ஆகியோர்கள் ஒருங்கிணைந்து அமைதிப் பேரணி நடத்தி விழிப்புணர்வைத் தூண்டலாம்.

7. நமதூரில் உள்ள மக்கள் பிரதிநிதிகள், சமுதாய அமைப்புகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், பிரபல அரசியல் கட்சிகள் மற்றும் வெளிநாடுவாழ் சகோதரர்கள் அனைவரும் ஒன்றிணைந்து இதனால் நமது சமுதாய மக்களுக்கு ஏற்படுகிற இழப்பீடுகளை கருத்தில்கொண்டு சட்ட சிக்கல்களை ஆராய்ந்து மதுபானக் கடைகளை அப்புறப்படுத்த முயற்சி செய்யலாம்.

8. நிரந்தர நடவடிக்கையாக நாடு முழுவதும் “பூரண மதுவிலக்கு சட்டத்தை” இயற்றி உடனடியாக அமுலுக்கு கொண்டுவர வேண்டும். இதற்காக அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து பெரும் தியாகங்கள் ( ! ? ) செய்யத் தயாராக இருக்க வேண்டும்.

ஈமான் கொண்டோரே ! மதுபானமும், சூதாட்டமும், கற்சிலைகளை வழிபடுதலும், அம்புகள் எறிந்து குறி கேட்பதும் ஷைத்தானின் அருவருக்கத்தக்க செயல்களிலுள்ளவையாகும். ஆகவே நீங்கள் இவற்றைத் தவிர்த்துக் கொள்ளுங்கள். அதனால் நீங்கள் வெற்றியடைவீர்கள். நிச்சயமாக ஷைத்தான் விரும்புவதெல்லாம், மதுபானத்தைக் கொண்டும், சூதாட்டத்தைக் கொண்டும் உங்களிடையே பகைமையையும், வெறுப்பையும் உண்டு பண்ணி அல்லாஹ்வின் நினைவிலிருந்தும், தொழுகையிலிருந்தும் உங்களைத் தடுத்து விடத்தான். எனவே, அவற்றை விட்டும் நீங்கள் விலகிக் கொள்ள மாட்டீர்களா ? (திருக்குர்ஆன் 5:90,91 )


சேக்கனா M. நிஜாம்
இறைவன் நாடினால் ! தொடரும்...