Friday, July 29, 2011

நவீன கருவிகள் வாடகைக்கு..........

தமிழகத்தில் சிறு, குறு விவசாயிகளின் வருவாயைப் பெருக்குவதற்காக நவீன வேளாண் கருவிகளை இருப்பு வைத்து, விவசாயிகளுக்கு வாடகைக்குவிட அரசு திட்டமிட்டு வருகிறது.




 வேளாண்மைத் தொழிலில் கூலித் தொழிலாளர்கள் பற்றாக்குறை பெரும் பிரச்னையாக இருந்து வருகிறது. இதனால், விவசாயிகள் பலர் வேளாண் தொழிலை மேற்கொள்ள முடியாத நிலையில் உள்ளனர்.
 இந்த பிரச்னையை தவிர்ப்பதற்காக அனைத்து மாவட்டங்களிலும் சிறு, குறு விவசாயிகள் குறித்த கணக்கெடுப்புப் பணியை வேளாண் துறை அலுவலர்கள் மேற்கொண்டுள்ளனர். இந்தப் பணி ஜூலை மாத இறுதியில் நிறைவடையும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.




 இந்தக் கணக்கெடுப்பில் நில அளவை எண், விவசாயியின் பெயர், அவரது தந்தை பெயர், வங்கிக் கணக்கு விவரம், கைப்பேசி எண், இப்போது சாகுபடி செய்யப்படும் பயிர்கள் விவரம், அதற்கான நீராதாரம், மண் பரிசோதனை செய்யப்பட்டதா? கடந்த 3 ஆண்டுகளில் பெறப்பட்ட சராசரி வருவாய், என்னென்ன விவசாயக் கருவிகள் இருக்கின்றன? (பவர் டில்லர், டிராக்டர், களையெடுப்புக் கருவி), வேளாண் சார்ந்த தொழில்கள் மூலம் கிடைக்கும் வருமானம் (ஆடு, மாடு, கோழி வளர்ப்பு), தேவைப்படும் பயிர்க் காப்பீடு, பயிர்க் கடன் போன்ற விவரங்கள் சேகரிக்கப்படுகின்றன.




 மேலும், இந்தத் திட்டத்தில் உயரிய தொழில்நுட்பங்கள் மூலம் சிறு, குறு விவசாயிகளின் வருவாயை இரு மடங்காக உயர்த்துவதற்கு அரசு திட்டமிட்டுள்ளது.




 எனவே, இதுவரை மேற்கொள்ளப்பட்ட சாகுபடியில் எதனால் மகசூல் குறைந்தது? மகசூலை இரு மடங்காக உயர்த்த என்னென்ன தொழில்நுட்பங்கள் தேவைப்படுகின்றன போன்ற தகவல்களும் சேகரிக்கப்பட்டு வருகின்றன.




 மகசூலை அதிகப்படுத்துவதற்காக சம்பந்தப்பட்ட பகுதிகளில் திருந்திய நெல் சாகுபடி முறை, நுண்ணீர் பாசனம், சொட்டு நீர்ப் பாசனம், தெளிப்பு நீர்ப் பாசனம், மழை தூவிப் பாசனம் போன்றவற்றை நடைமுறைப்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.




 மேலும், அடுத்த பருவத்துக்கு என்ன சாகுபடி மேற்கொள்வது என்பது குறித்த அறிவுரைகளை வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்குத் தேவையான விதைகள், உயிரி உரங்கள், நுண் சத்துகள், உரங்கள், பயிர்ப் பாதுகாப்பு மருந்துகள், ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து நிர்வாக மருந்துகள் போன்றவற்றை பரிந்துரைப்பது தொடர்பாகவும் கணக்கெடுக்கப்படுகின்றன.




 விவசாயக் கூலித் தொழிலாளர்கள் பற்றாக்குறையைப் போக்கும் வகையில் கிராமங்களுக்குத் தேவையான நவீன இயந்திரங்கள், நெல் நடவுக் கருவிகள், பவர் கோனோவீடர், பவர் டில்லர், டிராக்டர், ஒருங்கிணைந்த அறுவடைக் கருவிகள் போன்ற தேவைகளும் அறியப்பட்டு வருகின்றன.




 இந்த விவரங்கள் அனைத்தும் கையடக்க டிஜிட்டல் கருவி மூலம் பதிவு செய்யப்படவுள்ளன. இந்தப் பதிவுகள் தனியாகச் சேமித்து நிர்வகிக்கப்படவுள்ளன.






 இந்தக் கருவிகளை அந்தந்தப் பகுதிகளில் இருப்பு வைத்து கிராம விவசாயிகளுக்கு வாடகைக்குவிட அரசு திட்டமிட்டு வருகிறது.




 நவீன வேளாண் கருவிகளை விவசாய ஆர்வலர் குழுக்கள், டான்வாப் மகளிர் குழுக்கள், பயிர் மருந்தகம் உள்ளிட்டவற்றுக்கு வழங்கி விவசாயிகளுக்கு வாடகைக்கு விடலாமா அல்லது தொடக்க வேளாண் கூட்டுறவுக் கடன் சங்கம் மூலம் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தலாமா என்பது குறித்தும் அரசு ஆலோசித்து வருவதாகக் கூறப்படுகிறது.




 ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள மொத்த சிறு, குறு விவசாயிகளை மூன்றாகப் பிரித்து, தொடர்ந்து 3 ஆண்டுகளில் ஒவ்வொரு பிரிவினருக்கும் இந்தத் திட்டத்தை அமல்படுத்த அரசு திட்டமிட்டுள்ளதாம். இந்தத் திட்டம் அடுத்த 3 ஆண்டுகளில் அனைத்து சிறு, குறு விவசாயிகளையும் சென்றடைய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக வேளாண் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.




 திருச்சியில்...: திருச்சி மாவட்டத்தில் இந்தக் கணக்கெடுப்புப் பணியில் வேளாண் துறை இணை இயக்குநர் ஜே. சேகர் தலைமையில், துணை இயக்குநர் ஆர். சந்திரசேகரன், எஸ். சபா நடேசன் மேற்பார்வையில் 9 உதவி இயக்குநர்கள், 16 வேளாண் அலுவலர்கள், 14 துணை வேளாண் அலுவலர்கள், 86 உதவி வேளாண் அலுவலர்கள் ஈடுபட்டுள்ளனர்.




 திருச்சி மாவட்டத்தில் 94,024 சிறு விவசாயிகளும்,99,290 குறு விவசாயிகளும்  உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமணி 








No comments:

Post a Comment