Tuesday, July 26, 2011

தீர விசாரிப்பதே மெய் !மாமியாரைப் பற்றி...

யாராவது ஒருவர் தரக் கூடியத் தகவலை மட்டுமே ஆதாரமாகக் கொண்டு யாருடைய விஷயத்திலும் அவசரப்பட்டு முடிவெடுக்க வேண்டாம் என்றும் நன்றாக விசாரித்தே சிறந்த முடிவை மேற்கொள்ள வேண்டும் தவறினால் கைசேதப்படுவீர்கள் என்று 1400 வருடங்களுக்கு முன் உலக பொதுமறை திருமறைக் குர்ஆன் மனித சமுதாயத்தை நோக்கி எச்சரிக்கை விடுத்தது. 

நம்புவதுப் போன்று பேசிக் கழுத்தறுப்பதும், பார்ப்பது கேட்பது போன்று செட்டப் செய்து நாடகமாடுவதும் சிலருக்கு கை வந்த கலை என்பதால் கண்ணால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய், தீர விசாரிப்பதே மெய் என்று முன்னோர்கள் கூறினர்.

கொலை, கொள்ளை, கற்பழிப்புகள் போன்ற குற்றச் செயல்களை செய்து விட்டு கண்டுப் பிடிக்க முடியாத அளவுக்கு தடயங்களையும் அழித்து விட்டு மக்களோடு மக்களாக கலந்திடும் குற்றவாளிகளை போலீஸாரின் தடியாலும், துப்பாக்கியாலும் வெளிக் கொண்டு வர முடியாததை சிபிஐ, சிபிசிஐடி அதிகாரிகள் விசாரனைகள் மூலம் வெளிக்கொண்டு வந்து விடுவதைப் பார்க்கிறோம்.     

முறையான விசாரனையை அமைத்து செயல்படுங்கள் என்பது அல்லாஹ்வின் வாக்கு என்பதால் அல்லாஹ்வின் வாக்கை எந்த சமுதாயத்தவர் பின் பற்றினாலும் அவர்கள் தங்களுடைய காரியத்தில் வெற்றி அடைவார்கள்.

இன்று நம்மில் பலர் யாராவது ஒருவர் ( நம்பிக்கைகுரியவர் என்று கருதக் கூடியவர்) தரக் கூடியத் தகவலை அடிப்படையாகக் கொண்டு மிகவும் நெருக்கமானவர் விஷயத்தில் முறையான விசாரனையை மேற்கொள்ளாமல் அவசர முடிவை மேற்கொண்டு அவர்களை கவிழ்த்து விடுவதையும் அல்லது தாமே கவிழ்ந்து விடுவதையும் பார்க்கிறோம். 


மாமியாரைப் பற்றி...

o    என் மீது உங்கள் தாயார் நெருப்பாய் எரிந்து விழுகிறார்கள் நான் இந்த வீட்டில் இருப்பது அறவே அவர்களுக்கு பிடிக்கவில்லை உங்கனைக் கண்டால் மட்டும் சாதுவாகி விடுகிறார்கள் என்று மனைவிக் கூறுவாள்.

o    உண்மையில் அந்த தாயார் கோப சுபாவம் உள்ளவராக இருக்க மாட்டார் யார் மீதும் எரிந்து விழுவது அவரது இயல்பிலேயே இல்லாத ஒன்றாக இருக்கும். என் மீது நெருப்பாய் எரிகிறார் என்பதெல்லாம் தன் தாய் வீட்டில் போய் ஹாயாக உட்கார்ந்து கொள்வதற்காக அல்லது தனிக்குடித்தனம் செல்வதற்காக இட்டுக்கட்டிக் கூறுவது. 

எரிந்து விழுவது என்பது சாந்த குணமுடைய தன் தாயாரிடத்தில் கடந்த காலங்களில் காணாத ஒன்றாக இருக்கிறதே ! ஒரு வேளை தான் இல்லாத நேரத்தில் அவ்வாறு நடந்து கொள்கிறாரா ? என்று விசாரிக்க வேண்டியவர்களிடம் முறையாக விசாரித்து உண்மையை தெரிந்து கொள்ள மறுத்து மனைவி சொல்வதை அப்டியே நம்பி பெற்று வளர்த்து ஆளாக்கிய அன்னை தந்தையிடமிருந்து சிலர் ஒதுங்கி விடுகின்றனர் அல்லது ஒதுக்கி விடுகின்றனர்.

நான் உலகில் அழகிய முறையில் உறவைப் பேணுவதற்கு மிகவும் தகுதியானவர் யார் என்று அண்ணல் அவர்களிடம் அவர்களின் தோழர் ஒருவர் கேட்டதற்கு தொடர்ந்து மூன்று முறை தாய் என்றும் நான்காவது முறை தந்தை என்றும் சிறப்பித்துக் கூறினார்கள். (புகாரி: 5971)

அண்ணல் நபி அவர்களின் அழகிய உபதேசத்தை பின்பற்றி ஒழுக வேண்டிய சமுதாயத்தவர்களே பின்பற்றாமல் அவசர முடிவை மேற்கொண்டு அல்லல் படுவதைப் பார்க்கிறோம். இதில் அவர்கள் உலகில் வெற்றி அடைந்து விட்டதாகக கருதினாலும் மறுமையில் அல்லாஹ்வின் முன் நிருத்தப்படுபவர்கள் என்பதை மறந்து விடுகின்றனர். 

...எனக்கும், உனது பெற்றோருக்கும் நன்றி செலுத்துவாயாக! என்னிடமே திரும்பி வருதல் உண்டு. திருக்குர்ஆன்.31:14.


மருமகளைப் பற்றி...

o    உன் மனைவி சரியாக எங்கள் சொல் கேட்டு கேட்பதில்லை என்று ஆரம்பிப்பார்கள், அதற்கு மகன் படியவில்லை என்றால் நடைமுறையில் மாற்றம் தெரிகிறது என்பார்கள், அதற்கும் மகன் படியவில்லை என்றால் இல்லாததை இட்டுக்கட்டத் துணிவார்கள்.

o    காலம் தான் கெட்டுக் கிடக்கிறதே என்று தனக்குத் தானே சப்பை கட்டிக் கொண்டு வேறு எதாவது ஒரு குணம் அவளிடம் ஏற்கனவே பிடிக்காதிருந்தால் அதற்காக தாய்,தந்தை கூறும் (இல்லாத) குற்றச்சாட்டை இன்னும் மிகைப்படுத்தி கழட்டி விட முனைகின்றனர்.

மேற்காணும் தாய்,தந்தையரைப் பற்றி மனைவி கூறும் குற்றச்சாட்டினால் பெற்றோர்- பிள்ளை உறவு முறியாது, ஆனால் மருமகள் மீது மாமியார் சுமத்தும் பாரதூரமான குற்றச்சாட்டினால் கணவன்- மனைவி உறவு முறிந்து விடும். அவசரப் பட்டு இந்த உறவை முறித்து விட்டால் மீண்டும் இந்த உறவு இணையாது.

இவ்வுலகம் (முழுவதும்) பயனளிக்கும் செல்வங்களே; பயனளிக்கும் இவ்வுலகச் செல்வங்களில் மிகவும் மேலானதுஇ நல்ல மனைவியே. என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். நூல்: முஸ்லிம் 2911

இறைத்தூதர்(ஸல்)அவர்கள் சிறப்பித்துக் கூறிய சிறந்த பொக்கிஷத்தை அவசர முடிவை மேற்கொண்டு ரத்து செய்து விட முணைகின்றனர்.  தீர விசாரிக்காமல் சிறந்த பொக்கிஷத்தை இழந்துவிட்டால் ? எந்த பொக்கிஷத்தை இல்லாத குற்றச்சாட்டை சுமத்தி வெளியேற்றினார்களோ அந்த குற்றச்சாட்டுக்கு உரியவளாக இரண்டாவது மனைவி அமைந்து விட்டால் இவர் உலகில் நஷ்டவாளி ஆவதுடன் அப்பாவிப் பெண்ணுக்கு துரோகம் செய்தப் பாவத்திற்காக இவரும், அப்பெண் மீது அவதூறு சுமத்திய காரணத்திற்காக அவரது தாய்-தந்தையரும் மறுமையில் நஷ்டவாளியாவர்.

நம்பிக்கை கொண்ட வெகுளிகளான ஒழுக்கமுள்ள பெண்கள் மீது அவதூறு கூறுவோர் இவ்வுலகிலும், மறுமையிலும் சபிக்கப்பட்டனர். அவர்களுக்குக் கடும் வேதனை உண்டு. திருக்குர்ஆன். 24:23.
அவர்களின் நாவுகளும், கைகளும், கால்களும் அவர்களுக்கு எதிராக அவர்கள் செய்தவை குறித்து சாட்சியமளிக்கும். திருக்குர்ஆன். 24: 24.


நண்பர்களுக்கு மத்தியில்...

o    உன்னை விட எல்லா வகையிலும் அவன் குறைந்தவனாக இருந்தும் அவற்றை நீ பொருட் படுத்தாமல் அவனுடன் நெருங்கிப் பழகினாய் ஆனால் அவனோ சிறியப் பிரச்சனைக்காக உன்னைப் பற்றி எவ்வளவு கேவலமாக என்னிடமும் இன்னாரிடமும் கூறி இருக்கிறான், இன்னும் எத்தனைப் பேரிடம் கூறினானோ, கூறுவானோ தெரியாது ? அப்பொழுதே சொன்னேன் நீ கேட்க மறுத்தாய் ? இப்பொழுதாவது புத்தி படித்துக் கொள் என்று கொளுத்தி விடுவான்.  

o    தன்னுடன் நெருங்கிப் பழகிய காலத்தில் அவனுடைய நல்லொழுக்கத்தின் மூலம் நல்லவன் என்று முடிவு செய்திருந்தும் அற்பக் காரியத்தினால் ஏற்பட்ட சின்னப் பிரச்சனையில் ஒரு கழிசடை வைத்த நெருப்புக்கு இறையாகி நல்ல நண்பனை இழந்து வேறோரு கழிசடையை நண்பனாக்கி கொண்டு கவிழ்ந்து விடுவதைப் பார்க்கிறோம்.

இரண்டு பேர் நன்றாகப் பழகுவது சிலருக்கு அதிகம் பிடிக்காது எப்பொழுது அவர்களுக்கு மத்தியில் பிரச்சனை எழும் என்று காத்திருப்பார்கள் எழவில்லை என்றால் எழுவதற்கு ஏற்பாடும் செய்வார்கள்.  முறையாக விசாரித்து முடிவெடுக்கத் தவறி உண்மையாளனை புறக்கனித்து பொய்யனுடன் கூட்டு சேர்ந்து அல்லாஹ்வின் வாக்குக்கு மாறு செய்து ஏராளமான இளைஞர்கள் வழி கெட்டு விடுகின்றனர்.

நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வை அஞ்சுங்கள்! உண்மையாளர்களுடன் ஆகுங்கள்! திருக்குர்ஆன்.9:119.


தீர விசாரிப்பதே மெய்.

இவ்வாறு தீர விசாரிக்காமல் அவசர முடிவெடுத்து உற்ற துணைவர்களை, சிறந்த வழிகாட்டிகளை  புறக்கணித்து விடுவது என்பது தாய் - பிள்ளைக்கு மத்தியில், கணவன் - மனைவிக்கு மத்தியில், சகோதரர்களுக்கு மத்தியில், நன்பர்களுக்கு மத்தியில், முதலாளி தொழிலாளிகளுக்கு மத்தியில் இரு நாடுகளுக்கு மத்தியில், என்று அடுக்கிக் கொண்டேப் போகலாம்.

தவறான தகவல்களைக் கூறுபவர்கள் பெரும்பாலும் சேடிஸ்டுகளாக அல்லது சுயநலவாதிகளாக, அல்லது பொறாமைக் காரர்களாக, அல்லது பச்சோந்திகளாக தருணம் பார்த்து காலை வாரிவிடும் பழி தீர்ப்பவர்களாகவே இருப்பர். இவர்களின் சதிவலையில் வீழ்ந்து அழிவது பெரும்பாலும் நல்லவர்கள், நடுநிலையாளர்கள் என்பது தான் வேதனை தரும் விஷயமாகும்.


அண்ணல் அவர்களின் ஆட்சி காலத்தில்  ஓர் நாள். 

பனூமுஸ்தலக் கோத்திரத்தாரிடம் வலீத் பின் உக்பா என்பவரை ஜகாத் வசூலிக்க இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அனுப்பி வைத்தார்கள். ஜகாத் வசூலிக்க சென்ற வலீத் பின் உக்பா அவர்கள் திரும்பி வந்து பனூமுஸ்தலக் கோத்திரத்தார் ஜகாத் தர மறுத்து விட்டனர் என்றுக்கூறினார் இதைக்கேட்ட இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்கு கடும் கோபம் ஏற்பட்டு பனூமுஸ்தலக் கோத்திரத்தாருடன் யுத்தம் செய்து ஜகாத் வசூலிக்க பெரும் படையை ஏற்பாடு செய்தார்கள். ஆனால் படை புறப்படுவதற்கு முன் பனூமுஸ்தலக் கோத்திரத்தார்களே ஜகாத்தை வசூலித்து மதீனா வந்து இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் ஒப்படைத்தனர்.

வலீத் பின் உக்பா விடம் ஜகாத் கொடுக்க மறுத்ததற்கு என்னக் காரணம் என்று அவர்களிடம் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கேட்க ? எங்களிடம் ஜகாத் கேட்டு யாரும் வரவில்லையே என்று பனூமுஸ்தலக் கோத்திரத்தார்கள் பதிலளிக்க இதைக்கேட்ட இறைத்தூதர்(ஸல்)அவர்கள் அதிர்ச்சிக்குள்ளாகிறார்கள்.

வலீதுடைய பேச்சை நம்பி யுத்தம் செய்திருந்தால் அந்த அப்பாவி மக்களின் நிலமை என்னவாகி இருக்கும் ? என்பதை நினைத்து வருந்துகிறார்கள். இந்த நேரத்தில் தான் உலகம் முடியும் காலம்வரை உலக மாந்தர் அனைவரும் பின்பற்றி ஒழுக வேண்டிய திருமறையின் 49:6 வசனம் இறங்குகிறது.

நம்பிக்கை கொண்டோரே! குற்றம் புரிபவன் உங்களிடம் ஒரு செய்தியைக் கொண்டு வந்தால் ஒரு சமுதாயத்திற்கு அறியாமையால் நீங்கள் தீங்கு இழைக்காதிருப்பதற்காக அதைத் தெளிவுபடுத்திக் கொள்ளுங்கள்! (இல்லையேல்) நீங்கள் செய்ததற்காகக் கவலைப்படுவீர்கள். திருக்குர்ஆன். 49:6.

(மேற்கண்ட வசனம் இறக்கப்பட்டதன் பின்னணியாக இச்சம்பவத்தையே எல்லா விரிவுரையாளர்களும் குறிப்பிடுகின்றனர். (ஆதாரம்: தப்ஸீர் இப்னுகஸீர்)

வலீதிற்காகவே இவ்வசனம் இறக்கப்பட்டதாக இமாம் இப்னு தைமிய்யா அவர்களும் கூறுகிறார்கள். (மின்ஹாஜுஸ் ஸுன்னதிந் நபவிய்யா)


படிப்பினைகள் 

தாயாக இருந்தாலும், மனைவியாக இருந்தாலும், பிள்ளையாக இருந்தாலும், சகோதரனாக இருந்தாலும், நன்பனாக இருந்தாலும், தொழிலாளியாக இருந்தாலும் இரு நாடுகளுக்கு மத்தியில் உள்ள பிரச்சனையாக இருந்தாலும் ( தகவல் தரக்கூடியவர் நம்பத் தகுந்தவராக இருந்தாலும் ) அல்லாஹ் கூறியவிதம் முறையான விசாரனையை மேற்கொண்டு நீதி செலுத்த வேண்டும் என்ற நற்சிந்தனை எண்ணத்தில் உதயமாக வேண்டும். 

எண்ணம் தான் செயலை தீர்மாணிக்கிறது என்பதால் ஏற்கனவே எதாவது ஒன்றில் பிடிக்காதக் காரணத்தை வைத்து இதில் கவிழ்த்து விடலாம் என்று எண்ணினால் இதன் அடிப்படையில் வெற்றியும் கிடைக்கும் ஆனால் மேற்கூறிய விதம் உலகில் அல்லது மறுமையில் கவிழ்வது உறுதி.

நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டு, நீதிக்குச் சாட்சிகளாக ஆகி விடுங்கள்! ஒரு சமுதாயத்தின் மீதுள்ள பகை நீங்கள் நீதியாக நடக்காமரிருக்க, உங்களைத் தூண்ட வேண்டாம். நீதியாக நடங்கள்! அதுவே இறையச்சத்திற்கு நெருக்கமானது. அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்! அல்லாஹ் நீங்கள் செய்வதை நன்கறிந்தவன். திருக்குர்ஆன். 5:8.



وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ

நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர். திருக்குர்ஆன். 3:104.

No comments:

Post a Comment