வலைப்பூக்களின் பின்னூட்டங்கள் வழியே அறிமுகமாகி, பின் தொடர்ந்து, இணையக் குழுக்களில் விவாதித்து, அரட்டைப் பெட்டிகளில் பேசிக் கொள்வதுதான் வலைப்பூ நட்பின் பரிமாணம். சமூக வலைத்தளங்களில் வியாபித்திருக்கும் போலித்தன்மைக்கு அஞ்சுவோர் இந்த வழியைத்தான் தேர்ந்தெடுக்கின்றனர்
இங்கு கருத்துகளைப் பகிர்ந்து கொள்ள முடிவதுடன் எழுதும் திறனை மெருகேற்றிக் கொள்ள முடிகிறது. நமக்கென
ஒரு தளம் என்கிற உணர்வும், நம்மைப் பின்தொடரும் ஒரு கூட்டம் இருக்கிறது என்ற பெருமிதமும்தான் வலைப் பதிவர்களை தொடர்ந்து எழுதச் செய்கின்றன.
ஆர்குட், ஃபேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்கள், மின்னஞ்சல் சேவை வழங்குவோர் என அனைவருமே இதுபோன்ற அரட்டைப்பெட்டி வசதியை வழங்குகின்றனர். நட்பைத் தேடுவோர் முதலில் சங்கமிக்கும் இடம் சமூக வலைத்தளங்கள்தான். ஆனால் இந்த நட்பில் நம்பகத்தன்மை இருப்பதில்லை. எச்சரிக்கை உணர்வுடனேயே எல்லோரையும் அணுக வேண்டும். இவற்றில் பரிமாறிக்கொள்ளப்படும் கருத்துகளில் பெரும்பகுதி எந்த நோக்கமும் இல்லாதவை. அவற்றிலும் உண்மையானவை மிகச் சொற்பமே. பெண்களையும், குழந்தைகளையும் பிடிப்பதற்காகவே பலர் வலைவிரித்திருப்பார்கள். தனிப்பட்ட தகவல்களை மற்றவர்களின் ஆதாயத்துக்காகப் பயன்படுத்தி மோசடி செய்யவும் வழியுண்டு.சமூக வலைத்தளம் என்பது பொதுவெளி. குழு விவாதமும் அதுபோலத்தான். பொது இடத்தில் எந்த அளவுக்கு நாகரிகமாகவும் பாதுகாப்பாகவும் நடந்து கொள்வோமோ அப்படித்தான் சமூக வலைத்தளங்களில் இயங்க வேண்டும். ஆனால், இந்தத் தெளிவும் முதிர்ச்சியும் அனைவருக்கும் இருப்பதில்லை. ஐந்தாம் வகுப்பு மாணவியும் ஆறாம் வகுப்பு மாணவனும் சமூக வலைத்தளங்களில் நட்பு கொள்கிறார்கள். அரசம்பட்டி அரசுப் பள்ளி ஏழாம் வகுப்பு மாணவர்கள் குழு என்பதுபோல இவர்களுக்குள் குழுக்களும் உண்டு. குழந்தைகளின் இணைய நடவடிக்கையைக் கண்காணிப்பது குறித்து பெற்றோருக்கு இன்னும் முழுமையான விழிப்புணர்வு ஏற்படாத நிலையில், இந்தக் குழந்தைகள் ஏதாவது பிரச்னையில் சிக்கிக் கொள்ள வாய்ப்பிருக்கிறது.
சமூக வலைத்தளங்களில் மணமகன் அல்லது மணமகளைக் கண்காணிக்கும் போக்கும் அதிகரித்திருக்கிறது. பெண்ணுக்கு நட்பு வட்டம் எப்படி இருக்கிறது, யாருடன் நெருக்கமாகப் பழகுகிறார் என்பதையெல்லாம் பிள்ளைவீட்டார் கண்காணிக்கிறார்கள். பெண்வீட்டாரும் இதைத்தான் செய்கிறார்கள். இந்தக் கண்காணிப்பால் திருமணம் நின்றுபோன விநோதங்கள்கூட உண்டு. எல்லாம் தமிழ்நாட்டில்தான்.சமூக வலைத்தளங்களில் எல்லோராலும் நம்மைக் கண்காணிக்க முடியும் என்பதே அவற்றைப் பயன்படுத்தும் பலருக்குத் தெரியாது. இதுதான் மோசடிகள் நடப்பதற்கும், அந்தரங்கங்கள் வெளியாவதற்கும் முக்கிய காரணம். இணைய அரட்டையிலும் இந்த அளவுக்கு ஆபத்து இருக்கத்தான் செய்கிறது. ஜிமெயில் சேவையில் நமது அரட்டைகள் தொடர்ந்து பதிவு செய்யப்பட்டு வரும் என்பதையும் பலர் அறிந்திருக்கவில்லை. அப்படிப் பதிவு செய்யப்படுவதைத் தடுக்கும் வசதி இருந்தாலும், அதைப் பயன்படுத்துவோர் மிகக் குறைவு. அப்படியே தடுத்தாலும் வேறு வகையில் அதை ஆவணப்படுத்த முடியும்.
பாதுகாப்பானது, ரகசியமானது என்பது போன்ற தோற்றம் இணைய அரட்டைக்கு இருக்கிறது. உண்மையில் அது முழுக்க முழுக்க பொய்யே. என்னதான் உங்களது மின்னஞ்சல் கணக்கை நீங்கள் கடவுச் சொல் போட்டுப் பூட்டியிருந்தாலும் கள்ளச்சாவிகள் போட்டு அதைத் திறந்து பார்ப்பதையே தொழிலாகக் கொண்ட ஒரு கூட்டம் இருக்கிறது. அவர்கள் தொழில்நுட்பத்தில் தேர்ந்த திருடர்கள். உங்கள் பாதுகாப்புக்காக வீட்டுச் சுற்றுச் சுவரை 8 அடிக்கு உயர்த்தினீர்கள் என்றால், தொழில்நுட்பத் திருடர்களால் 12 அடிக்கு ஏணி தயாரிக்க முடிகிறது. இதுதான் இன்றையத் தொழில்நுட்பத்தின் உண்மையான முகம். இந்தத் தொழில்நுட்பம் நம்மை எப்போது வேண்டுமானாலும் காலை வாரிவிடலாம். இணையத்தில் கிடைக்கும் பிணைப்பற்ற நட்பு எந்த நேரத்திலும் துரோகம் இழைக்கலாம். பிரபலமாக வேண்டும், நட்பு வட்டத்தை விரிவாக்க வேண்டும் என்கிற ஆசையில் சமூக வலைத்தளங்களில் சொந்த விஷயங்களை எழுதுவதும், குடும்ப புகைப்படத் தொகுப்புகளை வெளியிடுவதும் ஆபத்தை விளைவிக்கும். வலைப்பூக்களில் எழுதும்போதும் இதே எச்சரிக்கை
உணர்வு அவசியம்.
தற்கால தொழில்நுட்பத்தையும் இணைய நட்பையும் நம்பி அரட்டைகளில் அந்தரங்கங்களைப் பகிர்ந்துகொள்வது நல்லதல்ல. நமக்கு ஆதரவான தொழில்நுட்பம் எந்த நேரத்திலும் நமக்கு எதிராகவும் திரும்பக்கூடும். எச்சரிக்கையாக இயங்காவிட்டால் முடங்கிப் போகவேண்டியதுதான்.
விழிப்புணர்வு பதிவு.
ReplyDelete