Wednesday, July 24, 2013

இறைவனை இறைஞ்சுகிறேன்!




மனக்குளத்தில் தூசிகளாய்

.....மடிந்திருக்கும் வேளையிலே

கனக்குமந்தப் பாவமெலாம்

.....கழுவுகின்ற மாதமன்றோ?

உள்ளமென்னும் மணற்பரப்பில்
.....உலர்ந்துநிற்கும் குணச்செடிக்கு
வெள்ளமென்னும் அருளருவி
.....விழுந்திடவே இறைஞ்சுகிறேன்!

பொய்யொழித்துப் புறந்தள்ளிப்
.....பொல்லாங்குப் பேசாமல்
மெய்யடக்கி இருந்திட்ட
.....மெய்யான நோன்பாகும்!

ஆயிரம் திங்களினும்
ஆங்கோர் இரவினையே
பாயுமுன் ஆற்றலாகப்

பாய்ச்சும் இறைவனேநீ!

எரிகின்ற நரகமின்றி
.....எம்மையும் விடுப்பாயா?
சொரிகின்ற அருளதனால்
சொர்க்கமும் தருவாயா?
பசிவந்தால் பத்துகுணம்
.....பறந்திடுமாம் அத்தருணம்
பசிவந்தும் பக்குவத்தால்
.....பிறந்திடுமாம் நற்குணங்கள்!

ஷைத்தானை விலங்கிட்டுச்
.....சாதகமாய் நமக்காக
வைத்தானே இறைவன்தான்
.....வாழ்த்துகிறேன் அதற்காக!

தொழுகையின் வழியாகத்
.....தூயமனம் பெறுகின்றேன்
அழுகையின் வழியாக
.....ஆசைகளைத் துடைக்கின்றேன்!

கவனித்துப் பிழையறிந்து
...கண்களிடும் துளிகளலாம்
சுவனத்தின் மரங்களுக்குச்
....சொந்தமான விதைகளாகும்!

அழுகின்றேன் அல்லாஹ்வே
.....அரவணைப்பாய் அர்ரஹீமே
தொழுகின்றேன் தூயோனே
.....துடைத்திடுவாய்த் தீங்குகளை



Saturday, July 20, 2013

ஐக்கிய அரபு அமீரகம் தலைநகர் அபுதாபியில் அதிரை பைத்துல்மாலின் கிளை இனிதே ஜூலை-19,2013 (வெள்ளிக்கிழமை) அன்று துவங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

http://adiraixpress.blogspot.ae/2013/07/blog-post_5255.html#.UenOQNL7B0k

-- 
Posted by அதிரை எக்ஸ்பிரஸ் on 7/20/2013 03:22:00 AM in ,  | 1 கருத்துக்கள்
ஐக்கிய அரபு அமீரகம் தலைநகர் அபுதாபியில் அதிரை பைத்துல்மாலின் கிளை இனிதே ஜூலை-19,2013 (வெள்ளிக்கிழமை) அன்று  துவங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ். 

அபுதாபிவாழ் அதிரையர்களுக்கான நோன்பு துறப்பு (இஃப்தார்) நிகழ்ச்சி அய்மான் அமைப்பின் தலைவர் சகோ.சாகுல் அவர்களது இல்லத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அபுதாபி, முஸஃபா ஆகிய பகுதிகளிலிருந்து அதிரையர்கள் சுமார் 20 பேர் கலந்து கொண்டார்கள்.


 நிகழ்ச்சி நிரல்:

7:15 - இஃப்தார்
7:30 - மஃரிப் தொழுகை
7:45 - விருந்தினர் சுயஅறிமுகம்
8:00 - பைத்துல்மாலின் அவசியம் மற்றும் அறிமுகம் - சகோ. S.M.A.ஷாகுல்
8:15 - அபுதாபி & முஸஃபா கிளை முதன்மை நிர்வாகிகள் தேர்வு
8:45 - நன்றியுரை - சகோ.சபீர் (ABM துபை கிளை - கெளரவ ஆலோசகர்)


நிகழ்ச்சிக்கு துபாய் மற்றும் அபுதாபி மற்றும் முஸஃபா பகுதியிலிருந்து அதிரையர்கள் சுமார் 20 பேர் கலந்து கொண்டனர். மேலும்,திருவண்ணாமலை சமூக சேவகர் சகோ.அப்துல் ஜலீல் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு சிறப்பித்தார்.


கீழ்கண்ட முதன்மை நிர்வாகிகள் கலந்து கொண்டவர்களால் முன்மொழியப்பட்டு தேர்வு செய்யப்பட்டார்கள்.

கெளரவ ஆலோசகர் - சகோ.ஷாகுல் [தலைவர், அய்மான்] -(050-7824129)
தலைவர் - 'கவியன்பன்' அபுல் கலாம்  (056-7822844)
துணை தலைவர் - சகோ.அப்துல் மாலிக் [NPCC] - (050-7914780)
செயலர் (அபுதாபி) - சகோ.பைஸல் (050-9431868)
செயலர் (முஸஃபா) - சகோ.அப்துல் ஜலீல் (050-7940545)
பொருளர் - சகோ.மொய்தீன் (050-8488667)


அபுதாபி & முஸஃபா கிளை முதன்மை நிர்வாகிகள்


கலந்து கொண்டவர்களிடம் உறுப்பினர் படிவம் விநியோகிக்கப்பட்டது. துபாய் மற்றும் அபுதாபி பைத்துல்மால் கிளைகள் மூலம் ஃபித்ரா, ஜகாத் மற்றும் ஸதகா தர்மங்களை வசூலித்து அதிரை பைத்துல்மாலுக்கு அனுப்பி வைப்பது என்றும், ஒவ்வொரு மாதமும் இரண்டாவது வெள்ளிக்கிழமை அன்று உறுப்பினர்களின் மாதாந்திர அமர்வு நடத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டது.

இஃப்தார் ஏற்பாடுகளை சிறப்பாகச் செய்திருந்த சகோ.ஷாகுல் அவர்களுக்கு பைத்துல்மால் துபை கிளை சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டு இரவு 9:00 மணிக்கு இனிதே நிறைவுற்றது.

தகவல் & புகைப்படம் : சகோ.N.ஜமாலுதீன் (ABM துபை கிளை செயலர்)

Wednesday, July 17, 2013

அபுதாபிவாழ் அதிரைவாசிகளுக்கு இஃப்தார் அழைப்பிதழ்

Posted by அதிரை எக்ஸ்பிரஸ் on 7/17/2013 01:51:00 PM in  | 1 கருத்துக்கள்

அன்புடையீர், அஸ்ஸலாமு அலைக்கும்.

நமதூர் அதிரை பைத்துல்மாலுக்கு சவூதி அரேபியா (தமாம் & ரியாத்), குவைத், அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளில் கிளைகள் இருப்பதை அறிவீர்கள்.ஐக்கிய அரபு அமீரகம் துபாயில் கடந்த எட்டாண்டுகளாக அதிரை பைத்துல்மால் கிளை செயல்பட்டு வருகிறது. அல்ஹம்துலில்லாஹ்.

இவற்றின் தொடர்ச்சியாக அபுதாபி மற்றும் முஸஃப்பா பகுதிவாழ் அதிரைவாசிகளின் வசதிக்காக இன்ஷா அல்லாஹ் அபுதாபியிலும் ஓர் கிளை ஏற்படுத்தும் நோக்கத்துடன் இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 19-07-2013(வெள்ளிக்கிழமை), ரமலான் பிறை 10 அன்று அபுதாபி மற்றும் சுற்றுவட்டார அதிரைவாசிகளுக்கு சகோ.ஷாகுல் அவர்களின் அபுதாபி இல்லத்தில் இஃப்தார் உபசரிப்பு மற்றும் அதிரை பைத்துல்மால் அபுதாபி கிளையின் அறிமுக நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வாய்ப்புள்ள சகோதரர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். இப்தார் ஏற்பாடு செய்ய வேண்டியுள்ளதால், கலந்துகொள்ள விரும்பும் அபுதாபிவாழ் அதிரைவாசிகள் சகோ.சாகுல் அவர்களின் கீழ்கண்ட தொடர்புகளில் தங்கள் வருகையை முன்கூட்டியே உறுதிபடுத்தும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

செல்பேசி : 050-7824129 / 055-3370104 மின்முகவரி: ashahul@gmail.com

கடந்த 20 ஆண்டுகளாக நமதூர் ஏழை-எளிய மக்களுக்காகச் செயல்பட்டுவரும் அதிரை பைத்துல்மாலின் நீண்டகால நோக்கங்களை முன்னெடுத்துச் செல்வதற்கு உலகெங்கிலும் வாழும் அதிரைவாசிகளின் ஆதரவைப்பெறும் நோக்கில் அபுதாபியில் பைத்துல்மால் கிளையை அமைத்து,அதிரை பைத்துல்மாலின் செயல்திட்டங்கள் தொடர்வதற்கு உங்களின் மேலான ஆதரவையும் துஆவையும் எதிர்பார்க்கிறோம்.

இவண்,

அதிரை பைத்துல்மால்
துபைகிளை நிர்வாகிகள்

Saturday, July 13, 2013

சாதி ஒழிய இஸ்லாம் அன்றி வேறில்லை!

சாதியை ஒழித்து விடலாம் என்றென்னி
அன்றையிலிருந்து இன்றைக்கு வரை பல
தலைவர்கள் என்னென்னமோ செய்து பார்த்தார்கள்!
இருப்பினும் சாதியை ஒழிக்க முடிந்ததா?

கல்வியை கற்றுக்கொண்டு உயர்ந்த பொறுப்பில்
தாழ்த்தப்பட்டவர்கள் வந்து விட்டால் சாதியை
ஒழித்து விடலாம் என்றென்னி அவர்களுக்ககாகவே
தனி மதிப்பெண் பட்டியலை உருவாக்கினார்கள்!
இருப்பினும் சாதியை ஒழிக்க முடிந்ததா?

அதிகார பதவிகளில் தாழ்த்தப்பட்டவர்களை அமர்த்தி
விட்டால் சாதியை ஒழித்து விடலாம் என்றென்னி
அவர்களுக்காகவே அரசியலில் ரிசர்வு தொகுதி
அமைக்கப்பட்டு பெரிய பதவிகளில் அமர்த்தினார்கள்!
இருப்பினும் சாதியை ஒழிக்க முடிந்ததா?

சமத்துவபுரம் என்ற ஒன்றை உருவாக்கி அதில்
பல சாதிக்காரர்களை குடியமர்த்தி சகஜமாக பழக
விட்டால் சாதியை ஒழித்து விடலாம் என்றென்னி
நாடெங்கும் பல சமத்துவ புரங்களை உருவாக்கினார்கள்!
இருப்பினும் சாதியை ஒழிக்க முடிந்ததா?

என்னென்னமோ திட்டங்கள் இதுவரை சாதியை
ஒழித்த பாடில்லை!

ஆனால் இஸ்லாம் எப்படி சாதியை ஒழித்தது?
உலகில் வாழக்கூடிய 200 கோடி முஸ்லிம்களிடம்
எந்த ஏற்றத்தாழ்வும் இல்லையே காரணம் என்ன?
அதற்கு இந்த ஒற்றை வரிதான் காரணம்!!!

மனிதர்களே! நிச்சயமாக நாம் உங்களை
ஓர் ஆண், ஒரு பெண்ணிலிருந்தே படைத்தோம்;
நீங்கள் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்ளும்
பொருட்டு. பின்னர், உங்களைக் கிளைகளாகவும்,
கோத்திரங்களாகவும் ஆக்கினோம்; (ஆகவே) உங்களில்
எவர் மிகவும் பயபக்தியுடையவராக இருக்கின்றாரோ,
அவர்தாம் அல்லாஹ்விடத்தில், நிச்சயமாக மிக்க
கண்ணியமானவர். நிச்சயமாக அல்லாஹ் நன்கறிபவன்
(யாவற்றையும் சூழந்து) தெரிந்தவன். திருகுர்ஆன் 49:13

உலகத்தில் சாதியை ஒழிக்கக்கூடிய சக்தி இஸ்லாமிடம்
மட்டும் தான் உள்ளது! முடிந்தால் அதை அமல் படுத்துங்கள்.

Friday, July 12, 2013

2 1/2 சதவீதம் ஏழைக்கு கொடுத்தால் 97 1/2 காக்கப்படும்

அகீமுஸ்ஸலாத் வஆதுஸ்ஸகாத்த தொழுகையை நிலை நிறுத்தி(த் தொடர்ந்து தொழுது) வாருங்கள்! மேலும் ஜக்காத்தும் கொடுத்து வாருங்கள்!அல்லாஹ் குர் ஆன் ஷரீபில் தொழுகையைப் பற்றி கட்டளையிடும் போதெல்லாம் ஜக்காத்தையும் இணைத்தே கூறுவது சிந்திக்கத் தக்கது கலிமாவில் லாஇலாஹ இல்லல்லாஹ் வை தொடர்ந்து முஹம்மதுற்றசூலுல்லாஹ் எவ்வாறு இணை பிரியாமல் தொடர்ந்து வருகிறதோ அதே போல தொழுகையும் ஜக்காத்தும் பின்னிப் பிணைந்தே மார்க்கத்தில் வலியுறுத்தப்படுகிறது இஸ்லாத்தின் ஐந்து கடமைகளில் கலிமா- தொழுகை- நோன்பு - ஹஜ்ஜு இந்த நான்கும் இறைவனோடு தொடர்பை ஏற்படுத்திச் செய்யும் அமல்கள் ஆனால் ஜக்காத்து மட்டும் மனிதர்களின் தொடர்பு இல்லாமல் நிறை வேற்ற முடியாத கடமையாக தனித்தன்மை பெறுகிறது ஏழைகளுக்கு வழங்குவதை அவர்கள் துன்பம் துடைப்பதையே ஓர் இபாதத்தாக - இறை வணக்கமாக- தனக்குச் செய்த உபகாரமாக- அல்லாஹ் அங்கீகரிப்பது மிகவும் ஆராயத்தக்கது சதக்காவுக்கும் ஜக்காத்துக்கும் வித்தியாசமுன்டு- சதக்கா ( தர்மம்) கொடுத்தால் புண்ணியம் கிடைக்கும் ஆனால் ஜக்காத்தோ கொடுக்காவிட்டால் இறை தண்டனைக்கு ஆளாக வேண்டி வரும் மனிதர்கள் இரண்டு பிரிவுகளில் அடங்கி விடுவர் ஒன்று ஏழை; மற்றொன்று பணக்காரர் . இந்த இரண்டுவகைத் தன்மைகளுக்கும் மனிதர்களில் மாறி மாறி வரக்கூடியது ஏழை ஒரு நாள் பணக்காரராகவும் , சீமான் ஒரு நாளில் ஏழையாக மாறிடவும் வாய்ப்புண்டு ஏழை ஒரு காலத்தில் சீமானாககும் போது தான் இருந்த ஏழ்மை நிலையை உணர்வதற்காகவும்- சீமான் ஒரு காலத்தில் ஏழையாகும் போது சீமானாக இருந்து வழங்கிய ஜக்காத்தின் புண்ணியம் அந்த ஏழ்மை நிலையில் உதவவும் வாய்ப்பாகிறது ஆனால் அருமை நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு மனிதன் ஜக்காத்து கொடுப்பதன் காரணத்தால் - ஏழையாகி விட மாட்டான் என்று நற்செய்தி கூறியுள்ளார்கள் ஆயிரத்து நானூறு ஆண்டுகளுக்கு முன்னரே இந்த பொருளாதாரப் புரட்சி சமூகத் திட்டத்தை அருளிய அல்லாஹ்வும் இதனை அமுல் படுத்திய அண்ணல் நபி( ஸல்) அவர்களும் இதில் பல நுணுக்கமான விஷயங்களைப் பொதிந்து வைத்திருக்கிறார்கள் அது பின் வருமாறு 1- ஜக்காத்து வழங்கும் செல்வந்தன் ஏழைக்கு வழங்கும் போது அல்லாஹ்வின் பரக்கத்தை ஏழைக்கு கொண்டு சேர்க்கும் இறைவனின் பிரதி நிதியாக மாறிப் போகிறான் 
2) ஜக்காத் வழங்குபவன் தான் உழைத்துச் சம்பாதிக்கும் போது அவனது செல்வத்திலிருந்து இரண்டரை சதவீதம் ஏழைக்கும் போவதால் அவன் ஏழைகளுக்கும் சேர்ந்தே உழைக்கிறான் சம்பாதிக்கிரான் 3) பணக்காரனைப் பார்த்து நமக்கெல்லாம் அல்லாஹ் கொடுக்கவில்லை என ஏழை எண்ணாமலிருக்க ஏழையே! உன் பங்கையும் செல்வந்தனின் கைகளில் தருகிறேன் எனும் இறை ரகசியம் இதில் அடங்கி இருக்கிறது 4) வானம் பார்த்த பூமியைப் போல வாழ்க்கையே காய்ந்து கிடக்கும் ஏழையின் கண்ணீரை பணம் எனும் கைகளால் துடைக்கும் வாய்ப்பு செல்வந்தனுக்கு கிடைக்கிறது அப்போது அவன் மகிழ்சியடைகிறான் ஏழ்மை இத்தனை துன்பமா? எனப் பாடமும் படிக்கிறான் தனது வறுமையை நீக்கிய இறைவனுக்கு நன்றி செலுத்தும் வாய்ப்பும் கிடக்கிறது 5) ஏழையும் செல்வந்தனும் அறிமுகமாகிக் கொள்வதால் ஏழைக்கு இயற்கையாக செல்வந்தன் மீது ஏற்படும் வெறுப்பு - பொறாமை நீங்கி சமூக நல்லிணக்கம் ஏற்படுகிறது 6) செல்வந்தன் தன் சொத்து கணக்கை தானே பார்த்துக் கொள்ள ஜக்காத்து அருமையான வாய்ப்பைத் தருகிறது 7) ஜக்காத்து வழங்குவதை உறவினர்களிலிருந்து தொடங்கச் சொல்லி இருப்பதால் குடும்ப உறவுகள் வலுவடைகின்றன 8) இப்படி எத்தனையோ நுணுக்கமான பயன்களை உள்ளடக்கிய ஜக்காத் இன்னொரு உண்மையையும் முஸ்லீம்களுக்கு தெளிவு படுத்தி உணர வைக்கிறது அது என்ன? ''' அஹ்ல பைத்'''' எனும் ஸய்யிது மார்களாகிய திரு நபி (ஸல்) அவர்களின் குடும்பத்தார்கள் ஜக்காத்தைப் பெற மாட்டார்கள் என அவர்களை உயர்வு படுத்தி அவர்களின் கண்ணியத்தை வெளிச்சமிட்டுக் காட்டுகிறது அவர்களின் கரம் எப்போதும் கொடுக்கும் உயர்ந்த கரமேயன்றி ஜக்காத்து பெற கீழிருக்கும் கரமன்று என மாண்பளித்து மகத்துவமளிக்கிறது செல்வத்தில் இரண்டரை சதவீதம் வழங்கச்சொன்ன இறைவன் அப்படி வழங்கினால் தொண்ணூற்று ஏழரை சதவீத சொத்துக்கு பாதுகாப்பளிக்கிறான் சீமான்கள் ஜக்காத்தை வழங்கி தங்களின் செல்வங்களை இறைவனின் அருள் நிழலில் தற்காத்துக் கொள்வார்களாக

(கட்டுரை தொகுப்பு ஆலிம் புலவர் எஸ் - -ஹுசைன் முஹம்மது மன்பயீ 

அமலால் நிறையும் ரமலான்!

அஸ்ஸலாமு அலைக்கும், ரமழான் கறீம்!


https://www.youtube.com/watch?v=Qprtl_S4T3I&feature=c4-overview&list=UUFzA5rHJf9nebaDWQ1HfjSg

இலண்டன் தமிழ் வானொலியில் 11/07/2013 அன்று ஒலிபரப்பட்டதன் விழிமத்தில் 

52:15 என்ற நேரப்பகுதியில் காண்க,



பசித்திருந்து தனித்திருந்து விழித்திருக்கும் மாதம்
A
படைத்தவனின் அருளதிகம் பொழிகின்ற மாதம்

கசிந்துருகித் துதித்திட்டால் ஈடேற்றும் மாதம்

கறையான பாவங்கள் கரைந்தோடும் மாதம்

பசித்தவரின் பட்டினியை யுணர்த்தவரும் மாதம்

பயபக்தி யாதென்று சோதிக்கும் மாதம்

வசிக்கின்ற ஷைத்தானை விலங்கிலிடும் மாதம்

வறியவர்க்கு ஈந்திடவே “ஃபித்ராவின்” மாதம்





குடலுக்கு மோய்வாக்கி குரானோதும் ரமலான்

குற்றங்கள் தடுத்துவிடும் கேடயமாம் ரமலான்
*திடலுக்கு வருவதற்குச் சேமிக்கும் ரமலான்*

திண்ணமாகச் சுவனத்தைப் பெற்றிடத்தான் ரமலான்

உடலுக்கும் பயிற்சியாக்கும் நெறிமுறைகள் ரமலான்

உயிர்க்குள்ளே உணவானச் சுடராகும் ரமலான்
கடலுக்குள் மீன்போல கல்புக்குள் ரமலான்

கர்த்தனவ னறியுமிர கசியம்தான் ரமலான்





குறிப்பு: இப்பாடலில் தடிமன் எழுத்துக்களில் உள்ளவைகள் அறபுச் சொற்கள்; இவ்வாறாக அறபுத்தமிழினைப் பாடலில் இணைப்பது இஸ்லாமியத் தமிழ் இலக்கியத்தில் ஏற்றுக் கொள்ளப்படிருப்பதை உமறுப்புலவர் அவர்களின் சீறாப்புராணம் மற்றும் உள்ள இலக்கிய நூற்களில் காணலாம். கீழே அச்சொற்கட்கான பதவுரை வழங்கியுள்ளேன்:



ஷைத்தான் = இறைவனால் சபிக்கப்பட்டு நம் இரத்த நாளங்களில் ஓடிக்கொண்டிருக்கும் நம்மை வழிகெடுக்கும் ஒரு தீயசக்தி.



ஃபித்ரா = நோன்பில் ஏற்பட்டத் தவறுகட்குப் பரிகாரமாகவும் ஏழைகளின் உணவுத் தேவைக்கு நோன்புப் பெருநாளைக்கு முன்னதாகக் கொடுக்கப்பட வேண்டிய தர்மம்



குர்-ஆன் = இறைவன் வழங்கிய இறுதி வேதம்



கல்பு = ஹ்ருதயம்; உள்ளம்



ரமலான் = இஸ்லாமிய ஐந்து கடமைகளில் ஒன்றான (வைகறை முதல் அஸ்தமனம் வரை) நோன்பிருக்கும் மாதம்



*திடலுக்கு வருவதற்குச் சேமிக்கும் ரமலான்* = மஹ்ஷர் என்னும் திடல் judgment day ground மறுமை நாளின் தீர்ப்பு வழங்கப்பெறும் இடம்

யாப்பிலக்கணம்:

காய், காய், காய், மா (அரையடிக்கு) என்னும் வாய்பாட்டில் அமையும்

அபுல்கலாம் பின் ஷைக் அப்துல்காதிர்

“கவியன்பன்” கலாம், அதிராம்பட்டினம்( பாடசாலை), அபுதபி (தொழிற்சாலை)
அலை பேசி: 00971-50-8351499 / 056 7822844/ 055 7956007
வலைப்பூந் தோட்டம்: http://www.kalaamkathir.blogspot.com/(கவிதைச்சோலை)
மின்னஞ்சல்: kalaamkathir7@gmail.com

Thursday, July 11, 2013

பசிக்க வைத்த நோன்பு: ருசிக்க வைத்த மாண்பு

ஆன்மாவின் உணவாக
      ஆகிவிட்ட ரமலானே
நோன்பும்தான் மருந்தாகி
      நோய்முறிக்கும் ரமலானே!

பாரினிலே குர்ஆனைப்
      பாடமிட்ட ஹாபிழ்கள்,
காரிகளின் கிர்ஆத்கள்
      காதுகளில் சொட்டுந்தேன்!

பகைவனான ஷைத்தானைப்
      பசியினாலே முறியடித்தாய்த்
தொகையுடனே வானோர்கள்
      தொடரவும்தான் நெறியளித்தாய்!

இருளான ஆன்மாவை
       இறைமறையின் ஒளியாலே
அருளான பாதைக்கு
        அழைத்திடுமுன் வழியாமே!

நண்பனாக மாற்றினாயே
       நாங்களோதும் குர்ஆனை
நண்பனாகப் போற்றுகின்றோம்
       நோன்பையும்தான் மாண்பாக

இம்மாதம் மறையோதி
       இரட்டிப்பு நன்மைகளை
இம்மைக்கும் மறுமைக்கும்
       இனிப்பாகத் தந்திடுமே

புடமிடும்நல் லுடற்பயிற்சிப்
       புதுச்சுவையும் பெருகிடவும்
திடமுடன்நாம் பெறுதலுக்குத்
       தினந்தொழுத தராவிஹூமே
--
அபுல்கலாம் பின் ஷைக் அப்துல்காதிர்
“கவியன்பன்” கலாம், அதிராம்பட்டினம்( பாடசாலை), அபுதபி (தொழிற்சாலை) 
அலை பேசி: 00971-50-8351499 / 056 7822844 
வலைப்பூந் தோட்டம்: http://www.kalaamkathir.blogspot.com/ (கவிதைச்சோலை)
மின்னஞ்சல்: kalaamkathir7@gmail.com

Wednesday, July 10, 2013

பசியின் பரிசு

பசியின் பரிசு
“முதுவைக் கவிஞர்” மவ்லானா அல்ஹாஜ் ஏ. உமர் ஜஃபர் பாஜில் மன்பயி
Cell : 98420 96527

 
 
  “பசித்திரு, விழித்திரு, தனித்திரு” என்ற மூன்று வார்த்தைத் தத்துவத்தை முழக்கி வைத்தனர் நம் மூத்த வாழ்வில் முத்திரை பதித்த மூதாதைகள். இந்த மூன்று வாக்கியத்தில் வாழ்க்கையின் முக்கியத்தை உணர்ந்து வெற்றி வாகையும் சூடியுள்ளார்கள்.

  உடலையும், உணர்வையும், உலகையும் குழைத்தெடுத்த வார்த்தைகள் இவை. இம் மூன்று வார்த்தைகளில் வாழ்க்கையை அடக்கி ஆண்ட மாமனிதர்களை வரலாற்றுச் சுவடுகள் இன்று புகழாரம் சூட்டி நிற்பதை உலக அரங்கில் காண முடிகிறது.

  இந்த மூன்று தத்துவத்தையும் அடக்க முடியாமல், பிடித்திருந்த மூக்கணாங்கயிறைக் கை நழுவ விட்டுவிட்டு பள்ளப்படுகுழியினிலே வீழ்ந்து விட்ட நட்டவாளர்களையும் உலகில் காண முடிகிறது.

  பசியை அடக்க முடியாத மனிதன் பிச்சையெடுக்கும் நிலைக்குக் கூட இறங்கி விடுகிறான். உண்ண உணவில்லை என்னும் போது பசியுணர்வு தூண்டி விட்டால் உரிமையில்லாத திருட்டுக்குக் கூட மனிதன் துணிந்து விடுகிறான்.

  “பசி” என்பது மனிதனுக்கு இறைவன் கொடுத்த பரிசோதனைப் பட்டறை.

  பசியை உருவாக்கி ஒரு மனிதனை மிருகமாகவும் மாற்றலாம். பசியைக் கொடுத்து ஒரு மனிதனைப் புனிதனாகவும் ஆக்கலாம்.

  உலக வரலாற்றில் “பசி!” இல்லாத பக்கங்களே கிடையாது. நாட்டுக்காகப் பசி ! வீட்டுக்காகப் பசி ! மனைவிக்காகப் பசி ! மக்களுக்காகப் பசி ! ஆட்சிக்காகப் பசி ! அதிகாரத்துக்காகப் பசி ! பட்டதுக்காகப் பசி ! பதவிக்காகப் பசி ! பசி ! பசி !! பசி !!!

  அந்நியனின் கரங்களில் தாய் நாடு சிக்கிக் கிடக்கிறது ! தாயக மக்கள் அடிமைத்தளையில் கட்டுண்டு கிடக்கின்றனர் ! ஆளச் சுதந்திரமில்லை ! அனுபவிக்கச் சுதந்திரமில்லை ! பேசச் சுதந்திரமில்லை ! எழுதச் சுதந்திரமில்லை ! இப்படிப்பட்ட நிலையில் … வேண்டும் ஓர் விடுதலை !

  கத்திப் பார்த்தும் பயனில்லை. கதறிப் பார்த்தும் பலனில்லை ! சொல்லிப் பார்த்தும் பலனில்லை ! அடுத்தது ஆர்ப்பாட்டம் ! அடிதடி ! ஆயுதப் போர் ! உதிரம் சிந்தியும், உடல்கள் சரிந்தும், உயிர்கள் பிரிந்தும் பலனில்லாத நிலை !

  முடிவில் ஒரு முடிவு ! “உண்ணாவிரதம் !” பசியை அடக்கிப் பலன் கேட்கத் துணிந்து விடுகிறான் மனிதன். விரதம் ஏற்கும் மனிதன் முகம் வாடுகிறது ! உடல் சோர்கிறது ! பசி உயிரைத் தொட்டுத் தொட்டுப் பார்க்கிறது. இப்படி ஒரு மனிதனல்ல ! ஓராயிரம் மனிதர்கள் ஒன்று கூடிப் பசித்துக் கிடக்கும் போது அடக்கி ஆளும் அதிகார வர்க்கத்துக்கு செய்தி செல்கிறது.


  ஆயுதமேந்திப் போர் புரிந்து உதிரம் சிந்தி, உயிர் நீக்கிக் கேட்டும் கிடைக்காத சுதந்திரம் உண்ணா நோன்பால் கிடைக்கிறது. உண்ணாமல் கிடந்த பசியால் நாட்டுக்கு விடுதலை ! போராட்ட வீரர்களின் பசிக்குப் பரிசு விடுதலை. பசித்திருந்து அந்த விடுதலைப் பரிசை அடைந்து மகிழ்கின்றனர் மக்கள் !

  ஆளத் தகுதியற்ற ஆட்சியாளரை ஆட்சி பீடத்திலிருந்து அகற்றுவதற்கும் ஒரு பசிப் போராட்டம் ! தேவையான தலைவனைத் தகுதியான பீடத்தில் அமர்த்துவதற்கும் ஒரு பசிப் போராட்டம்.

  உழைப்புக்கு ஏற்ற ஊதியம் கிடைக்காவிட்டால், பசித்திருந்து அந்த ஊதியத்தைப் பரிசாகப் பெறும் போராட்டம்.

  அநீதி தலை தூக்கி நிற்கும் போதும் அதை அடக்கிக் காட்டுவதற்கு உண்ணாவிரதப் (பசிப்) போராட்டம் !

  இப்படிப்பட்ட பசிப் போராட்டங்களால் நாட்டில் நற்சுதந்திரம் பரிசாகக் கிடைக்கிறது ! நல்லாட்சி மலர்கிறது ! ஊதியம் உயர்கிறது ! உவகை ததும்புகிறது ! தான் கிடந்த பசியின் பரிசை எண்ணி காலமெல்லாம் குதூகலம் குதூகலம் தான் ! இது நாட்டு நடப்பு ! நம் கண்முன்னே நடக்கிறது !


  கணவன் மனைவிக்கு இடையே சிறு சிறு போராட்டங்கள் ! தான் விரும்பிய பொருளை கணவன் வாங்கிக் கொடுக்க மறுக்கும்போது சமைத்த உணவைக் கூடச் சாப்பிடாமல் பசியோடு படுத்து விடுகிறாள் மனைவி ! மறுநாள் அவள் கேட்ட பொருள் வீடு வந்து சேருகிறது ! இது அவள் பசிக்குக் கிடைத்த பரிசு !


  தனக்குத் தேவையான விளையாட்டுப் பொருளை தனக்கு வாங்கிக் கொடுக்கவில்லை என முரண்டு பிடித்து சாப்பிட மறுக்கிறது குழந்தை! உடனே அந்த விளையாட்டுப் பொருள் குழந்தை கைக்குக் கிடைக்கிறது! இது அக்குழந்தையின் பசிக்குக் கிடைத்த பரிசு ! இது வீட்டு நடப்பு !


  இப்படியே உலகில் ஒவ்வொரு துறையிலும் ஒவ்வொருவர் நிலைகளிலும் ஒவ்வொரு பசிப்போராட்டங்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன ! முடிவில் அந்தப் பசிக்குப் பரிசும் நிச்சயம் கிடைத்து விடுகின்றது !

  ஏன் தெரியுமா? மனித உணர்விலேயே யாரும் சகித்துக் கொள்ள முடியாத ஓர் உணர்வு பசி உணர்வுதான்.

  மக்கள் பசித்திருக்க மன்னன் சகிக்க மாட்டான். மனைவி பசித்திருக்கக் கணவன் சகிக்க மாட்டான். பிள்ளை பசித்திருக்க பெற்றோர் சகிக்க மாட்டார்கள்.

  “மனிதனுக்கு மனிதனே சகித்துக் கொள்ள முடியாத உணர்வு தான் பசி உணர்வு !” ஆம் ! இது தான் உண்மை !

  “தனியொரு மனிதனுக்கு உணவில்லை என்றால் ஜகத்தினை அழித்திடுவோம்” என்று சிந்து பாடி வைத்தான் சுதந்திரக் கவிஞன் பாரதி. ஒரு மனிதன் பசி கிடந்தால் கூட, உலகையே அழித்து விடலாம். என்று கொதிக்கிறான் அவன். மீண்டும் நினையுங்கள். “மனிதனுக்கு மனிதனே சகித்துக் கொள்ள முடியாத உணர்வு தான் பசி உணர்வு”

  இந்த நிலையில் மனிதனின் பசியை இறைவன் சகித்துக் கொள்வானா? இதுதான் நமது கருப்பொருள் ! நிச்சயம் சகித்திக் கொள்ளமாட்டான்.

  கருணைக் கடாட்ஷமும், கொடைத்தயாளமும், அருளும், அன்பும் கொண்ட நிகரற்ற அந்த தலைவனுக்கு நமது பசி தேவையா? நாம் பசித்திருப்பது அவனுக்கு ஓர் இன்பமா? அது ஒரு திருவிளையாட்டா? இந்தப் மனிதப் பசி நிலையால் அவனுக்கு என்ன இலாபம்? எதுவுமே இல்லை. எதுவுமே இல்லை !!


  மனிதப் பசியால் இறைவனுக்கு இன்பமும் இல்லை ! மனிதப் பசியால் இறைவனுக்கு இலாபமும் இல்லை ! மனிதப் பசி அவனுக்கு ஒரு விளையாட்டும் அல்ல ! மனிதப் பசி அவனுக்குத் தேவையுமல்ல!


  அப்படி என்றால் ஏன் மனிதனைப் பசித்து இருக்கச் சொல்கிறான்? பட்டினி கிடக்கச் செய்கிறான்? அந்தப் பசியை ஒரு மாதப் பகற்காலங்களில் கடமையாக ஏன் ஆக்கினான்? அதைக் கடைபிடிக்காதவரை ஏன் தண்டிக்கிறான்? எக்காலமும் போல் மனிதனை உண்டு தின்று வாழ விட வேண்டியது தானே?


  அதற்குத்தான் இறைவன் சொல்கிறான் : “என்னை நம்பி விசுவாசிப்போரே ! உங்களுக்கு முன் வாழ்ந்தவர்கள் மீது கடமையாக்கப்பட்டது போல், உங்கள் மீதும் நோன்பு கடமையாக்கப்பட்டுள்ளது. (அதன் மூலம்) நீங்கள் பயபக்தி (என்னும் தக்வா) உடையவர்களாகலாம்” என அல்குர்ஆன் சூரா அல்பகரா வசனம் 183 ல் இறைவன் அறிவிக்கின்றான்.

  இறைவனின் பயமும் பக்தியும் (தக்வா) ஒரு மனிதனின் உள்ளத்தில் உருவாகி விட்டால், அவன் தவறுகளிலிருந்து தவிர்ந்து கொள்கிறான். எந்த மனிதன் தவறுகளிலிருந்து தவிர்ந்து கொண்டானோ அவனே மனிதப் புனிதன். எந்த மனிதன் புனிதப்பட்டு விட்டானோ அவனே புண்ணியவான். புண்ணியவான்கள் புகும் தளம் சுவனலோகம். அந்தச் சுவனத்திற்கு வழிகாட்டுவதே உண்ணா நோன்பு. அந்த நோன்பு என்னும் பசிக்குப் பரிசு தான் சொர்க்கம். அந்த சொர்க்கம் என்னும் பரிசைப் பெற நாமும் புண்ணியம் பூத்துக் குலுங்கும் கண்ணிய ரமலானில் புனித நோன்பு நோற்றுப் பகலெல்லாம் பசியுடன் வாழுவோம். வாருங்கள்.
 

நன்றி :

குர்ஆனின் குரல்
ஜுலை 2013