முப்பது வயதிலேயே சர்க்கரை வியாதி, நாற்பது வயதில் மாரடைப்பு என இளைய மற்றும் நடுத்தர வயதினரின் ஆரோக்கியமும் ஆயுளும் கீழ்நோக்கிச் செல்லக் காரணம் போதிய உடற்பயிற்சியின்மையே!
இப்போதைய அவசர யுகத்தில் நேரத்தைச் சேமிப்பதற்காக இரண்டு, நான்கு சக்கர வாகனங்கள் பெருமளவில் உபயோகப்படுத்தப்படுகின்றன. விளைவு, நேரம் சேமிக்கப்படும் அதேவேளையில் உடல் ஆரோக்கியம் உதாசீனப்படுத்தப்படுவதை ஏனோ நம்மில் பெரும்பாலானோர் உணர்ந்ததாகத் தெரியவில்லை.
கிராமப்புற மக்களில் பெரும்பாலானோர் இன்னமும்கூட விவசாயத்தைப் பின்னணியாகக் கொண்ட உடலுழைப்பு, நடந்தே செல்லும் மனோபாவம், மாசற்ற சுற்றுச்சூழல் ஆகியவற்றால் தங்கள் உடல் ஆரோக்கியத்தை ஓரளவுக்குத் தக்க வைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், நகர்ப்புற மக்களோ குறிப்பாக இளைஞர்களோ கல்லூரி, நிறுவனங்களில் உடலுழைப்பற்ற பணி, படிப்பு, பின்னர் கணினி அல்லது தொலைக்காட்சி முன்னர் தவம் என மூளை உழைப்புக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை உடல் உழைப்புக்குக் கொடுப்பதில்லை. குறிப்பாக, இரு சக்கர வாகன உற்பத்தி அசுர வேகத்தில் ஆரம்பிக்க, சென்ற தலைமுறையினர் வரை ஆரோக்கியத்தின் பிரதான காரணிகளுள் ஒன்றான மிதிவண்டியை ஓட்டுவதென்பது இப்போது அபூர்வமாகி வருகிறது.
சென்னை நகர மக்களில் 1970-ல் 21.3 சதவீதமாக இருந்த மிதிவண்டி உபயோகிப்போரின் எண்ணிக்கை 2005-ல் 12.8 சதவீதமாகக் குறைந்து போனது. நடப்பு ஆண்டில் இந்த எண்ணிக்கை நிச்சயமாக மேலும் குறைந்திருக்கவே வாய்ப்புண்டு. ஆயிரம், இரண்டாயிரம் என செலவு செய்து உடற்பயிற்சிக் கூடங்கள், நீச்சல் குளம் என ஆர்வமுடன் செல்லும் இளைய தலைமுறையினர் சுற்றுச்சூழலுக்கு மாசு விளைவிக்காத அதேசமயம் உடல் ஆரோக்கியத்தையும் மேம்படச் செய்யும் மிதிவண்டிகளை ஓட்ட முன்வர வேண்டும்.
எல்லாம் சரிதான், சென்னை போன்ற பெருநகரங்களில் பெருகிவரும் போக்குவரத்து நெரிசலில் இலகுரக, கனரக வாகனங்களுக்கு இடையில் மிதிவண்டி ஓட்டுவது எந்த அளவுக்குச் சாத்தியமானது என்ற கேள்வி எழுவதிலும் நியாயமுண்டு. மேலை நாடுகளில் குறிப்பாக ஐரோப்பாவின் நார்வே,ஸ்வீடன் போன்ற நாடுகளில் மிதிவண்டிகள் ஓட்டிச் செல்வதற்கென்று சாலைகளில் தனியாக பாதைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. சென்னை நகரின் ஒருசில இடங்களில் மாநகராட்சியினர் மிதிவண்டிகள் செல்வதற்கான பாதைகள் ஒதுக்கியிருப்பது ஒரு நல்ல ஆரம்பம். மிதிவண்டிகள் செல்வதற்கான இதுபோன்ற பாதைகளை நகரெங்கும் அமைக்க முன்வர வேண்டும்.
மிகுதியான மிதிவண்டிகளின் பயன்பாடு புகை, தூசு இல்லாத சுற்றுச்சூழலை உருவாக்கும் என்பதோடு, உடல் ஆரோக்கியத்துக்கும் நீண்ட ஆயுளுக்கும் அடித்தளம் அமைக்கும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.
No comments:
Post a Comment