Thursday, December 2, 2010

முஸ்லிம்கள் செய்ய வேண்டியவை............

1. அண்டைவீட்டுக்காரன் பசித்திருக்க தான் மட்டும் உண்பவன் முஸ்லிம் அல்ல என்கிற நபி (ஸல்) அவர்களின் வழிகாட்டுதலை முழுமையாகப் பின்பற்றிட வேண்டும். அண்டை வீட்டுக்காரன் முஸ்லிமாகத்தான் இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை.
2. சுத்தம் என்பது இறை நம்பிக்கையின் ஒரு பகுதி என்ற இஸ்லாமியத் தத்துவம் ஒவ்வொரு முஸ்லிமாலும் கடைப்பிடிக்கப்பட்டு தனது வசிப்பிடத்தோடு சுற்றுச்சூழலையும் ஒரு முஸ்லிம் சுத்தமாகத்தான் வைத்திருப்பான் என்பதை நடைமுறைப்படுத்திக் காட்ட வேண்டும்.
3. அமானிதத்திற்கு மாறு செய்யமாட்டான் முஸ்லிம் என்கிற நம்பிக்கையை தங்களது நடவடிக்கை மூலம் பிற மக்களிடம் விதைப்பது ஒவ்வொரு முஸ்லிமான ஆண் பெண் இருசாரர் மீதும் இஸ்லாம் கடமையாக்கி வைத்துள்ளதை மறக்காமல் கடைபிடிக்க வேண்டும். இது இஸ்லாமிய விழுமங்களை பிற மக்களிடம் உயர்த்தும்.
4. பெரும் செல்வந்தர்கள் என்றாலும் எளிமையான வாழ்க்கை முறையை முஸ்லிம்களிடம் தான் கற்றுக் கொள்ள வேண்டும் என்கிற பேச்சு பிற மக்களிடம் ஏற்பட வாழ்ந்திட்டால் அங்கே இஸ்லாமிய மார்க்கத்திற்கு பெருமை.
5. தான தர்மங்களில் சாதி மதம் பாராமல் ஈகை குணத்தின் சிகரங்களாக, வாரி வழங்கும் வள்ளல்களாக முஸ்லிம்கள் நபி (ஸல்) அவர்களை பின்பற்றி வாழ்ந்தால் குரோதங்களும் விரோதங்களும் இருந்த இடம் தெரியாமல் போகும்.
6. அளவு நிறுவைகளில் மோசடி செய்யாமல், கலப்படம் செய்யாமல், பொருட்களை பதுக்கி வைக்காமல், உள் ஒன்று வைத்து புறம் ஒன்று பேசாமல் நபி (ஸல்) அவர்களைப் போல நேர்மையான வியாபாரிகள் தான் முஸ்லிம்கள் அவர்களின் சொல்லுக்கும் செயலுக்கும் வித்தியாசமில்லை  என்கிற பெயரை நிலைநிறுத்தும் போது எதிர்ப்பு பிரச்சாரங்கள் கரைந்து ஓடிவிடும்.
7. வாடகைக்கு வீடு தரும் உரிமையாளரிடம் ஒப்பந்தத்திற்கேற்ப நடந்து கொள்வதும், உரிமையாளர் ஒப்பந்தத்தை முறிக்கின்ற போது அமைதியாக மாற்று வழி தேடுவதும் தான் இஸ்லாமிய நடைமுறை என்று முஸ்லிம்கள் நடந்து கொள்வது சமூகத்தில் மிகப்பெரும் இணக்கத்தை ஏற்படுத்தும்.
8. அநியாய வாடகையும், அளவுக்கு மீறிய முன்பணமும் (அட்வான்ஸ்) இஸ்லாமிய
மார்க்கத்தில் விருபத்தக்கதல்ல என்பதை நிலைநிறுத்தி ஹலால் (அனுமதிக்கப்பட்டது) ஹராமை (விலக்கப்பட்டது) முழுமையாக பேணும் முஸ்லிம்களாக வீட்டின் உரிமையாளர்கள் வாழும்போது பிற மக்களிடம் நெருக்கத்தை ஏற்படுத்தும்.
9. முஸ்லிம்களின் வாக்கும், வாழ்வும், சுத்தம் நிறைந்தது. தனது பேச்சால் எந்த ஒரு மனிதனையும் நோகடிக்க மாட்டான் என்கிற நிலையை உருவாக்கினால் இந்தியாவில் இஸ்லாத்திற்கு வெற்றி நிச்சயம்.
10. தொழிலாளி முதலாளி என்கிற பாகுபாடு இல்லாமல் தான் உண்ணுவதை உண்ணக் கொடுத்து, உடுத்துவதை உடுத்தக் கொடுத்து வாழ்பவன் தான் முஸ்லிம் வியாபாரி. உழைத்த வியர்வை காயும் முன் ஊதியம் கொடுத்து மகிழ்வான் முஸ்லிம் முதலாளி என்பதை தனது செயலால் உணர்த்திடும் போது சமூகப்புரட்சி ஏற்படும்.
11.முஸ்லிம்கள் அதிகப்படியாக பள்ளி மற்றும் கல்லூரிகள் தொடங்க வேண்டும். முஸ்லிம்களால் நடத்தப்படும் தற்போதுள்ள பள்ளி கல்லூரிகளில் இஸ்லாமியப் பண்பாட்டுப் பயிற்சி வகுப்புகள் அதிகம் அதிகம் நடத்தப்பட வேண்டும். பிற சமூகத்துடனான தொடர்புகள் அனைத்தும் இஸ்லாமிய நெறியின் அடிப்டையிலேயே அமைந்திட வேண்டும்.
12. ஜனநாயகத்தில் அநீதி இழைக்கப்பட்ட பிற மக்களின் உரிமைப் போராட்டங்கள் அனைத்திலும் முஸ்லிம் சமூகம் பெருமளவு கலந்து கொண்டு குரல் கொடுக்க வேண்டும். அநீதம் இழைக்கப்பட்டவர்களோடு துணை நின்று போராடுவதும் ஒரு ‘‘இபாதத்’’ (வழிபாடு) என்பதை முஸ்லிம்கள் உணர வேண்டும்
இப்படி பன்முகச் சமூகத்தில் உள்ளடங்கி வாழும் முஸ்லிம் சமூகம் தன்னை தற்காத்துக் கொள்ள இஸ்லாமிய மார்க்கத்தை சிறுபான்மையாக வாழ்வின் எல்லா நிலைகளிலும் கடைபிடிக்கும் போது இந்த பூமியையே சொர்க்கச் சோலையாக மாற்றிவிடும் ஆற்றல் இஸ்லாமிய மார்க்கத்திற்கு இருக்கிறது.
இத்தகைய ஆற்றல் மிகுந்த இஸ்லாமியப் பண்புகளை முதலில் முஸ்லிம்களிடமும் அதோடு பிற சமூகத்தாரிடமும் கொண்டு செல்ல வேண்டிய பொறுப்பும் கடமையும் இஸ்லாமிய இயக்கங்களுக்கும் சமூக ஆர்வலர்களுக்கும் ஆலிம்களுக்கும் இருக்கிறது.
குறிப்பாக சகமனிதர்களோடு உறவுகளைப் பேணுவதில் பெருமானாரைப் பின்பற்றும் சமூகம் எந்தக் காலத்திலும் சோதனைகளை சந்திக்காது. முஸ்லிம்கள் அது போன்று வாழும் நேரத்தில் மாறிவரும் விபரீதத்தை உணர்ந்து முஸ்லிம்கள் கடமையாற்ற வேண்டும். முஸ்லிம்களாக சாட்சி கூறி உம்மாவில் சேர்ந்து இருப்பது இஸ்லாமிய மார்க்கத்தை நிலைநாட்ட அன்றி வேறு எதற்காகவும் இல்லை.

No comments:

Post a Comment