முதுமைப் பருவம் அடையும் வரை குழந்தைப் பேற்றினை வழங்காமல் எத்தனையோ நபிமார்களை அல்லாஹ் சோதித்துள்ளான். அந்த நபிமார்கள் இறைவனிடம் குழந்தை வேண்டிப் பிரார்த்தனை செய்யும் போது, "இறைவா எனக்கொரு குழந்தையைத் தா' என்று பிரார்த்திக்கவில்லை. மாறாக, "இறைவா எனக்கொரு நல்லொழுக்கமுள்ள குழந்தையைத் தா' என்றே பிரார்த்தனை செய்துள்ளனர்.
மேலும் தங்களுடைய சந்ததிகளும் நல்லொழுக்கமுள்ள சந்ததியாக உருவாக வேண்டும் என்பதற்காக இறைவனிடம் நபிமார்கள் பிரார்த்தனை செய்துள்ளனர்.
ஸக்கரிய்யா (அலை) அவர்கள் பரிசுத்தமான குழந்தைக்காக இறைவனிடம் பிரார்த்தனை செய்துள்ளார்கள்.
ஸக்கரிய்யா ''இறைவா! உன்னிடமிருந்து எனக்கொரு தூய குழந்தையைத் தருவாயாக! நீ வேண்டுதலைச் செவியுறுபவன்'' என்று தம் இறைவனிடம் வேண்டினார்.
அல்குர்ஆன் 3:38
இப்ராஹீம் (அலை) அவர்களும் நல்லொழுக்கமுள்ள குழந்தைக்காக இறைவனிடம் பிரார்த்தனை செய்துள்ளனர்.
என் இறைவா! எனக்கு நல்லொழுக்கம் உடையோரில் ஒருவரை (வாரிசாகத்) தருவாயாக! (என்று கேட்டார்.)
அல்குர்ஆன் 37:100
எதிர்காலச் சந்ததியினரும் நல்லொழுக்கமுடையவர்களாக உருவாக வேண்டும் என்பதற்காக நபிமார்கள் பிரார்த்தனை செய்துள்ளனர்.
எங்கள் இறைவா! எங்களை உனக்குக் கட்டுப்பட்டோராகவும், எங்கள் வழித் தோன்றல்களை உனக்குக் கட்டுப்பட்டு நடக்கும் சமுதாயமாகவும் ஆக்குவாயாக! எங்கள் வழிபாட்டு முறைகளை எங்களுக்குக் காட்டித் தருவாயாக! எங்களை மன்னிப்பாயாக! நீ மன்னிப்பை ஏற்பவன்; நிகரற்ற அன்புடையோன் (என்று இப்ராஹீமும் இஸ்மாயீலும் பிரார்த்தனை செய்தார்கள்).
அல்குர்ஆன் 2:128
என் இறைவா! என்னையும், என் சந்ததிகளிலும் தொழுகையை நிலை நாட்டுவோராக ஆக்குவாயாக! எங்கள் இறைவா! எனது பிரார்த்தனையை ஏற்பாயாக! (என்று இப்ராஹீம் கூறினார்.)
அல்குர்ஆன் 14:40
"எங்கள் இறைவா! எங்கள் வாழ்க்கைத் துணைகளிலிருந்தும்,மக்களிலிருந்தும் எங்களுக்குக் கண் குளிர்ச்சியைத் தருவாயாக! (உன்னை) அஞ்சுவோருக்கு முன்னோடியாகவும் எங்களை ஆக்குவாயாக!''என்று அவர்கள் கூறுகின்றனர்.
அல்குர்ஆன் 25:74
இப்ராஹீமை அவரது இறைவன் பல கட்டளைகள் மூலம் சோதித்த போது அவற்றை அவர் முழுமையாக நிறைவேற்றினார். "உம்மை மனிதர்களுக்குத் தலைவராக்கப் போகிறேன்'' என்று அவன் கூறினான். "எனது வழித் தோன்றல்களிலும்'' (தலைவர்களை ஆக்குவாயாக!) என்று அவர் கேட்டார். "என் வாக்குறுதி (உமது வழித் தோன்றல்களில்) அநீதி இழைத்தோரைச் சேராது'' என்று அவன் கூறினான்.
அல்குர்ஆன் 2:124
மேற்கண்ட வசனங்கள் நல்லொழுக்க சமுதாயத்தின் முக்கியத்துவத்தை நமக்கு மிகத் தெளிவாக உணர்த்துகின்றது.
மறுமை வெற்றியும் மாசற்ற குழந்தையில் தான்
ஒருவன் தன்னுடைய குழந்தையை நல்ல பண்பாடுகள் உள்ளவனாக இறையச்சமுடையவனாக உருவாக்கும் போது அவனுடைய மறுமை வெற்றிக்கும் அந்தக் குழந்தைகள் காணரமாகி விடுகின்றன.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: கண்ணியமும் மகத்துவமும் மிக்க அல்லாஹ் நல்ல அடியானுக்கு சொர்க்கத்தில் அந்தஸ்தை உயர்த்துவான். அப்போது அந்த அடியான், "என் இறைவா இது எனக்கு எப்படிக் கிடைத்தது?'' என்று கேட்பான். அதற்கு அல்லாஹ், "உனக்காக உன் குழந்தை பாவமன்னிப்புக் கேட்டதால் (உனக்கு இந்த அந்தஸ்து கிடைத்தது)'' என்று கூறுவான்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: அஹ்மத் 10202
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மனிதன் இறந்து விட்டால் அவனுடைய மூன்று செயல்களைத் தவிர மற்ற அனைத்தும் நின்று விடுகின்றன; 1. நிலையான அறக்கொடை 2. பயனளிக்கும் கல்வி. 3. அவனுக்காகப் பிரார்த்திக்கும் (அவனுடைய) நல்ல குழந்தை.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),
நூல்: முஸ்லிம் 3358
அழகிய முன்மாதிரி
திருந்திய சமுதாயத்தை எவ்வாறு உருவாக்க வேண்டும் என்பதற்கு திருமறைக் குர்ஆன் பல வழிகாட்டுதல்களை நமக்கு வழங்கியுள்ளது.
நபிமார்கள் தங்கள் பிள்ளைகளுக்கு உபதேசம் செய்ததை அல்லாஹ் திருக்குர்ஆனில் விவரிக்கிறான்.
"என் மக்களே! அல்லாஹ் உங்களுக்காக இம்மார்க்கத்தைத் தேர்வு செய்துள்ளான். முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் மரணிக்கக் கூடாது''என்று இப்ராஹீமும், யஃகூபும் தமது பிள்ளைகளுக்கு வலியுறுத்தினர்.
அல்குர்ஆன் 2:132
யஃகூபுக்கு மரணம் நெருங்கிய போது, நீங்கள் சாட்சிகளாக இருந்தீர்களா? "எனக்குப் பின் எதை வணங்குவீர்கள்?'' என்று தமது பிள்ளைகளிடம் கேட்ட போது "உங்கள் இறைவனும், உங்கள் தந்தையரான இப்ராஹீம்,இஸ்மாயீல், இஸ்ஹாக் ஆகியோரின் இறைவனுமாகிய ஒரே இறைவனையே வணங்குவோம். நாங்கள் அவனுக்கே கட்டுப்பட்டவர்கள்''என்றே (பிள்ளைகள்) கூறினர்.
அல்குர்ஆன் 2:133
லுக்மான் தமது மகனுக்கு அறிவுரை கூறும் போது "என் அருமை மகனே! அல்லாஹ்வுக்கு இணை கற்பிக்காதே! இணை கற்பித்தல் மகத்தான அநீதியாகும்'' என்று குறிப்பிட்டதை நினைவூட்டுவீராக!
அல்குர்ஆன் 31:13
என் அருமை மகனே! கடுகு விதை அளவு (ஒரு பொருள்) இருந்து அது பாறைக்குள்ளேயோ, வானங்களிலோ, பூமியிலோ இருந்தாலும் அதை அல்லாஹ் கொண்டு வருவான். அல்லாஹ் நுட்பமானவன்;நன்கறிந்தவன்.
என் அருமை மகனே! தொழுகையை நிலை நாட்டு! நன்மையை ஏவு! தீமையைத் தடு! உனக்கு ஏற்படுவதைச் சகித்துக் கொள்! அது உறுதி மிக்க காரியமாகும்.
மனிதர்களை விட்டும் உனது முகத்தைத் திருப்பிக் கொள்ளாதே! பூமியில் கர்வமாக நடக்காதே! கர்வம் கொண்டு பெருமையடிக்கும் எவரையும் அல்லாஹ் விரும்ப மாட்டான்.
"நீ நடக்கும் போது நடுத்தரத்தைக் கடைப்பிடி! உனது குரலைத் தாழ்த்திக் கொள்! குரல்களில் வெறுக்கத்தக்கது கழுதையின் குரலாகும்'' (என்றும் அறிவுரை கூறினார்).
அல்குர்ஆன் 31:16-19
நல்லொழுக்கமுள்ள சமுதாயத்தை உருவாக்குவதற்கு நபியவர்கள் மிகச் சிறந்த முன்மாதிரியாகத் திகழ்ந்துள்ளார்கள்.
குழந்தைகள் சிறுவயதில் தவறு செய்யும் போதே அவர்களுக்குச் சரியான வழிமுறையைக் கற்றுத் தந்தார்கள்.
தன் பேரக்குழந்தைகளில் ஒருவர் தவறு செய்ய முற்பட்ட போது நபி (ஸல்) அவர்கள் அவரைத் தடுத்ததோடு அவருக்கு நல்லுபதேசமும் செய்தார்கள்.
மரத்தின் அறுவடையின்போதே பேரீச்சம் பழத்தின் ஸகாத், நபி(ஸல்) அவர்களிடம் கொண்டு வரப்படும். இவ்வாறு ஒவ்வொருவரும் தத்தமது பேரீச்சம் பழங்களைக் கொண்டு வந்ததும் அது பெரும் குவியலாக மாறிவிடும். (சிறுவர்களான) ஹசன் (ரலி) ஹுசைன் (ரலி) இருவரும் அக்குவியலருகே விளையாடுவார்கள்.
ஒரு நாள் அவ்விருவரில் ஒருவர் ஒரு பேரீச்சம் பழத்தை எடுத்துத் தம் வாயில் போட்டார். இதைக் கண்ட நபி(ஸல்) அவர்கள் உடனே அதை வெளியே எடுத்துவிட்டு "முஹம்மதின் குடும்பத்தார் ஸகாத்தின் பொருளை உண்ணக் கூடாது என்பதை நீ அறியவில்லையா?'' எனக் கேட்டார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரி (1485)
முத்தான உபதேசங்களை நபியவர்கள் இளம் பிராயத்தினருக்குப் போதித்தார்கள்.
சிறுவராக இருந்த இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களுக்கு நபி (ஸல்) அவர்கள் அற்புதமான உபதேசங்களைச் செய்துள்ளார்கள். இந்த உபதேசத்தின் ஒவ்வொரு வார்த்தையும் பொன்னால் பொறிக்கப்பட வேண்டியவை. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் மனதில் நிலைநிறுத்த வேண்டிய முத்தான அறிவுரைகளாகும்.
"சிறுவனே! உனக்கு நான் சில உபதேசங்களைக் கற்றுத் தருகிறேன். அதன் மூலம் அல்லாஹ் உனக்கு பலனைத் தருவான்'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.
"நீ அல்லாஹ்வுடைய விஷயத்தில் பேணுதலாக நடந்துகொள். அல்லாஹ் உன்னைப் பாதுகாப்பான். அல்லாஹ்வுடைய விஷயத்தில் நீ பேணுதலாக நடந்துகொள். அவனை நீ உன்னுடன் காண்பாய்.
நீ சந்தோஷமாக இருக்கும் போது அல்லாஹ்வை நினைத்துப் பார். (உனக்கு) சிரமம் வரும் போது அல்லாஹ் உன்னை நினைப்பான். கேட்பதாக இருந்தால் அல்லாஹ்விடமே கேள். நீ உதவி தேடுவதாக இருந்தால் அல்லாஹ்விடமே உதவி தேடு.
நிச்சயமாக (இந்த) சமுதாயம் உனக்கு நன்மை செய்வதற்காக ஒன்று சேர்ந்தாலும் அல்லாஹ் உனக்கு எதை விதியாக்கி விட்டானோ அதைத் தவிர வேறெதனாலும் அவர்கள் உனக்கு நன்மை செய்துவிட முடியாது. அவர்கள் உனக்கு தீங்கு செய்வதற்காக ஒன்று சேர்ந்தாலும் அல்லாஹ் உனக்கு எந்தத் தீங்கை விதியாக்கி விட்டானோ அதைத் தவிர வேறெதனாலும் அவர்கள் உனக்குத் தீங்கு செய்துவிட முடியாது. எழுதுகோல்கள் உயர்த்தப்பட்டு விட்டன; ஏடுகள் காய்ந்துவிட்டன'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்: திர்மிதி 2440
சிறுவர்களுக்குக் கூட நபி (ஸல்) அவர்கள் தாமே முதலில் ஸலாம் சொல்லி பணிவைப் போதித்தார்கள்.
(ஒரு முறை) அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் சிறுவர்களைக் கடந்து சென்ற போது அவர்களுக்கு சலாம் சொன்னார்கள். மேலும், "நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு தான் செய்து வந்தார்கள்'' என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஸாபித் அல்புனானீ (ரஹ்)
நூல்: புகாரி 6247
இளைஞர்கள் பிறருக்கு இடையூறு தரும் விளையாட்டுகளை விளையாடுவதற்குத் தடைவிதித்தார்கள்.
நான் சிறு கற்களை எறிந்து (வேட்டையாடிக்) கொண்டிருந்த ஒரு மனிதரைக் கண்டேன். அவரிடம், "சிறு கற்களை எறியாதே. ஏனெனில்,அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "சிறு கற்களை எறிய வேண்டாமென்று தடுத்தார்கள்' அல்லது "சிறுகற்களை எறிவதை வெறுத்து வந்தார்கள்'. மேலும், நபி அவர்கள் "அவ்வாறு சிறு கற்களை எறிவதால் எந்தப் பிராணியும் வேட்டையாடப்படாது; எந்த எதிரியும் வீழ்த்தப்படமாட்டான். மாறாக, அது பல்லை உடைக்கலாம்; கண்ணைப் பறித்து விடலாம். (அவ்வளவுதான் அதனால் முடியும்)' என்று சொன்னார்கள்'' எனக் கூறினேன்.
அதன் பிறகு ஒரு முறை அதே மனிதர் சிறு கற்களை எறிந்து கொண்டிருப்பதைக் கண்டேன். அவரிடம், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "சிறு கற்கள் எறிவதைத் தடை செய்தார்கள்' அல்லது "சிறு கற்கள் எறிவதை வெறுத்தார்கள்' என்று நான் உனக்குச் சொல்கிறேன். ஆனால், நீயோ (அதை அலட்சியம் செய்துவிட்டு) சிறு கற்களை எறிகிறாயே? நான் உன்னிடம் இவ்வளவு இவ்வளவு காலம் பேசமாட்டேன்'' என்று சொன்னேன்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் முகஃப்பல் (ரலி)
நூல்: புகாரி 5479
ஆபாசங்கள் குழந்தைகள் மனதில் பதிந்து விடாமல் இருப்பதற்காக குழந்தைப் பருவத்திலேயே பல்வேறு ஒழுங்குமுறைகளை மார்க்கம் குழந்தைகளுக்குப் போதிக்க வேண்டும்.
அந்தரங்க உறுப்புக்களைச் சிறுவர்கள் பார்க்காதவாறு பெற்றோர்கள் நடந்து கொள்ள வேண்டும். சிறுவன் தானே என்று கருதி அலட்சியமாக இருப்பது தவறு. குறிப்பிட்ட நேரங்களில் வீட்டிற்குள் சிறுவர்கள் வரும் போது அனுமதி பெற்று வர வேண்டும் என்ற வழிமுறையை அவர்களுக்குக் கற்றுத்தர வேண்டும்.
நம்பிக்கை கொண்டோரே! உங்கள் அடிமைகளும், உங்களில் பருவ வயதை அடையாதோரும் ஃபஜ்ரு தொழுகைக்கு முன்னரும், நண்பகலில் (உபரியான) உங்கள் ஆடைகளைக் களைந்துள்ள நேரத்திலும், இஷா தொழுகைக்குப் பிறகும் ஆகிய முன்று நேரங்களில் (வீட்டுக்குள் நுழைவதற்கு) உங்களிடம் அனுமதி கேட்கட்டும். இம்மூன்றும் உங்களுக்குரிய அந்தரங்க(நேர)ங்கள். இதன் பின்னர் அவர்கள் மீதோ,உங்கள் மீதோ எந்தக் குற்றமும் இல்லை. அவர்கள் உங்களைச் சுற்றி வருபவர்கள். உங்களில் ஒருவர் மற்றவரிடம் வந்து செல்பவர்கள். இவ்வாறே அல்லாஹ் வசனங்களைத் தெளிவுபடுத்துகிறான். அல்லாஹ் அறிந்தவன்; ஞானமிக்கவன்.
உங்களில் சிறுவர்கள் பருவ வயதை அடைந்து விட்டால் (வயதால்) அவர்களுக்கு முந்தியோர் அனுமதி கேட்பது போல் அவர்களும் அனுமதி கேட்க வேண்டும். இவ்வாறே அல்லாஹ் தனது வசனங்களை உங்களுக்குத் தெளிவுபடுத்துகிறான். அல்லாஹ் அறிந்தவன்;ஞானமிக்கவன்.
அல்குர்ஆன் 24:58, 59
மறுமைக்கு அஞ்சுவோம்
பெற்றோருக்கு எவ்வாறு பணிவிடை செய்ய வேண்டும்?உறவினர்களிடம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும்? எவற்றைச் செய்ய வேண்டும்? எவற்றைச் செய்யக் கூடாது? போன்ற அனைத்தையும் மார்க்கம் நமக்குக் கற்றுத் தந்துள்ளது.
மார்க்க போதனைகளை குழந்தைகளுக்குப் பயிற்றுவிப்பதன் மூலம் மட்டுமே மிகச் சிறந்த ஒரு சமுதாயத்தை உருவாக்க இயலும். அதுவே கொடிய நரகத்திலிருந்தும் நம்மை பாதுகாக்கும்.
நம்பிக்கை கொண்டோரே! உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் நரகை விட்டுக் காத்துக் கொள்ளுங்கள்! அதன் எரிபொருள் மனிதரும் கற்களுமாகும்.
அல்குர்ஆன் 66:6
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் ஒவ்வொருவரும் பொறுப்பாளர் ஆவார். தன் பொறுப்புக்கு உட்பட்டவை பற்றி அவர் விசாரிக்கப்படுவார். பெண் (மனைவி), தன் கணவனின் வீட்டிற்குப் பொறுப்பாளியாவாள். தன் பொறுப்புக்கு உட்பட்டவை குறித்து அவள் விசாரிக்கப்படுவாள்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)
நூல்: புகாரி 2409
பெற்றோர்களின் அலட்சியப் போக்கினால் பிள்ளைகள் தவறான பாதைக்குச் சென்றால் மறுமையில் பெற்றோர்களுக்கு எதிராகப் பிள்ளைகளே அல்லாஹ்விடத்தில் வாதிடுவார்கள். இருமடங்கு அவர்களுக்குத் தண்டனை தருமாறு இறைவனிடம் கேட்பார்கள். இப்படிப்பட்ட மோசமான நிலைக்கு நாமும் நமது பிள்ளைகளும் சென்றுவிடக்கூடாது என்றால் பிள்ளைகளை இஸ்லாத்தின் அடிப்படையில் வளர்க்க வேண்டும்.
"எங்கள் இறைவா! எங்கள் தலைவர்களுக்கும், எங்கள் பெரியார்களுக்கும் நாங்கள் கட்டுப்பட்டோம். அவர்கள் எங்களை வழிகெடுத்து விட்டனர்''எனவும் கூறுவார்கள். "எங்கள் இறைவா! அவர்களுக்கு இருமடங்கு வேதனையை அளிப்பாயாக! அவர்களை மிகப் பெரிய அளவுக்குச் சபிப்பாயாக!'' எனவும் கூறுவார்கள்.
அல்குர்ஆன் 33:67
சிறுவர்கள் மார்க்கம் தடுத்த காரியங்களைச் செய்யும் போது சிறுவர்கள் தானே என்று பெற்றோர்கள் கண்டும் காணாமல் செல்கிறார்கள். இது தவறாகும். ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது என்று சொல்வார்கள்.
ஆரம்பித்ததிலிருந்தே தூய இஸ்லாத்தின் அடிப்படையில் வளர்க்கும் போது இஸ்லாம் என்ற ஒளி அவர்களின் சொல், செயல்பாடு ஆகியவற்றில் கலந்து விடுகிறது. இளைஞர்களாக மாறினாலும் சிறுவயதில் கற்றுக் கொடுக்கப்பட்ட நல்ல பழக்கவழக்கங்கள் அவர்களிடத்தில் தொடர்ந்து நீடித்திருக்கும். எனவே நல்ல குழந்தைகள் உருவாவது பெற்றோரின் கையில் தான் இருக்கின்றது.
கே.எம். அப்துந் நாசிர் - இஸ்லாமியக் கல்லூரி, மேலப்பாளையம்