Friday, July 12, 2013

அமலால் நிறையும் ரமலான்!

அஸ்ஸலாமு அலைக்கும், ரமழான் கறீம்!


https://www.youtube.com/watch?v=Qprtl_S4T3I&feature=c4-overview&list=UUFzA5rHJf9nebaDWQ1HfjSg

இலண்டன் தமிழ் வானொலியில் 11/07/2013 அன்று ஒலிபரப்பட்டதன் விழிமத்தில் 

52:15 என்ற நேரப்பகுதியில் காண்க,



பசித்திருந்து தனித்திருந்து விழித்திருக்கும் மாதம்
A
படைத்தவனின் அருளதிகம் பொழிகின்ற மாதம்

கசிந்துருகித் துதித்திட்டால் ஈடேற்றும் மாதம்

கறையான பாவங்கள் கரைந்தோடும் மாதம்

பசித்தவரின் பட்டினியை யுணர்த்தவரும் மாதம்

பயபக்தி யாதென்று சோதிக்கும் மாதம்

வசிக்கின்ற ஷைத்தானை விலங்கிலிடும் மாதம்

வறியவர்க்கு ஈந்திடவே “ஃபித்ராவின்” மாதம்





குடலுக்கு மோய்வாக்கி குரானோதும் ரமலான்

குற்றங்கள் தடுத்துவிடும் கேடயமாம் ரமலான்
*திடலுக்கு வருவதற்குச் சேமிக்கும் ரமலான்*

திண்ணமாகச் சுவனத்தைப் பெற்றிடத்தான் ரமலான்

உடலுக்கும் பயிற்சியாக்கும் நெறிமுறைகள் ரமலான்

உயிர்க்குள்ளே உணவானச் சுடராகும் ரமலான்
கடலுக்குள் மீன்போல கல்புக்குள் ரமலான்

கர்த்தனவ னறியுமிர கசியம்தான் ரமலான்





குறிப்பு: இப்பாடலில் தடிமன் எழுத்துக்களில் உள்ளவைகள் அறபுச் சொற்கள்; இவ்வாறாக அறபுத்தமிழினைப் பாடலில் இணைப்பது இஸ்லாமியத் தமிழ் இலக்கியத்தில் ஏற்றுக் கொள்ளப்படிருப்பதை உமறுப்புலவர் அவர்களின் சீறாப்புராணம் மற்றும் உள்ள இலக்கிய நூற்களில் காணலாம். கீழே அச்சொற்கட்கான பதவுரை வழங்கியுள்ளேன்:



ஷைத்தான் = இறைவனால் சபிக்கப்பட்டு நம் இரத்த நாளங்களில் ஓடிக்கொண்டிருக்கும் நம்மை வழிகெடுக்கும் ஒரு தீயசக்தி.



ஃபித்ரா = நோன்பில் ஏற்பட்டத் தவறுகட்குப் பரிகாரமாகவும் ஏழைகளின் உணவுத் தேவைக்கு நோன்புப் பெருநாளைக்கு முன்னதாகக் கொடுக்கப்பட வேண்டிய தர்மம்



குர்-ஆன் = இறைவன் வழங்கிய இறுதி வேதம்



கல்பு = ஹ்ருதயம்; உள்ளம்



ரமலான் = இஸ்லாமிய ஐந்து கடமைகளில் ஒன்றான (வைகறை முதல் அஸ்தமனம் வரை) நோன்பிருக்கும் மாதம்



*திடலுக்கு வருவதற்குச் சேமிக்கும் ரமலான்* = மஹ்ஷர் என்னும் திடல் judgment day ground மறுமை நாளின் தீர்ப்பு வழங்கப்பெறும் இடம்

யாப்பிலக்கணம்:

காய், காய், காய், மா (அரையடிக்கு) என்னும் வாய்பாட்டில் அமையும்

அபுல்கலாம் பின் ஷைக் அப்துல்காதிர்

“கவியன்பன்” கலாம், அதிராம்பட்டினம்( பாடசாலை), அபுதபி (தொழிற்சாலை)
அலை பேசி: 00971-50-8351499 / 056 7822844/ 055 7956007
வலைப்பூந் தோட்டம்: http://www.kalaamkathir.blogspot.com/(கவிதைச்சோலை)
மின்னஞ்சல்: kalaamkathir7@gmail.com

Thursday, July 11, 2013

பசிக்க வைத்த நோன்பு: ருசிக்க வைத்த மாண்பு

ஆன்மாவின் உணவாக
      ஆகிவிட்ட ரமலானே
நோன்பும்தான் மருந்தாகி
      நோய்முறிக்கும் ரமலானே!

பாரினிலே குர்ஆனைப்
      பாடமிட்ட ஹாபிழ்கள்,
காரிகளின் கிர்ஆத்கள்
      காதுகளில் சொட்டுந்தேன்!

பகைவனான ஷைத்தானைப்
      பசியினாலே முறியடித்தாய்த்
தொகையுடனே வானோர்கள்
      தொடரவும்தான் நெறியளித்தாய்!

இருளான ஆன்மாவை
       இறைமறையின் ஒளியாலே
அருளான பாதைக்கு
        அழைத்திடுமுன் வழியாமே!

நண்பனாக மாற்றினாயே
       நாங்களோதும் குர்ஆனை
நண்பனாகப் போற்றுகின்றோம்
       நோன்பையும்தான் மாண்பாக

இம்மாதம் மறையோதி
       இரட்டிப்பு நன்மைகளை
இம்மைக்கும் மறுமைக்கும்
       இனிப்பாகத் தந்திடுமே

புடமிடும்நல் லுடற்பயிற்சிப்
       புதுச்சுவையும் பெருகிடவும்
திடமுடன்நாம் பெறுதலுக்குத்
       தினந்தொழுத தராவிஹூமே
--
அபுல்கலாம் பின் ஷைக் அப்துல்காதிர்
“கவியன்பன்” கலாம், அதிராம்பட்டினம்( பாடசாலை), அபுதபி (தொழிற்சாலை) 
அலை பேசி: 00971-50-8351499 / 056 7822844 
வலைப்பூந் தோட்டம்: http://www.kalaamkathir.blogspot.com/ (கவிதைச்சோலை)
மின்னஞ்சல்: kalaamkathir7@gmail.com

Wednesday, July 10, 2013

பசியின் பரிசு

பசியின் பரிசு
“முதுவைக் கவிஞர்” மவ்லானா அல்ஹாஜ் ஏ. உமர் ஜஃபர் பாஜில் மன்பயி
Cell : 98420 96527

 
 
  “பசித்திரு, விழித்திரு, தனித்திரு” என்ற மூன்று வார்த்தைத் தத்துவத்தை முழக்கி வைத்தனர் நம் மூத்த வாழ்வில் முத்திரை பதித்த மூதாதைகள். இந்த மூன்று வாக்கியத்தில் வாழ்க்கையின் முக்கியத்தை உணர்ந்து வெற்றி வாகையும் சூடியுள்ளார்கள்.

  உடலையும், உணர்வையும், உலகையும் குழைத்தெடுத்த வார்த்தைகள் இவை. இம் மூன்று வார்த்தைகளில் வாழ்க்கையை அடக்கி ஆண்ட மாமனிதர்களை வரலாற்றுச் சுவடுகள் இன்று புகழாரம் சூட்டி நிற்பதை உலக அரங்கில் காண முடிகிறது.

  இந்த மூன்று தத்துவத்தையும் அடக்க முடியாமல், பிடித்திருந்த மூக்கணாங்கயிறைக் கை நழுவ விட்டுவிட்டு பள்ளப்படுகுழியினிலே வீழ்ந்து விட்ட நட்டவாளர்களையும் உலகில் காண முடிகிறது.

  பசியை அடக்க முடியாத மனிதன் பிச்சையெடுக்கும் நிலைக்குக் கூட இறங்கி விடுகிறான். உண்ண உணவில்லை என்னும் போது பசியுணர்வு தூண்டி விட்டால் உரிமையில்லாத திருட்டுக்குக் கூட மனிதன் துணிந்து விடுகிறான்.

  “பசி” என்பது மனிதனுக்கு இறைவன் கொடுத்த பரிசோதனைப் பட்டறை.

  பசியை உருவாக்கி ஒரு மனிதனை மிருகமாகவும் மாற்றலாம். பசியைக் கொடுத்து ஒரு மனிதனைப் புனிதனாகவும் ஆக்கலாம்.

  உலக வரலாற்றில் “பசி!” இல்லாத பக்கங்களே கிடையாது. நாட்டுக்காகப் பசி ! வீட்டுக்காகப் பசி ! மனைவிக்காகப் பசி ! மக்களுக்காகப் பசி ! ஆட்சிக்காகப் பசி ! அதிகாரத்துக்காகப் பசி ! பட்டதுக்காகப் பசி ! பதவிக்காகப் பசி ! பசி ! பசி !! பசி !!!

  அந்நியனின் கரங்களில் தாய் நாடு சிக்கிக் கிடக்கிறது ! தாயக மக்கள் அடிமைத்தளையில் கட்டுண்டு கிடக்கின்றனர் ! ஆளச் சுதந்திரமில்லை ! அனுபவிக்கச் சுதந்திரமில்லை ! பேசச் சுதந்திரமில்லை ! எழுதச் சுதந்திரமில்லை ! இப்படிப்பட்ட நிலையில் … வேண்டும் ஓர் விடுதலை !

  கத்திப் பார்த்தும் பயனில்லை. கதறிப் பார்த்தும் பலனில்லை ! சொல்லிப் பார்த்தும் பலனில்லை ! அடுத்தது ஆர்ப்பாட்டம் ! அடிதடி ! ஆயுதப் போர் ! உதிரம் சிந்தியும், உடல்கள் சரிந்தும், உயிர்கள் பிரிந்தும் பலனில்லாத நிலை !

  முடிவில் ஒரு முடிவு ! “உண்ணாவிரதம் !” பசியை அடக்கிப் பலன் கேட்கத் துணிந்து விடுகிறான் மனிதன். விரதம் ஏற்கும் மனிதன் முகம் வாடுகிறது ! உடல் சோர்கிறது ! பசி உயிரைத் தொட்டுத் தொட்டுப் பார்க்கிறது. இப்படி ஒரு மனிதனல்ல ! ஓராயிரம் மனிதர்கள் ஒன்று கூடிப் பசித்துக் கிடக்கும் போது அடக்கி ஆளும் அதிகார வர்க்கத்துக்கு செய்தி செல்கிறது.


  ஆயுதமேந்திப் போர் புரிந்து உதிரம் சிந்தி, உயிர் நீக்கிக் கேட்டும் கிடைக்காத சுதந்திரம் உண்ணா நோன்பால் கிடைக்கிறது. உண்ணாமல் கிடந்த பசியால் நாட்டுக்கு விடுதலை ! போராட்ட வீரர்களின் பசிக்குப் பரிசு விடுதலை. பசித்திருந்து அந்த விடுதலைப் பரிசை அடைந்து மகிழ்கின்றனர் மக்கள் !

  ஆளத் தகுதியற்ற ஆட்சியாளரை ஆட்சி பீடத்திலிருந்து அகற்றுவதற்கும் ஒரு பசிப் போராட்டம் ! தேவையான தலைவனைத் தகுதியான பீடத்தில் அமர்த்துவதற்கும் ஒரு பசிப் போராட்டம்.

  உழைப்புக்கு ஏற்ற ஊதியம் கிடைக்காவிட்டால், பசித்திருந்து அந்த ஊதியத்தைப் பரிசாகப் பெறும் போராட்டம்.

  அநீதி தலை தூக்கி நிற்கும் போதும் அதை அடக்கிக் காட்டுவதற்கு உண்ணாவிரதப் (பசிப்) போராட்டம் !

  இப்படிப்பட்ட பசிப் போராட்டங்களால் நாட்டில் நற்சுதந்திரம் பரிசாகக் கிடைக்கிறது ! நல்லாட்சி மலர்கிறது ! ஊதியம் உயர்கிறது ! உவகை ததும்புகிறது ! தான் கிடந்த பசியின் பரிசை எண்ணி காலமெல்லாம் குதூகலம் குதூகலம் தான் ! இது நாட்டு நடப்பு ! நம் கண்முன்னே நடக்கிறது !


  கணவன் மனைவிக்கு இடையே சிறு சிறு போராட்டங்கள் ! தான் விரும்பிய பொருளை கணவன் வாங்கிக் கொடுக்க மறுக்கும்போது சமைத்த உணவைக் கூடச் சாப்பிடாமல் பசியோடு படுத்து விடுகிறாள் மனைவி ! மறுநாள் அவள் கேட்ட பொருள் வீடு வந்து சேருகிறது ! இது அவள் பசிக்குக் கிடைத்த பரிசு !


  தனக்குத் தேவையான விளையாட்டுப் பொருளை தனக்கு வாங்கிக் கொடுக்கவில்லை என முரண்டு பிடித்து சாப்பிட மறுக்கிறது குழந்தை! உடனே அந்த விளையாட்டுப் பொருள் குழந்தை கைக்குக் கிடைக்கிறது! இது அக்குழந்தையின் பசிக்குக் கிடைத்த பரிசு ! இது வீட்டு நடப்பு !


  இப்படியே உலகில் ஒவ்வொரு துறையிலும் ஒவ்வொருவர் நிலைகளிலும் ஒவ்வொரு பசிப்போராட்டங்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன ! முடிவில் அந்தப் பசிக்குப் பரிசும் நிச்சயம் கிடைத்து விடுகின்றது !

  ஏன் தெரியுமா? மனித உணர்விலேயே யாரும் சகித்துக் கொள்ள முடியாத ஓர் உணர்வு பசி உணர்வுதான்.

  மக்கள் பசித்திருக்க மன்னன் சகிக்க மாட்டான். மனைவி பசித்திருக்கக் கணவன் சகிக்க மாட்டான். பிள்ளை பசித்திருக்க பெற்றோர் சகிக்க மாட்டார்கள்.

  “மனிதனுக்கு மனிதனே சகித்துக் கொள்ள முடியாத உணர்வு தான் பசி உணர்வு !” ஆம் ! இது தான் உண்மை !

  “தனியொரு மனிதனுக்கு உணவில்லை என்றால் ஜகத்தினை அழித்திடுவோம்” என்று சிந்து பாடி வைத்தான் சுதந்திரக் கவிஞன் பாரதி. ஒரு மனிதன் பசி கிடந்தால் கூட, உலகையே அழித்து விடலாம். என்று கொதிக்கிறான் அவன். மீண்டும் நினையுங்கள். “மனிதனுக்கு மனிதனே சகித்துக் கொள்ள முடியாத உணர்வு தான் பசி உணர்வு”

  இந்த நிலையில் மனிதனின் பசியை இறைவன் சகித்துக் கொள்வானா? இதுதான் நமது கருப்பொருள் ! நிச்சயம் சகித்திக் கொள்ளமாட்டான்.

  கருணைக் கடாட்ஷமும், கொடைத்தயாளமும், அருளும், அன்பும் கொண்ட நிகரற்ற அந்த தலைவனுக்கு நமது பசி தேவையா? நாம் பசித்திருப்பது அவனுக்கு ஓர் இன்பமா? அது ஒரு திருவிளையாட்டா? இந்தப் மனிதப் பசி நிலையால் அவனுக்கு என்ன இலாபம்? எதுவுமே இல்லை. எதுவுமே இல்லை !!


  மனிதப் பசியால் இறைவனுக்கு இன்பமும் இல்லை ! மனிதப் பசியால் இறைவனுக்கு இலாபமும் இல்லை ! மனிதப் பசி அவனுக்கு ஒரு விளையாட்டும் அல்ல ! மனிதப் பசி அவனுக்குத் தேவையுமல்ல!


  அப்படி என்றால் ஏன் மனிதனைப் பசித்து இருக்கச் சொல்கிறான்? பட்டினி கிடக்கச் செய்கிறான்? அந்தப் பசியை ஒரு மாதப் பகற்காலங்களில் கடமையாக ஏன் ஆக்கினான்? அதைக் கடைபிடிக்காதவரை ஏன் தண்டிக்கிறான்? எக்காலமும் போல் மனிதனை உண்டு தின்று வாழ விட வேண்டியது தானே?


  அதற்குத்தான் இறைவன் சொல்கிறான் : “என்னை நம்பி விசுவாசிப்போரே ! உங்களுக்கு முன் வாழ்ந்தவர்கள் மீது கடமையாக்கப்பட்டது போல், உங்கள் மீதும் நோன்பு கடமையாக்கப்பட்டுள்ளது. (அதன் மூலம்) நீங்கள் பயபக்தி (என்னும் தக்வா) உடையவர்களாகலாம்” என அல்குர்ஆன் சூரா அல்பகரா வசனம் 183 ல் இறைவன் அறிவிக்கின்றான்.

  இறைவனின் பயமும் பக்தியும் (தக்வா) ஒரு மனிதனின் உள்ளத்தில் உருவாகி விட்டால், அவன் தவறுகளிலிருந்து தவிர்ந்து கொள்கிறான். எந்த மனிதன் தவறுகளிலிருந்து தவிர்ந்து கொண்டானோ அவனே மனிதப் புனிதன். எந்த மனிதன் புனிதப்பட்டு விட்டானோ அவனே புண்ணியவான். புண்ணியவான்கள் புகும் தளம் சுவனலோகம். அந்தச் சுவனத்திற்கு வழிகாட்டுவதே உண்ணா நோன்பு. அந்த நோன்பு என்னும் பசிக்குப் பரிசு தான் சொர்க்கம். அந்த சொர்க்கம் என்னும் பரிசைப் பெற நாமும் புண்ணியம் பூத்துக் குலுங்கும் கண்ணிய ரமலானில் புனித நோன்பு நோற்றுப் பகலெல்லாம் பசியுடன் வாழுவோம். வாருங்கள்.
 

நன்றி :

குர்ஆனின் குரல்
ஜுலை 2013
 

Tuesday, May 14, 2013

இன்ஷா அல்லாஹ், குணமாகி வரும் சகோ பீ ஜேயின் கேன்சர்

ஏகஇறைவனின் திருப்பெயரால்...
துஆ மட்டும் போதும்.

அன்புள்ள கொள்கைச் சகோதரர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும்.
எனக்கு கேன்ஸர் நோய் தாக்கியுள்ளது என்பதை நான் கொள்கைச் சகோதரர்களுக்கு தெரிவித்ததை மறந்திருக்க மாட்டீர்கள்.
அறுவை சிகிச்சை செய்வது மட்டுமே ஒரே வழி என்றும் கேன்சர் பாதித்த பகுதிகளில் மட்டுமின்றி அதைச் சுற்றியுள்ள பகுதிகளையும் வெட்டி எடுப்பது மட்டுமே ஒரே வழி என்றும் ஆங்கில மருத்துவர்கள் ஒருமனதாகக் கூறினார்கள்.
என் மீது அன்பு வைத்திருந்த கொள்கைச் சகோதாரர்கள் மட்டுமின்றி கொள்கையில் உடன்பாடு இல்லாமல் தனிப்பட்ட முறையில் என்மீது மதிப்பு வைத்திருந்த சகோதரர்களும் ஆங்கில மருத்துவம் தான் சரியானது எனவும் வலியுறுத்தினார்கள்.  
அமெரிக்கா போகலாம். லண்டன் போகலாம். சிங்கப்பூர் போகலாம் எல்லா செலவுகளையும் நான் ஏற்றுக் கொள்கிறேன் என்று பல சகோதரர்கள் முன்வந்தனர்.
ஏழை எளிய மக்கள் கூட எனது நிலத்தை விற்றுத் தருகிறேன்; நகையை அனுப்புகிறேன் என்றெல்லாம் எனக்கு உறுதுணையாக நின்றார்கள். என் உறவினர்களில் எவ்வளவு செய்வதற்கு தகுதிபடைத்தவர்கள் உள்ளனர். மனமகிழ்வோடு செலவு செய்ய அவர்கள் தாயாராக இருந்தனர். அவர்களின் அன்பு என்னை நெகிழ வைத்தது என்றாலும் அந்த உதவிகளை நான் கன்னியமான முறையில் மறுத்து விட்டேன்.
எனது மருத்துவ வகைக்காக பணமாகவோ பொருளாகவோ எந்த உதவியும் யாரிடமும் நான் பெறவில்லை. அதை நான் விரும்பவில்லை. அறுவை சிகிச்சை செய்வதற்கு நான் உடன்படாததற்கு இரணடு காரணங்கள் இருந்தன. எனது குடும்பத்தில் சிலருக்கு கேன்சர் ஏற்பட்டு அறுவை சிகிச்சைக்குப் பின் அதிகமாகப் பரவி அவர்கள் மரணித்ததைக் கண்டதால் ஏற்பட்ட மனக்குழப்பம் ஒரு காரணம்.  
அறுவை சிகிச்சை என்றால் அதைப் பலரும் அறியும் நிலை ஏற்பட்டு எனக்கு உதவ முன்வருவார்கள்., என்னைக் கேட்காமலே எனக்கு உதவுவார்கள். அடிக்கடி நோய் விசாரிப்பார்கள். மருத்துவமனையில் அத்கிமானோர் குழுமி நோயையும் ஒரு பந்தாவாகக் காட்டும் நிலை ஏற்படும் என்பது எனக்குப் பிடிக்கவில்லை என்பதும் கூடுதல் காரணம்.
எனவே அறுவை சிகிச்சை இல்லாமல் மாற்று மருத்துவம் செய்து பார்ப்போம் என்று மாற்று மருத்துவ முறைகளைப் பல மாதங்கள் கடைப்பிடித்து வந்தேன். ஆனால் அதனால் எந்தப் பயனும் ஏற்படவில்லை என்பதுடன் கேன்சர்கட்டியின் அளவு தாறுமாறாக அதிகரித்தும் வந்தது. விசாரிப்பவர்களிடம் நன்றாக உள்ளது என்று சொல்லி அவர்கள் எனக்காக கவலைப்படுவதைத் தவிர்த்து வ்ந்தேன்.  
ஆனால் அதன் பாதிப்புகள் அதிகரித்து வருவதை உண்ர்ந்த போது எனக்கு ஏற்பட்டுள்ள வகை கேன்சருக்கு மாற்று மருத்துவம் இல்லை என்று எனக்கு தாமதமாகத் தோன்றியது. எனவே அறுவை சிகிச்சை செய்து விடுவோம் என்ற முடிவுக்கு வந்தேன். ஆனால் இதை ஒருவருக்கும் சொல்லாமல் செய்தால் தான் மேலே சொன்ன விளைவுகளைத் தவிர்க்க முடியும் என்று கருதி என் மனைவி என் கடைசி மைத்துனன் தவிர யாருக்கும் சொல்லாமல் பிரபலமில்லாத ஒரு மருத்துவமனையில பிரபலமான டாக்டர் மூலம் அறுவை சிகிச்சை செய்வதற்காக அட்மிட் ஆனேன்.
ராஜபாளயம் நிகழ்ச்சியை நேற்று முடித்து விட்டு புறப்பட்டு இன்று மருத்துவமனையில் அட்மிட் ஆகி ஆப்ரேஷன் செய்து கொண்டேன். காலை 11.30 மணி முதல் பகல் 3.30 மணி வரை நான்கு மணி நேரம் ஆபரேஷன் நல்லபடியாக நடந்தது. அல்ஹ்மது லில்லாஹ்.  
மாநில நிர்வாகிகளுக்கோ, உறவினர்களுக்கோ, வேறு நண்பர்களுக்கோ இதை நான் தெரிவிக்கவில்லை. என்னைப் பார்க்க வருவதற்காக அவர்கள் செலவு செய்து வருவதால் அவர்களுக்கு ஏற்படும் சிரமங்களை நான் அறிவேன் மேலும் மருத்துவ மனையில் கூட்டமாக குழுமி அது ஒரு செய்தியாகவும் பரபரப்பாகவும் ஆகிவிடக் கூடாது என்பதாலும். ஒருவருக்கும் சொல்லவில்லை ஆபரேஷன் முடிந்து சில மணி நேரங்களுக்குப் பின்னர் தான் மாநில நிர்வாகிகளுக்கும் உறவினர்களுக்கும் நல்லபடியாக சிகிச்சை முடிந்ததைத் தெரிவித்தேன். துன்பம் நேரும் போது மற்றவர்களின் ஆறுதலை அனைவரும் விரும்புவார்கள்.
ஆனால் இயல்பாகவே எனக்கு துன்பங்கள் நேரும் போது யாரும் அனுதாபம் காட்டினால் அது குறித்து அக்கறை காட்டினால் அது எனக்கு ஆறுதலைத் தருவதற்கு பதிலாக சங்கடத்தையே ஏற்படுத்துகிறது. குடும்பத்தில் உள்ளவர்களுக்கும் பயங்கரமான பாதிப்பு ஏற்பட்டு விட்டதோ என்ற எண்ணத்தை அது ஏற்படுத்தி விடும். இதன் காரணமாகவே நான் இது போன்ற விசாரணைகளை விரும்புவதில்லை. எது நடந்தாலும் நானே இலேசாக எடுத்துக் கொள்ளும் போது ஆளாளுக்கு ஏன் பயம் காட்டுகிறார்கள் என்ற எண்ணம் தான் எனக்கு ஏற்படுகிறது.  
எனவே தான் நான் ஒருவருக்கும் சொல்லாமல் என் சொந்தச் செலவில் யாருடைய உதவியையும் தயவையும் நாடாமல் நானே அல்லாஹ்வின் அருளால் என் பிரச்சனைக்கு என்னால் இயன்ற தீர்வைக் கண்டுள்ளேன். ஆப்ரேஷன் முடிந்து நான் மனஉறுதியுடனும் ஆரோக்கியத்துடனும் இருக்கிறேன். இதனால் தான் நானே உட்கார்ந்து இதை கம்போஸ் செய்து நானே இணைய தளத்தில் ஏற்ற முடிந்தது. இதை நான் அனைவருக்கும் தெரிவிக்கக் காரணம் மாநில நிர்வாகிகளிடமும் என் குடும்பத்தாரிடமும் ஏன் ஒருவருக்கும் சொல்லவில்லை என்று யாரும் கேட்டு அவர்களைத் தவறாக நினைத்து விடக் கூடாது என்பது தான்.
அவர்களுக்கே நான் சொல்லாத போது அவர்கள் மற்றவர்களுக்கு எப்படி தெரிவிப்பார்கள் என்பதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்பது தான். ஆங்கில மருத்துவர்கள் இதன் மூலம் பூரண குணமடைய 90 சதவிகிதம் வாய்ப்பு உள்ளதாக கூறுகின்றனர். அவர்கள் மனிதர்கள் தான். அவர்கள் கூறுவது போல் குணமடைய உங்கள் அனைவரின் துஆ மட்டும் போதும். நான் வேண்டுவது உங்கள் துஆவை மட்டும் தான். 
அன்புடன் பீ.ஜைனுல் ஆபிதீன்

Article Copied From: www.onlinepj.com ,

Monday, May 6, 2013

பொறியியல் படிப்பு பற்றிய முக்கிய அறிவிப்பு

பெரும்பாலான மாணவ, மாணவியர் +2 முடித்தவுடன் பி.இ. எனப்படும் என்ஜினியரிங் படிப்பு படிக்கவே விரும்புகின்றனர். தமிழ்நாட்டில் மொத்தம் 454 பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இவற்றில் ஒரு லட்சத்து 65 ஆயிரம் மாணவர்கள் சேர்ந்து படிக்க முடியும்.

ஆனால் சென்ற ஆண்டு ஒரு லட்சத்து 35 ஆயிரம் மாணவர்கள் மட்டுமே பொறியியல் கல்லூரிகளில் சேர்ந்தனர். மீதமுள்ள 30 ஆயிரம் சீட்டுகள் கடைசி வரை காலியாகவே கிடந்தன.

இந்நிலையில் இந்த ஆண்டு மேலும் 94 பொறியியல் கல்லூரிகள் புதிதாக துவங்கப்பட உள்ளன. இதற்கு அனுமதி கோரி அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சிலுக்கு விண்ணப்பங்கள் வந்து குவிந்துள்ளன, இவற்றில் பெரும்பாலான கல்லூரிகளுக்கு அனுமதி கிடைத்து விடும் என்று தெரிகிறது.



இதன் மூலம் கூடுதலாக 12 ஆயிரம் மாணவ, மாணவியர் பொறியியல் படிப்பு படிக்கலாம். சுருங்கச் சொல்வதெனில் விண்ணப்பிக்கும் அனைத்து மாணவ, மாணவியருக்கும் சீட் ரெடி. இது தெரியாமல் நிறைய முஸ்லிம் மாணவ, மாணவியர் நிர்வாகக் கோட்டவுக்கு பல லட்ச ரூபாய் கொடுத்து விட்டு கை பிசைந்து நிற்பதை பார்க்க முடிகிறது.

பொறியியல் படிப்புக்கு மூன்று விதத்தில் சீட்கள் ஒதுக்கப்படுகின்றன. +2வில் மிக அதிக மதிப்பெண் எடுத்த மாணவ, மாணவியருக்கு அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அரசு பொறியியல் கல்லூரிகளில் சீட்கள் ஒதுக்கப்படும். இந்த சீட்களை பெற்றவர்களுக்கு வருடத்திற்கு 12 ஆயிரம் ரூபாய்க்கு மேல் கட்டணம் வராது.

அதோடு நன்கொடையும் பெறப்படாது. அதற்கு அடுத்த மதிப்பெண்கள் பெற்றவர்களுக்கு அரசு உதவி பெறும் மற்றும் தனியார் கல்லூரிகளில் சீட்கள் ஒதுக்கப்படும்.

ஒரு தனியார் கல்லூரிகளில் 100 சீட்கள் இருந்தால் அதில் 60 சீட்கள் அரசு வசம் ஒப்படைக்கப்படும். அதே தனியார் கல்லூரி சிறுபான்மையினர் நடத்தும் கல்லூரியாக இருந்தால் 40 சீட்கள் அரசு வசம் ஒப்படைத்து விடுவார்கள்.

இப்படி அரசு வசம் ஒப்படைக்கப்பட்ட கல்லூரி சீட்களுக்கு கவுன்சிலிங் மூலம் மாணவ, மாணவியர் தேர்ந்தெடுக்கப்படுவர். இந்த சீட்களுக்கு கட்டணமாக ரூ. 32 ஆயிரம் வரை (வருடத்திற்கு) செலுத்த வேண்டியிருக்கும். இந்த சீட்களும் கிடைக்காமல் போகும் மாணவர்களுக்கு கல்லூரி நிர்வாக கோட்டா சீட் தான் கதி.

ஒரு தனியார் கல்லூரி 100 சீட்களில் 60 சீட்களை அரசு வசம் ஒப்படைத்து விட்டால் மீதம் 40 சீட்கள் இருக்குமல்லவா? இந்த 40 சீட்கள் தான் நிர்வாக கோட்டா சீட்கள் என அழைக்கப்படுகின்றன. தரமான கல்லூரிகளில் இந்த சீட் 3 லட்ச ரூபாய் வரை விலை போகிறது.

பிரபலமல்லாத கல்லூரிகளில் வெறும் 32 ஆயிரம் ரூபாய்க்கும் தரப்படுகின்றன. முஸ்லிம்களுக்கு 3.5 சதவீத இட ஒதுக்கீடு உள்ளது. இந்த இட ஒதுக்கீடு கிடைத்த பிறகு எப்போதும் இல்லாத வகையில் அண்ணா பல்கலைக் கழகம் மற்றும் அரசு பொறியியல் கல்லூரிகளில் அதிக முஸ்லிம் மாணவ, மாணவியருக்கு இடம் கிடைத்துள்ளது.

இதில் இடம் கிடைக்காத முஸ்லிம் மாணவ, மாணவியருக்கு தனியார் கல்லூரிகள் அரசு வசம் ஒப்படைத்த சீட்களில் படிக்க இடம் கிடைக்கும். இதிலும் 3.5 சதவீத இட ஒதுக்கீடு முஸ்லிம்களுக்கு உண்டு. அதனால் பொறியியல் படிப்பு படிக்க விரும்பும் முஸ்லிம் மாணவ, மாணவியர் அதற்கான விண்ணப்பங்களை பூர்த்தி செய்து இந்த மாதம் 31ம் தேதிக்குள் அண்ணா பல்கலைக் கழகத்திற்கு அனுப்பி விட வேண்டும்.

அடுத்த ஜீன் மாதம் 18ம் தேதியன்று ரேங்க் பட்டியல் வெளியிடப்படும். அதன் பிறகு 28ம் தேதியன்று கவுன்சிலிங் தொடங்கும். அந்தக் கவுன்சிலிங் ஜீலை 25ம் தேதி முடிவடையும்.

ஒரு வேளை இச்செய்தி இப்போதைக்கு உங்களுக்கு பயன் தராவிட்டாலும், சமுதாய சொந்தங்களுக்கு இன்ஷா அல்லாஹ் நிச்சயமாக பயன் தரலாம். எனவே கால தாமதம் செய்யாமல் விரைவாக தேவையானவர்களுக்கு கொண்டு செய்யுங்கள்.

  Thanks to : A. Jahir Hussain & பரங்கிப்பேட்டை கலீல் பாகவீ
சில முக்கிய விஷயங்கள் மற்றும் தேதிகள்:
  • கவுன்சிலிங் எனப்படும் கலந்தாய்வு விண்ணப்பங்கள் மே 4 ஆம் தேதியிலிருந்து கொடுக்கின்றனர். 
  • விண்ணப்பங்கள் பெற கடைசி தேதி - 20.05.2013
  • விண்ணப்பங்கள் பூர்த்தி செய்து கொடுக்க வேண்டிய கடைசி தேதி - 20.05.2013 

  • RANDOM NUMBER எனப்படும் எண் 05.06.2013 அன்று கொடுக்கப்படும்.

  • ரேங்க் லிஸ்ட் 20.06.2013 அன்று வெளியிடப்படும்.
  • கலந்தாய்வு ஆரம்பிக்கும் நாள் : 21.06.2013

  • கலந்தாய்வு முடியும் நாள் : 30.07.2013
கலந்தாய்வு விண்ணப்பங்களை எங்கெங்கு பெற்று கொள்ளலாம் என்பதை இங்கு சென்று தெரிந்து கொள்ளுங்கள்.ஆன்லைனிலும் விண்ணப்பிக்கலாம். ஆனால் விண்ணப்பிப்பதற்கு முன் ரூ 500 (FOR GENERAL CASTE) & ரூ 250 (FOR RESERVED CASTE SC/ST) டிமாண்ட் டிராஃப்ட் (DD) எடுத்து வைத்து கொண்டு விண்ணப்பிக்கவும்.

Sincere Thanks to 
1. http://www.annaunivedu.org/tnea-2013-important-dates/
2. http://www.annaunivedu.org/list-of-centres-to-get-tnea-application-form-2013/

தற்போது அண்ணா பல்ககைக்கழகத்திற்கு கீழ் உள்ள கல்லூரிகளுக்கு நுழைவுத்தேர்கு இல்லாததால் கட் ஆஃப்(cut-off marks) மதிப்பெண்களை வைத்து தான் ரேங்க் பட்டியலை  தயாரிப்பார்கள். அதன் மூலம் தான் கலந்தாய்வுக்கு ஏற்பாடு செய்வார்கள்.

இந்த கட் ஆஃப் மதிப்பெண்களை கீழ் கண்டவாறு மதிப்பிடலாம்.


பாடப்பிரிவு +2 மதிப்பெண் மதிப்பிடுதல்கட் ஆஃப் மதிப்பெண்கள்
1.
கணக்கு
196
196/2
98
2.
இயற்பியல்
179
179/4
44.75
3.
வேதியியல்
183
183/4
45.75



கட் ஆஃப் மதிப்பெண்
188.55

மேலே உள்ளது உங்களது புரிதலுக்காக 190, 179 மற்றும் 183 என்ற மதிப்பெண்கள் கொடுத்துள்ளேன். 

Thanks to http://www.paprix.com/2012/05/tnea-2012-how-to-calculate-cut-off-mark.html

தோழமையுடன்

அபு நிஹான் 
THANKS TO 
 http://hajaashraf.blogspot.in/2013/05/blog-post.html
 
 

Wednesday, April 17, 2013

என் இறைவனே

தேர்ந்தெடுக்கப்பட்ட பிரார்த்தனைகள்
குர்ஆனிலிருந்து..
رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الْآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ
1. எங்கள் இறைவனே! எங்களுக்கு இவ்வுலகில் நற்பாக்கியங்களைத் தந்தருள்வாயாக! மறுமையிலும் நற்பாக்கியங்களைத் தந்தருள்வாயாக! இன்னும் எங்களை (நரக) நெருப்பின் வேதனையிலிருந்தும் காத்தருள்வாயாக! 2:201
رَبَّنَا لاَ تُؤَاخِذْنَا إِنْ نَسِيْنَا أَوْ أَخْطَأْنَا رَبَّنَا وَلاَ تَحْمِلْ عَلَيْنَا إِصْرًا كَمَا حَمَلْتَهُ عَلَى الَّذِيْنَ مِنْ قَبْلِنَا رَبَّنَا وَلاَ تُحَمِّلْنَا مَا لاَ طَاقَةَ لَنَا بِهِ وَاعْفُ عَنَّا وَاغْفِرْ لَنَا وَارْحَمْنَا أَنْتَ مَوْلاَنَا فَانْصُرْنَا عَلَى الْقَوْمِ الْكَافِرِيْنَ
2. எங்கள் இறைவனே! நாங்கள் மறந்து விட்டாலோ, அல்லது தவறிழைத்து விட்டாலோ எங்களைக் குற்றம் பிடிக்காதிருப்பாயாக! எங்கள் இறைவனே! எங்களுக்கு முன் சென்றோர் மீது சுமத்திய சுமையை போன்று எங்கள் மீது சுமத்தாதிருப்பாயாக! எங்கள் இறைவனே! எங்கள் சக்திக்கப்பாற்பட்ட (எங்களால் தாங்க முடியாத) சுமையை எங்கள் மீது சுமத்தாதிருப்பாயாக! எங்கள் பாவங்களை நீக்கிப் பொறுத்தருள்வாயாக! எங்களை மன்னித்தருள்வாயாக! எங்கள் மீது கருணை புரிவாயாக! நீயே எங்கள் பாதுகாவலன், காஃபிரான கூட்டத்தாரின் மீது (நாங்கள் வெற்றியடைய) எங்களுக்கு உதவி செய்தருள்வாயாக! 2:286
رَبَّنَا لاَ تُزِغْ قُلُوْبَنَا بَعْدَ إِذْ هَدَيْتَنَا وَهَبْ لَنَا مِنْ لَدُنْكَ رَحْمَةً إِنَّكَ أَنْتَ الْوَهَّابُ
3. எங்கள் இறைவனே! நீ எங்களுக்கு நேர் வழியைக் காட்டியபின் எங்கள் இதயங்களை (அதிலிருந்து) தடம்புறளச் செய்து விடாதே! இன்னும் நீ உன் புறத்திலிருந்து எங்களுக்கு (ரஹ்மத் என்னும்) அருளை அளிப்பாயாக! நிச்சயமாக நீயே பெருங் கொடையாளனாவாய்! 3:8
رَبَّنَا إِنَّنَا آمَنَّا فَاغْفِرْ لَنَا ذُنُوْبَنَا وَقِنَا عَذَابَ النَّارِ
4. எங்கள் இறைவனே! நிச்சயமாக நாங்கள் (உன் மீது) நம்பிக்கை கொண்டோம்;, எங்களுக்காக எங்கள் பாவங்களை மன்னித்தருள்வாயாக! (நரக) நெருப்பின் வேதனையிலிருந்து எங்களைக் காப்பாற்றுவாயாக! 3:16
رَبِّ هَبْ لِيْ مِنْ لَدُنْكَ ذُرِّيَّةً طَيِّبَةً إِنَّكَ سَمِيْعُ الدُّعَاءِ
5. என் இறைவனே! உன்னிடமிருந்து எனக்காக ஒரு பரிசுத்தமான சந்ததியைக் கொடுத்தருள்வாயாக! நிச்சயமாக நீ பிரார்த்தனையைச் செவிமடுத்தருள்வோனாக இருக்கின்றாய். 3:38
رَبَّنَا اغْفِرْ لَنَا ذُنُوْبَنَا وَإِسْرَافَنَا فِيْ أَمْرِنَا وَثَبِّتْ أَقْدَامَنَا وَانْصُرْنَا عَلَى الْقَوْمِ الْكَافِرِيْنَ
6. எங்கள் இறைவனே! எங்கள் பாவங்களையும் எங்கள் காரியங்களில் நாங்கள் வரம்பு மீறிச் செய்தவற்றையும் மன்னித்தருள்வாயாக! எங்கள் பாதங்களை உறுதியாய் இருக்கச் செய்வாயாக! காஃபிர்களின் கூட்டத்தாருக்கு எதிராக எங்களுக்கு நீ உதவி புரிவாயாக. 3:147
رَبَّنَا آمَنَّا فَاكْتُبْنَا مَعَ الشَّاهِدِيْنَ
7. எங்கள் இறைவனே! நாங்கள் (இவ் வேதத்தின் மீது) நம்பிக்கை கொண்டோம்;. எனவே, (இவ்வேதம் சத்தியமானது என்று,) சாட்சி சொல்வோருடன் எங்களையும் நீ பதிவு செய்து கொள்வாயாக! 5:83
رَبَّنَا ظَلَمْنَا أَنْفُسَنَا وَإِنْ لَمْ تَغْفِرْ لَنَا وَتَرْحَمْنَا لَنَكُوْنَنَّ مِنَ الْخَاسِرِيْنَ
8. எங்கள் இறைவனே! எங்களுக்கு நாங்களே தீங்கிழைத்துக் கொண்டோம் நீ எங்களை மன்னித்துக் கிருபை செய்யாவிட்டால், நிச்சயமாக நாங்கள் நஷ்டமடைந்தவர்களாகி விடுவோம் 7:23
عَلَى اللَّهِ تَوَكَّلْنَا رَبَّنَا لاَ تَجْعَلْنَا فِتْنَةً لِلْقَوْمِ الظَّالِمِيْنَ
9. நாங்கள் அல்லாஹ்வையே பூரணமாக நம்பி (அவனிடமே எங்கள் காரியங்களை ஒப்படைத்து)க் கொண்டோம், எங்கள் இறைவனே! அநியாயம் செய்யும் மக்களின் சோதனைக்கு எங்களை ஆளாக்கிவிடாதே! 10:85
وَنَجِّنَا بِرَحْمَتِكَ مِنَ الْقَوْمِ الْكَافِرِيْنَ
10. எங்கள் இறைவனே! இந்த காஃபிர்களான மக்களிடமிருந்து உன் அருளினால் எங்களை நீ காப்பாற்றுவாயாக! 10:86
رَبِّ إِنِّيْ أَعُوْذُ بِكَ أَنْ أَسْأَلَكَ مَا لَيْسَ لِيْ بِهِ عِلْمٌ وَإِلاَّ تَغْفِرْ لِيْ وَتَرْحَمْنِيْ أَكُنْ مِنَ الْخَاسِرِيْنَ
11. என் இறைவனே! எனக்கு எதை பற்றி ஞானம் இல்லையோ அதை உன்னிடத்திலே கேட்பதை விட்டும் உன்னிடம் நான் பாதுகாப்பு தேடுகிறேன்;, நீ என்னை மன்னித்து எனக்கு அருள் புரியவில்லையானால் நஷ்ட மடைந்தோரில் நான் ஆகிவிடுவேன். 11:47
رَبِّ اجْعَلْنِيْ مُقِيْمَ الصَّلاَةِ وَمِنْ ذُرِّيَّتِيْ رَبَّنَا وَتَقَبَّلْ دُعَاءِ
12. என் இறைவனே! தொழுகையை நிலைநிறுத்துவோராக என்னையும், என்னுடைய சந்ததியிலுள்ளோரையும் ஆக்குவாயாக! எங்கள் இறைவனே! என்னுடைய பிரார்த்தனையையும் ஏற்றுக் கொள்வாயாக!. 14:40
رَبَّنَا اغْفِرْ لِيْ وَلِوَالِدَيَّ وَلِلْمُؤْمِنِيْنَ يَوْمَ يَقُوْمُ الْحِسَابُ
13. எங்கள் இறைவனே! என்னையும், என் பெற்றோர்களையும், முஃமின்களையும் கேள்வி கணக்குக் கேட்கும் (மறுமை) நாளில் மன்னிப்பாயாக!. 14:41
رَبَّنَا آتِنَا مِنْ لَدُنْكَ رَحْمَةً وَهَيِّئْ لَنَا مِنْ أَمْرِنَا رَشَدًا
14. எங்கள் இறைவனே! நீ உன்னிடமிருந்து எமக்கு அருளை வழங்கி, எமது காரியத்தில் நேர்வழியை எமக்கு எளிதாக்கி தந்தருள்வாயாக! 18:10
رَبِّ زِدْنِيْ عِلْمًا
15. என் இறைவனே! கல்வி ஞானத்தை எனக்கு அதிகப்படுத்துவாயாக! 20-114
رَبِّ لاَ تَذَرْنِيْ فَرْدًا وَأَنْتَ خَيْرُ الْوَارِثِيْنَ
16. என் இறைவனே! நீ என்னை (சந்ததியில்லாமல்) ஒற்றையாக விட்டு விடாதே! நீயே வாரிசுரிமை கொள்வோரில் மிக்க மேலானவன். 21:89
رَبِّ أَعُوْذُ بِكَ مِنْ هَمَزَاتِ الشَّيَاطِيْنِ
17. என் இறைவனே! ஷைத்தானின் தூண்டுதல்களிலிருந்து உன்னிடத்தில் நான் பாதுகாவல் தேடுகின்றேன். 23:97
رَبَّنَا آمَنَّا فَاغْفِرْ لَنَا وَارْحَمْنَا وَأَنْتَ خَيْرُ الرَّاحِمِيْنَ
18. எங்கள் இறைவனே! நாங்கள் உன் மீது ஈமான் கொண்டு விட்டோம், நீ எங்கள் குற்றங்களை மன்னித்து, எங்கள் மீது கிருபை செய்வாயாக! கிருபையாளர்களிலெல்லாம் நீயே மிகச்சிறந்தவன். 23:109
رَبِّ اغْفِرْ وَارْحَمْ وَأَنْتَ خَيْرُ الرَّاحِمِيْنَ
19. என் இறைவனே! நீ என்னை மன்னித்துக் கிருபை செய்வாயாக! நீ தான் கிருபையாளர்களிலெல்லாம் மிக்க மேலானவன். 23:118
رَبَّنَا اصْرِفْ عَنَّا عَذَابَ جَهَنَّمَ إِنَّ عَذَابَهَا كَانَ غَرَامًا
20. எங்கள் இறைவனே! எங்களைவிட்டும் நரகத்தின் வேதனையைத் திருப்புவாயாக! நிச்சயமாக அதன் வேதனை நிரந்தரமானதாகும். 25:65
رَبَّنَا هَبْ لَنَا مِنْ أَزْوَاجِنَا وَذُرِّيَّاتِنَا قُرَّةَ أَعْيُنٍ وَاجْعَلْنَا لِلْمُتَّقِيْنَ إِمَامًا
21. எங்கள் இறைவனே! எங்கள் மனைவியரிடமும், எங்கள் சந்ததியரிடமும் இருந்து எங்களுக்குக் கண்குளிர்ச்சியை அளிப்பாயாக! இன்னும் பயபக்தியுடையவர்களுக்கு எங்களை இமாமாக (வழிகாட்டியாக) ஆக்கியருள்வாயாக!. 25:74
رَبِّ هَبْ لِيْ حُكْمًا وَأَلْحِقْنِيْ بِالصَّالِحِيْنَ
22. என் இறைவனே! நீ எனக்கு ஞானத்தை அளிப்பாயாக. மேலும், ஸாலிஹானவர்களுடன் (நல்லவர்களுடன்) என்னைச் சேர்த்து வைப்பாயாக! 26:83
وَاجْعَلْ لِيْ لِسَانَ صِدْقٍ فِي الْآخِرِيْنَ
23. இன்னும், பின் வருபவர்களில் எனக்கு நீ நற்பெயரை ஏற்படுத்துவாயாக! 26:84
وَاجْعَلْنِيْ مِنْ وَرَثَةِ جَنَّةِ النَّعِيْمِ
24. இன்னும், பாக்கியம் நிறைந்த சுவனபதியின் வாரிசுக்காரர்களில் (ஒருவனாக) என்னை ஆக்கி வைப்பாயாக! 26:85
وَلاَ تُخْزِنِيْ يَوْمَ يُبْعَثُوْنَ
25. இன்னும் (மனிதர்கள் உயிர் கொடுத்து) எழுப்பப்படும் நாளில் என்னை நீ இழிவு படுத்தாதிருப்பாயாக! 26:87
رَبِّ أَوْزِعْنِيْ أَنْ أَشْكُرَ نِعْمَتَكَ الَّتِيْ أَنْعَمْتَ عَلَيَّ وَعَلَى وَالِدَيَّ وَأَنْ أَعْمَلَ صَالِحًا تَرْضَاهُ وَأَدْخِلْنِيْ بِرَحْمَتِكَ فِيْ عِبَادِكَ الصَّالِحِيْنَ
26. என் இறைவனே! நீ என் மீதும், என் பெற்றோர் மீதும் புரிந்துள்ள உன் அருட்கொடைகளுக்காக, நான் நன்றி செலுத்தவும், நீ பொருந்திக் கொள்ளும் விதத்தில் நான் நன்மைகள் செய்யவும், எனக்கு அருள் செய்வாயாக! இன்னும் உம் கிருபையைக் கொண்டு என்னை உன்னுடைய நல்லடியார்களில் சேர்த்தருள்வாயாக! 27:19
رَبِّ إِنِّيْ ظَلَمْتُ نَفْسِيْ فَاغْفِرْ لِيْ
27. என் இறைவனே! நிச்சயமாக நான் என் ஆத்மாவுக்கே அநியாயம் செய்து விட்டேன்;, ஆகவே, நீ என்னை மன்னிப்பாயாக! 28:16
رَبِّ هَبْ لِيْ مِنَ الصَّالِحِيْنَ
28. என் இறைவனே! நல்லவர்களிலிருந்து நீ எனக்கு (குழந்தையை) தந்தருள்வாயாக. 37:100
رَبِّ أَوْزِعْنِيْ أَنْ أَشْكُرَ نِعْمَتَكَ الَّتِيْ أَنْعَمْتَ عَلَيَّ وَعَلَى وَالِدَيَّ وَأَنْ أَعْمَلَ صَالِحًا تَرْضَاهُ وَأَصْلِحْ لِيْ فِيْ ذُرِّيَّتِيْ إِنِّي تُبْتُ إِلَيْكَ وَإِنِّيْ مِنَ الْمُسْلِمِيْنَ
29. என் இறைவனே! நீ என் மீதும், என் பெற்றோர் மீதும் புரிந்த நிஃமத்துக்காக, (அருட் கொடைகளுக்காக) நன்றி செலுத்தவும், உன்னுடைய திருப்தியை அடையக் கூடிய ஸாலிஹான நல் அமல்களைச் செய்யவும் எனக்கு அருள் பாலிப்பாயாக! எனக்கு என்னுடைய சந்ததியையும் ஸாலிஹானவர்களாக (நல்லது செய்பவர்களாக) சீர்படுத்தியருள்வாயாக! நிச்சயமாக நான் தவ்பா செய்து (உன்பக்கம் திரும்பி) விட்டேன். இன்னும் நிச்சயமாக நான் முஸ்லிம்களில் உள்ளவன் 
__._,_.___

Wednesday, January 2, 2013

சேமிப்பு



கடனட்டைச் சேற்றுக் கடலிலே மூழ்கி
மடமைக்குப் பின்னால் மடிந்து விடாதிருக்கச்
சிக்கனம் தானே சிறந்த படகாகும்
இக்கணம் தீர்வாம் இது


விந்தணுச் சேமிப்பால் வெல்லுமே இல்லறம்
செந்தமிழ்ச் சேமிப்பால் சிந்துமே சொல்லெழில்
முந்தையர்ச் சேமிப்பால் முன்னேற்றம் காண்கின்றோம்
தந்தையர்ச் சேமிப்பைத் தாங்கு


அறிவாற்றல் சேமிப்பால் ஆகும் பதவி
நெறிவாழ்வின் சேமிப்பே நீள்பயணத் தோழன்
வறியோர்க்குச் செல்வத்தை வாரி வழங்கு
பறிபோகாச் சேமிப்பாம் பார்



தேனாய் பிரியுமே தேனீயின் சேமிப்பு
ஊனாய் பிரியுமே ஊணுண்டச் சேமிப்பு
மேகத்தின் சேமிப்பு மேவிடும் மாரியாய்
சோகத்தின் சேமிப்புச் சோர்வு.


சாதனையாய்ச் சேரும் சடையா உழைப்புமே
ஊதியமாய்ச் சேரும் உழைத்தவர் சேமிப்பு
பேரும் புகழும் பெறுதலும் சேமிப்பு
யாரும் பிரிகிலார் யாங்கு





அபுல்கலாம் பின் ஷைக் அப்துல்காதிர்

“கவியன்பன்” கலாம், அதிராம்பட்டினம்( பாடசாலை), அபுதபி (தொழிற்சாலை)
அலை பேசி: 00971-50-8351499 / 056 7822844
வலைப்பூந் தோட்டம்: http://www.kalaamkathir.blogspot.com/ (கவிதைச்சோலை)
மின்னஞ்சல்: kalaamkathir7@gmail.com

Monday, December 31, 2012

பர்தா போடுதல் சரிதான்!



வைரமதைப் பெட்டகத்தில் பாது காத்து
..வைக்கவேண்டும் என்றுணர்ந்து கொண்ட நீதான்
வைரமணிப் பெண்மணிகள் ஊரைச் சுற்ற
...வைப்பதிலும் கவனமாக இருக்க வேண்டும் 
மெய்ரணமா கும்வரைக்கும் காமு கர்கள்
...மேய்ந்திட்ட மேனிமீதுக் காமப் பார்வைப்
பெய்தவிடம் தாக்காமல் பாது காக்கப்
...பெருங்கேட யம்போலாம் பர்தாப் போர்வை!


கண்ணியத்தைப் போற்றுகின்ற பெண்கள் கற்பைக்
...காத்துநிற்கும் பர்தாவை வேணடாம் என்றால்
பெண்ணியத்தைப் பேசுகின்ற பெண்கள் நீங்கள்
...பெண்ணுக்கு ஏதேனும் பாது காப்பை
மண்ணுலகில் தந்துவிட்டுப் பேச வேண்டும்
....மலிந்துவரும் இக்கொடுமை நீங்க வேண்டி
கண்ணிமைபோல் பெண்களையும் காத்து நிற்கும்
....காலத்தின் கட்டளையாம் பர்தா என்பேன்

ஆதிவாசி அன்றிருந்தாள் அறியா வேளை
...ஆடைகளை உடுத்தவுமே தெரியா மூளை
ஓதியோசித் துணரத்தான் தந்தான் திட்டம்
...ஓரிறையின் மறைதனிலே ஆடைச் சட்டம்
ஆதிவாசிப் போலிருந்தால் கூழாங் கல்லு
...ஆறறிவு பெற்றவளா நீயும் சொல்லு
பாதிபாதி உடையணிந்தால் உன்றன் மேனி
...பார்ப்பவர்கள் கண்கட்குத் தானே தீனி!




அபுல்கலாம் பின் ஷைக் அப்துல்காதிர்

“கவியன்பன்” கலாம், அதிராம்பட்டினம்( பாடசாலை), அபுதபி (தொழிற்சாலை)
அலை பேசி: 00971-50-8351499 / 056 7822844
வலைப்பூந் தோட்டம்: http://www.kalaamkathir.blogspot.com/ (கவிதைச்சோலை)
மின்னஞ்சல்: kalaamkathir7@gmail.com