Showing posts with label a-kavithai. Show all posts
Showing posts with label a-kavithai. Show all posts

Saturday, August 24, 2013

பாலைவனத் தொழிலாளியின் பா(ட்)டு!

பாலைவனத் தொழிலாளியின் பா(ட்)டு!








பாவையை விட்டு வந்து
….பாலையின் சூட்டில் நொந்து
தேவையைக் கருத்திற் கொண்டு
…தேடினோம் செல்வம் இன்று
யாவையும் மறக்கும் நெஞ்சம்
..யாழிசை மழலை கொஞ்சும்
பூவையும் மிஞ்சும் பிள்ளை
..பிரிவினைத் தாங்க வில்லை!




விடையினைக் கொடுத்த நேரம்
…விலகியே நிற்கும் தூரம்
தடைகளாய்ப் போன தூக்கம்
..தவிப்பினில் நெஞ்சில் ஏக்கம்
மடையென திறக்கும் கண்ணீர்
..மனத்தினில் கொதிக்கும் செந்நீர்
உடைந்திடும் இளமைக் கட்டும்
..உடையினில் வேடம் மட்டும்!

வாயினைக் கட்டிப் பூட்டி
…வயிற்றினைப் பசியால் வாட்டி
காயமும் தாங்கிக் கொண்டு
…கயிற்றினில் தொங்கிக் கொண்டு
தாயகத் தேவை ஆசை
..தீர்ப்பது எங்கள் காசே
மாயமாம் இந்த மோகம்

…மடியுமோ இந்த வேகம்?



வாடிய பயிராய் வாழ்க்கை..
...வளமுள காசின் சேர்க்கை
தேடிய செல்வம் தீரும்
..தேவையோ நாளும் ஊறும்
 ஓடியே களைத்து மீண்டும்
...ஓடவே நம்மைத் தூண்டும்
ஓடிடும் விலையின் ஏற்றம்
..ஓட்டுமே ஊரை விட்டும்



ஒட்டகம் போல நாங்கள்
  ஓய்விலாச்  சுமைகள் தாங்க
ஒட்டகம் மேயும் நாட்டில்
..உழைப்பதைச் சொன்னேன் பாட்டில்
பெட்டகம் நிறைய வில்லை
...பெரிதினும் பெரிதாய் இங்கே
கட்டிடம் கட்டும் வேலை
....கரணமும் விட்டால் மேலே!



ABUL KALAM BIN SHAICK ABDUL KADER"கவித்தீபம்”, “கவியன்பன்” கலாம்
அதிராம்பட்டினம்  பாடசாலை), 
அபுதபி               (தொழிற்சாலை)
வலைப்பூந் தோட்டம்
http://www.kalaamkathir.blogspot.com/ (கவிதைச்சோலை)
http://gardenofpoem.blogspot.ae/ (For English poems only)
அலை பேசி: 00971-50-8351499 / 056 7822844/ 055 7956007
மின்னஞ்சல்kalaamkathir7@gmail.com , kalamkader2@gmail.com
skype id: kalamkader3

Thursday, August 8, 2013

ஈகைத்திருநாள்; ஈத்பெருநாள்- வாகை தரும்நாள்; வல்லான் அருள்நாள்..!







 இனிமை பொங்கும் "ஈதுல்ஃபித்ர்” வாழ்த்துகள்



ஈந்துவக் கும்திரு நாளாம் இகமதில் ஈத்பெருநாள்
நீந்திய பாவம் கடக்கப் புரிந்தநம்    நீள்தவத்தை
ஏந்திய நோன்பால் விளைந்த பரிசினை ஏற்றிடத்தான்
சாந்தியாம் சொர்க்கம் கிடைக்கும் உறுதியைச்  சாற்றிடுமே




புண்ணியம் செய்தவ ரென்றும் மகிழ்ந்துப் புகழ்ந்திடத்தான்
எண்ணிலா நன்மை பொழிந்திடச் செய்யும் இறையருளால்
மண்ணிலி  றங்கிச்  சலாமுடன் வாழ்த்தும் மலக்குகளால்
கண்ணியம் செய்வதை யென்றும் நினைத்துக் களிப்புறவே




இற்றைத் திருநாள் நமக்குப் பிறையாய் இறங்கியது
பெற்ற கொடையை விடாமல் நுகர்வோம் பெருமிதமாய்
கற்ற பயிற்சிகள் நிற்க மனத்திற் கவனமுடன்
சற்று முயற்சி எடுப்பதில் நீயும்   தயங்கிடாதே


-- 
அபுல்கலாம் பின் ஷைக் அப்துல்காதிர்"கவித்தீபம்”, “கவியன்பன்” கலாம்
அதிராம்பட்டினம்  பாடசாலை), 
அபுதபி               (தொழிற்சாலை)
வலைப்பூந் தோட்டம்
http://www.kalaamkathir.blogspot.com/ (கவிதைச்சோலை)
அலை பேசி: 00971-50-8351499 / 056 7822844/ 055 7956007
மின்னஞ்சல்: kalaamkathir7@gmail.com , kalamkader2@gmail.com


<photo id="1" />

Friday, October 19, 2012

ஹஜ் எனும் அரும்பேறு அல்லது அருட்பேறு !





இப்ராஹீம்(அலை) மூலம் விடுத்த அழைப்புக்கு
“லப்பைக்” திருச்சொல்லால் லட்சக் கணக்கானோர்
ஒப்பிலா னில்லத்தில் ஓதும் மறுமொழி
இப்புவி யெங்குமே ஈர்ப்பு.

சாந்தம் பொழியச் சமத்துவம் காணவே
காந்தமாய் ஈர்க்கும் கருவான பள்ளி
துருவான பாவம் துடைக்கும் பணிகள்
இரும்பு மனமே இலகு.

குழந்தையாம் இஸ்மாயில்(அலை) குத்திய பாதம்
உழன்றதால் பாலையில் உண்டான நீரை
அருந்துவோ ரெண்ணம் அடையும் பலன்கள்
மருந்தாம் பிணிக்கு மகிழ்ந்து.

மறுமையாம் தீர்ப்புநாள் மஹ்ஷரின் தோற்றம்
பொறுமையாய் நிற்கும் பொழுதில ரங்கேற்றம்
நீண்ட இறைஞ்சுதல் நெஞ்சை உருக்கிட
மீண்டு வருவோம் மிளிர்ந்து.

பிறக்கும் நிலையில் பிழைக ளறியா(து)
பிறக்கும் குழந்தைப் பிறத்தலைப் போல்
புடமிடும் தங்கமாய்ப் பூமியில் வாழ
திடமுடன் மாற்றும் திறன்,

அறுக்கத் துணிந்தார் அருமை மகனை
பொறுத்தே பணிந்தார் புதல்வர் மகிழ்வுடன்
ஐயம் களைந்த அடியாரின் அன்பினை
மெய்பிக்கச் செய்திடும் மாண்பு.

இறைச்சி இரத்த மெதுவுமே நம்மை
இறைவனும் வேண்டு மியல்பில் கிடையாது
அன்பு நிலைக்க அறமாய் வறியோர்கள்
இன்பம் பெறுவதற் கீந்து.


அபுல்கலாம் பின் ஷைக் அப்துல்காதிர்

“கவியன்பன்” கலாம், அதிராம்பட்டினம்( பாடசாலை), அபுதபி (தொழிற்சாலை)
அலை பேசி:             00971-50-8351499       / 056 7822844
வலைப்பூந் தோட்டம்: http://www.kalaamkathir.blogspot.com/ (கவிதைச்சோலை)
மின்னஞ்சல்: kalaamkathir7@gmail.com