Sunday, August 21, 2011

இதய இரகசியங்களை அறிபவன்


அனைத்துப் புகழும் அகிலங்கள் அனைத்தையும் படைத்து இரட்ச்சித்து வருபவனான அல்லாஹ்வுக்கே உரித்தானது. அவனிடமே நாம் உதவி தேடுகிறோம்; அவனிடமே நாம் மன்னிப்பு கோருகிறோம்; அல்லாஹ் யாருக்கு நேர்வழி காட்டுகிறானோ அவரை யாராலும் வழி தவறச் செய்ய இயலாது; மேலும் யாரை அவன் வழி தவறச்செய்கிறானோ அவருக்கு நேர்வழி காட்டுபவர் யாருமில்லை.

வணக்கத்திற்கு உரியவன் அல்லாஹ்வுத்தஆலாவைத் தவிர வேறு யாருமில்லை என்று நான் சாட்சி கூறுகிறேன்; மேலும் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்தஆலாவின் உண்மை அடியாரும் இறுதி தூதரும் ஆவார்கள் எனவும் சாட்சி கூறுகிறேன். அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் நபிகள் நாயம் (ஸல்) அவர்களின் மீதும், அவர்களின் குடும்பத்தார்கள், தோழர்கள் மீதும், நம் மீதும் மற்றும் கியாம நாள் வரை அல்லாஹ்வின் தூதரைப் பின்பற்றக் கூடிய முஸ்லிம்கள் அனைவரின் மீதும் உண்டாவதாக. ஆமீன்.

அன்பான சகோதர சகோதரிகளே, அல்லாஹ் தன் திருமறையில் கூறுகின்றான்: -
‘நிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணைவைப்பதை மன்னிக்கவேமாட்டான்; இது அல்லாத (பாவத்)தைத்தான் நாடியவருக்கு மன்னிப்பான்; எவன் ஒருவன் அல்லாஹ்வுக்கு இணை வைக்கின்றானோ, அவன் நிச்சயமாக வெகு தூரமான வழிகேட்டில் ஆகிவிட்டான்’ (அல்குர்ஆன் 4:116)

இந்த வசனத்தில் அல்லாஹ் தனக்கு இணைவைப்பதை மன்னிக்கவே மாட்டான் என்று கூறியிருப்பதை சற்று கவனத்துடன் ஆராயவேண்டும். ஏனென்றால் இறைவனின் மன்னிப்பே கிடைக்காத இணைவைப்பது என்றால் என்ன என்பதை நாம் அறிந்து கொண்டு அவற்றிலிருந்து முற்றிலுமாக தவிர்ந்து இருக்க வேண்டியது மிக மிக அவசியமாகிறது.
இணைவைக்கும் ஒருவருக்கு அல்லாஹ்வின் மன்னிப்பு கிடைக்காததோடு மட்டுமில்லாமல் அவர் தம்முடைய வாழ்நாளில் செய்த அனைத்து நல்லறங்களும் அழிந்து நிரந்தர நரகத்திற்கு வழிவகுக்கும்.

1) இணைவைத்தலின் தீமைகள்: -
  1. ஒருவர் தம் வாழ்நாளில் செய்த அனைத்து நல்லறங்களும் பாழாகிவிடும்
  2. இறைவன் இணைவைத்தலைத் தவிர ஏனைய பாவங்களைத் தான் நாடியோருக்கு மன்னிப்பான்
  3. இணை வைத்தவனின் கதி மிகவும் மோசமானது
  4. இறைவனுக்கு இணை கற்பித்தால் நிரந்தர நரகம்.
நல்லமல்களை அழித்துவிடும் ஷிர்க்: -

அல்லாஹ் கூறுகிறான்: -

இதுவே அல்லாஹ்வின் நேர் வழியாகும், தன் அடியார்களில் அவன் யாரை விரும்புகிறானோ, அவர்களுக்கு இதன்மூலம் நேர்வழி காட்டுகிறான்; (பின்னர்) அவர்கள் இணைவைப்பார்களானால், அவர்கள் செய்து வந்ததெல்லாம், அவர்களை விட்டு அழிந்துவிடும். (அல்குர்ஆன் 6:88)

அன்றியும், உமக்கும், உமக்கு முன் இருந்தவர்களுக்கும், வஹீ மூலம் நிச்சயமாக அறிவிக்கப்பட்டது என்னவென்றால், ‘நீவிர் (இறைவனுக்கு) இணை வைத்தால், உம் நன்மைகள் (யாவும்) அழிந்து, நஷ்டமடைபவர்களாகி விடுவீர்கள்’ (என்பதுவேயாகும்). ஆகவே, நீர் அல்லாஹ்வையே வணங்குவீராக! மேலும், அவனுக்கு நன்றி செலுத்துபவர்களில் நின்றும் இருப்பீராக!(அல்குர்ஆன் 39:65 & 66)

இணைவைத்தலைத் தவிர ஏனைய பாவங்களைத் தான் நாடியோருக்கு மன்னிப்பான்: -

அல்லாஹ் கூறுகிறான்: -

நிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணைவைப்பதை மன்னிக்கமாட்டான்; இதைத்தவிர, (மற்ற) எதையும் தான் நாடியவர்களுக்கு மன்னிப்பான்; யார் அல்லாஹ்வுக்கு இணைவைக்கிறார்களோ அவர்கள் நிச்சயமாக மிகவும் பெரிய பாவத்தையே கற்பனை செய்கின்றார்கள். (அல்குர்ஆன் 4:48 )
இணை வைத்தவனின் கதி: -

அல்லாஹ்வுக்கு எதையும் இணைவைக்காது அவனுக்கு முற்றிலும் வழிப்பட்டவர்களாக இருங்கள்; இன்னும் எவன் அல்லாஹ்வுக்கு இணை வைக்கிறானோ, அவன் வானத்திலிருந்து விழுந்து பறவைகள் அவனை வாரி எடுத்துச் சென்றது போலும் அல்லது பெருங் காற்றடித்து, அவனை வெகு தொலைவிலுள்ள ஓரிடத்திற்கு அடித்துக் கொண்டு சென்றது போலும் ஆகிவிடுவான். (அல்குர்ஆன் 22:31)

இறைவனுக்கு இணை கற்பித்தால் நிரந்தர நரகம்.

அல்லாஹ் கூறுகிறான்: -

“…எவனொருவன் அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பானோ அவனுக்கு அல்லாஹ் சுவனபதியை நிச்சயமாக ஹராமாக்கிவிட்டான், மேலும் அவன் ஒதுங்குமிடம் நரகமேயாகும், அக்கிரமக்காரர்களுக்கு உதவிபுரிபவர் எவருமில்லை.” (அல்குர்ஆன் 5:72 )
இந்த அளவிற்கு படுபயங்கரமான இணைவைத்தல் என்பது பற்றி நாம் முழுவதுமாக அறிந்திருக்க வில்லையானால் அவற்றிலிருந்நு பரிபூரணமாக தவிர்திருப்பது என்பது இயலாத காரியம். எனவே ஷிர்க் என்றால் என்ன? அதன் வகைகள் யாவை என்பவை பற்றி இந்த சிறிய ஆய்வுக் கட்டுரையில் ஆராய்வோம்.
இன்று நமது சமுதாயத்தில் இணைவைப்பது (ஷிர்க்) என்றால் என்ன என்று கேட்டால் மிக எளிதாக கிடைக்கும் பதில் ‘சிலைகளை வணங்குவது’ என்றே நம்மில் பெரும்பாலோர் கூறுவர். இவ்வாறு இவர்கள் கூறுவதற்கு காரணம் இணை வைப்பது என்றால் என்ன என்பதைப் பற்றிய அறியாமையே ஆகும்.
2) ஷிர்க் என்றால் என்ன?

ஷிர்க் என்பது தவ்ஹீத் (அல்லாஹ்வை ஒருமைப்படுத்துதல்) என்பதற்கு நேர்மாற்றமான அல்லாஹ்வுக்கு இணை கற்பித்தலாகும்.
அதாவது ஷிர்க் என்பது,
- அல்லாஹ்வுக்கு மட்டுமே செய்ய வேண்டிய வணக்க வழிபாடுகளை அல்லாஹ் அல்லாத பிறருக்கு செய்வது
- அல்லாஹ்வுக்கு மட்டுமே இருக்கக் கூடிய ஆற்றல்களில் சிலவற்றை அல்லாஹ் அல்லாத பிறருக்கும் இருப்பதாக கருதுவது
ஆகியவையாகும்.
ஷிர்கின் வகைகள்: -

ஷிர்கில் மூன்று வகைகள் உள்ளன. அவைகளாவன: -
  1. பெரிய ஷிர்க்
  2. சிறிய ஷிர்க்
  3. மறைமுக ஷிர்க்
பெரிய ஷிர்க் என்றால் என்ன?

அல்லாஹ்வுக்கு மட்டுமே செய்யப்படவேண்டிய வணக்க வழிபாடுகளை அல்லாஹ் அல்லாதவைகளுக்கு செய்வது பெரிய ஷிர்க் ஆகும்.

சிறிய ஷிர்க் என்றால் என்ன?


அல்லாஹ்வுக்காக செய்யவேண்டும் என்ற நோக்கமில்லாமல் பிறர் பார்த்து பாராட்ட வேண்டும் என்று கருதி வணங்குவது அல்லது
பிறர் தம்மை தவறாக நினைத்து விடக் கூடாது என்பதற்காகவோ அல்லாஹ்வை வணங்குவது
இவ்வாறு வணக்கம் புரிவது சிறிய ஷிர்க் ஆகும்.
நபி (ஸல்) அவர்கள் சிறிய ஷிர்க் குறித்து மக்களை எச்சரித்துள்ளார்கள்.

மறைவான ஷிர்க் என்றால் என்ன?

மறைவான ஷிர்க் என்பது அல்லாஹ் நம்மீது விதித்துள்ள கட்டளைகளை ஏற்று அதன் மீது திருப்தி கொண்டு அதன்படி செயல்படாமல் அவற்றை அலட்சியம் செய்வதாகும்.

3) ஷிர்குல் அக்பர் ஒரு விளக்கம்: -


இந்த சிறிய ஆய்வுக்கட்டுரையில் ஷிர்குல் அக்பர் என்று சொல்லப்படக்கூடிய மாபெரும் இணைவைத்தல் பற்றி குர்ஆன் மற்றும் ஹதீஸ்களின் அடிப்படையில் ஆராய்வோம்.
ஷிர்குல் அக்பர் என்பது அல்லாஹ்வுக்கு மட்டுமே செய்யப்படவேண்டிய வணக்க வழிபாடுகளை அல்லாஹ்வுக்கு அல்லாதவர்களுக்கு செய்வதும், அல்லாஹ்வுடைய பண்புகளை ஆற்றல்களை பிறருக்கு இருப்பதாக கருதுவதும் என பார்த்தோம்.

நம்முடைய சமுதாயத்தில் உள்ளவர்களில் பலர் இஸ்லாத்தின் மூல மந்திரமான ‘லாயிலாஹ இல்லல்லாஹ்’ என்பதன் பொருள் அறியாமல் தான் இந்த ஷிர்க் என்ற கொடிய பாவத்தில் சிக்கி உழல்கின்றனர். வணக்கம் என்றால் என்ன என்று கேட்டால் அவர்கள் கூறுவது தொழுகை, நோன்பு, ஜக்காத் மற்றும் ஹஜ் என்பார்கள். வணக்கம் என்பது இவைகள் மட்டுமன்று. அல்லாஹ்வும் அவனது தூதரும் (ஸல்) எவைகளையெல்லாம் அல்லாஹ்வுக்கு மாத்திரம் செய்ய வேண்டுமென்று கட்டளையிட்டு இருக்கிறார்களோ அவைகள் அனைத்தும் வணக்கமாகும். அவற்றை அல்லாஹ்வை விடுத்து மற்றவருக்கு செய்தால் அவைகளும் ஷிர்கின் வகையைச் சேர்ந்ததாகும்.

உதாரணமாக பின்வரும் அனைத்தும் வணக்கத்தின் வகைகளாகும். அவைகளை அல்லாஹ்வுக்கு மட்டுமே நாம் செய்ய வேண்டும்.
  • துஆ (பிரார்த்தனை) செய்தல்
  • ருகூவு / சஜ்தா செய்தல்
  • அழைத்து உதவி தேடுதல்
  • பாதுகாவல் தேடுதல்
  • நேர்ச்சை செய்தல்
  • தவாபு செய்தல்
  • சத்தியம் செய்தல்
  • குர்பானி கொடுத்தல்
  • ஆதரவு / தவக்குல் வைத்தல்
  • அல்லாஹ்வைப் போல் பிறரை நேசித்தல்
ஒருவர் மேற்கண்ட அனைத்து செயல்களுமே வணக்கத்தின் வகைகள் என்று அறிந்துக் கொள்வாராயின் இன்ஷா அல்லாஹ் அவர் இந்த வணக்க முறைகளை அல்லாஹ் அல்லாதவர்களுக்கு செய்வதிலிருந்தும் தவிர்ந்துக் கொள்வார். ஆனால் இவைகளும் வணக்கமே என்று புரிந்துக் கொள்வதில் தான் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து விடுகின்றனர்.

மேலும் ஒருவர் அல்லாஹ்வுக்கு மட்டுமே இருக்கக்கூடிய பண்புகள் மற்றும் ஆற்றல்கள் யாவை என அறிந்துக் கொள்வராயின் அவற்றில் இணை வைப்பதிலிருந்தும் தவிர்ந்துக் கொள்வார் இன்ஷா அல்லாஹ்.

இந்த சிறிய ஆய்வுக் கட்டுரையில் ஒரு உதாரணம் மூலம் எவ்வாறெல்லாம் மக்கள் அல்லாஹ்வுக்கு அறிந்தோ அல்லது அறியாமையினாலோ இணை கற்பிக்கின்றார்கள் என்பதைப் பார்ப்போம்.

உதாரணம் -

ஒருவர் சிங்கப்பூரிலிருந்து கொண்டு அல்லது உலகின் வேறு எந்த மூலையில் இருந்துக் கொண்டோ நாகூரில் அடக்கமாகியிருப்பதாக் கூறப்படும் ஷாகுல் ஹமீது வலியுல்லாஹ்விடம் யா ஷாகுல் ஹமீது பாதுஷாவே என்னுடைய இன்ன தேவையை நீங்கள் நிறைவேற்றித் தந்தால் நான் தங்களின் இடத்திற்கு வருகை தந்து தங்களுக்கு காணிக்கை செலுத்துகிறேன் என நேர்ச்சை செய்வதாக வைத்துக் கொள்வோம்.
இந்த இடத்தில் நாம் இவருடைய வேண்டுதலை ஆய்வு செய்தோமேயானால் இவர் பல வகைகளில் அல்லாஹ்வுக்கு இணை கற்பித்தவராகிறார். அவைகளாளாவன: 
-
1) வணக்க வழிபாடுகளில் இணை வைப்பது: -

அல்லாஹ்விடம் மாத்திரமே செய்ய வேண்டிய பிரார்த்தனையை, துஆவை ஷாகுல் ஹமீது அவுலியாவிடம் செய்தல்
அல்லாஹ்வுக்கு மாத்திரமே செய்ய வேண்டிய நேர்ச்சையை ஷாகுல் ஹமீது அவுலியாவுக்கு செய்தல்

2) அல்லாஹ்வுடைய பண்புகளில், ஆற்றல்களில் இணை வைப்பது: -

அல்லாஹ்வுக்கு மட்டுமே இருக்கக் கூடிய பண்புகளாகிய எங்கிருந்துக் கொண்டு கேட்டாலும் கேட்கும் சக்தி உடையவன் (அஸ் ஸமீவுன்) மற்றும் ஒரே நேரத்தில் அனைத்தையும் பார்ப்பவன் (பஷீரன்) என்ற பண்புகள், ஆற்றல்கள் ஷாகுல் ஹமீது பாதுஷாவுக்கும் இருப்பதாகக் கருதுவது
அல்லாஹ்வுக்கு மட்டுமே இருக்கக் கூடிய பண்பாகிய ஒருவரின் இதயத்தில் உள்ள இரகசியத்தை அறியும் சக்தி உடையவன் என்ற பண்பை, ஆற்றலை ஷாகுல் ஹமீது பாதுஷாவுக்கும் இருப்பதாகக் கருதி அவரும் மனிதர்களின் இதயங்களிலுள்ளவற்றையெல்லாம் அறிகிறார் என நம்புவது

அல்லாஹ்வுக்கு மட்டுமே இருக்கக் கூடிய பண்பாகிய பிரார்த்தனையை செவிமெடுத்து அதை நிறைவேற்றித் தரும் ஆற்றல் ஷாகுல் ஹமீது அவுலியாவுக்கும் இருப்பதாக கருதுவது.
சகோதர, சகோதரிகளே இங்கு நாம் கவனமாக சிந்திக்க வேண்டும். ஏனெனில் அறிந்தோ அல்லது அறியாமலோ சர்வ சாதாரணமாக நம்மில் சிலர் செய்கின்ற இந்த வேண்டுதலில் இத்தனை வகையான ஷிர்க் நிறைந்துள்ளது. ஒருவர் மேற்கண்ட உதாரணத்தில் உள்ள பிரார்த்தனை (துஆ) செய்தல் மற்றும் நேர்ச்சை செய்தல் போன்ற வணக்கங்கள் அல்லாஹ்வுக்கு மட்டுமே செய்யப்பட வேண்டியவை என்றும், மேற்கண்ட உதாரணத்தில் கூறப்பட்ட பண்புகள் அல்லாஹ்வுக்கு மற்றுமே உரித்தானது என்றும் உணர்ந்துக் கொண்டால் அவர் இன்ஷா அல்லாஹ் இத்தகைய இணை வைத்தல்களிலிருந்து தவிர்ந்துக் கொள்வார். இவற்றை குர்ஆன் மற்றும் ஹதீஸ்களின் ஒளியில் ஆராய்வோம்.

துஆ (பிரார்த்தனை) செய்வதும் ஒரு வணக்கமே!: -

அல்லாஹ் கூறுகிறான்: -

(நபியே!) என் அடியார்கள் என்னைப்பற்றி உம்மிடம் கேட்டால்; ‘நிச்சயமாக நான் சமீபமாகவே இருக்கிறேன், பிரார்த்தனை செய்பவரின் பிரார்த்தனைக்கு அவர் பிரார்த்தித்தால் விடையளிக்கிறேன்; அவர்கள் என்னிடமே (பிரார்த்தித்துக்) கேட்கட்டும்; என்னையே நம்பட்டும். அப்பொழுது அவர்கள் நேர்வழியை அடைவார்கள்’ என்று கூறுவீராக (அல் குர்ஆன் 2:186)
உங்கள் இறைவன் கூறுகிறான்: ‘என்னையே நீங்கள் பிரார்த்தியுங்கள்; நான் உங்(கள் பிரார்த்தனை)களுக்கு பதிலளிக்கிறேன்; எவர்கள் என்னை வணங்குவதை விட்டும் பெருமையடித்துக் கொண்டிருக்கிறார்களோ, அவர்கள் சிறுமையடைந்தவர்களாக நரகத்தில் நுழைவார்கள். (அல் குர்ஆன் 40:60)

மேலும் அல் குர்ஆனின் வசனங்கள் 2:286, 7:55, 18:28, 35:14, 72:18 அனைத்தும் அல்லாஹ்விடமே பிரார்த்தனை செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறது.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: -

பிரார்த்தனை (துஆ) ஓர் வணக்கமாகும். என்னை அழையுங்கள். நான் உங்களுக்குப் பதிலளிக்கிறேன் என்று உங்கள் இறைவன் கூறுகிறான்.(அறிவிப்பவர் : நுஃமான் பின் பஷீர் -ரலி, நூல்:அபூதாவூத், திர்மிதி)

மேற்கண்ட வசனங்கள் மற்றும் நபி மொழியில் இருந்து நாம் பெறும் தெளிவுகள் யாவை எனில்: -
  • துஆ ஒரு வணக்கமாகும்.
  • அல்லாஹ் சமீபமாக இருக்கிறான்.
  • பிரார்த்தனைக்கு விடையளிக்கிறான்.
  • அல்லாஹ்விடமே பிரார்த்திக்க (துஆ) செய்ய வேண்டும்
எனவே மேற்கண்ட குர்ஆன் மற்றும் ஹதீஸ் அடிப்படையில் நமது தேவைகளை அல்லாஹ்விடமே பிரார்த்திக்க வேண்டும். ஷாகுல் ஹமீது அவுலியாவிடமோ அல்லது வேறு எந்த வலியிடமோ, நபியிடமோ பிரார்த்தித்தால் அது ஷிர்க் எனப்படும் மன்னிக்கபடாத மாபெரும் பாவமாகும்.

நேர்ச்சை செய்வதும் ஒரு வணக்கமேயாகும்: -

நேர்ச்சை செய்வது ஒரு வணக்கம் என்பதற்கு பின்வரும் குர்ஆன் வசனங்கள் சான்றுகளாகும்.
அல்லாஹ் கூறுகிறான்: -

இன்னும், செலவு வகையிலிருந்து நீங்கள் என்ன செலவு செய்தாலும், அல்லது நேர்ச்சைகளில் எந்த நேர்ச்சை செய்தாலும் நிச்சயமாக அல்லாஹ் அதனை நன்கறிவான்; அன்றியும் அக்கிரமக்காரர்களுக்கு உதவி செய்வோர் எவரும் இலர். (அல் குர்ஆன் 2:270)
அவர்கள் தாம் (தங்கள்) நேர்ச்சைகளை நிறை வேற்றி வந்தார்கள்; (கியாம) நாளை அவர்கள் அஞ்சி வந்தார்கள். அதன் தீங்கு (எங்கும்) பரவியிருக்கும். (அல் குர்ஆன் 76:7)

எனவே மேற்கண்ட வசனங்களின் அடிப்படையில் நேர்ச்சை என்பதுவும் ஒரு வணக்கமே. அதை அல்லஹ்வுக்கு மாத்திரமே செய்ய வேண்டும். அதைவிடுத்து ஷாகுல் ஹமீது அவுலியா மற்றும் இன்னும் பிற அவுலியாவுக்குச் செய்தோமேயானால் அது ஷிர்க் என்னும் இணை வைத்தலைச் சேரும்.

எங்கிருந்துக் கொண்டு கேட்டாலும் கேட்கும் சக்தி உடையவன் அல்லாஹ் மட்டுமே: -
ஒரே நேரத்தில் அனைத்தையும் பார்ப்பவன் அல்லாஹ் மட்டுமே: -


திருக்குர்ஆனில் அல்லாஹ் தன்னுடைய பண்புகளில் ஒன்றாக அஸ் ஸமீவுன் என கூறுகிறான். இதற்கு ஒருவர் எங்கிருந்துக் கொண்டு கேட்டாலும், எத்தகையை சூழலில் இருந்துக் கொண்டு கேட்டாலும் கேட்கும் வல்லமை, ஆற்றல் பெற்றவன் என பொருள்படும். மேலும் ஒரே நேரத்தில் பல கோடி நபர்கள் அழைத்தாலும் அவர்களின் அழைப்பையும் கேட்கக் கூடியவன் எனவும் பொருள்படும். இந்த பண்பு, ஆற்றல் அல்லாஹ்வைத்தவிர வேறு யாரிடமும் இல்லை.
மேலும் திருக்குர்ஆனில் அல்லாஹ் தன்னுடைய பண்புகளில் ஒன்றாக பஷீரன் என கூறுகிறான். இதற்கு அல்லாஹ் அனைத்தையும் ஒரே நேரத்தில் பார்க்கக் கூடியவன் என பொருள்படும். அதாவது ஒருவர் எங்கிருந்துக் கொண்டும் மேலும் எத்தகைய சூழலில் இருந்துக் கொண்டும் அழைத்தாலும் அவரைப் பார்க்கக் கூடியவன் அல்லாஹ் ஒருவன் மட்டுமே. அதுமட்டுமல்லாமல் அவன் அவனுடைய படைப்பினங்கள் அனைத்தையும் ஒரே நேரத்தில் பார்க்கக் கூடிய ஆற்றல் உள்ளவனாகவும் இருக்கிறான். இந்த ஆற்றல் அல்லாஹ்வைத்தவிர வேறு யாருக்கும் இல்லை.

யாராவது ஒருவர் தாம் சிங்கப்பூரிலிருந்து ஷாகுல் ஹமீது வலியுல்லாஹ்வை அழைக்கும் போதும், அதே நேரத்தில் உலகில் வேறு எந்த இடத்திலிருந்துக் கொண்டும் அழைக்கக் கூடிய பல்லாயிரக்கணக்காணோர்களைப் பார்த்து அவர்களின் அழைப்பைச் செவிமெடுக்கிறார் என நம்புவது அல்லாஹ்வுக்கு மட்டுமே இருக்கக் கூடிய அஸ் ஸமீவுன் மற்றும் பஷீரன் என்ற நாமங்களை, பண்புகளை இறைவனல்லாத ஷாகுல் ஹமீது அவுலியாக்கு இணை கற்பிப்பது போலாகும்.

அவர் அல்லாஹ்வுக்கு மட்டுமே இருக்கக் கூடிய எல்லாவற்றையும் ஒரே நேரத்தில் கேட்கும் தன்மையையும் (அஸ் ஸமீவுன்) மற்றும் எல்லாவற்றையும் ஒரே நேரத்தில் பார்க்கக்கூடியவன் (பஷீரன்) என்ற தன்மையையும் அல்லாஹ்வுக்கு மட்டுமல்லாமல் ஷாகுல் ஹமீது அவுலியாவுக்கும் இருப்பதாக நம்மி அல்லாஹ்வின் அந்தப் பண்புகளில், ஆற்றல்களில் இணை வைத்தவராவார்.
அல்லாஹ் கூறுகிறான்: -

“வரேனும் இவ்வுலகின் பலனை(மட்டும்) அடைய விரும்பினால், “அல்லாஹ்விடம் இவ்வுலகப்பலனும், மறுவுலகப்பலனும் உள்ளன. அல்லாஹ் கேட்பவனாகவும் பார்ப்பவனாகவும் இருக்கின்றான்.” (அல் குர்ஆன் 4:134)

இதய இரகசியங்களை அறிபவன் அல்லாஹ்வே: -

அல்லாஹ் தன் திருமறையில் கூறுகிறான்: -

மேலும், உங்கள் சொல்லை நீங்கள் இரகசியமாக்குங்கள், அல்லது அதை பகிரங்கமாக்குங்கள் – நிச்சயமாக அவன் இதயங்களிலுள்ளவற்றையும் மிக அறிந்தவன் (அல்குர்ஆன் 67:13)
நம் மனதில் உள்ள நம்முடைய தேவைகளை அல்லது எண்ணங்களை நாம் வெளியே சொன்னால் தவிர மற்றவர்களால் அறிந்து கொள்ள இயலாது என்பது அனைவரும் அறிந்த விஷயம். ஆனால் நம்மைப் படைத்த ரப்புல் ஆலமீன் அல்லாஹ் மட்டும் நாம் மனதிற்குள் நினைப்பதையும் வெளிப்படையாகப் பேசுவதையும் அறிகிறான்.
அல்லாஹ் கூறுகிறான்: -

அன்றியும், அல்லாஹ் நீங்கள் மறைத்து வைத்திருப்பதையும், நீங்கள் பகிரங்கப்படுத்துவதையும் அறிகிறான். (அல் குர்ஆன் 16:19)
வெளிப்படையாக (நீங்கள் பேசும்) பேச்சையும் அவன் நிச்சயமாக அறிகிறான்; நீங்கள் (இதயத்தில்) மறைத்து வைப்பதையும் அவன் (நிச்சயமாக) அறிகிறான்(அல் குர்ஆன் 21:110)
மேற்கண்ட வசனங்களின் அடிப்படையில்: -
  • உள்ளங்களில் மறைத்து வைப்பதை அறிபவனும்,
  • இதயங்களிலுள்ள இரகசியத்தை அறிபவனும்,
  • மனிதர்களின் மனதில் உள்ள தேவைகளை அறிபவனும்
அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை என்பது உறுதியாகிறது. ஆனால் ஒருவர் இந்தப் பண்புகள், ஆற்றல்கள் ஷாகுல் ஹமீது அவுலியாவிற்கும் உண்டு அதனால் அவர் சிங்ப்பூரிலிந்து கேட்கும் அவரது தேவைகளை அல்லது அவருடைய மனதில் எண்ணியிருக்கும் நாட்டங்களை ஷாகுல் ஹமீது அவுலியா நிறைவேற்றித் தருகிறார் என நம்பிக்கை கொண்டு அதன்படி செயல்படுவாராயின் நிச்சயமாக அவர் அல்லாஹ், தனக்கு மட்டுமே இருக்கக் கூடியதாக கூறும் அந்தப் பண்புகளை, ஆற்றல்களை அவர் ஷாகுல் ஹமீது அவுலியாவுக்கும் பங்கிடுவதன் மூலம் அல்லாஹ்வுக்கு இணை வைத்தவராக கருதப்படுவார்.

இவ்வாறு அல்லாஹ் அல்லாதவர்களை அழைப்பவர்களைப் பார்த்து அல்லாஹ் கூறுகிறான்: -
நிச்சயமாக அல்லாஹ்வையன்றி அவர்கள் எதை (நாயனென) அழைக்கிறார்களோ, அதை அவன் அறிகிறான் – இன்னும் அவன் (யாவரையும்) மிகைத்தவன்; ஞானம் மிக்கவன். (அல் குர்ஆன் 29:42)

மேலும், இதய இரகசியங்களை அறிந்தவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் இல்லை என்று பல வசனங்கள் கூறுகின்றன. இது பற்றிய விளக்கத்தை ‘இதய இரகசியத்தை அறிபவன் அல்லாஹ்வே’ என்ற தலைப்பில் பார்க்கவும்.

பிரார்த்தனைக்கு பதிலளிப்பவன் அல்லாஹ் மட்டுமே: -

நாம் எங்கிருந்துக் கொண்டு துஆ (பிரார்த்தனை) கேட்டாலும், எத்தகைய சூழ்நிலைகளில் இருந்துக் கொண்டு அழைத்தாலும் நம்முடைய அழைப்பச் செவியேற்று அதற்கு பதிலளிப்பவன், அந்த தேவைகளை நிறைவேற்றுபவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை.

அல்லாஹ் கூறுகிறான்: -

உங்கள் இறைவன் கூறுகிறான்: ‘என்னையே நீங்கள் பிரார்த்தியுங்கள்; நான் உங்(கள் பிரார்த்தனை)களுக்கு பதிலளிக்கிறேன்; எவர்கள் என்னை வணங்குவதை விட்டும் பெருமையடித்துக் கொண்டிருக்கிறார்களோ, அவர்கள் சிறுமையடைந்தவர்களாக நரகத்தில் நுழைவார்கள்.’ (அல் குர்ஆன் 40:60)

(நபியே!) என் அடியார்கள் என்னைப்பற்றி உம்மிடம் கேட்டால்; ‘நிச்சயமாக நான் சமீபமாகவே இருக்கிறேன், பிரார்த்தனை செய்பவரின் பிரார்த்தனைக்கு அவர் பிரார்த்தித்தால் விடையளிக்கிறேன்; அவர்கள் என்னிடமே(பிரார்த்தித்துக்) கேட்கட்டும்; என்னையே நம்பட்டும். அப்பொழுது அவர்கள் நேர்வழியை அடைவார்கள்’ என்று கூறுவீராக. (அல் குர்ஆன் 2:186)
‘உங்கள் இணை (தெய்வங்)களை அழையுங்கள்’ என்று (அவர்களுக்குச்) சொல்லப்படும். அவர்களை இவர்கள் அழைப்பார்கள்; ஆனால் அவர்கள் இவர்களுக்கு பதிலளிக்கமாட்டார்கள்; மேலும், அவர்கள் வேதனையைக் காண்பார்கள். அவர்கள் நேர்வழியில் சென்றிருந்தால் (இந்நிலைக்கு ஆளாகியிருக்க மாட்டார்கள்). (அல் குர்ஆன் 28:64)

நீங்கள் அவர்களைப் பிரார்த்தி(த்து அழை)த்தாலும், அவர்கள் உங்கள் பிரார்த்தனையை (அழைப்பை)ச் செவியோற்கார்; செவியேற்றாலும் கூட உங்களுக்கு பதில் அளிக்கமாட்டார்கள்; கியாம நாளில் நீங்கள் இணைவைத்ததையும் அவர்கள் நிராகரித்து விடுவார்கள்; யாவற்றையும் நன்கு அறிபவனைப் போன்று (அவர்கள்) எவருமே உங்களுக்கு அறிவிக்க மாட்டார்கள்.(அல் குர்ஆன் 35:14)

உண்மையான அழைப்பு (பிரார்த்தனை) அவனுக்கே உரியதாகும்; எவர் அவனை அன்றி (மற்றவர்களை) அழைக்கின்றார்களோ, அவர்கள் இவர்களுக்கு எவ்வித பதிலும் தர மாட்டார்கள்; (அல்லாஹ் அல்லாதவர்களைப் பிரார்த்திப் போரின் உதாரணம்;) தண்ணீர் தன் வாய்க்கு(த் தானாக) வந்தடைய வேண்டுமென்று, தன் இருகைகளையும் விரித்து ஏந்திக் கொண்டு இருப்பவனைப்போல் இருக்கிறது; (இவன் அள்ளாது) அது வாயை அடைந்து விடாது – இன்னும் காஃபிர்களின் பிரார்த்தனை வழிகேட்டில் இருப்பதே தவிர வேறில்லை. (அல் குர்ஆன் 13:14)

‘எனக்கு இணையானவர்கள் என எவர்களை நீங்கள் எண்ணிக் கொண்டிருந்தீர்களோ அவர்களை நீங்கள் அழையுங்கள்’ என்று அவன் கூறக்கூடிய நாளில் இவர்கள் அவர்களை அழைப்பார்கள். ஆனால் அவர்கள் இவர்களுக்கு பதிலளிக்க மாட்டார்கள்; இன்னும் அவர்களுக்கிடையே நாசத்தை நாம் ஏற்படுத்துவோம்.’ (அல் குர்ஆன் 18:52)

எனவே எனதருமை சகோதர சகோதரிகளே மேற்காணும் 
வசனங்களின் மூலம் நாம் பெறும் படிப்பினைகளப் பற்றி சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

இந்த வசனங்களின் மூலம் நாம் பெறும் தெளிவுகள் யாவை எனில்: -

  • பிரார்த்திப்பவரின் பிரார்த்தனைக்கு பதிலளிப்பவன் அல்லாஹ் மட்டுமே
  • அல்லாஹ்விடம் மாத்திரமே பிரார்த்தனை செய்யவேண்டும்
  • அல்லாஹ்வைத்தவிர மற்றவர்களிடம் பிரார்த்தனை செய்தால் அவர்களால் அந்தப் பிரார்த்தனையைச் செவியேற்க இயலாது.
  • கியாம நாள் வரை அவர்களை அழைத்தாலும் அவர்களால் பதிலளிக்க இயலாது
  • கியாம நானில் அல்லாஹ்வுக்கு இணை வைத்ததை அவர்கள் நிராகரித்து விடுவார்கள்.
  • ல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்பவருக்குத்தான் அல்லாஹ் நேர்வழி காட்டுவான்.
எனவே மேற்கண்ட வசனங்களின் அடிப்படையில் ஒருவர் பிரார்த்தனைக்கு பதிலளிப்பவன் அல்லாஹ் மட்டுமே என நம்பிக்கை கொண்டு அவனிடமே பிரார்த்தனை செய்ய வேண்டும். ஆனால் ஷாகுல் ஹமீது அவுலியாவும் நம்முடைய பிரார்த்தனையைச் செவிமெடுத்து நமக்கு பதிலளித்து நம்முடைய தேவைகளைப் பெற்றுத்தருகிறார் என நம்பிக்கைக் கொண்டால் அது ஷிர்க் என்னும் இணை வைத்தலைத் தவிர வேறொன்றுமில்லை.




Saturday, August 20, 2011

இருவரும் சமரசத்திற்கு வரும் வரை

அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா(ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

சுவர்கத்தின் கதவுகள் திங்கட்கிழமையும், வியாழக்கிழமையும் திறந்து வைக்கப்படும். தனது சகோதரனுடன் பகைமை பாராட்டுபவனைத் தவிர அல்லாஹ்விற்கு இணை கற்பிக்காத அனைவரும் மன்னிக்கப்படுவார்கள். (பகைமை பாராட்டும் சகோதரர்களைப் பற்றி பின்வருமாறு மூன்று முறை சொல்லப்படும்). அவர்கள் இருவரும் சமரசத்திற்கு வரும் வரை (மன்னிப்பை) தாமதப்படுத்துங்கள். அவர்கள் இருவரும் சமரசத்திற்கு வரும்வரை (மன்னிப்பை) தாமதப்படுத்துங்கள். அவர்கள் இருவரும் சமரசத்திற்கு வரும்வரை (மன்னிப்பை) தாமதப்படுத்துங்கள். 



நூல்: முஸ்லிம், திர்மிதி.

இருநூற்றைம்பது ரூபாயில் ஒருமாத ஜீவாதாரம்

அதிரையிலிருந்து படுக்கோட்டைக்கு ஒருமுறை ஆட்டோவில் சென்றுவர செலவளிக்கும் தொகைதான் ஆகும்! இருநூற்றைம்பது ரூபாயில் ஓர் ஏழையின் ஒருமாத ஜீவாதாரத் தேவைகள் ஓரளவு நிறைவேற்றப்படுகிறது என்றால் நம்புவீர்களா? ஆம்! நம்பித்தான் ஆகவேண்டும். அதிரை பைத்துல்மால் கடந்த 17 ஆண்டுகளுக்கும் மேலாக இதை சாத்தியப்படுத்தி வருகிறது. நமதூரில் சுமார் 50 ஏழைகளை அடையாளம் கண்டு, மாதந்தோறும் தலா ரூ.250 வீதம் உதவித்தொகை வழங்கி அவர்களின் அத்தியாவசிய ஜீவாதாரத் தேவையை ஓரளவு நிறைவு செய்து வருகிறது. 

பெரும்பாலும் நோன்பு காலங்களில் தானதர்மங்கள் நிரம்பி, நமதூர் மட்டுமின்றி அக்கம்பக்க ஊர்களிலிருந்தும் ஜகாத் மற்றும் ஃபித்ரா தர்மங்களைப்பெறுவதற்காக வருகின்றனர். அவர்களில் எத்தனைபேர் உண்மையிலேயே ஏழை அல்லது ஜகாத் பெறுவதற்குத் தகுதியுள்ளவர்கள் என்பது அனேகருக்குத் தெரியாது. அதிரை பைத்துல்மால் முஹல்லாவாரியாக பொறுப்புதாரிகளை நியமித்து, உண்மையிலேயே தருமம் பெறுவதற்குத் தகுதியானவர்களை அடையாளம் கண்டு, அவர்களின் சுயமரியாதைக்கும் கண்ணியத்திற்கும் எவ்வகையிலும் இடையூறு ஏற்படாதபடி அவர்களுக்கான தானதர்மங்களைச் செய்து வருகிறது. 

ஒருமுறை கைத்தொலைபேசிக்கு ரீசார்ஜ் செய்வதைக் குறைத்து, ரூ.250 ஐ பைத்துல்மாலுக்குச் செலுத்தினால், ஓர் ஏழையின் ஒருமாதத்திற்கான குறைந்தபட்ச அடிப்படை உணவுக்கு இது உதவுகிறது. பட்டுக்கோட்டைக்கு ஆட்டோவில் செல்லாமல், ஒருமுறை பேருந்தில் செல்வதன்மூலம், அதில் மிச்சப்படும் தொகையை தர்மமாக வழங்கி மேற்சொன்னபடி உதவலாம். இப்படியாக,நம் செலவுகளை மிச்சப்படுத்துவதன்மூலம் மிஞ்சும் தொகையை மாதம் ஒருமுறை மட்டும் வழங்கினால் இன்ஷா அல்லாஹ் நமதூரில் உண்ண உணவன்றி வாழும் ஏழைகளே இல்லை என்ற நிலையை உருவாக்கலாம். 

அதிரை பைத்துல்மாலின் நிர்வாகிகளைச் சந்தித்தோ அல்லது abmchq@gmail.com என்ற முகவரிக்கு மின்மடலுக்கு எழ்தியோ, குறைந்த செலவில் நிறைந்த நன்மை பயக்கும் பைத்துல்மாலின் பல்வேறு அளவிலான உதவிகளில் உங்களையும் இணைத்துக் கொள்ளலாமே! 

இந்த வருடம் ரமலான் பிறை இன்னும் 9-10 மட்டுமே இருக்கக்கூடும். உங்கள் தானதர்மங்களை அதிரை பைத்துல்மாலுக்குச் செலுத்தி விட்டீர்களா? இந்த மாதத்தின் செலவுகளில் அதிரை பைத்துல்மாலுக்கும் ஓர் பகுதியை ஒதுக்கி,பன்மடங்கு நன்மைகளைக் கொள்ளையடிக்கும் இந்த மாதத்தை பயனுள்ளதாக்கிக் கொள்ளலாமே!

அன்புள்ள அதிரை வலைப்பூ உரிமையாளர்களே! நடத்துனர்களே! அதிரை பைத்துல்மாலுக்கு உதவிகோரும் இந்த அறிவிப்பை உங்கள் தளத்திலும் வெளியிட்டு உதவிவிடுவீர். ஈருலக வாழ்க்கையையும் வெற்றியாக்கித் தருவதற்கு அல்லாஹ் போதுமானவன்.

Saturday, August 13, 2011

அல் குர்ஆனிய சமூகத்தை நோக்கி..!


அவர்கள் இக்குர்ஆனைச் சிந்திக்க வேண்டாமா? அல்லது அவர்களின் உள்ளங்கள் மீது அதற்கான பூட்டுக்கள் உள்ளனவா? (அல்குர்ஆன் 47:24)
15 நூற்றாண்டுகளுக்கு முன்னர் இப்பிரபஞ்சத்தில் தான்றோன்றித் தனமாகவும், நரக விளிம்பிலும் வாழ்ந்து கொண்டிருந்த ஜாஹிலிய சமூகத்தில்தான் புனித வேதமாகிய அல்குர்ஆனோடு முஹம்மது நபி எனும் இறைத் தூதர் அனுப்பப்படுகின்றார்கள். அச்சமூகம் இலக்கிய நயத்திலும், அறிவியலிலும் துறை போனவர்களாக இருந்தும் கூட அவர்களை அல்குர்ஆன் (ஜாஹிலிய) ‘அறிவிலி சமூகம்’ என வர்ணிக்கின்றது.


இதற்கு பிரதான காரணம், அவர்களிடத்தில் அறிவு இருந்தும் அதனை எவ்வாறு செயற்படுத்த வேண்டுமென்ற அறிவார்ந்த நுட்பம் இருக்கவில்லை. அத்தோடு பெண்களை சந்தைகளில் விலை பேசப்படுகின்ற போதைப் பொருள்களாகவும், பஞ்சமா பாதகங்களை தங்களது இயல்பியற் குணங்களாகவும் கொண்டிருந்தனர். மொத்தத்தில் மனிதத்துவத்திற்கு அப்பாற்பட்ட ஒரு நிலையில் வாழ்ந்து வந்தனர் என்று சொன்னாலும் அதனை மறுப்பதற்கு யாருமில்லை எனலாம்.
இத்தகைய ஒரு சமூகத்தில்தான் முஸ்லிம்களின் சட்ட யாப்பாகிய அல்குர்ஆன் இறக்கியருளப்படுகின்றது. இலக்கிய நயத்தில் விற்பன்னர்களாக திகழ்ந்த பெரும் இலக்கிய வாதிகளையெல்லாம் பிரமிக்க வைக்குமளவுக்கு அல்குர்ஆனின் இலக்கிய நடை அமைந்திருக்கின்றது. அது மாத்திரமல்லாமல் தார்மீகம், நாகரிகமென்றால் என்னவென்று தெரியாத அச்சமூகத்தில் அல்குர்ஆன் அதிசயிக்கத்தக்க விளைவுகளையும், வரலாறு காணாத சாதனைகளையும் உண்டு பண்ணியது.


பண்பாடற்ற ஒருசமூகத்தை பண்பட்ட ஒரு சமூகமாகவும், ஒழுக்கயீனமற்ற ஒரு சமூகத்தை ஒழுக்க சீலமுள்ள ஒரு சமூகமாகவும், அநீதி, அநியாயத்திற்கு கொடி தூக்கிய சமூகத்தை நீதி, நியாயத்திற்கு கொடி தூக்கும் சமூகமாகவும் மாற்றியமைத்ததுடன் மிருக வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்த சமூகத்தை மனித நேயமிக்க ஒரு சமூகமாக, வரட்டு கௌரவங்கள் ஆட்கொண்டிருந்ந ஒரு சமூகத்தை தன்மானமுள்ள ஒரு சமூகமாகவும் மாற்றியமைத்தது இந்த அல்குர்ஆன்.
பண்பாட்டு விழுமியங்கள் வீழ்ச்சியுற்றிருந்த இத்தகைய சமூகத்திலிருந்துதான் மனிதப்புனிதர்களான அபூபக்கர், உமர், உஸ்மான் போன்ற நேர்வழியின் ஒளி விளக்குகளை பிரகாசிக்கச் செய்த அதே அல்குர்ஆன்தான் இன்றுவரை எம்முடன் இருக்கின்றது. எனினும், அன்று அல்குர்ஆன் உருவாக்கிய அபூபக்கர்களையும், உமர்களையும் இன்றைய நமது சமூகம் ஏன் காணத்தவறியிருக்கின்றது?


அன்றைக்கு ஒரு வேதம், இன்றைக்கு ஒரு வேதமா? அல்லது அன்றைய மனிதர்கள் இன்றைக்கு காணாமல் போயுள்ளார்களா? இவற்றில் நாம் தேடும் வினாவுக்கு இரண்டாவது வினாவே தீர்வாக அமையும். அன்றைய ஸஹாபிய சமூகம் அல்குர்ஆனை தங்களது வாழ்க்கை நெறியாகவும், மறுமையில் சுவனத்தை அடை வதற்கான கருவியாகவும் அமைத்துக்கொண்டனர்.


ஆனால், இன்றைய முஸ்லிம்கள் திருமறைக் குர்ஆனை வெறும் சடங்காகவும், எவராவது மரணித்துவிட்டால் ஓதப்படுகின்ற சம்பிரதாயப் பொருளாகவும் பயன்படுத்துகின்றனர். அதேபோல், பரக்கத்திற்காக ‘மணக்குச்சி’ கொழுத்தப்படுகின்ற பொருளாகவும், அற்ப சொற்பங்களுக்காக விலை பேசப்படுகின்ற ஒரு புத்தகமாகவும் நோக்குகின்றனர். இந்த அல்குர்ஆன் பாமர மக்களுக்கு விளங்காது, அதனை விளங்க பதினாறு கலைகள் படித்திருக்க வேண்டும்.
அல்குர்ஆனைப் படிப்பதால் சிலவேளை வழிதவறவும் செய்யலாம் என்பன போன்ற தவறான நம்பிக்கைகள் எம் மத்தியில் மலிந்து கிடப்பதை பார்க்கின்றோம். இத்தகைய சிந்தனைகளை விதைப்பது ஏழெட்டு வருடங்கள் ஓதிப்படித்த மார்க்க அறிஞர்கள்(?)  என்பதுதான் மனதிற்கு வேதனை தரும் விடயமாகும்.


நபிமார்களின் வாரிசுகள் என தங்களைத் தாங்களே மார்தட்டிக்கொள்ளும் இவர்கள் இத்தகைய கீழ்த்தரமான சிந்தனைகளுக்குச் சொந்தக்காரர்கள் என்பதை நினைத்து வெட்கப்படுகின்றோம். மேற்கிலே வாழும் மாற்று சமூகம் கூட குர்ஆனை வாசித்து இஸ்லாத்தை நோக்கி சாரை சாரையாக அணிதிரண்டு கொண்டிருக்கும் இந்த நவீன யுகத்தில் வாழையடி வாழையாக இஸ்லாத்தை ஏற்றிருக்கும் நாம் ஏன் குர்ஆனை விளங்க முடியாது என்பதை சிந்திக்கத் தவறிவிட்டோம்.
குர்ஆனிய வசனங்களை ஆய்வு செய்து அந்நிய மதத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் நாளுக்கு நாள் புதிய புதிய கண்டு பிடிப்புக்களை கண்டுபிடிக்கின்றனர். ஆனால் அதே அல்குர்ஆனிய வசனங்களை ஓதித்தான் நமது சமுதாயத்து மார்க்க மேதைகள் வயிற்றுப்பிழைப்பு நடாத்துகின்றனர்.


இதனால்தான் மாற்றுமத அறிஞரொருவர் ‘அல்குர்ஆனை எப்போது முஸ்லிம்கள் எடுத்து நடைமுறைப் படுத்துகின்றார்களோ அப்போதுதான் அந்த சமூகம் இழந்து போயிருக்கும் தங்களது சுய கௌரவத்தை மீளவும் பெற்றுக்கொள்ளும்’ எனக் கூறுகின்றார். இன்று உலகில் இரண்டாம் பெரும்பான்மையாக வாழும் முஸ்லிம் சமூகம் ஐந்தாம் தரப்பாக வாழுகின்ற யூத சமூகத்தால் அடக்கியொடுக்கப்படுவதற்கு பிரதான காரணம் நமது சமூகம் அல்குர்ஆனை புறக்கனிக்கின்றமையே ஆகும். இதனை பின்வரும் அல்குர்ஆன் வசனம் தெளிவுபடுத்துகின்றது.


“எனது போதனையைப் புறக்கணிப்பவனுக்கு நெருக்கடியான வாழ்க்கை உண்டு. அவனை கியாமத் நாளில் குருடனாக எழுப்புவோம்” (அல்குர்ஆன் 20:124).


திருமறைக் குர்ஆனை புறக்கணித்துவிட்டு சினிமாக்களிலும், சீரியல் நாடகங்களிலும், மேற்கத்தேய கலாச்சாரங்களிலும் மோகம் கொண்டிருக்கும் நாம் புதியதொரு இஸ்லாமிய மறுமலர்ச்சியையும், சமூக ஒற்றுமையையும், இஸ்லாமிய கிலாபத்தையும் எதிர்பார்ப்பது கற்பனை உலகில் சஞ்சரிப்பதற்கு ஒத்ததல்லவா?






எனவேதான், நாம் வெறுமனே பெயர்தாங்கி அப்துல்லாக்களாகவும்,  பாத்திமாக்களாகவும் வாழாமல் பெயருக்கு ஏற்றவாறு உயிரோட்டமுள்ளவர்களாக வாழ வேண்டுமா? அத்தகைய உயிரோட்டமுள்ள சமூகத்தைத்தான் அல்குர்ஆனும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றது.


இதனை பின்வரும் வசனங்கள் தெளிவுபடுத்துகின்றன. ‘”வர்கள் இக் குர்ஆனைச் சிந்திக்க வேண்டாமா? அல்லது அவர்களின் உள்ளங்களின் மீது அதற்கான பூட்டுகள் உள்ளனவா?” (அல்குர்ஆன் 47:24). மற்றுமொரு வசனத்தில் “இக்குர்ஆனை விளங்குவதற்கு எளிதாக்கியுள்ளோம். படிப்பினை பெறுவோர் உண்டா?” (அல்குர்ஆன் 54:17)
-தகவல் : மஸுதா ஆலிமா.

தீவிரவாதம் முஸ்லீம்களின் தனிஉடைமையா?

தீவிரவாதத்தின் காரணகாரியங்கள் என்னென்ன?. பயங்கரவாதத்தின் பொருள் என்ன?

நீதிஅரசர் ஜஸ்டிஸ் ஹோபெட் சுரேஷ் அவர்கள் தலைமையில் டாக்டர் சாகிர் நாயக் அவர்களின் விளக்க உரையும் கேள்வி பதில்களும்.

விடியோ வாயிலாக உங்கள் முன் வைக்கப்படும் விளக்கங்கள்.



http://vanjoor-vanjoor.blogspot.com/2011/08/2-video-3-4-of-14.html

Sunday, August 7, 2011

இலவசமாக ஆடை


30 கேள்விகளுக்கு பதில் கூறினால் வாழ்நாள் முழுவதும் இலவசமாக ஆடை வழங்குவதாக கீதா கார்மென்ட்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

இது குறித்து அந்த நிறுவனத்தின் உரிமையாளர் சண்முகம் சனிக்கிழமை கூறியது:
 1979 முதல் குறைந்த லாபத்துக்கு துணிகளை விற்று வருகிறேன். இப்போது சென்னை தியாகராயநகர் வெங்கடேஸ்வரா திருமண மண்டபத்தில் எங்களது நிறுவனம் சார்பில் "சக்தி அழகன் ரெடிமேட்ஸ்'என்ற பெயரில் விற்பனையை தொடங்கியுள்ளோம். இந்த சிறப்பு விற்பனை கடை ஆகஸ்ட் 11 வரை செயல்படும். ரூ. 450 முதல் ரூ. 2,200 வரை விற்பனையாகும் சிறுவர் முதல் பெரிவர்கள் வரையிலான ரெடிமேட் ஆடைகள் ரூ. 50, ரூ. 100, ரூ. 150-க்கு விற்பனை செய்யப்படுகிறது

 ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டுசென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில் எங்களது விற்பனை மையம் செயல்பட உள்ளது. அப்போது அங்கு நடக்கும் விழாவில்30 கேள்விகள் அடங்கிய வினாத்தாள் வழங்கப்படும். அனைத்துக் கேள்விகளுக்கும் சரியான பதில் சொல்பவர்களுக்கு வாழ்நாள் முழுவதும் எங்கள் நிறுவனம் சார்பில் இலவசமாக ஆடை வழங்குவோம்
.
 சென்னைமதுரைதிருச்சிகோவைநெல்லை உள்ளிட்ட நகரங்களில் விரைவில் எங்களது கிளைகளை தொடங்கத் திட்டமிட்டுள்ளோம். ஆடைகள் வாங்க வருபவர்களுக்கு காலை சிற்றுண்டி,மதிய உணவுமாலை சிற்றுண்டி ஆகியன இலவசமாக வழங்கத் திட்டமிட்டுள்ளோம் என்றார் சண்முகம்

 இது குறித்த மேலும் விவரங்களுக்கு 94420 77985, 094802 95700 ஆகிய மொபைல் போன் எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

Friday, July 29, 2011

நவீன கருவிகள் வாடகைக்கு..........

தமிழகத்தில் சிறு, குறு விவசாயிகளின் வருவாயைப் பெருக்குவதற்காக நவீன வேளாண் கருவிகளை இருப்பு வைத்து, விவசாயிகளுக்கு வாடகைக்குவிட அரசு திட்டமிட்டு வருகிறது.




 வேளாண்மைத் தொழிலில் கூலித் தொழிலாளர்கள் பற்றாக்குறை பெரும் பிரச்னையாக இருந்து வருகிறது. இதனால், விவசாயிகள் பலர் வேளாண் தொழிலை மேற்கொள்ள முடியாத நிலையில் உள்ளனர்.
 இந்த பிரச்னையை தவிர்ப்பதற்காக அனைத்து மாவட்டங்களிலும் சிறு, குறு விவசாயிகள் குறித்த கணக்கெடுப்புப் பணியை வேளாண் துறை அலுவலர்கள் மேற்கொண்டுள்ளனர். இந்தப் பணி ஜூலை மாத இறுதியில் நிறைவடையும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.




 இந்தக் கணக்கெடுப்பில் நில அளவை எண், விவசாயியின் பெயர், அவரது தந்தை பெயர், வங்கிக் கணக்கு விவரம், கைப்பேசி எண், இப்போது சாகுபடி செய்யப்படும் பயிர்கள் விவரம், அதற்கான நீராதாரம், மண் பரிசோதனை செய்யப்பட்டதா? கடந்த 3 ஆண்டுகளில் பெறப்பட்ட சராசரி வருவாய், என்னென்ன விவசாயக் கருவிகள் இருக்கின்றன? (பவர் டில்லர், டிராக்டர், களையெடுப்புக் கருவி), வேளாண் சார்ந்த தொழில்கள் மூலம் கிடைக்கும் வருமானம் (ஆடு, மாடு, கோழி வளர்ப்பு), தேவைப்படும் பயிர்க் காப்பீடு, பயிர்க் கடன் போன்ற விவரங்கள் சேகரிக்கப்படுகின்றன.




 மேலும், இந்தத் திட்டத்தில் உயரிய தொழில்நுட்பங்கள் மூலம் சிறு, குறு விவசாயிகளின் வருவாயை இரு மடங்காக உயர்த்துவதற்கு அரசு திட்டமிட்டுள்ளது.




 எனவே, இதுவரை மேற்கொள்ளப்பட்ட சாகுபடியில் எதனால் மகசூல் குறைந்தது? மகசூலை இரு மடங்காக உயர்த்த என்னென்ன தொழில்நுட்பங்கள் தேவைப்படுகின்றன போன்ற தகவல்களும் சேகரிக்கப்பட்டு வருகின்றன.




 மகசூலை அதிகப்படுத்துவதற்காக சம்பந்தப்பட்ட பகுதிகளில் திருந்திய நெல் சாகுபடி முறை, நுண்ணீர் பாசனம், சொட்டு நீர்ப் பாசனம், தெளிப்பு நீர்ப் பாசனம், மழை தூவிப் பாசனம் போன்றவற்றை நடைமுறைப்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.




 மேலும், அடுத்த பருவத்துக்கு என்ன சாகுபடி மேற்கொள்வது என்பது குறித்த அறிவுரைகளை வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்குத் தேவையான விதைகள், உயிரி உரங்கள், நுண் சத்துகள், உரங்கள், பயிர்ப் பாதுகாப்பு மருந்துகள், ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து நிர்வாக மருந்துகள் போன்றவற்றை பரிந்துரைப்பது தொடர்பாகவும் கணக்கெடுக்கப்படுகின்றன.




 விவசாயக் கூலித் தொழிலாளர்கள் பற்றாக்குறையைப் போக்கும் வகையில் கிராமங்களுக்குத் தேவையான நவீன இயந்திரங்கள், நெல் நடவுக் கருவிகள், பவர் கோனோவீடர், பவர் டில்லர், டிராக்டர், ஒருங்கிணைந்த அறுவடைக் கருவிகள் போன்ற தேவைகளும் அறியப்பட்டு வருகின்றன.




 இந்த விவரங்கள் அனைத்தும் கையடக்க டிஜிட்டல் கருவி மூலம் பதிவு செய்யப்படவுள்ளன. இந்தப் பதிவுகள் தனியாகச் சேமித்து நிர்வகிக்கப்படவுள்ளன.






 இந்தக் கருவிகளை அந்தந்தப் பகுதிகளில் இருப்பு வைத்து கிராம விவசாயிகளுக்கு வாடகைக்குவிட அரசு திட்டமிட்டு வருகிறது.




 நவீன வேளாண் கருவிகளை விவசாய ஆர்வலர் குழுக்கள், டான்வாப் மகளிர் குழுக்கள், பயிர் மருந்தகம் உள்ளிட்டவற்றுக்கு வழங்கி விவசாயிகளுக்கு வாடகைக்கு விடலாமா அல்லது தொடக்க வேளாண் கூட்டுறவுக் கடன் சங்கம் மூலம் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தலாமா என்பது குறித்தும் அரசு ஆலோசித்து வருவதாகக் கூறப்படுகிறது.




 ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள மொத்த சிறு, குறு விவசாயிகளை மூன்றாகப் பிரித்து, தொடர்ந்து 3 ஆண்டுகளில் ஒவ்வொரு பிரிவினருக்கும் இந்தத் திட்டத்தை அமல்படுத்த அரசு திட்டமிட்டுள்ளதாம். இந்தத் திட்டம் அடுத்த 3 ஆண்டுகளில் அனைத்து சிறு, குறு விவசாயிகளையும் சென்றடைய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக வேளாண் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.




 திருச்சியில்...: திருச்சி மாவட்டத்தில் இந்தக் கணக்கெடுப்புப் பணியில் வேளாண் துறை இணை இயக்குநர் ஜே. சேகர் தலைமையில், துணை இயக்குநர் ஆர். சந்திரசேகரன், எஸ். சபா நடேசன் மேற்பார்வையில் 9 உதவி இயக்குநர்கள், 16 வேளாண் அலுவலர்கள், 14 துணை வேளாண் அலுவலர்கள், 86 உதவி வேளாண் அலுவலர்கள் ஈடுபட்டுள்ளனர்.




 திருச்சி மாவட்டத்தில் 94,024 சிறு விவசாயிகளும்,99,290 குறு விவசாயிகளும்  உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமணி 








Thursday, July 28, 2011

ரமழானின் சிறப்பு


“இறைநம்பிக்கையாளர்களே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது கடமையாக்கப்பட்டுள்ளது போல் உங்கள் மீதும் நோன்பு கடமையாக்கப் பட்டிருக்கிறது. (அதன் மூலம்) நீங்கள் இறையச்சம் பெறவேண்டும் என்பதற்காக!” ( அல்குர்ஆன் 2:183)

நபி (ஸல்) கூறினார்கள்:

இதோ! ரமழான் மாதம் உங்களிடம் வந்துவிட்டது. அம்மாதத்தில் நோன்பு நோற்பதை இறைவன் உங்கள் மீது கடமையாக்கியுள்ளான். இம்மாதத்தில் ஓர் இரவு உண்டு. அது ஆயிரம் மாதங்களை விட மேலானது. அந்த இரவில் பாக்கியம் பெறாதவர் ஒட்டு மொத்த பாக்கியத்தையும் இழந்தவராவார். (நஸயீ)
ரமழானின் சிறப்பு

இறைவன் ரமழானுக்கென்று சில சிறப்புகளை வழங்கியுள்ளான் அவற்றுள் சில:
- இம்மாதத்தில் தான் திருக்குர்ஆன் அருளப்பட்டது,
- ஷைத்தான்களின் சூழ்ச்சிகள் கட்டுப்படுத்தப்படுகிறது. இதன் மூலம் நன்மைகளை பெருக்கிக்கொள்ள வாய்ப்பு கிடைக்கிறது.
- ஆயிரம் மாதங்களைவிட மேலான இரவு இம்மாதத்தில்தான் உள்ளது. எனவே
குறைந்த வழிபாடுகளை செய்து நிறைந்த நன்மைகளை அடைய முடிகிறது,
- நோன்பாளியின் வாயிலிருந்து வரும் வாடை இறைவனிடம் கஸ்தூரியை விட அதிக
மணமுடையது,

- இம்மாதத்தில் நோற்கும் நோன்பு 700 மடங்குக்கும் அதிகமாக கணக்கிலடங்காத நன்மைகளை வாரித்தருகிறது.
மேற்கண்ட அனைத்தும் குர்ஆன், சுன்னா ஆதாரங்களிலிருந்து தெரியவரும் உண்மைகளாகும்

ரமழானில் அமல்கள்

ரமழானில் செய்ய வேண்டிய சில முக்கிய அமல்கள் பின்வருமாறு:

1. தூய்மையான நோன்பு


“இறை நம்பிக்கையுடன் நன்மையைக் கருதி ரமழானில் நோன்பு நோற்பவரின் முந்திய பாவங்கள் மன்னிக்கப்படுகிறது.” (புகாரி, முஸ்லிம்)
வெறுமெனே உண்ணாமல், பருகாமல் இருப்பதன் மூலம் மட்டும் இந்ந நன்மையை ஒரு நோன்பாளி அடைந்து விட முடியாது. ஏனெனில் நபி(ஸல்) கூறினார்கள்:

“பொய் பேசுவதையும் அதன் அடிப்படையில் செயல்படுவதையும் ஒரு நோன்பாளி தவிர்த்துக் கொள்ளவில்லையெனில் அவர் பசித்திருப்பதிலும், தாகித்திருப்பதிலும் இறைவனக்கு எந்தத் தேவையுமில்லை.” (புகாரி)
“நோன்பு ஒரு கேடையமாகும். எனவே உங்களில் நோன்பிருப்பவர் தீய வார்த்தைகளை பேசக்கூடாது, பாவச்செயல்கள் செய்யக்கூடாது. முட்டாள்தனமாக நடக்கக்கூடாது. யாரேனும் அவரை திட்டினால் “நான் ஒரு நோன்பாளி’ என்பதை மட்டுமே பதிலாகக் கூறவேண்டும். (புகாரி, முஸ்லிம்)

2. இரவு நேரத் தொழுகை


நபி (ஸல்) கூறினார்கள்:
“இறை நம்பிக்கையுடன் நன்மையைக்கருதி ரமழானில் இரவு நேரத் தொழுகையை நிறைவேற்றுபவரின் முந்திய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன” (புகாரி, முஸ்லிம்)

இரவு நேரத்தொழுகை ரமழானல்லாத காலங்களிலும் செய்யப்படும் வழிபாடாக இருந்தாலும் ரமழானில் அது அதிக முக்கியத்துவத்தைப் பெறுகிறது.
“ரமழானிலும் ரமழானல்லாத காலங்களிலும் இரவுத்தொழுகையை நபி(ஸல்) அவர்கள் 11 ரக்அத்களுக்கு மேல் தொழுததேயில்லை” என ஆயிஷா(ரலி) அறிவிக்கிறார்கள். (புகாரி)

3. தருமம்
“நபி (ஸல்) அவர்கள் காற்றைவிட வேகமாக ரமழானில் தருமம் செய்பவர்களாக இருந்துள்ளார்கள். மேலும் ரமழானில் நிறைவேற்றப்படும் தருமமே மேலான தருமம்” என்று கூறினார்கள். (திர்மிதி)

தருமத்தை பணமாகவோ அல்லது உணவாகவோ தரலாம். நோன்பாளிகளுக்கு இஃப்தார் உணவளிப்பதும் இதில் அடங்கும்.
“நோன்பாளிகளுக்கு இஃப்தார் உணவளித்தால் நோன்பாளிகளுக்கு கிடைக்கும் நன்மையைப் போல உணவளிப்பவருக்கும் கிடைக்கும்’ என நபி(ஸல்) கூறியுள்ளார்கள் (அஹ்மத்)

4. குர்ஆன் ஓதுதல்

ரமழான் குர்ஆன் இறங்கிய மாதமாதலால் இதில் குர்ஆனை அதிகமாக ஓதுவதும் அதன் பொருளுணர்ந்து சிந்திப்பதும், செயல்படுத்துவதும் மிகவும் அவசியமானதாகும். ஒவ்வொரு ரமழானிலும் ஜிப்ரீல் (அலை) வந்து நபி (ஸல்) அவர்களிடம் குர்ஆனை படித்துக் காண்பிப்பார்கள். இது குர்ஆனுக்கும் ரமழானுக்குமுள்ள தொடர்பை மேலும் உறுதிப்படுத்துகிறது.

5.இஃதிகாஃப்


நபி(ஸல்) ஒவ்வொரு ரமழானிலும் கடைசிப் பத்து நாட்கள் பள்ளிவாசலில் இஃதிகாஃப் (தங்கி வழிபடுதல்) செய்துள்ளார்கள்.
இந்த வழிபாடு ஆண், பெண் இருபாலாருக்கும் பொதுவானதாகும். எனவே இருபாலாருமே இதில் அதிக ஆர்வம் காட்ட வேண்டும்.

6. உம்ரா

“ரமழானில் நிறைவேற்றப்படும் உம்ரா ஹஜ்ஜுக்கு நிகராகும்’ என்று நபி(ஸல்) கூறியுள்ளார்கள்.
(புகாரி, முஸ்லிம்)

7. லைலத்துல் கத்ரை அடைய முயற்சிப்பது

லைலத்துல் கத்ரின் சிறப்பு மேலே கூறப்பட்டுள்ளது. அது பிந்திய பத்து இரவுகளில் ஒற்றைப்படையான இரவில் இருப்பதாக நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். எனவே ரமழானின் பிந்திய 10 நாட்களில் அதிக வழிபாடுகள் செய்து அந்த பாக்கியத்தை அடைய முயற்சிக்க வேண்டும். இஃதிகாஃப் இருப்பது இதற்கு சிறந்த வழியாகும்.

8. பாவமன்னிப்புக் கோருதல்

“நோன்பு திறக்கும் நேரத்தில் கேட்கப்படும் துஆ நிராகரிக்கப்படமாட்டாது’ என நபி(ஸல்) கூறியுள்ளார்கள். மேலும் ஸஹர் நேரத்தில் பாவமன்னிப்புக்கோருதல் திருக்குர்ஆனிலும் ஹதீஸிலும் வலியுறுத்திக்கூறப்பட்டுள்ளது. (பார்க்க அல்குர்ஆன் 51:18)

எனவே இந்த நல்ல நேரங்களில் இஸ்திஃபார்களையும், துஆக்களையும் அதிகப்படுத்த வேண்டும். ஸஹர் நேரத்தில் டி.வி. சானல்களில் மூழ்கியிருப்பதை விட இதுவே மேலானது என்பதை சிந்திக்க வேண்டும்.

அனுமதிக்கப்பட்டவை

நோன்பாளிகளுக்கு கீழ்கண்டவை குர்ஆன் சுன்னா அடிப்படையில் அனுமதிக்கப்பட்டவையாகும். இவற்றை மறுக்கும் உரிமை எவருக்கும் இல்லை.
-குளிப்பு கடமையான நிலையில் நோன்பு நோற்கலாம்.
நபி(ஸல்) அவர்கள் (ரமலான் இரவுகளில்) உடலுறவு கொண்ட பின் அதிகாலையில் குளிப்பு கடமையானவர்களாகவே ரமலான் நோன்பை நோற்பார்கள் என ஆயிஷா(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (புகாரி, முஸ்லிம்)
- பல்துலக்குவதில் ரமழான், ரமழானல்லாத காலம் என நபி(ஸல்) அவர்கள் வேறுபடுத்திக் கூறவில்லையென்பதால் ரமழான் காலங்களில் நன்கு பல்துலக்குவதில் தவறேதுமில்லை
.
- உளுவின் போது வாய்க்கொப்பளிப்பதிலும் நாசிக்கு தண்ணீர் செலுத்துவதிலும் தண்ணீர் உள்ளே சென்றுவிடாத வகையில் எச்சரிக்கையாக இருப்பது அவசியமாகும். (பார்க்க : அபூதாவூத்)

- எல்லை தாண்டாத அளவிற்கு சுயக்கட்டுப்பாடு உள்ளவர் நோன்பு நேரத்தில் மனைவியை அணைப்பதும் முத்தமிடுவதும் கூடும். (பார்க்க : அஹ்மத்)
- இரத்ததானம் செய்தல், ஊசி வழியாக உடம்பில் மருந்து செலுத்துதல், கண், காதுக்கு சொட்டு மருந்து விடுதல், எச்சில் விழுங்குதல், தொண்டைக்குழிக்குள் சென்றுவிடாத வகையில் உணவை ருசிபார்த்தல், வாந்தி எடுத்தல், பகல் வேளையில் குளித்தல், தலைவலி போன்றவற்றிற்கு களிம்பு தடவிக்
கொள்ளுதல், வாசனை திரவியங்கள் பூசுதல், நகம் களைதல், முடி வெட்டுதல், ஸ்கலிதம் ஏற்படுதல் ஆகிய எவையும் நோன்பை முறிக்கும் என்பதற்கு எந்த சரியான ஆதாரமும் இல்லை.

அனுமதிக்கப்படாதவை

- உண்ணுதல், பருகுதல், உடலுறவுக்கொள்ளுதல் ஆகிய மூன்றும் நோன்பை முறிக்கின்ற செயல்களாகும். (பார்க்க அல்குர்ஆன் 2:187)

எனவே இவற்றை ரமலானின் பகல் வேளையில் நோன்பாளிகள் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். எனினும் ஒரு நோன்பாளி மறந்து உண்பதாலோ, பருகுவதாலே அவரது நோன்பு முறிந்து விடாது. தொடர்ந்து நோன்பை நிறைவு செய்ய வேண்டும். (ஆதாரம் : புகாரி முஸ்லிம்)

- இவற்றில் ஏதேனும் ஒன்றை ஒருவர் வேண்டுமென்றே செய்து நோன்பை முறித்துவிட்டால் அதற்கு பரிகாரமாக தொடர்ந்து இரண்டு மாதங்கள் நோன்பு நோற்க வேண்டும் அல்லது 60 ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டும். பரிகாரம் செலுத்த சக்தியற்றவர்கள் முறிந்த நோன்பை மீண்டும் நோற்க வேண்டும். (ஆதாரம் : புகாரி, முஸ்லிம், அஹ்மத், அபூதாவூத்)

- வீண் விளையாட்டுகள், கேளிக்கைகள், சண்டையிடுதல் மற்றும் தீய வார்த்தைகள் ஆகியவற்றை நோன்பாளிகள் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்
.
சலுகையளிக்கப்பட்டவர்கள்

நோயாளிகள், கர்ப்பிணிப்பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள், பிரயாணிகள், தள்ளாத வயதினர்கள் ஆகியவர்களில் தள்ளாத வயதினர்கள் தவிர மற்ற அனைவரும் நோன்பை தள்ளிப் போடுவதற்கு அனுமதிக்கப் பட்டவர்கள். தள்ளாத வயதினர்கள் நோன்பை விட்டு விட்டு நோன்பொன்றுக்கு பகரமாக ஒரு ஏழைக்கு உணவளிக்க வேண்டும்.

(பார்க்க அல்குர்ஆன் 2:184,185 மற்றும் புகாரி, முஸ்லிம், அஹ்மத், நஸயீ)

தடைசெய்யப்பட்டவர்கள்

மாதவிடாய் மற்றும் பிரசவத்தீட்டுள்ள பெண்கள் மீது நோன்பு நோற்பது தடையாகும். விடுபட்ட நோன்புகளை கணக்கிட்டு அவர்கள் சுத்தமான பிறகு மற்ற நாட்களில் நோற்க வேண்டும்.
(புகாரி, முஸ்லிம், அஹ்மத்)

நன்மைகளை அள்ளித்தரும் ரமழானில் சட்ட விதிகளைப் பேணி வழிபாடுகள் அதிகம் செய்து ஈருலகிலும் வெற்றியடைய முயற்சிப்போம், 

அல்லாஹ் மிக அறிந்தவன்.



இனிய ரமழான் நல்வாழ்த்துக்கள்.

Tuesday, July 26, 2011

சகோதரி ஜலீலா அவர்களின் பிளாக் பெயர் மாற்றம்

சகோதரி ஜலீலா அவர்களின் பிளாக் பெயர் மாற்றம்.

வாசக நெஞ்சங்கள் இனி புதிய முகவரியில் தொடர்பு கொள்ளும்படி அன்புடன் வேண்டுகிறோம்,


அன்புடன் உங்கள் 

பேனாமுனை

பழையது   http://allinalljaleela.blogspot.com/  

புதியது        http://samaiyalattakaasam.blogspot.com/ 

தீர விசாரிப்பதே மெய் !மாமியாரைப் பற்றி...

யாராவது ஒருவர் தரக் கூடியத் தகவலை மட்டுமே ஆதாரமாகக் கொண்டு யாருடைய விஷயத்திலும் அவசரப்பட்டு முடிவெடுக்க வேண்டாம் என்றும் நன்றாக விசாரித்தே சிறந்த முடிவை மேற்கொள்ள வேண்டும் தவறினால் கைசேதப்படுவீர்கள் என்று 1400 வருடங்களுக்கு முன் உலக பொதுமறை திருமறைக் குர்ஆன் மனித சமுதாயத்தை நோக்கி எச்சரிக்கை விடுத்தது. 

நம்புவதுப் போன்று பேசிக் கழுத்தறுப்பதும், பார்ப்பது கேட்பது போன்று செட்டப் செய்து நாடகமாடுவதும் சிலருக்கு கை வந்த கலை என்பதால் கண்ணால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய், தீர விசாரிப்பதே மெய் என்று முன்னோர்கள் கூறினர்.

கொலை, கொள்ளை, கற்பழிப்புகள் போன்ற குற்றச் செயல்களை செய்து விட்டு கண்டுப் பிடிக்க முடியாத அளவுக்கு தடயங்களையும் அழித்து விட்டு மக்களோடு மக்களாக கலந்திடும் குற்றவாளிகளை போலீஸாரின் தடியாலும், துப்பாக்கியாலும் வெளிக் கொண்டு வர முடியாததை சிபிஐ, சிபிசிஐடி அதிகாரிகள் விசாரனைகள் மூலம் வெளிக்கொண்டு வந்து விடுவதைப் பார்க்கிறோம்.     

முறையான விசாரனையை அமைத்து செயல்படுங்கள் என்பது அல்லாஹ்வின் வாக்கு என்பதால் அல்லாஹ்வின் வாக்கை எந்த சமுதாயத்தவர் பின் பற்றினாலும் அவர்கள் தங்களுடைய காரியத்தில் வெற்றி அடைவார்கள்.

இன்று நம்மில் பலர் யாராவது ஒருவர் ( நம்பிக்கைகுரியவர் என்று கருதக் கூடியவர்) தரக் கூடியத் தகவலை அடிப்படையாகக் கொண்டு மிகவும் நெருக்கமானவர் விஷயத்தில் முறையான விசாரனையை மேற்கொள்ளாமல் அவசர முடிவை மேற்கொண்டு அவர்களை கவிழ்த்து விடுவதையும் அல்லது தாமே கவிழ்ந்து விடுவதையும் பார்க்கிறோம். 


மாமியாரைப் பற்றி...

o    என் மீது உங்கள் தாயார் நெருப்பாய் எரிந்து விழுகிறார்கள் நான் இந்த வீட்டில் இருப்பது அறவே அவர்களுக்கு பிடிக்கவில்லை உங்கனைக் கண்டால் மட்டும் சாதுவாகி விடுகிறார்கள் என்று மனைவிக் கூறுவாள்.

o    உண்மையில் அந்த தாயார் கோப சுபாவம் உள்ளவராக இருக்க மாட்டார் யார் மீதும் எரிந்து விழுவது அவரது இயல்பிலேயே இல்லாத ஒன்றாக இருக்கும். என் மீது நெருப்பாய் எரிகிறார் என்பதெல்லாம் தன் தாய் வீட்டில் போய் ஹாயாக உட்கார்ந்து கொள்வதற்காக அல்லது தனிக்குடித்தனம் செல்வதற்காக இட்டுக்கட்டிக் கூறுவது. 

எரிந்து விழுவது என்பது சாந்த குணமுடைய தன் தாயாரிடத்தில் கடந்த காலங்களில் காணாத ஒன்றாக இருக்கிறதே ! ஒரு வேளை தான் இல்லாத நேரத்தில் அவ்வாறு நடந்து கொள்கிறாரா ? என்று விசாரிக்க வேண்டியவர்களிடம் முறையாக விசாரித்து உண்மையை தெரிந்து கொள்ள மறுத்து மனைவி சொல்வதை அப்டியே நம்பி பெற்று வளர்த்து ஆளாக்கிய அன்னை தந்தையிடமிருந்து சிலர் ஒதுங்கி விடுகின்றனர் அல்லது ஒதுக்கி விடுகின்றனர்.

நான் உலகில் அழகிய முறையில் உறவைப் பேணுவதற்கு மிகவும் தகுதியானவர் யார் என்று அண்ணல் அவர்களிடம் அவர்களின் தோழர் ஒருவர் கேட்டதற்கு தொடர்ந்து மூன்று முறை தாய் என்றும் நான்காவது முறை தந்தை என்றும் சிறப்பித்துக் கூறினார்கள். (புகாரி: 5971)

அண்ணல் நபி அவர்களின் அழகிய உபதேசத்தை பின்பற்றி ஒழுக வேண்டிய சமுதாயத்தவர்களே பின்பற்றாமல் அவசர முடிவை மேற்கொண்டு அல்லல் படுவதைப் பார்க்கிறோம். இதில் அவர்கள் உலகில் வெற்றி அடைந்து விட்டதாகக கருதினாலும் மறுமையில் அல்லாஹ்வின் முன் நிருத்தப்படுபவர்கள் என்பதை மறந்து விடுகின்றனர். 

...எனக்கும், உனது பெற்றோருக்கும் நன்றி செலுத்துவாயாக! என்னிடமே திரும்பி வருதல் உண்டு. திருக்குர்ஆன்.31:14.


மருமகளைப் பற்றி...

o    உன் மனைவி சரியாக எங்கள் சொல் கேட்டு கேட்பதில்லை என்று ஆரம்பிப்பார்கள், அதற்கு மகன் படியவில்லை என்றால் நடைமுறையில் மாற்றம் தெரிகிறது என்பார்கள், அதற்கும் மகன் படியவில்லை என்றால் இல்லாததை இட்டுக்கட்டத் துணிவார்கள்.

o    காலம் தான் கெட்டுக் கிடக்கிறதே என்று தனக்குத் தானே சப்பை கட்டிக் கொண்டு வேறு எதாவது ஒரு குணம் அவளிடம் ஏற்கனவே பிடிக்காதிருந்தால் அதற்காக தாய்,தந்தை கூறும் (இல்லாத) குற்றச்சாட்டை இன்னும் மிகைப்படுத்தி கழட்டி விட முனைகின்றனர்.

மேற்காணும் தாய்,தந்தையரைப் பற்றி மனைவி கூறும் குற்றச்சாட்டினால் பெற்றோர்- பிள்ளை உறவு முறியாது, ஆனால் மருமகள் மீது மாமியார் சுமத்தும் பாரதூரமான குற்றச்சாட்டினால் கணவன்- மனைவி உறவு முறிந்து விடும். அவசரப் பட்டு இந்த உறவை முறித்து விட்டால் மீண்டும் இந்த உறவு இணையாது.

இவ்வுலகம் (முழுவதும்) பயனளிக்கும் செல்வங்களே; பயனளிக்கும் இவ்வுலகச் செல்வங்களில் மிகவும் மேலானதுஇ நல்ல மனைவியே. என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். நூல்: முஸ்லிம் 2911

இறைத்தூதர்(ஸல்)அவர்கள் சிறப்பித்துக் கூறிய சிறந்த பொக்கிஷத்தை அவசர முடிவை மேற்கொண்டு ரத்து செய்து விட முணைகின்றனர்.  தீர விசாரிக்காமல் சிறந்த பொக்கிஷத்தை இழந்துவிட்டால் ? எந்த பொக்கிஷத்தை இல்லாத குற்றச்சாட்டை சுமத்தி வெளியேற்றினார்களோ அந்த குற்றச்சாட்டுக்கு உரியவளாக இரண்டாவது மனைவி அமைந்து விட்டால் இவர் உலகில் நஷ்டவாளி ஆவதுடன் அப்பாவிப் பெண்ணுக்கு துரோகம் செய்தப் பாவத்திற்காக இவரும், அப்பெண் மீது அவதூறு சுமத்திய காரணத்திற்காக அவரது தாய்-தந்தையரும் மறுமையில் நஷ்டவாளியாவர்.

நம்பிக்கை கொண்ட வெகுளிகளான ஒழுக்கமுள்ள பெண்கள் மீது அவதூறு கூறுவோர் இவ்வுலகிலும், மறுமையிலும் சபிக்கப்பட்டனர். அவர்களுக்குக் கடும் வேதனை உண்டு. திருக்குர்ஆன். 24:23.
அவர்களின் நாவுகளும், கைகளும், கால்களும் அவர்களுக்கு எதிராக அவர்கள் செய்தவை குறித்து சாட்சியமளிக்கும். திருக்குர்ஆன். 24: 24.


நண்பர்களுக்கு மத்தியில்...

o    உன்னை விட எல்லா வகையிலும் அவன் குறைந்தவனாக இருந்தும் அவற்றை நீ பொருட் படுத்தாமல் அவனுடன் நெருங்கிப் பழகினாய் ஆனால் அவனோ சிறியப் பிரச்சனைக்காக உன்னைப் பற்றி எவ்வளவு கேவலமாக என்னிடமும் இன்னாரிடமும் கூறி இருக்கிறான், இன்னும் எத்தனைப் பேரிடம் கூறினானோ, கூறுவானோ தெரியாது ? அப்பொழுதே சொன்னேன் நீ கேட்க மறுத்தாய் ? இப்பொழுதாவது புத்தி படித்துக் கொள் என்று கொளுத்தி விடுவான்.  

o    தன்னுடன் நெருங்கிப் பழகிய காலத்தில் அவனுடைய நல்லொழுக்கத்தின் மூலம் நல்லவன் என்று முடிவு செய்திருந்தும் அற்பக் காரியத்தினால் ஏற்பட்ட சின்னப் பிரச்சனையில் ஒரு கழிசடை வைத்த நெருப்புக்கு இறையாகி நல்ல நண்பனை இழந்து வேறோரு கழிசடையை நண்பனாக்கி கொண்டு கவிழ்ந்து விடுவதைப் பார்க்கிறோம்.

இரண்டு பேர் நன்றாகப் பழகுவது சிலருக்கு அதிகம் பிடிக்காது எப்பொழுது அவர்களுக்கு மத்தியில் பிரச்சனை எழும் என்று காத்திருப்பார்கள் எழவில்லை என்றால் எழுவதற்கு ஏற்பாடும் செய்வார்கள்.  முறையாக விசாரித்து முடிவெடுக்கத் தவறி உண்மையாளனை புறக்கனித்து பொய்யனுடன் கூட்டு சேர்ந்து அல்லாஹ்வின் வாக்குக்கு மாறு செய்து ஏராளமான இளைஞர்கள் வழி கெட்டு விடுகின்றனர்.

நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வை அஞ்சுங்கள்! உண்மையாளர்களுடன் ஆகுங்கள்! திருக்குர்ஆன்.9:119.


தீர விசாரிப்பதே மெய்.

இவ்வாறு தீர விசாரிக்காமல் அவசர முடிவெடுத்து உற்ற துணைவர்களை, சிறந்த வழிகாட்டிகளை  புறக்கணித்து விடுவது என்பது தாய் - பிள்ளைக்கு மத்தியில், கணவன் - மனைவிக்கு மத்தியில், சகோதரர்களுக்கு மத்தியில், நன்பர்களுக்கு மத்தியில், முதலாளி தொழிலாளிகளுக்கு மத்தியில் இரு நாடுகளுக்கு மத்தியில், என்று அடுக்கிக் கொண்டேப் போகலாம்.

தவறான தகவல்களைக் கூறுபவர்கள் பெரும்பாலும் சேடிஸ்டுகளாக அல்லது சுயநலவாதிகளாக, அல்லது பொறாமைக் காரர்களாக, அல்லது பச்சோந்திகளாக தருணம் பார்த்து காலை வாரிவிடும் பழி தீர்ப்பவர்களாகவே இருப்பர். இவர்களின் சதிவலையில் வீழ்ந்து அழிவது பெரும்பாலும் நல்லவர்கள், நடுநிலையாளர்கள் என்பது தான் வேதனை தரும் விஷயமாகும்.


அண்ணல் அவர்களின் ஆட்சி காலத்தில்  ஓர் நாள். 

பனூமுஸ்தலக் கோத்திரத்தாரிடம் வலீத் பின் உக்பா என்பவரை ஜகாத் வசூலிக்க இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அனுப்பி வைத்தார்கள். ஜகாத் வசூலிக்க சென்ற வலீத் பின் உக்பா அவர்கள் திரும்பி வந்து பனூமுஸ்தலக் கோத்திரத்தார் ஜகாத் தர மறுத்து விட்டனர் என்றுக்கூறினார் இதைக்கேட்ட இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்கு கடும் கோபம் ஏற்பட்டு பனூமுஸ்தலக் கோத்திரத்தாருடன் யுத்தம் செய்து ஜகாத் வசூலிக்க பெரும் படையை ஏற்பாடு செய்தார்கள். ஆனால் படை புறப்படுவதற்கு முன் பனூமுஸ்தலக் கோத்திரத்தார்களே ஜகாத்தை வசூலித்து மதீனா வந்து இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் ஒப்படைத்தனர்.

வலீத் பின் உக்பா விடம் ஜகாத் கொடுக்க மறுத்ததற்கு என்னக் காரணம் என்று அவர்களிடம் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கேட்க ? எங்களிடம் ஜகாத் கேட்டு யாரும் வரவில்லையே என்று பனூமுஸ்தலக் கோத்திரத்தார்கள் பதிலளிக்க இதைக்கேட்ட இறைத்தூதர்(ஸல்)அவர்கள் அதிர்ச்சிக்குள்ளாகிறார்கள்.

வலீதுடைய பேச்சை நம்பி யுத்தம் செய்திருந்தால் அந்த அப்பாவி மக்களின் நிலமை என்னவாகி இருக்கும் ? என்பதை நினைத்து வருந்துகிறார்கள். இந்த நேரத்தில் தான் உலகம் முடியும் காலம்வரை உலக மாந்தர் அனைவரும் பின்பற்றி ஒழுக வேண்டிய திருமறையின் 49:6 வசனம் இறங்குகிறது.

நம்பிக்கை கொண்டோரே! குற்றம் புரிபவன் உங்களிடம் ஒரு செய்தியைக் கொண்டு வந்தால் ஒரு சமுதாயத்திற்கு அறியாமையால் நீங்கள் தீங்கு இழைக்காதிருப்பதற்காக அதைத் தெளிவுபடுத்திக் கொள்ளுங்கள்! (இல்லையேல்) நீங்கள் செய்ததற்காகக் கவலைப்படுவீர்கள். திருக்குர்ஆன். 49:6.

(மேற்கண்ட வசனம் இறக்கப்பட்டதன் பின்னணியாக இச்சம்பவத்தையே எல்லா விரிவுரையாளர்களும் குறிப்பிடுகின்றனர். (ஆதாரம்: தப்ஸீர் இப்னுகஸீர்)

வலீதிற்காகவே இவ்வசனம் இறக்கப்பட்டதாக இமாம் இப்னு தைமிய்யா அவர்களும் கூறுகிறார்கள். (மின்ஹாஜுஸ் ஸுன்னதிந் நபவிய்யா)


படிப்பினைகள் 

தாயாக இருந்தாலும், மனைவியாக இருந்தாலும், பிள்ளையாக இருந்தாலும், சகோதரனாக இருந்தாலும், நன்பனாக இருந்தாலும், தொழிலாளியாக இருந்தாலும் இரு நாடுகளுக்கு மத்தியில் உள்ள பிரச்சனையாக இருந்தாலும் ( தகவல் தரக்கூடியவர் நம்பத் தகுந்தவராக இருந்தாலும் ) அல்லாஹ் கூறியவிதம் முறையான விசாரனையை மேற்கொண்டு நீதி செலுத்த வேண்டும் என்ற நற்சிந்தனை எண்ணத்தில் உதயமாக வேண்டும். 

எண்ணம் தான் செயலை தீர்மாணிக்கிறது என்பதால் ஏற்கனவே எதாவது ஒன்றில் பிடிக்காதக் காரணத்தை வைத்து இதில் கவிழ்த்து விடலாம் என்று எண்ணினால் இதன் அடிப்படையில் வெற்றியும் கிடைக்கும் ஆனால் மேற்கூறிய விதம் உலகில் அல்லது மறுமையில் கவிழ்வது உறுதி.

நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டு, நீதிக்குச் சாட்சிகளாக ஆகி விடுங்கள்! ஒரு சமுதாயத்தின் மீதுள்ள பகை நீங்கள் நீதியாக நடக்காமரிருக்க, உங்களைத் தூண்ட வேண்டாம். நீதியாக நடங்கள்! அதுவே இறையச்சத்திற்கு நெருக்கமானது. அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்! அல்லாஹ் நீங்கள் செய்வதை நன்கறிந்தவன். திருக்குர்ஆன். 5:8.



وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ

நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர். திருக்குர்ஆன். 3:104.