Monday, July 25, 2011

"பிறகு ஏன் நீங்கள் முஸ்லிமாகவில்லை"

சில சகோதர/சகோதரிகளை நீங்கள் கண்டிருக்கலாம். அவர்கள் இஸ்லாத்தை நன்கு ஆராய்ந்திருப்பர்,  இஸ்லாத்தை தழுவ வேண்டுமென்ற முடிவிற்கும் வந்திருப்பர். ஆனால்......

முன்னே பார்த்த பத்தியை நீங்கள் பல காரணங்களை போட்டு பூர்த்தி செய்யலாம். அவற்றில் குடும்ப நிலவரங்கள், இஸ்லாத்தை ஏற்றால் பல கட்டுபாடுகளை பின்வற்ற வேண்டுமோ? என்பது போன்ற காரணங்கள் முக்கியமானவை. 

இந்த பதிவு உளவியல் ரீதியாக இப்பெரும் போராட்டத்தை மேற்கொண்டிருக்கும் அந்த சகோதர/சகோதரிகளுக்காக....

இந்த பதிவில் நாம் பார்க்கப்போகும் நபரும் இது மாதிரியான போராட்டத்தை சந்தித்தவர் தான். தன் மனைவி இஸ்லாத்தை ஏற்கும் வரை தானும் ஏற்கபோவதில்லை என்று நிபந்தனை போட்டவர்.

அவர் சகோதரர் ஜெறோம் பௌல்டர் (Jerome Boulter) அவர்கள். பிரிட்டன் நாட்டவரான இவர் இன்று மதினாவின் தைபாஹ் பல்கலைகழகத்தில் விரிவுரையாளராக பணிபுரிகின்றார். (இவரை தொடர்பு கொள்ள பதிவின் இறுதியில் கொடுக்கப்பட்டுள்ள முகவரியை காணவும்).

பணி நிமித்தமாக சௌதி அரேபியாவிற்கு வந்த அவருக்கு குரான் அறிமுகமாக, சில நாட்களில் குரான் இறைவேதமென்ற முடிவுக்கு வந்து இஸ்லாத்தை தழுவலாம் என்ற முடிவுக்கும் வந்தார். ஆனால்............................


"எனக்கு தெளிவாகி விட்டது. குர்ஆனில் சொல்லப்பட்டிருக்கும் இறைவனின் தன்மைகளைத்தான் என்னால் தொடர்புபடுத்தி பார்க்க முடிகின்றது. 

இப்போது என் குடும்பத்தை நினைத்து பார்த்தேன். என் மனதுக்குள் இருக்கும் மூன்று பிரச்சனைகள் விலகி விட்டால் இஸ்லாத்தை தழுவுவதென முடிவெடுத்தேன். அவை, 

  • என் மனைவியும் இஸ்லாத்தை தழுவ வேண்டும். 
  • அவர் தன்னுடைய வேலையை விட்டு விலகிவிட்டு என்னுடன் சௌதி அரேபியா வந்து வாழ வேண்டும். 
  • எனக்கும் அவருக்கும் இருக்கும் ஒரு தனிப்பட்ட பிரச்சனை தீர வேண்டும். 

என்னுடைய இந்த நிபந்தனைகள் நிறைவேறும் வரை இஸ்லாத்தை தழுவுவதை தள்ளி போடுவதென முடிவெடுத்தேன்.

இது தொடர்பாக என் மனைவியுடன் பேச ஆரம்பித்தேன். இமெயில் இமெயிலாக அனுப்பினேன். msnனில் நீண்ட நேரம் இது குறித்து பேசியிருக்கின்றோம். இன்டர்நெட்டில் கிடைக்கக்கூடிய இஸ்லாம் குறித்த தகவல்களை ஆவலுடன் பகிர்ந்து கொள்வேன். அதிலும் குறிப்பாக, இஸ்லாம் புதிய மார்க்கமில்லை என்பதையும், கிருத்துவத்தின் தவறுகளை களைய வந்த மார்க்கமென்பதையும் சுட்டி காட்டுவேன்.

என்னுடைய இந்த ஆர்வம் என் மனைவியை திகிலடைய செய்தது. ஒருமுறை கேட்டே விட்டார்,

"எனக்கென்னவோ நீங்கள் இஸ்லாத்தை தழுவி விட்டதாக தோன்றுகின்றது" 

இதனை கேட்டவுடன் பேசுவதை சற்று நேரம் நிறுத்திவிட்டேன்.

ஆம்... நான் அப்போது தான் உணர்ந்தேன், என் வாயால் தான் நான் இஸ்லாத்தை ஏற்கவில்லை, மனதாலோ அந்த அடியை எடுத்து வைத்து விட்டேனென்று. என் மனைவிக்கு நான் சொன்ன பதிலும் இதையே பிரதிபலித்தது.

"ஆம், நான் ஏற்றுக்கொண்டேன்"

அவ்வளவுதான்...அந்த சமயத்திலிருந்து என் மனைவி என்னை கடுமையாக விமர்சிக்க ஆரம்பித்தார். இவ்வளவு பெரிய முடிவை நான் எடுக்கும் முன் அவரிடம் ஏன் ஆலோசிக்கவில்லை என்று கோபப்பட்டார். நான் அவரை சமாதானப்படுத்த எவ்வளவோ முயற்சி செய்தேன்.

மனதால் தான் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டிருக்கின்றேன், அதிகாரப்பூர்வமாக இன்னும் இல்லை என்பது தான் என்னுடைய விளக்கமாக இருந்தது. ஆனால் என்னுடைய இந்த அணுகுமுறை அவருக்கு மேலும் குழப்பத்தையே தந்தது. அவரை இஸ்லாத்தை ஏற்க வைக்க வேண்டுமென்ற என்னுடைய முயற்சியும் இதனால் தள்ளிப்போனது.

நாட்கள் சென்றன....

இந்த நேரத்தில் முஸ்லிம்களுடன் தொழக்கூடிய வாய்ப்பு அமைந்தது. அது ஒரு வார இறுதி நாள். ஷாப்பிங் முடித்து விட்டு திரும்பி கொண்டிருந்தேன். அப்போது பக்கத்தில் இருந்த மசூதியில் இருந்து தொழுவதற்கான அழைப்பு விடப்பட்டது. அவ்வளவு தான், கடைகள் அடைக்கப்பட்டன. தெருவோர கடைகளின் பொருட்கள் துணிகளால் மூடப்பட்டன. வீடுகளில் இருந்தும், கடைகளில் இருந்தும் மக்கள் மசூதியை நோக்கி செல்ல ஆரம்பித்தனர். அது என்னை மிகவும் கவர்ந்தது.

முஸ்லிம்களின் தொழுகை எப்படிப்பட்டது என்று அறிந்து கொள்வதென முடிவெடுத்து விட்டேன்.

பள்ளிவாசலுக்கு சென்றவர்களை பின்தொடர்ந்தேன். நான் போவதற்குள் தொழுகையில் இரண்டு வரிசைகள் பூர்த்தியாகி விட்டன. வரிசையில் மக்கள் தோளோடு தோளாக நெருங்கி நின்றார்கள். அவர்களுடன் நானும் என்னை ஐக்கியப்படுத்தி கொண்டேன். அந்த வரிசையில் என்னோடு பல சிறுவர்களும் சேர்ந்து கொண்டார்கள்.

எனக்கு அருகில் இருந்தவர்கள் என்னென்ன செய்கின்றார்கள் என்று ஓரக்கண்ணால் கவனித்தபடியே இருந்தேன். அவர்கள் எப்படி குனிந்து நிமிர்ந்தார்களோ அப்படியே நானும் செய்தேன். அவர்களை அப்படியே பின்பற்றினேன்.

எனக்கு நன்றாக தெரியும், இவர்கள் என்னை விட அதிகமாக மனதை ஒருநிலைபடுத்துகின்றார்கள் என்று. அவர்கள் தொழுகையில் தங்களுக்குள் என்ன சொல்லிக்கொள்கின்றார்கள் என்று எனக்கு தெரியாது. ஆனால், எனக்கு மனதில் அப்போது என்ன வார்த்தைகள் தோன்றினவோ அதனைக்கொண்டு இறைவனை தொழுதேன்.         

"இறைவா, என் விருப்பம் நிறைவேற உதவி செய். என்னுடைய மனைவிக்கு நேர்வழி காட்டு. உன்னிடத்தில் மட்டுமே நான் உதவி கோருகின்றேன். உன்னால் படைக்கப்பட்டு இன்று கடவுள்களாக இருக்கின்றனரே, அந்த மனிதர்களிடத்தில் அல்ல"

இதனை நான் ஒரு மந்திரம் போல சொல்லிக்கொண்டிருந்தேன். என்னுடன் தொழுது கொண்டிருந்தார்களே அவர்கள் அளவுக்கு நான் இறைவனிடத்தில் தொடர்பு கொண்டிருந்தேனா என்று தெரியாது. ஆனால் தொழுகை முடிந்தவுடன் ஒருவிதமான மன அமைதியை உணர்ந்தேன்.

என்னுடைய காலணிகளை அணிய சென்றேன். ஷூவையும், சாக்சையும் எடுத்த போது இரு சிறுவர்கள் என் முன்னால் வந்து நின்றார்கள். அவர்கள் வேறு யாருமல்ல, எனக்கு அருகில் நின்று தொழுதவர்கள்.

"Anta Muslim? Limada tusalli? ‘adam wa’dha al yedduka al yameen ala shimal.” (நீங்கள் முஸ்லிமா? நீங்கள் எதற்காக தொழுகின்றீர்கள்? தொழும்போது வலது கையை, இடது கைக்கு மேல் வைக்க வேண்டும்)

ஆம், அந்த சிறுவர்கள் கண்டுபிடித்து விட்டார்கள். நான் முஸ்லிமா? என்ற சந்தேகம் அவர்களுக்கு வந்து விட்டது.

பிறகு அவர்கள் எனக்கு சொல்லி கொடுத்தார்கள். எப்படி ருக்கூ (How to Bow) செய்ய வேண்டுமென்று, எப்படி சஜிதா (How to Prostrate) செய்ய வேண்டுமென்று மற்றும் எப்படி கால்களை வைக்க வேண்டுமென்று. அவர்கள் அதோடு விடவில்லை. அவர்களை பின்தொடர்ந்து வருமாறு சைகை செய்தார்கள். எனக்கு இன்னும் நிறைய பயிற்சி வேண்டுமென்று அவர்கள் நினைத்திருக்க வேண்டும்.

அவர்களது வீட்டிற்கு என்னை அழைத்து சென்றார்கள். நான் வீட்டின் வெளியிலேயே நின்று விட்டேன். சங்கடம் தான் காரணம். முன்னே சென்றே அந்த சிறுவர்களில் ஒருவன் நான் தயங்கி நிற்பதை பார்த்து என்னருகில் வந்து "come on" என்று சைகை செய்து என்னை உள்ளே அழைத்து சென்றான். அங்கே 15-16 வயது மதிக்கத்தக்க டீனேஜ் இளைஞர் ஒருவர் என்னை வரவேற்றார். அவர் இந்த சிறுவர்களின் அண்ணனாம்.

என்னை மிக அன்பாக உபசரித்தார். அரேபிய காபியும், சில பேரித்தம் பழங்களையும் கொடுத்தார். ஆனால் எனக்கு புரியவில்லை, என்னை எதற்காக இங்கே அழைத்து வந்தார்கள் என்று. வீட்டை சுற்றிமுற்றி பார்த்தேன். இந்த சிறுவர்களை தவிர வேறு யாருமில்லை. பேச்சை ஆரம்பித்தேன்.

"உங்கள் தாய், தந்தையர் எங்கே?"

நான் கேட்ட கேள்விக்கு அவரால் சைகையால் பதில் சொல்ல முடியவில்லை. சற்று பொறுங்கள் என்பது போன்று சைகை செய்தார். நான், இருவரும் வெளியே போயிருப்பார்கள் போல என்று நினைத்து கொண்டேன்.

அப்போது மற்றொரு டீனேஜ் இளைஞர் வீட்டிற்கு வந்தார். இவரும் அவர்களது சகோதரர் தான். இருவரும் சிறிது நேரம் பேசிக்கொண்டனர். பின்னர், உள்ளே வந்த அந்த இளைஞர் என்னைப் பார்த்து கேட்டார்.

"அமெரிக்கி?" (அமெரிக்கரா?)

"இல்லை, நான் பிரிட்டிஷ்"

"காபி அருந்துகின்றீர்களா?"

இல்லை, நான் ஏற்கனவே அருந்தி விட்டேன் என்று சொல்வது போல தலையசைத்தேன்.
                   
"Tawadha" (உளு செய்யலாம் வாருங்கள்)

உளு (Wudu is the Islamic act of washing parts of the body using water) செய்ய சொல்லிக்கொடுத்தார்.

"வாருங்கள் தொழப்போகலாம்"...

மாலை நேர தொழுகைக்காக கிளம்பினோம்.

"கையை உயர்த்துங்கள்" என்று சொல்லியபடியே என்னுடைய வலது கையை மேலே எழுப்பினார். "பிறகு இப்படி வையுங்கள்" என்று என்னுடைய இடது கையின் மேல் வலது கையை வைத்தார். பிறகு இரு கைகளையும் மார்பில் படியுமாறு மேலே தூக்கினார்.

நாங்கள் நடு ரோட்டில் நடந்து சென்று கொண்டிருக்கின்றோம். ரோட்டின் நடுவில் நின்று கொண்டே அடுத்த பாடத்தை சொன்னார், "நான் செய்வதை போல செய்யுங்கள்" என்று இரு கைகளையும் உயர்த்தி காதுகளுக்கு அருகில் வைத்து கொண்டார்.

பள்ளிக்குள் நுழைந்தோம். அவருக்கு பக்கத்தில் நின்று கொண்டேன். இப்போது முன்பை விட சரியான முறையில் தொழுதேன்.

பள்ளியிலிருந்து திரும்பியவுடன் இரவு நேர உணவு பரிமாறப்பட்டது. நான் மறுபடியும் கேட்டேன், 

"உங்கள் அம்மா எங்கே?"

அவர் தலையசைத்து விட்டு, தூங்குவது போல சைகை காட்டி கீழே பூமியை காட்டினார்.       

"Baba wa mama fiy mout, yarhamhummullah. Sister make" (மரணம் எங்கள் பெற்றோரை தழுவிவிட்டது. அவர்கள் இருவர் மீதும் இறைவனின் சாந்தி நிலவட்டுமாக. என் சகோதரி தான் உணவு தயாரித்தார்"

அப்போது தான் புரிந்தது, இவர்கள் பெற்றோரை இழந்த சிறுவர்கள் என்று. குடும்பத்தை காக்கவேண்டிய பொறுப்பை இந்த இளைஞரும் அவருடைய சகோதரியும் தான் ஏற்றிருக்கின்றார்கள். அந்த இளைஞனின் ஆங்கிலம் தெளிவாக இல்லை. அதனால் புரிந்து கொள்வது கடினமாக இருந்தது.

"உங்களுக்கு இஸ்லாம் பிடித்திருக்கின்றதா?" அவர் கேட்டார்.

"ஆம்"

"பிறகு ஏன் நீங்கள் முஸ்லிமாகவில்லை"

"எனக்கு டைம் தேவை"

அவர் எனக்கு என் வீடு வரை லிப்ட் கொடுத்தார்.

"உங்களுக்கு என்ன உதவி வேண்டுமென்றாலும் கேளுங்கள். எங்கள் வீட்டிற்கு எப்போது வேண்டுமென்றாலும் வரலாம்"

நான் அவருக்கு நன்றி கூறினேன்.

அந்த குடும்பத்தின் அன்பு என்னை விட்டு விலகவில்லை. அவர்கள் என் மீது காட்டிய அக்கறையால் நான் மிகவும் நெகிழ்ந்து போனேன். எனக்கு நேர்வழி காட்ட அவர்கள் எடுத்த முயற்சியை பாராட்டினேன்.

இதற்கு பிறகு என் வாழ்வில் நுழைந்த மனிதர் என்னால் மறக்க முடியாதவர். அவர் பெயர் அலி ஜமீலி. ஈரான் நாட்டை சேர்ந்த அமெரிக்கர். உம்ரா (The Umrah is a pilgrimage to Mecca performed by Muslims that can be undertaken at any time of the year) செய்வதற்காக சவுதி அரேபியா வந்திருந்தார்.

எனக்கு இஸ்லாத்தை பற்றி தெரியுமா? என்று கேட்டார். உங்கள் புனித நூலை நான் படித்திருக்கின்றேன் என்று கூறினேன்.அவரது அடுத்த கேள்வி நான் எதிர்பார்த்ததுதான்...

"நீங்கள் முஸ்லிமாகவில்லையா?"

என்னுடைய மூன்று நிபந்தனைகளைப் பற்றி கூறினேன்.

"உங்களுக்கு என்ன பைத்தியமா?, அல்லாஹ்விடம் நிபந்தனைகள் விதிக்க கூடாது. இப்போதே சஜிதா செய்து அல்லாஹ்விடம் மன்னிப்பு கோருங்கள். இஸ்லாம் தான் இறைவனின் மார்க்கம் என்பதில் உங்களுக்கு ஐயங்கள் இல்லையென்றால் இப்போதே ஷஹாதா (Shahada is the testimony of faith indicating belief in one God, Allah, who has no partners and belief that the Prophet Muhammad (peace be upon him) is his final prophet and messenger) சொல்லுங்கள்"

"நான் ஏன் நிபந்தனைகள் போடக்கூடாது?, என் குடும்பமும் முஸ்லிமாக வேண்டுமென்று ஆசைப்படுகின்றேன். அது தவறா?"

"இங்கே பாருங்கள். இறைவன் யாரை நாடுகின்றானோ அவருக்கு நேர்வழி காட்டுகின்றான். உங்கள் குடும்பத்தை காரணமாக காட்டி அவனுடைய வழிகாட்டுதலை அலட்சியப்படுத்துகின்றீர்களா?. இவ்வளவு ஏன்...நாயகம் (ஸல்) அவர்களின் குடும்பத்தினர் அனைவருக்கும் கூட இறைவன் நேர்வழி காட்டவில்லையே!!! நாயகம் (ஸல்) அவர்கள் எவ்வளவோ கேட்டுக்கொண்ட பிறகும் கூட அவர்களது தந்தையின் சகோதரர் முஸ்லிமாகவில்லையே"

எனக்கு தெளிவாக விளக்கினார் ஜமீலி. ஆனால் நான் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டேன்.

"நான் என் குடும்பத்தினருடன் பேச வேண்டும்"

"நீங்கள் அதற்கு முன்னே இறந்து விட்டால் என்ன செய்வீர்கள்?. நீங்கள் இஸ்லாம் என்னும் மார்க்கத்தை பற்றி அறிந்து கொண்ட பிறகு அதனை நிராகரித்து விட்டு இறந்தால் நீங்கள் செல்லும் இடம் நரகம் தான். நீங்கள் எவ்வளவு அதிர்ஷ்டக்காரர் என்பது உங்களுக்கு புரியவில்லையா? உங்களை போல எல்லோருக்கும் இறைவன் நேர்வழி காட்டுவதில்லை என்று நீங்கள் அறிந்திருக்கவில்லையா? அவன் உங்களுக்கு கொடுத்திருக்கும் வாய்ப்பை புறக்கணிக்க போகின்றீர்களா?"

அவருடைய அணுகுமுறை எனக்கு பிடித்திருந்தது. சிந்தித்து பார்த்தால் அவர் சொல்வது சரிதான். இந்த வாய்ப்பை நழுவவிட்டால் நான் ஒரு முட்டாள்.

உடனடியாக நான் அடுத்த அடியை எடுத்து வைத்தேன். இஸ்லாமிய தாவாஹ் சங்கத்திற்கு சென்று, அதிகாரப்பூர்வமாக இஸ்லாத்தை தழுவ என்ன செய்யவேண்டுமென்று கேட்டேன். அவர்கள் கூறினார்கள்.

என்னுடன் டேவிட், ஜான் என்ற இரு சகோதரர்களும் இஸ்லாத்தை தழுவினார்கள்.

இஸ்லாத்தை தழுவ நினைப்பவர்கள் ஒன்றை மனதில் கொள்ள வேண்டும். இஸ்லாம், உங்களுக்கான ஆன்மீக அடைக்கலம். 

இறைவன், நம்பிக்கையாளர்களுக்கு தொடர்ச்சியான சோதனைகளை தருவான். இவ்வுலகின் உங்கள் பிரச்சனைகளானது தானியங்கியாக தீர்ந்து விடாது. ஆனால் இறைவனின் உதவி இருந்தால் அவை ஒன்றன் பின் ஒன்றாக விலகிவிடும்.

அதனால் உங்களை அர்ப்பணியுங்கள், பிறகு பொறுமையோடு காத்திருங்கள், இறைவன் உங்களுக்கு அதிகமாக அருளை கொடுப்பானென்று"


சுபானல்லாஹ். இந்த பதிவின் மூலம், நான் இஸ்லாத்தை தழுவும் நிலையிலுள்ள சகோதர/சகோதரிகளுக்கு கூறிக்கொள்ள விரும்புவது...நீங்கள் இஸ்லாத்தை நன்றாக ஆய்வு செய்யுங்கள். அது தான் உண்மை என்ற நிலைக்கு வந்து விட்டால் எக்காரணத்தை கொண்டும் உங்கள் முடிவை தள்ளிப் போடாதீர்கள். முதலில் உங்களை அர்ப்பணித்து விடுங்கள், பின்னர் உங்கள் பிரச்சனைகள் தீர வேண்டுமென்று துஆ செய்யுங்கள். உங்களுக்காக நாங்களும் துவா செய்வோம் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.

சகோதரர் ஜெறோம் பௌல்டரை நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பினால் பின்வரும் முகவரியில் அவரை நீங்கள் சந்திக்கலாம்...

Jerome Boulter,
LTAP Language Teacher,
English Language Centre,
Faculty of Academic Services,
Taibah University,
PO Box 344
Medina 42353,
Kingdom Saudi Arabia
cel. +966 54 3328708
jerboulter@gmail.com


இதனை எழுதும்போது டாக்டர்.ஜாகிர் நாயக் அவர்களின் ஒரு உரையில் நடந்த சம்பவம் நினைவுக்கு வருகின்றது, நீங்களும் பார்த்திருக்கலாம்.

அந்த உரையின் கேள்வி பதில் நேரத்தில் ஒரு சகோதரி,

"குரான் இறைவேதமென்றால், இஸ்லாம் தான் உண்மையென்றால் அதனை ஏற்க ஏன் மக்கள் அதிக நேரம் எடுத்துக்கொள்கின்றார்கள்?" என்று கேட்க,

அதற்கு டாக்டர். ஜாகிர் நாயக் அவர்கள் பதில் கூறி விட்டு அந்த சகோதரியை பார்த்து கேட்டார் பாருங்கள் ஒரு கேள்வியை,

"சகோதரி, நீங்கள் என்னைப் பார்த்து கேட்டீர்கள், இப்போது நான் உங்களைப் பார்த்து கேட்கின்றேன். இஸ்லாத்தை ஏற்கவிடாமல் உங்களை தாமதப்படுத்துவது எது?" என்று கேட்க, அதன் பிறகு நடந்தது உணர்வுப்பூர்வமான நிகழ்வு. அதனை நீங்களே கீழே பார்க்கலாம்.

இறைவன் ஒருவருக்கு நேர்வழி காட்ட நினைத்து விட்டால் யார் தடுப்பது?

இறைவா, இஸ்லாத்தை ஏற்கும் நிலையிலுள்ள சகோதர/சகோதரிகளுக்கு மனபலத்தை தந்தருள்வாயாக...ஆமின்.

அல்லாஹ்வே எல்லாம் அறிந்தவன்.

Sunday, July 24, 2011

ரமழானே வருக...! ரஹ்மத்தைத் தருக...!!

அல்லாஹ்வின் அருள்மழை பொழியும் அற்புதத் திங்கள்!
ஆவலுடன் எதிர்பார்த்த அடியார்களின் ஆசை மாதம்!
இறைவனுடன் இணக்கத்தை ஏற்படுத்தும் இணையில்லா மாதம்!

ஈகையை ஈந்துவக்கும் ஈடில்லாதவனின் இனிமை மாதம்!

உயர் பண்புகளை உருவாக்கும் உன்னத மாதம்!

ஊண், உறக்கம் துறந்து உயர்வான குணங்களை உள்ளத்தில் கொண்டுவரும் மாதம்!

எத்தகைய இடர்பாடுகள் ஏற்படினும் பொறுமையை கற்றுத்தரும் மாதம்!

ஏழ்மையை விரட்டும் ஏந்தல்களின் ஏற்றமிகு மாதம்!

ஐயங்கள் நீங்கி படைத்தவனிடம் ஐக்கியமாகும் மாதம்!

ஒற்றுமையை ஒலி(ளி)க்கும் ஒப்பற்ற மாதம்!

ஓரிறைக் கொள்கையை உலகெங்கும் ஓதிய மாதம்...

நம்மை நோக்கி தன் ஒளிக்கதிர்களை பதிக்க விரைவில் வர இருக்கின்றது.

சுட்டெரிக்கும் சூரியனின் வெப்பக்கதிர்கள் நம்மை தாக்க வரும்போது நிழல் தேடி அலைவது போல்
நம் பாவங்களை கருக வைக்கும் தீப்பிழம்பாய் ரமழான் வருகிறது.

அருள்மறையை அருளிய அருளாளனின் அன்பு மாதம் நம்மை அரவணைத்துச் செல்ல அண்மையில் வந்துகொண்டிருக்கிறது. 

ஏக வல்லோன் அல்லாஹ்விடம் நெருங்க வைக்கும் மேலதிக வணக்க வழிபாடுகள் செய்ய வழிவகுக்கும் வரப்பிரசாதம் இந்த ரமழான்.

இறை நம்பிக்கைக் கொண்டோர் தம் உள்ளங்களால் எண்ணிய அனைத்து நற்செயல்களுக்கும் வழிதிறக்கும் அற்புத மாதம்.

இறைவனிடம் அருள் வேண்டும் முதல் பத்து தினங்களை உள்ளடக்கிய அருள் மாதம் அழகாக வருகின்றது.

பாவ மன்னிப்பு கோரும் நெஞ்சங்களில் பால்வார்க்கும் புண்ணிய மாதம் இரண்டாம் பத்து தினங்களுடன் புதையலாக வருகின்றது.

நரக நெருப்பின் விடுதலையை வேண்டி நிற்கும் நல்லோர்களின் நம்பிக்கை மாதம்,
 
சுவனத்தில் நுழைய துடிக்கும் சுந்தர நபிகளின் உம்மத்துகள் சுற்றும் சூழ காண துடிக்கும் சூப்பர் மாதம்
 
முத்தான மூன்றாம் பத்து தினங்களுடனே முன்னறிவிப்புடன் வருகின்றது.

உள்ளத்தால் அன்பை விதைத்து, உடலால் பணிவை வெளி கொணர்ந்து மக்களிடம் கருணையை அறுவடை செய்யும் காலம் ரமழான் என்பதை நாம் அறிந்து வைத்துள்ளோம்.

ஆன்மீக பயிற்சிக்கு அடிகோலும் அற்புத வாய்ப்பை அள்ளி வழங்கிடும் மாதம்!

இறைவனின் வற்றாத கருணையான ரஹ்மத்தையும், ஊற்றுக்கண்ணாக விளங்கும் பரக்கத்தையும் ஒருசேர வாரி வழங்கிடும் வள்ளல் மாதம்.

செய்த குற்றங்கள் சிறியதாயினும், பெரியதாயினும் மன்னிப்பின் வாசல் திறக்கப்பட்டு பாவிகளுக்கு பாவமன்னிப்பு பகிர்ந்திடும் படைத்தவனின் மாதம்.

நினைத்த காரியங்கள் தடையின்றி நடைபெற நம்முடைய இருகரமேந்திய பிரார்த்தனை அவசியம், அப் பிரார்த்தனை பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு உடனடியாக பதிலளிக்கப்படும் பண்புள்ள மாதம்.

நாம் படைக்கப்படுவதற்கு முன்னர், மனிதனையா படைக்கப் போகிறாய்? என்று ஆச்சரிய வினா தொடுத்த வானவர்கள் நம் செயல்களைக் கண்டு, வியந்து இறைவனிடம் பெருமை பாராட்டி பெருமிதப்படுத்தும் பேருள்ள மாதம்.

நம்மை வழிகெடுக்கும் நாசகார, தீய சக்திகளான ஷைத்தான்கள் விலங்கிடப்பட்டு கொட்டிலில் அடைக்கப்படும் காருண்ய மாதம்.

இணையில்லா இறைவனின் எல்லையில்லா கூலி வழங்கப்படும் மாதம்.
 
நோன்பாளிகள் மட்டும்... என்ற அறிவிப்புடன் திறக்கப்பட்டுள்ள உயர்தர சுவனத்தில் நாம் நோன்பாளி என்ற பெருமையுடன் நுழைய வைக்கும் மாதம்.

சுகந்த காற்று வீசும் வசந்த கால திறப்பு போல சுவனக்காற்றை வீச வானங்கள் மற்றும் சுவனங்களின் திறப்பு விழா நடைபெறும் விழாக்கா(கோ)லம்.

கோடைகால வெப்பத்தையே தாங்க முடியாத நமக்கு நரகத்தின் கொடுமையை தாங்க முடியுமா?

அதற்கு முடிவுகட்டும் விதமாக முடிவில்லாத முன்னவன் அல்லாஹ்வின் முன்னேற்பாடு தான் இந்த ரமழான்.

ஆம்! இந்த வசந்த காலத்தில் நரகச்சூடு நம்மைத் தொட அனுமதியில்லை.

எங்கும் எப்போதும் சுகம்! அதுதான் இறைவன் மனிதனுக்குக் கொடுத்த வரம்!! அதற்காகத்தான் இந்த மாதத்தில் மூடப்படும் நரகம்!!!

ஓராயிரம் இரவுகள் விழித்திருந்தால்தான் ஒருசில நன்மைகளை பெற முடியும் என்ற வாழ்க்கைச் சூழலில் ஓரிரவு விழித்திருந்தாலே போதும் ஓராயிரம் இரவுகள் செய்த செயல்களுக்குண்டான நன்மைகளை சம்பாதித்துக் கொள்ளலாம் என்ற சுபச் செய்தியுடன் லைல(த்)துல் கத்ர் என்ற புதையலை தன்னுள் வைத்திருக்கும் அருள் சுரங்கம்.

வாடிய பயிரை கண்டபோது வாடுவதை விட அதற்கு தண்ணீர் வார்ப்பது மேலான செயல் என்பது போல வறியோருக்கும்,  எளியோருக்கும், இல்லாதோருக்கும் வாரி வழங்கி கொடைத்தன்மையையும், வள்ளல் குணத்தையும் வாஞ்சையுடன் கற்றுத்தரும் வளமிகு மாதம்.

நாம் மட்டும் நன்மைகள் பல செய்து, தீமைகளை விட்டும் தவிர்ந்திருந்தால் போதுமா?
 
பிறருக்கும் நல்லவற்றை போதிக்க வேண்டாமா? தீமையை விட்டும் தடுக்க வேண்டாமா?
 
அந்தப் புனிதப் பணியை வழங்கும் பயிற்சிக்களம்தான்  இந்த ரமழான்.

அடுத்தவருக்கு அநீதி இழைத்தல் ஆபத்தானது என்பதை அனைவருக்கும் அறிவுறுத்தும் அழகிய மாதம்.

பிறரின் தேவைகளை அறிந்து முடிந்தளவு உதவிகள் புரிய உள்ளத்தில் உதவிப்பண்பை ஊற்றெடுக்க வைக்கும் உன்னத மாதம்.

கஸ்தூரி மணம் கமழும் மணப்பொருளை விட நோன்பாளியின் வாய் வாடை வல்லோன் விரும்பும் வாசனை என்பதை வலியுறுத்தும் வசந்த மாதம்.

உலக காரியங்களில் போட்டியிட்டால் வெற்றியாளர் ஒருவரே!
 
மற்ற அனைவரும் தோல்வியுற்றோர் என்பது நாம் அறிந்த நியதி.
 
ஆனால், இம்மாதத்தில் நற்செயல்களில் போட்டியிடுவோர் அனைவரும் வெற்றியாளர்கள் என்பதும், தோல்வியில்லா வாழ்க்கையும், துவண்டு போகாத நிம்மதியும் கிடைக்கும் என்பதும் வெற்றியளிக்கும் அல்லாஹ்வின் வாக்குறுதி என்பதை உணர்த்தும் மாதம்.

வழிபாடுகள் என்ற குறைவான மூலதனம். இறைபொருத்தம் மற்றும் சுவனம் என்ற இலாபம் மட்டுமே! வேறு எந்தவித நஷ்டமும் இல்லை என்ற புதுவித வியாபார உத்தியை கற்றுக்கொடுக்கும் கல்வி மாதம்.

இறுதியாக...
 
இறையச்சம் என்னும் தக்வாவை நம் உள்ளங்களில் உறையவைக்க உண்மையாளன் அல்லாஹ் உம்மி நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் உம்மத்திற்கு வகுத்தளித்த செயல்முறை திட்டம்.
அம்மாதத்தில்  நாம் செய்ய வேண்டியது நோன்பு நோற்பது மட்டும் தானா...?இறைவன் மீது முழு நம்பிக்கை வைத்து. நன்மைகளை எதிர்பார்த்து நோன்பு நோற்க வேண்டும்.

அதே அடிப்படையில் இரவு வணக்கங்களை நிறைவேற்ற வேண்டும்.
 
இவ்விரண்டு செயற்பாடுகளும் நம்முடைய முன் செய்த பாவங்கள் மன்னிக்கப்படுவதற்கு காரணமாக அமைந்துவிடும்.

ஐவேளை தொழுகைகளையும் பள்ளிவாசலுக்கு சென்று கூட்டா(ஜமாஅத்தா)க நிறைவேற்ற வேண்டும்.
 
இது கூட்டு வாழ்க்கை முறையையும். சகோதர பாசத்தையும் பலப்படுத்த உதவி செய்யும்.

தினந்தோறும் திருக்குர்ஆனை உள்ளச்சத்துடன். பொருள் விளங்கி, ஓத வேண்டிய முறையில் ஓத வேண்டும்.
 
இது இறைவனின் கருணையும். மன நிம்மதியும் ஏற்பட வழிவகுக்கும்.

இஸ்லாமிய அறிவை கற்றுக்கொள்ள அல்லது கற்றுக்கொடுக்க முயற்சி செய்ய வேண்டும்.
 
இது ஈருலுக வெற்றிக்குண்டான பாதையை திறந்து வைக்கும்.

இரவு வணக்கம் என்ற தராவீஹ் மற்றும் தஹஜ்ஜத் தொழுகைகளை அதிகமாக தொடர்ந்து தொழுது வர வேண்டும்.
 
இவை இறைவனின் நெருக்கத்தை ஏற்படுத்தும் சிறந்த வழிமுறையாகும்.

உறவுமுறையை பேணி வாழ வேண்டும்.
 
இது குடும்ப சீரமைப்பிற்கும். சொந்தங்கள் சேர்ந்து வாழ்வதற்கும் சீரான வழியை காட்டும்.

இல்லாருக்கும். எளியோருக்கும் முடிந்த வரை உதவிகள் புரிய வேண்டும்.
 
இது பிறர் மீது அன்பு செலுத்துதல் என்ற மேலான குணத்தை உள்ளத்தில் ஊற்றெடுக்க வைக்கும்
 
அன்பின் இஸ்லாமியச் சகோதர, சகோதரிகளே...!
தயாராகுவோம் நாம்...!

இறைவழிபாட்டில் திளைத்திருப்போம்!

இறைமறை குர்ஆனை ஓதுவதில் மூழ்கியிருப்போம்!

வீண் பேச்சுகளை தவிர்ந்திருப்போம்!

வீணாணவைகளை விட்டும் ஒதுங்கியிருப்போம்!

பகல் முழுவதும் பசித்திருந்து நோன்பிருப்போம்!

இரவு முழுவதும் விழித்திருந்து இறையைத் தொழுவோம்! 

புனித ரமழானில் புதையலைத் தேடிப் புறப்படுவோம்!

நாளை மறுமையில் பொன்னான வாழ்வை சென்றடைவோம்!

இங்கே நாள்தோறும் நன்மைகள் பல புரிவோம்!

ஈருலகிலும் நாயன் அல்லாஹ்வின் அருளைப் பெற முயற்சிப்போம்!

அல்குர்ஆனின் வழிமுறையில் செல்வோம்!

அல்லாஹ்வின் அளவிலா அருளைப் பெறுவோம்!

சுன்னத்தைப் பேணி சிறப்பாக வாழ்வோம்!

சுகந்தரும் சுவனத்தில் சுதந்திரமாக நுழைவோம்!
உலக இஸ்லாமிய சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் புனித ரமழான் நல் வாழ்த்துக்கள்!
 
 
Thanks to:-
மவ்லவீ அஃப்ழலுல் உலமா
அ. பா. கலீல் அஹ்மத் பாகவீ

Saturday, July 23, 2011

முன்மாதிரி முஸ்லிம் பெண்

1.கணவனுக்கு கட்டுப்படுதல்:
ஒரு நபித்தோழர் நபி (ஸல்) அவர்களிடம் எந்த பெண் சிறந்த பெண்? என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், அவன் பார்க்கும் போது அவனை சந்தோஷப்படுத்துகிறாளோ அவளே சிறந்தவள் என்றார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: நஸயீ)

2.கஷ்டத்திலும் கணவனுக்கு உதவி செய்தல்:
அல்லாஹ்வின் மீது சத்தியமாக! அல்லாஹ் உங்களை ஒரு போதும் கேவலப்படுத்த மாட்டான். ஏனென்றால் நீங்கள் சொந்தங்களை அனுசரித்து, மக்களின் கஷ்டங்களை சுமந்து, ஏழை எளியோருக்கு உதவி செய்து விருந்தாளிகளை கண்ணியப்படுத்துகிறீர்கள்’ என்று ஆறுதல் கூறினார்கள். (நூல்: புகாரி)

3.கணவனுக்கு பணிவிடை செய்தல்:
நபி (ஸல்) அவர்கள் சத்தியத்தை தேடி ஹிரா குகை சென்ற பொழுது கதீஜா (ரலி) அவர்களுக்கு வயது 55. அந்த வயதிலும் அவர்கள் பல மைல் தூரம் கரடு முரடான பாதையில் உணவுப் பொருளை சுமந்து நடந்து சென்று தன் கணவனுக்கு பணிவிடை செய்தார்கள். (நூல்: புஹாரி)

4.இல்லறத்தில் கணவனை திருப்திபடுத்துதல்:
நீங்கள் சமையல் அறையில் சமைத்துக் கொண்டிருந்தாலும் அல்லது போருக்கு செல்வதற்காக குதிரையின் மீது இருந்தாலும் கணவன் இல்லறத்திற்காக அழைத்தால் அவனை சந்தோஷப்படுத்துங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

5.ரகசியம் காத்தல்:
கணவன் ரகசிய உள்பட எல்லாவிதமான ரகசியங்களையும் பாதுகாக்க வேண்டும். ஏனென்றால் ரகசியம்; என்பது அமானிதம். அமானிதத்தைப் பேணுவது உண்மை முஸ்லிமின் பண்பு. அமானித மோசடி செய்வது முனாஃபிக்கின் அடையாளம்.

6.விருந்தோம்பல்:
யார் அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்புகிறார்களோ அவர்கள் விருந்தாளியை கண்ணியப்படுத்தட்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் (புஹாரி)

7.குர்ஆன், ஹதீஸிற்கு முழுமையாக கட்டுப்படுதல்:
எல்லா விஷயங்களிலும் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் முழுமையாக கட்டுப்பட வேண்டும்.

யார் அல்லாஹ்விற்கும் அவனுடைய தூதருக்கும் கட்டுப்பட்டாரோ அவர் நாளை மறுமையில் நபிமார்கள், உண்மையாளர்கள், ஷஹீதுகள், நல்லோர்களோடு சொர்க்கத்தில் தங்குவார்கள் என்று அல்லாஹ் கூறுகிறான். (அல்குர்ஆன் 4:69)

8.தர்மம் செய்தல்:
‘யார் ஏழ்மையிலும் வசதியிலும் தர்மம் செய்கிறாரோ அவர் சொர்க்கவாசி ஆவார்’ என்று அல்லாஹ் கூறுகிறான் (அல்குர்ஆன் 3:134)

9.மார்க்கத்தை அதிகமாக கற்றுக் கொள்ளுதல்:
சஹாபிய பெண்கள் அதிகமாக மார்க்கத்தை கற்றுக் கொள்வார்கள். ஒருமுறை சஹாபிய பெண்கள் நபி (ஸல்) அவர்களிடம் ‘யா ரஸுலுல்லாஹ் சஹாபாக்கள் எப்போதும் உங்களுடன் இருந்து மார்க்கத்தை கற்றுக் கொள்கிறார்கள். எனவே எங்களுக்காக ஒரு நாளை ஒதுக்கி கற்றுத் தாருங்கள் என்றார்கள். அதற்கு நபி (ஸல்) வியாழக்கிழமையை உங்களுக்கு ஆக்கிக் கொள்ளுங்கள் என்றார்கள்.

10.பணம் வந்தாலும் தன்னடக்கத்தோடு வாழுதல்:
கதீஜா (ரலி), அஸ்மா பின்த் அபுபக்கர் (ரலி) போன்ற சஹாபிய பெண்மணிகள் பணம் இருந்தும் தன்னடக்கமாக, எளிமையாக வாழ்ந்தார்கள். அவர்கள் பணத்தைக் கொண்டு பெருமையடிக்கவில்லை. ஆணவம் கொள்ளவில்லை. ஏனெனில் ‘யாருடைய இதயத்தில் கடுகளவும் பெருமை இருக்கிறதோ அவர்கள் சொர்க்கம் செல்ல மாட்டார்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

11.குழந்தை வளர்ப்பு:
குழந்தைகளை ஒழுக்கத்தோடும், இஸ்லாமிய பண்பாட்டோடும் வளர்ப்பது பெற்றோர்களது கட்டாய கடமை. குழந்தைகள் தந்தையை விட தாயிடம் நெருக்கமாக இருப்பதால் தாய் மீது இந்த பொறுப்பு அதிகமாக இருக்கிறது என்பதை ஒவ்வொரு பெண்களும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இவ்வாறெல்லாம் எந்தப் பெண் நடந்து கொள்கிறாளோ அவளே உண்மையான முன்மாதிரி முஸ்லிம் பெண் ஆவாள்.

ஒவ்வொரு முஸ்லிம் பெண்ணும் மேற்கண்ட முன்மாதிரி முஸ்லிம் பெண்ணாக வாழ அல்லாஹ் அருள் புரிவானாக. ஆமீன்.                     

Monday, July 18, 2011

பிரபல கவிஞர் மு சண்முகம் இஸ்லாத்தை தழுவினார்



shanmugam.jpgஇளையான்குடி டாக்டர் ஜாஹிர் உசேன் கல்லூரியில் அலுவலக உதவியாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர் பொற்கிழி கவிஞர் மு. சண்முகம்.

சுமார் 25 ஆண்டுகளுக்கும் மேலாக இஸ்லாம் குறித்து கவிதைகள், கட்டுரைகள் எழுதியும், பேசியும் வருபவர். இஸ்லாமிய இலக்கிய மாநாடுகளில் தவறாமல் பங்கேற்று படைப்புகளை வழங்கி வருபவர்.

’வஹியாய் வந்த வசந்தம்’  என்ற நூலுக்கு சீதக்காதி அறக்கட்டளையின் ஷேக் சதக்கத்துல்லாஹ் அப்பா பரிசினைப் பெற்றவர். இந்நூல் 1990 ல் கீழக்கரையில் நடைபெற்ற ஐந்தாவது உலக இஸ்லாமிய இலக்கிய மாநாட்டில் வெளியிடப்பட்டு தற்பொழுது முதுவை காஹிலா பதிப்பகத்தால் மறுபதிப்பு செய்யப்பட்டுள்ளது.

இளையான்குடியில் நடைபெற்ற இஸ்லாமிய நிகழ்வின் போது நேற்று 17.07.2011 ஞாயிற்றுக்கிழமை இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார்.

அல்ஹம்துலில்லாஹ்

தனது பெயரை ஹிதாயத்துல்லா என மாற்றிக் கொண்டார்.
இத்தகவலை சிங்கப்பூர் ஆடிட்டர் பெரோஸ்கான் 18.07.2011 திங்கட்கிழமை காலை அலைபேசியில் இளையான்குடியில் இருந்து தொடர்பு கொண்டு தெரிவித்தார்.

தகவல் இளைஞான்குடி யூசுப், பென்சில்வேனியா, அமெரிக்கா 

Wednesday, July 13, 2011

எழுதியவனே மாற்றி எழுதுவான்


உறவைப் பேணி வாழுங்கள் என்றும் உறவுகளை அலச்சியம் செய்யும் விஷயத்தில் அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள் என்றும் சாதாரண உபதேசமாக அல்லாமல் எச்சரிக்கையாகவே விடுக்கிறது இஸ்லாம்.

உறவினர்களுக்கு ஸலாம் சொல்வதும்அவர்களை நலம் விசாரிப்பதும்,அவர்கள் வீட்டு விஷேசங்களில் கலந்து கொள்வதும்இறுதிச் சடங்கில் கலந்து கொள்வது மட்டும் தான் உறவைப் பேணுதல் என்று நினைத்து விடாமல் இறைவன் நமக்கு கொடுக்கின்ற பொருளாதாரத்திலிருந்தும் உறவினர்களில் நலிவடைந்தோருக்கு வாழ்வாதார வசதிகளை செய்து கொடுத்து அவர்களின் வாழ்க்கை தரத்தை  முன்னேற்றி விடச் சொல்கிறது இஸ்லாம்.

திருமறைக்குர்ஆனில் 2:83, 2:177, 2:215, 4:1, 4:36, 8:75, 16:90, 17:26, 30:38, 42:23, 47:22, 59:7, 90:15 போன்ற வசனங்களில்இறைவன் வலியுருத்திக் கூறுகிறான்.

மனிதர்கள் இவ்வுலகில் நிறைந்த பொருள்வளத்துடன் நீண்டகாலம் வாழவேண்டும் என்று ஆசைப்பட்டு அதற்காக ஓடியாடி உழைத்து செல்வத்தைக் குவித்து வைத்துக் கொண்டு திட்டங்கள் பல தீட்டி அதில் வித விதமாக சுகமனுபவித்து வாழ்ந்து வருகின்றனர்.  

இப்படிப் பட்டவர்களின் உடல் நலத்தில் சிறிது மாற்றம் ஏற்பட்டு விட்டால் இத்தனை செல்வங்களையும் உலகில் விட்டு விட்டு திடீரெனப் போய் விடுவோமோ என்ற அச்சத்தால் ஆயுளை கெட்டியாக்கிக் கொள்வதற்கு உயர் ரக ஆஸ்பத்திரயைத் தேடி மூலை முடுக்குகளுக்கெல்லாம் ஓடுவார்கள்அதில் முன்னேற்றம் கிடைக்கவில்லை என்றால் பிரசித்திப் பெற்ற(?) அவ்லியாக்களிடம் அடைக்கலம் புகுவார்கள்தாயத்து தட்டுத் தகடுகள் மூலம் மலக்குல் மௌத்துக்கு ( உயிரை எடுக்க வரும் வானவருக்கு ) தடுப்பு சுவர் போடுவதற்காக (?) மாந்திரீகர்களிடம் தஞ்சம் புகுவார்கள்.  

அவர்கள் எந்தெந்த வழிகளில் என்னமாய் ஓடினாலும் எதுவும் பலனளிக்காமல் இறுதியாக விதியில்  எழுதப்பட்ட விதம் அவர்களின் கதை முடிந்து விடுவதையும் பார்க்கிறோம்.

''நீங்கள் எங்கே இருந்த போதும் மரணம் உங்களை அடையும். உறுதியான கோட்டைகளில் நீங்கள் இருந்தாலும் சரியே... திருக்குர்ஆன் : 4:78.

காரணம் அவர்களின் வாழ்வாதாரமும்வாழ் நாளின் முடிவும் ஏற்கனவே விதியில் எழுதப்பட்டு விட்டதால் அதை எந்த மருத்துவராலும்எந்த அவ்லியாவாலும்எந்த மாந்திரீகராலும் மாற்ற முடியாதுமாற்றியதில்லை அங்கெல்லாம் சென்றவர்களில் ஏராளமானோரின் முடிவு படுதோல்வியில் முடிந்ததைப் பலர் அறிவர்.

...எழுதுகோல்கள் உயர்த்தப்பட்டு விட்டன ஏடுகள் காய்ந்து விட்டன. என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். திர்மிதி.

எழுதியவனே மாற்றி எழுதுவான் 

உயிர் பிச்சைக்காகவும்உடல் ஆரோக்கியத்திற்காகவும் நாள் கணக்கில்மாத கணக்கில் அவ்லியாக்களின் கப்ருகளிலும்ஆஸ்பத்திரியின் வார்டுகளிலும் காலத்தைக் கழிப்பவர்கள் கத்தைக் கத்தையாக கரன்சிகளை வாரி இறைப்பவர்களில் பலர் உறவினர்களின் வறுமையைப் போக்குவதற்காக சிறிது தொகையையும்அவர்களின் தேவையை நிறைவேற்றிக் கொடுப்பதற்காக சிறிது நேரத்தையும் ஒதுக்க மாட்டார்கள். இவ்வாறு செலவிடுவதால் நேரத்தை ஒதுக்கி அலைவதால் என்ன பலன் கிடைக்கப் போகிறது என்றே அலச்சியம் செய்வார்கள். ஆனால் அதில் எண்ணிப் பார்க்க முடியாத பலன் இருப்பதை அவர்கள் அறிவதில்லை.

இறைவன் நமக்கு தரக்கூடிய பொருளாதாரத்திலிருந்து சிறிதை தனது பெற்றோர்உற்றார் உறவினர்களுக்கு செலவிட்டு சிறிது நேரத்தை ஒதுக்கி அவர்களின் தேவையை நிறைவேற்றிக் கொடுத்து அவர்களுடன் இணக்கத்துடன் வாழ்ந்து வந்தால் உயர் ரக ஆஸ்பத்திரியை தேடி ஓட வேண்டிய தேவை இல்லாமல்பிரசித்திப்பெற்ற(?) தர்வாவில் அடைக்கலம் புக வேண்டிய அவசியமில்லாமல் அவர்களின் வாழ்வாதாரத்தையம்வாழ் நாளையும் வல்லோன் இறைவன் நீட்டித்துத் தருவதாக இறைநம்பிக்கையாளர்களுக்கு இறைவனின் தூதர்(ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்.

தம் வாழ்வாதாரம்(ரிஸ்க்) விசாலமாக்கப்படுவதும் வாழ்நாள் நீட்டிக்கப்படுவதும் யாருக்கு மகிழ்ச்சி அளிக்குமோ அவர் தம் உறவைப் பேணி வாழட்டும். என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா(ரலி) அவர்களும்அனஸ் இப்னு மாலிக்(ரலி) அவர்களும் அறிவிக்கின்றனர். புகாரி 5985, 5986.

உறவுகளைப் பேணி வாழாவிட்டால் விதியில் எழுதியபடி மட்டும்  நடக்கும் வேறொன்றும் நிகழாது என்று எண்ணி விட்டு விடக்கூடாது அவ்வாறு எண்ணி உறவுகள் விஷயத்தில் அலச்சியம் காட்டுபவர்கள் இன்று மிகைத்திருப்பதைப் பார்க்கிறோம். அவ்வாறு நினைத்தே பலர் அற்ப காரணங்களுக்காக அறுபட முடியாத தொப்புள் கொடி உறவையும் கூட அற்பமாக எண்ணி அறுத்துவிட முணைகின்றனர். இப்படிப்பட்டவர்களிடம் இறைவனும் அவர்களுடனான உறவை உலகில் முறித்துக் கொள்வதாக இறைத்தூதர்(ஸல்)அவர்கள் எச்சரிக்கை செய்கிறார்கள்.  

உறவு (ரஹிம்) என்பதுஅளவிலா அருளாளன் (ரஹ்மான்) இடமிருந்து வந்த (அருட்கொடை) கிளையாகும். எனவேஇறைவன் (உறவை நோக்கி)'உன்னோடு ஒட்டி வாழ்பவனுடன் நானும் உறவு பாராட்டுவேன். உன்னை முறித்துக் கொள்பவனை நானும் முறித்துக்கொள்வேன்'' என்று இறைவன் கூறியதாக இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். புகாரி 5988.

உறவு (இறையருளின்) ஒரு கிளையாகும் எனவே, 'அதனுடன் ஒட்டி வாழ்வோருடன் நானும் உறவு பாராட்டுவேன். அதை முறித்துக் கொள்கிறவரை நானும் முறித்துக் கொள்வேன்'' (என்று உறவைப் படைத்தபோது இறைவன் சொன்னான்). என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'' புகாரி.5989

அளவற்ற அருளாலனும் நிகரற்ற அன்புடையயோனுமாகிய அகில உலக அதிபதியாகிய அல்லாஹ்வுடனான உறவு உலகில் அவனுடைய அடியானுக்கு முறிந்து விட்டால் நியாயத் தீர்ப்பு நாளில்  அவனுடைய நிலை என்னவாகும் என்பதை எண்ணிப் பார்க்க கடமைப் பட்டுள்ளோம்.   

உறவை முறித்துக் கொள்பவர்கள் மீது இறைவனின் கோபம் இருப்பதை அறிந்த அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் தங்களை ஒதுக்கி வாழ்ந்த தங்களுடைய குடும்பத்தார்களிடம் நீயா நானா என்று ரோஷம் பாராட்டாமல் அவர்களே வழியச் சென்று உறவை புதுப்பித்துக் கொள்வார்கள் தங்கள் தோழர்களையும் அவ்வாறே நடந்து கொள்ள உபதேசம் செய்தார்கள். 

பதிலுக்கு பதில் உறவாடுகிறவர் (உண்மையில்) உறவைப் பேணுகிறவர் அல்லர்மாறாக உறவு முறிந்தாலும் அந்த உறவுடன் இணைகிறவரே உறவைப் பேணுபவராவார். என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறியதாக அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) அறிவித்தார். நூல்: புகாரி 5991.

அபூ ஹூரைராவே நற்குங்களை மேற்கொள்வீராக ! என்று என்னிடம் இறைத்தூதர் (ஸல்) அவர்கள்  கூறியதும் இறைத்தூதர் அவர்களே! எவ்வாறு நான் நற்குணங்களைப் பேணுவது என்று கேட்டேன் அதற்கவர்கள் உன்னைத் துண்டித்து வாழ்பவருடன் நீ சேர்ந்து வாழ்உனக்கு அநீதம் செய்தவரை மன்னித்து விடுஉனக்கு தர மறுத்தவருக்கு நீ கொடுத்து உதவு என்று கூறியதாக அபூ ஹூரைரா (ரலி) அவர்கள் அறிவித்தார்கள். நூல் : பைஹகீ

உலகில் ஒரு முறை பிறந்து விட்டால் மீண்டும் பிறக்கப் போவதில்லை அதனால் அடுத்து பிறக்கும் பொழுது பார்த்துக் கொள்வோம் என்று உறவுகளை தள்ளி வைக்க முடியாது.

அதேப் போன்று எப்பொழுது உலகிலிருந்து விடை பெறுவோம் என்ற அறிவும் நமக்கு கொடுக்கப்படாததால் உறவுகள் விஷயத்தில் தாமதப் படுத்த முடியாது.

செல்வ செறுக்குடனும்திடகாத்திரமான ஆரோக்கியத்துடனும் வாழும் காலத்திலேயே உற்றார்உறவினர்களில் வறியோருக்கு இயன்றளவு வாழ்வாதார வசதிகளை செய்து கொடுத்து அவர்களின் மீது அன்பைப் பொழிந்து இணைந்து வாழ முயற்சிக்க வேண்டும்.

பாவங்கள் மன்னிக்கக் கூடிய புனித ரமளான் மாதம் மிகவும் அன்மித்து விட்டதால் நற்செயல்களை இப்பொழுதே தொடங்கி விடுவோம்.  

எழுதியபடி என்னையும்வாசித்தபடி உங்களையும் உறவுகளைப் பேணி அல்லாஹ்வின் அருளை அடைந்து கொள்ளும் நன் மக்ககளாக வல்ல அல்லாஹ் ஆக்கி அருள் புரிவானாக !


وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ

3:104. நன்மையை ஏவிஇ தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.

Tuesday, June 21, 2011

எல்லாம் சரிதான்?????


முப்பது வயதிலேயே சர்க்கரை வியாதிநாற்பது வயதில் மாரடைப்பு என இளைய மற்றும் நடுத்தர வயதினரின் ஆரோக்கியமும் ஆயுளும் கீழ்நோக்கிச் செல்லக் காரணம் போதிய உடற்பயிற்சியின்மையே!

இப்போதைய அவசர யுகத்தில் நேரத்தைச் சேமிப்பதற்காக இரண்டுநான்கு சக்கர வாகனங்கள் பெருமளவில் உபயோகப்படுத்தப்படுகின்றன. விளைவுநேரம் சேமிக்கப்படும் அதேவேளையில் உடல் ஆரோக்கியம் உதாசீனப்படுத்தப்படுவதை ஏனோ நம்மில் பெரும்பாலானோர் உணர்ந்ததாகத் தெரியவில்லை.

கிராமப்புற மக்களில் பெரும்பாலானோர் இன்னமும்கூட விவசாயத்தைப் பின்னணியாகக் கொண்ட உடலுழைப்புநடந்தே செல்லும் மனோபாவம்மாசற்ற சுற்றுச்சூழல் ஆகியவற்றால் தங்கள் உடல் ஆரோக்கியத்தை ஓரளவுக்குத் தக்க வைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால்நகர்ப்புற மக்களோ குறிப்பாக இளைஞர்களோ கல்லூரிநிறுவனங்களில் உடலுழைப்பற்ற பணிபடிப்புபின்னர் கணினி அல்லது தொலைக்காட்சி முன்னர் தவம் என மூளை உழைப்புக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை உடல் உழைப்புக்குக் கொடுப்பதில்லை. குறிப்பாகஇரு சக்கர வாகன உற்பத்தி அசுர வேகத்தில் ஆரம்பிக்கசென்ற தலைமுறையினர் வரை ஆரோக்கியத்தின் பிரதான காரணிகளுள் ஒன்றான மிதிவண்டியை ஓட்டுவதென்பது இப்போது அபூர்வமாகி வருகிறது.

சென்னை நகர மக்களில் 1970-ல் 21.3 சதவீதமாக இருந்த மிதிவண்டி உபயோகிப்போரின் எண்ணிக்கை 2005-ல் 12.8 சதவீதமாகக் குறைந்து போனது. நடப்பு ஆண்டில் இந்த எண்ணிக்கை நிச்சயமாக மேலும் குறைந்திருக்கவே வாய்ப்புண்டு. ஆயிரம்இரண்டாயிரம் என செலவு செய்து உடற்பயிற்சிக் கூடங்கள்நீச்சல் குளம் என ஆர்வமுடன் செல்லும் இளைய தலைமுறையினர் சுற்றுச்சூழலுக்கு மாசு விளைவிக்காத அதேசமயம் உடல் ஆரோக்கியத்தையும் மேம்படச் செய்யும் மிதிவண்டிகளை ஓட்ட முன்வர வேண்டும்.

எல்லாம் சரிதான்சென்னை போன்ற பெருநகரங்களில் பெருகிவரும் போக்குவரத்து நெரிசலில் இலகுரககனரக வாகனங்களுக்கு இடையில் மிதிவண்டி ஓட்டுவது எந்த அளவுக்குச் சாத்தியமானது என்ற கேள்வி எழுவதிலும் நியாயமுண்டு. மேலை நாடுகளில் குறிப்பாக ஐரோப்பாவின் நார்வே,ஸ்வீடன் போன்ற நாடுகளில் மிதிவண்டிகள் ஓட்டிச் செல்வதற்கென்று சாலைகளில் தனியாக பாதைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. சென்னை நகரின் ஒருசில இடங்களில் மாநகராட்சியினர் மிதிவண்டிகள் செல்வதற்கான பாதைகள் ஒதுக்கியிருப்பது ஒரு நல்ல ஆரம்பம். மிதிவண்டிகள் செல்வதற்கான இதுபோன்ற பாதைகளை நகரெங்கும் அமைக்க முன்வர வேண்டும்.

மிகுதியான மிதிவண்டிகளின் பயன்பாடு புகைதூசு இல்லாத சுற்றுச்சூழலை உருவாக்கும் என்பதோடுஉடல் ஆரோக்கியத்துக்கும் நீண்ட ஆயுளுக்கும் அடித்தளம் அமைக்கும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.

Monday, June 13, 2011

ஆடாதோடை


இன்றைய சூழலில் குடிநீர், உணவு, இருப்பிடம், காற்று என அனைத்தும் மாசுபட்டுக் கிடக்கின்றன. இந்தியா போன்ற வளரும் நாடுகளில் குடிநீரினால் உண்டாகும் நோய்களே மக்களை அதிகம் பாதிப்பதாக ஆய்வறிக்கைகள் தெரிவிக்கின்றன. பிளாஸ்டிக் பாட்டில்களில் அடைத்து விற்கும் நீர் கூட சுத்தமானது என்பதை உறுதி செய்ய முடியாது. இவைகள் பெரும்பாலும் இரசாயன வேதிப் பொருட்கள் கலந்ததாக உள்ளன. இவற்றை அருந்துவதால் பல நோய்களுக்கு இதுவே அஸ்திவாரமாக அமைந்து விடுகிறது. இதனால் நன்கு சுத்தமான நீரை அருந்த வேண்டும். உணவின் மூலமும், நீரின் மூலமும் நோய் தடுக்கும் மருந்துகளை உட்கொள்ள சித்தர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
அதில் வெறும் குடிநீரை அருந்துவதை விட சித்தர்கள் கண்டறிந்து கூறியுள்ள மூலிகைக் குடிநீரை அருந்தினால் உடலுக்கு சக்தி கிடைப்பது மட்டுமின்றி நோயும் தடுக்கப்படும்.
அந்த வகையில் ஆவாரம் பூ குடிநீர், கரிசாலை குடிநீர், நன்னாரி குடிநீர், துளசி குடிநீர், வல்லாரை குடிநீர், சீரகக் குடிநீர், நெல்லிப்பட்டைக் குடிநீர், மாம்பட்டைக் குடிநீர், ஆடாதோடைக் குடிநீர், போன்றவை அடங்கும்.
ஆவாரம்பூ குடிநீர்
“ஆவாரை பூத்திருக்க சாவாரைக் கண்டதுண்டோ..”
என்ற மருத்துவப் பழமொழி உண்டு. ஆவாரம் பூ எண்ணற்ற மருத்துவ குணங்களைக் கொண்டது. இது நோய்களைக் குணப்படுத்துவதால் நோயினால் மனிதன் இறப்பதை தடுக்கிறது. இன்றைய உலக மக்கள் தொகையில் பாதிபேர் சர்க்கரை நோயால் அவதிப்படுகின்றனர். இந்த சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் குணம் ஆவாரைக்கு உண்டு. மேலும் மேனிக்கு தங்க நிறத்தைக் கொடுக்கும் தங்கநிறப் பூவும் இதுதான்.
நீரில் ஆவாரம் பூக்கள் அல்லது காயவைத்த ஆவாரம் பூ பொடி சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி, குடிநீராக அருந்தி வரலாம்.
இது உடல் சூடு, பித்த அதிகரிப்பு, நீர்க்கடுப்பு, அதிக உதிரப்போõக்கு, ஒழுங்கற்ற மாதவிடாய், குடற்புண் வயிற்றுப்புண் போன்றவை நீங்கும்.
நீரிழிவு நோயாளிக்கு இது மிகவும் சிறந்த மூலிகைக் குடிநீர் ஆகும்.
இரத்தத்தைச் சுத்தப்படுத்தும், உடலில் உள்ள தேவையற்ற கழிவுகளை வியர்வை மூலம் வெளியேற்றி, சருமத்திற்கு மினுமினுப்பைக் கொடுக்கும்.
பெண்களுக்கு உண்டாகும் வெள்ளைப் படுதலை அறவே நீக்கும்.
இதனைத் தொடர்ந்து அருந்தி வந்தால், உடலை நோயின்றி அரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.
துளசி குடிநீர்
துளசி நமக்கு அருமருந்தாகும். துளசி இலையுடன் சீரகம் சேர்த்து நீரில் கொதிக்க வைத்து குடிநீராக அருந்தி வந்தால் உடலுக்கு பல நன்மைகள் உண்டு.
அடிக்கடி வெளியூர் பயணம் செய்பவர்களுக்கும், வெயில் மற்றும், மழைக்காலங்களில் அலைந்து திரிபவர்களுக்கு துளசி குடிநீர் அருமருந்தாகும். இது உடற்சூடு, பித்தம் போன்றவற்றைத் தணிக்கக் கூடியது.
டைபாய்டு, மஞ்சள்காமாலை, மலேரியா, காலரா நோய்கள் ஏற்படாமல் தடுக்கும். தொண்டைச்சளி, வறட்டு இருமல், புகைச்சல், தலையில் நீர் கோர்த்தல், அடிக்கடி தும்மல், போன்றவற்றைப் போக்கும். இரத்தத்தில் உள்ள சளியை நீக்கி இரத்தத்தை சுத்தப்படுத்தும்.
வல்லாரை குடிநீர்
எல்லா நோய்களுக்கும் கொடுக்கப்படும் மருந்தில் முதல் மருந்தாகவும், துணை மருந்தாகவும் இருப்பது வல்லாரை.
இதனை சரஸ்வதி மூலிகை என்று அழைக்கின்றனர். இது மூளைக்கும், அதன் செயல்பாட்டிற்கும் அதாவது அறிவுத் திறனுக்கும், ஞாபக சக்திக்கும் ஏற்ற மூலிகையாகும்.
காயவைத்த வல்லாரை பொடியை நீரில் போட்டு கொதிக்க வைத்து அனைவரும் அருந்தலாம்.
இது ஞாபக சக்தியைத் தூண்டுவதுடன், பித்த அதிகரிப்பைக் குறைக்கும். இரத்தத்தில் ஏற்படும் இரும்புச் சத்துக் குறைபாட்டைப் போக்கி இரத்தச் சோகையை நீக்கும். நரம்புகளுக்கு புத்துணர்வு கொடுக்கும். தொழுநோய், யானைக்கால் நோய், மூலம், மூட்டுவலி போன்ற வற்றிற்கு சிறந்த மருந்தாகும்.
கரிசாலை குடிநீர்
“ஏர்தரும் ஆன்ற கரிசாலையால் ஆன்மா சித்தி”
என்றார் வள்ளலார் இராமலிங்க அடிகள். அத்தகைய சிறப்பு வாய்ந்த கரிசாலை கண்களுக்கு ஒளியையும் உடலுக்குத் தேவையான இரும்புச் சத்தையும் தரக்கூடியது.
வெள்ளை கரிசாலை இலைச் சூரணம் 200 கிராம் எடுத்து அதனுடன் முசுமுசுக்கை இலை 35 கிராம், நற்சீரகத்தூள் 35 கிராம் அளவு சேர்த்து கொதிக்க வைத்து தேவையான அளவு பனங்கற்கண்டு அல்லது பனைவெல்லம் கலந்து காலை, மாலை தேநீருக்குப் பதிலாக அருந்தலாம். அல்லது, கரிசாலையுடன் நற்சீரகம் சேர்த்துகொதிக்க வைத்து குடிநீராகவும் அருந்தலாம்.
கரிசாலை இரத்த சோகையைப் போக்கக் கூடியது. இரத்தத்தில் கலந்துள்ள தேவையற்ற நீர்களை வெளியேற்றும் தன்மை கொண்டது. இரத்தத்தில் உள்ள பித்தத்தைக் குறைக்கும்.
இரத்தக் கொதிப்பு, காசநோய், எலும்பு தேய்மானம் போன்றவை ஏற்படாமல் தடுக்கும்.
சீரகக் குடிநீர்
சீர்+அகம் =சீரகம். அகம் என்னும் உடலை சீர்படுத்துவரே சீரகத்தின் சிறப்பான குணமாகும்.
சீரகத்தை நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி ஆறிய நீரை தினம் பருகி வருவது நல்லது.
இது உடற் சூட்டைத் தணிக்கும்.பித்தத்தைக் குறைக்கும்.
ரத்தத்தில் உள்ள தேவையற்ற பொருட்களை நீக்கி, ரத்தத்தைக் சுத்தப்படுத்தும். வியர்வை மற்றும் சிறுநீரைப் பெருக்கும்.
கண் சூடு குறைக்கும். வாய்ப்புண் வயிற்றுப்புண்ணைப் போக்கும்.
சரும நோய்கள் வராமல் தடுக்கும். இதயத்திற்கு இதமான குடிநீர்தான் சீரகக் குடிநீர்.
மாம்பட்டைக் குடிநீர்
மாம்பட்டையை இடித்து நீரில் கொதிக்க வைத்து குடிநீராக்கி அருந்தினால், நரம்புகள் பலப்படும், உடல் சூடு தணியும், சரும நோய்கள் ஏற்படாமல் தடுக்கும். பித்தத்தைக் குறைக்கும். அஜீரணக் கோளாறை நீக்கும்.
நெல்லிப்பட்டைக் குடிநீர்
நெல்லி மரப் பட்டையை காயவைத்து இடித்து பொடியாக்கி குடிநீரில் இட்டு காய்ச்சி அருந்துவது நல்லது.
இது ஆஸ்துமா, சளி, இருமல், வறட்டு இருமல், தொண்டைக்கட்டு, நுரையீரல் சளி, இரத்தச் சளி போன்றவற்றைப் போக்கும். ரத்தத்தைச் சுத்தப்படுத்தும். உடல் சூட்டைத் தணிக்கும். குடல்புண்களை ஆற்றும். மூலநோய்க் காரர்களுக்கு மூலநோயின் பாதிப்பைக் குறைக்கும்.
ஆடாதோடைக் குடிநீர்
ஆடாதோடை இலைகளை சிறிதாக நறுக்கி தேன் விட்டு வதக்கி நீரில் போட்டு கொதிக்க வைத்து குடீநீராக அருந்தி வந்தால்,
சளி, இருமல், கோழைக்கட்டு, நாள்பட்ட நெஞ்சுச் சளி, மூக்கில் நீர் வடிதல், நுரையீரல் சளி போன்றவை நீங்கும்.
வாந்தி, விக்கல் போன்றவை குணமாகும்.
சைனஸ், ஆஸ்துமா நோயால் பாதிக்கப் பட்டவர்களுக்கு இது சிறந்த மருந்து.


Mohammad Sultan

Monday, June 6, 2011

ஜல் ஜல் ஜல்


அகத்தை சீராக்க வல்லது சீரகம். வெயிலினால் ஏற்படும் அயர்ச்சியைப் போக்கி உடலைக் குளிர்விக்க உதவுபவை புதினா, கொத்தமல்லித் தழை. நாவிற்கு விரும்பத்தக்க ஸ்பைசி சுவையைத் தரும் கறுப்பு உப்பு, ஆம்ச்சூர் பொடி (காய்ந்த மாங்காய்த்தூள்) வைட்டமின் `சி' சத்து நிறைந்து புத்துணர்ச்சி அளிக்கவல்ல எலுமிச்சம் பழம். இவை அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்து தயாரிக்கப்
படும் `ஜல் ஜீரா'வைப் பருகி கோடையை ஜில்லென்று குளிர்ச்சியாக எதிர்கொள்ள முடியும்.
ஜல்ஜீராவை மிகவும் சுலபமாக தயாரிக்க இயலும். மிகவும் குறைந்த செலவுதான் பிடிக்கும். அப்படியென்றால் உடலுடன் மனமும் குளிர்ச்சி பெறும் என்பது நிஜம்.
வாங்க, ஜில்ஜில் ஜல்ஜீரா செய்து பருகுவோம்...!

ஜல் ஜீரா

தேவையான பொருட்கள்
சீரகம் - 4 டேபிள் ஸ்பூன்
ஆய்ந்த புதினா இலைகள், கொத்தமல்லி தழை - 1 கப் (தலா)
ஆம்ச்சூர் பொடி - 1 டீஸ்பூன்
கறுப்பு உப்பு - 1/2 டீஸ்பூன்
எலுமிச்சம் பழச்சாறு - 4 டேபிள் ஸ்பூன்
உப்பு - 1/2 டீ ஸ்பூன்
சர்க்கரை - 2 டேபிள் ஸ்பூன்
ஐஸ் தண்ணீர் - 8 கப்புகள்
அலங்கரிக்க
ஐஸ் கியூபுகள் - 8
புதினா இலைகள் - சிறிதளவு
செய்முறை
* வெறும் வாணலியில் மிதமான தீயில் சீரகத்தை நன்கு வாசனை வர வறுத்து, ஆறியதும் மிக்சியில் நைசாகப் பொடிக்கவும்.
* புதினா, கொத்தமல்லி இலைகளை மிக்சியில் போட்டு ஒரு சுற்று சுற்றி சிறிது தண்ணீர் சேர்த்து மிக்சியில் மைய அரைக்கவும். அரைத்த பின்னர் ஒரு உலோக வடிகட்டியில் வடிகட்டவும்.
* இதனுடன் சீரகப்பொடி, ஆம்ச்சூர் பொடி, கறுப்பு உப்பு, சர்க்கரை சேர்த்து நன்கு கலந்து ஐஸ் தண்ணீர் ஊற்றவும்.
* இப்போது எலுமிச்சம் பழச்சாறு சேர்த்து நன்கு கரண்டியால் கலக்கவும்.
* கண்ணாடித் தம்ளர்களில் ஊற்றி மேலே புதினா இலைகள், ஐஸ் கியூபுகள் போட்டு பருகக் கொடுக்கலாம்.
* வெயிலை எதிர்கொள்ள ஆரோக்கியமும், குளிர்ச்சியும் நிறைந்த ஜல்ஜீரா தயார்.
Mohammad Sultan

Friday, June 3, 2011

இதயத்தின் தோழன்


வெங்காயத்தின் காரத்தன்மைக்குக் காரணம்... அதில் உள்ள 'அலைல் புரோப்பைல் டை சல்பைடு' என்ற எண்ணெய். இதுவே வெங்காயத்தின் நெடிக்கும், நமது கண்களில் கண்ணீர் வருவதற்கும் காரணமாக அமைகிறது. வெங்காயத்தில் புரதச்சத்துக்கள், தாது உப்புக்கள், வைட்டமின்கள் ஆகியவை உள்ளன. அதன் பலன்களை இங்கே பார்ப்போம்,
* முருங்கைக்காயைவிட அதிக பாலுணர்வு தரக்கூடியது வெங்காயம்தான். தினமும் வெங்காயத்தை மட்டும் சாப்பிட்டு நீண்ட காலம் ஆரோக்கியமாகவும், பாலுறவுத் திறத்தோடும் வாழ்ந்ததாக ஒரு நபர் கின்னஸில் இடம் பிடித்திருக்கிறார்.
* வெங்காயம் ஒரு நல்ல மருந்துப் பொருள். இதை இதயத்தின் தோழன் என்றும் சொல்லலாம். இதிலுள்ள கூட்டுப் பொருட்கள் ரத்தத்தில் கொழுப்பு சேர்வதை இயல்பாகவே கரைத்து, உடலெங்கும் ரத்தத்தை கொழுப்பு இல்லாமல் ஓட வைக்க உதவி செய்கிறது.
* குளவியோ, தேனீயோ கொட்டிவிட்டால் பயப்பட வேண்டாம். அவை கடித்த இடத்தில் வெங்காயத்தை எடுத்துத் தேய்த்தாலே போதும். வெங்காயத்தில் உள்ள ஒரு வகை என்சைம், கொட்டியதால் ஏற்படும் உடலில் வலியையும், அழற்சியையும் உண்டாக்குகின்ற ப்ராஸ்டாகிளாண்டின்ஸ் என்ற கூட்டுப் பொருளை சிதைத்து விடுகிறது. விஷத்தையும் முறித்து விடுகிறது.
* சிறுநீர் அடக்கிவைக்கும் பழக்கம் ஆண்களைவிட பெண்களிடம் அதிகம் உண்டு. அவ்வாறு சிறுநீரை அடக்குவதால் அதில் நுண்ணுயிரிகளின் உற்பத்தி அதிகமாகி, நோய் உண்டாகும் வாய்ப்பு அதிகரிக்கும். இந்த பழக்கத்தை தொடர்பவர்களுக்கு சிறுநீர்த்தாரைத் தொற்று வரும். இவர்கள், வெங்காயத்தை உணவில் அதிகமாகச் சேர்த்துக்கொண்டால் போதும். வெங்காயம் கழிவுப் பொருட்களை கரைத்து, அழற்சியைக் குறைத்து கழிவுகளை வெளியே தள்ளிவிடும். இதனால் சிறுநீர்த் தாரைத் தொற்றும் குறையும்.
* யூரிக் அமிலம் அதிகமாக சிறுநீர்ப் பையில் சேர்ந்தால் கற்கள் தோன்றும். வெங்காயத்தை அடிக்கடி சாப்பிட்டால் அந்த கற்கள் கரைந்துவிடும்.
* முதுமையில் வரும் மூட்டு அழற்சியை கட்டுப்படுத்தும் ஆற்றல் வெங்காயத்திற்கு உண்டு. இதற்கு வெங்காயத்தையும், கடுகு எண்ணெயையும் சேர்த்து மூட்டு வலி உள்ள இடத்தில் தடவினால் போதும். வலி குறைந்துவிடும்.
* செலனியச் சத்து இருப்பவர்களுக்குத்தான் கவலை, மன இறுக்கம், களைப்பு போன்ற பிரச்சினை தோன்றும். இதைத் தவிர்க்க சுலபமான வழி வெங்காயத்தில் இருக்கிறது. வெங்காயத்தை தொடர்ந்து உணவில் எடுத்து வந்தாலே போதும். தேவையான செலினியச்சத்து கிடைத்துவிடும். வெங்காயம் தவிர, பூண்டையும் இதற்காக பயன்படுத்தலாம்.
* சீதோஷ்ண நிலை மாறும்போது அடிக்கடி இருமல் வரும். நுரையீரல் அழற்சி, மூக்கு எரிச்சல் போன்றவையும் ஏற்படும். சிறிது வெங்காயச் சாற்றில் தேன் கலந்து சாப்பிட்டால் மேற்கண்ட பிரச்சினைகள் நீங்கும்.
* புற்றுநோயைத் தடுக்கும் மருந்துப்பொருள் வெங்காயத்தில் இருப்பதாக சமீபத்திய ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. புகைபிடித்தல், காற்று மாசுபடுதல், மன இறுக்கம் போன்றவற்றால் ஏற்படும் செல் இறப்புகள், செல் சிதைவுகளை இது சரிசெய்து விடுகிறது.
* நாலைந்து வெங்காயத்தை தோலை உரித்து அதோடு சிறிது வெல்லத்தைச் சேர்த்து அரைத்து சாப்பிட பித்தம் குறையும், பித்த ஏப்பம் மறையும்.
* வெங்காயத்தை வதக்கிச் சாப்பிட உஷ்ணத்தால் ஏற்படும் ஆசனக் கடுப்பு நீங்கும்
* வெங்காயச் சாறு சில வயிற்றுக் கோளாறுகளை நீக்கும். இதை மோரில் கலந்து குடிக்க இருமல் குறையும்.
* வெங்காயச் சாற்றையும், வெந்நீரையும் கலந்து வாய் கொப்பளித்து, வெறும் வெங்காயச் சாறை பஞ்சில் நனைத்து பல் ஈறுகளில் தடவிவர பல்வலி, ஈறுவலி குறையும்.
* அடிக்கடி புகைப்பிடிப்பவர்கள் வெங்காயச் சாற்றை நாள் ஒன்றுக்கு அரை அவுன்ஸ் வீதம் மூன்றுவேளை சாப்பிட்டு வர நுரையீரல் சுத்தமாகும்.

Mohammad Sultan